உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்
பொருளாதார சுழற்சி சக்கரத்தில் அச்சாணியாக திகழும் சுமைப்பணி தொழிலாளர்கள். விவசாயப் பொருட்கள், ஆலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் வான்வழி, நீர்வழி, சாலைவழி, ரயில்பாதை வழி எதுவாயினும் மக்களைச் சென்றடைவதில் உள்ள பல நிலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்களின் உடலுழைப்பே பிரதானமாகும். தொழிலாளர்களின் வாழ்க்கை நிலவரம் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான குடோன்கள், மார்க்கெட், தெருக்கள் என நாம் அன்றாடம் காணும் இடங்களில் எல்லாம் சுமையைத் தூக்கிச் சுமக்கும் சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்க்கையோ கீழே கிடக்கிறது. கார்ப்பரேட், பெரு முதலாளிகள் ஆதரவுக் கொள்கைகளால் வேலை பறிபோவதும், அரசின் ஆதரவின்மையால் விவசாய வேலை வாய்ப்பு இழப்பாலும், வேலையின்மை, வறுமை, விலை வாசி உயர்வால் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழி லாளர்களாக மாறும் அவலம் தொடர்கதையாக உள்ளது. நவீன கொத்தடிமை முறை தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி கூலியைக் குறைப்பது நவீன கொத்தடிமைகளாக மாற்றும் செயலாகும். அரசுகள் அறிவிக்கும் குறைந்தபட்ச கூலி அமல்படுத்தப்படுவதில்லை. கூலிப் பிரச்சனையை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக காவல்துறையை வைத்து அணுகுவதும், உடலுழைப்பு மட்டுமே செய்யும் தொழிலாளர்களைக் கண்ணியக் குறைவாகக் கருதுவதும் அன்றாட நிகழ்வாகிப் போனது. தனியார்மயமாக்கலின் பாதிப்பு ரயில்வே கூட்ஷெட்கள், கன்டெய்னர் டெர்மினல், துறைமுகங்கள் என அரசுக்குச் சொந்தமானவை அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்க ளாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுகிறார் கள். 55 கிலோவுக்கு மேல் எடையளவு இருக்கக்கூடாது எனும் ஐஎல்ஓ பரிந்துரைகள் இன்றும் அமலாகாமல் உள்ளன. அதிகப் பாரம் சுமப்பதால் முதுகுவலி, எலும்புவலி, சுகாதாரக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் எனத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். தொழிலாளர்கள் உடை மாற்றும் அறை, குளியலறை, விபத்துக் காப்பீடு எதுவும் இல்லாத நிலை. டாஸ்மாக் குடோனில் சுரண்டல் 2024-25 நிதியாண்டில் ₹48,344 கோடி வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனமும் விதிவிலக்கல்ல. 43 குடோன்களில் பணியாற்றும் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள், குடோன்களிலிருந்து கடைகளுக்கும் விநியோக மையங்களுக்கும் கொண்டுசெல்லும் ஒப்பந்த சுமைப்பணி தொழிலாளர்களின் நிலையோ மிக மோசமானது. குடோன்களிலிருந்து கடைகளுக்கு மதுபான பெட்டிகளைக் கொண்டுசெல்ல பெட்டிக்கு ₹18 முதல் ₹20 வரை டாஸ்மாக் நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு வழங்குகிறது. ஆனால் ஒப்பந்ததாரர் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சம்பளமோ பெட்டிக்கூலியோ வழங்குவதில்லை. சில ஒப்பந்ததாரர்கள் கூலியைத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு பின்பு ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலையும் உள்ளது. கொடுமையான சுரண்டல் முறைகள் தொழிலாளர்கள் பெறும் கூலியில் பெட்டிக்கு ₹1 முதல் ₹2 வரை மாதா மாதம் கணக்கிட்டு ஒப்பந்ததாரர்கள் பெற்றுக்கொள்கின்றனர். மோசமான சாலைகளால் பாட்டில்கள் உடையும்போது அதற்கான இழப்பீட்டையும் தொழிலாளர்கள் கட்ட வேண்டும். மதுபான பெட்டிகள் சரிந்து விழுவதும், பீர் பாட்டில்கள் வெடித்துச் சிதறி விபத்துகள் ஏற்படுவதுமுண்டு. சட்டப்படியான போனஸ் ஒரு டாஸ்மாக் கிடங்கில்கூட வழங்கப்படுவதில்லை. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளைச் சுமைப்பணி தொழிலாளர்களே சரிசெய்து கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. போக்குவரத்து காவல்துறையின் அபராதத்தையும், சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்படும் தொகையையும் தொழிலாளர்களே கட்ட வேண்டியுள்ளது. சுமைப்பணி தொழிலாளர்களின் முக்கியத்துவம் அரசு குடோன்களிலேயே இந்த நிலைமை என்றால், மார்க்கெட்களில், பஜார்களில், தெருக்களில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்கள் நிலை இதைவிட மோசமானதாகும். சுமைப்பணி தொழிலாளர்களின் வேர்வைதான் பொருளாதாரத்தின் இயக்கச் சக்தி என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் சமூக மனப்பான்மையை உருவாக்குதல், வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காகக் கூட்டுப் போராட்டம் நடத்தும் சூழலை உருவாக்குதல் அவசியம். திருச்சியில் சங்கமிப்போம். அனைவரும் வாரீர்! வாரீர்!!
