“சரக்கு”
2014ல் ஜிதன்ராம் மஞ்சியை முதலமைச்ச ராக்குகிறார் நிதிஷ் குமார். ஒரு ஆண்டுக்குப் பின், தன்னிடம் மீண்டும் அப்பொறுப்பை ஒப்படைக்குமாறு சொன்னபோது, மஞ்சி மறுத்து விட்டார். கட்சியில் இருந்து விலக்கப்பட்டு, தனிக்கட்சி தொடங்கினார். பாஜக ஆதரவு கிடைத்தது. கட்சியை உடைத்தவர், உடைந்தவர் இருவரும் பாஜகவோடு கைகோர்த்து ஒரே அணியில் உள்ளனர். “கொஞ்சம் சரக்கு, நிறைய ஓட்டு” என்று மதுவிலக்கைத் தளர்த்துமாறு நிதிஷ் குமாருக்கு மஞ்சி கோரிக்கை வைத்திருக்கிறார். மதுவிலக்கைக் காட்டி பெண்கள் வாக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும் நிதிஷ் குமார் சிக்கலில் தத்தளிக்கிறார். அந்த இக்கட்டான நிலைமைக்கு அவரைத் தள்ளிவிட்டதால் மகிழ்ச்சிக்கடலில் மஞ்சி உள்ளார்.
குட்டு “
அதெல்லாம் கொடுக்கை வைத்து கொட்டுவது போன்றது” என்று உச்சநீதிமன்றம் கங்கனா ரனாவத்துக்கு குட்டு வைத்திருக்கிறது. பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா, “சக்தி வாய்ந்த பெண்கள் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறார்கள்” என்று மொகிந்தர் கவுர் என்ற பெண் விவசாயப் போராளி மீது விஷத்தைத் தெளித்தார். டைம்ஸ் இதழின் சக்தி வாய்ந்த பெண்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றிருந்த 80 வயது மொகி ந்தர் கவுர், மோடி அரசை உலுக்கிய விவ சாயிகள் போரா ட்டத்தில் பங் கேற்றார். அவர் போராட்டத்தில் அமர்ந்திருந்ததைத்தான் கங்கனா டுவிட்டரில் விமர்சித்தார். அவர் மீது அவ தூறு வழக்கை மொகிந்தர் தொடர்ந்தார். “எனக்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. வெறும் 100 ரூபாய்க்கு நான் ஏன் வரப்போகிறேன்?” என்ற தோடு வழக்கைப் போட்டார். ஒவ்வொரு நீதிமன்றமாகத் தட்டிய கங்கனாவின் மனுக்களை இறுதியாக உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருக்கிறது.
உருட்டு
பீகாரில் பாஜகவின் உருட்டை எதிர்க்கட்சியினர் அம்பலப்படுத்தியுள்ளனர். சில இடங்களில் மக்களிடம் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், 243 தொகுதிகளிலும் போட்டி என்று பேசியதை, கூட்டணி உடைந்து விட்டது என்றும், ஆர்.ஜே.டி. தனியாகப் போட்டியிடப் போகிறது என்றும் தங்கள் ஐ.டி.விங் வழியாக வதந்தி பரப்பி னர். தன்னுடைய கட்சி ஊழியர்களையும், ஆதர வாளர்களையும் உற்சாகப்படுத்தவும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காகவும், தேஜஸ்வி யாதவ்தான் 243 தொகுதிகளிலும் வேட்பாளர் என்று நினைத்து பணி செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதைத்தான் பாஜகவினர் உருட்டத் தொடங்கினர். ஆர்.ஜே.டி. மட்டுமல்ல, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தேஜஸ்வி யாதவ் கருத்தை வரவேற்றுள்ளன.
மாற்றம்
தில்லிப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் பொருளாதார ரீதியாக சாத்தியமுள்ள கல்வி, பாதுகாப்பான கல்வி வளாகம், விடுதிகளில் போதிய இடங்கள் உள்ளிட்டவை பேசுபொருட்களாக மாறியுள்ளன. இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எப்.ஐ) மற்றும் அகில இந்திய மாணவர் அமைப்பு(ஏ.ஐ.எஸ்.ஏ) ஆகிய இரண்டும் களத்தில் இருப்பதுதான் இதற்குக் காரணமாகும். வேறு வழியின்றி, தங்கள் தேர்தல் அறிக்கையிலும் இவற்றை ஏ.பி.வி.பி மற்றும் என்.எஸ்.யூ.ஐ-யும் இடம் பெறச் செய்துள்ளன. கடந்த ஆண்டு செயலாளர் பொறுப்புக்கான தேர்தலில் எஸ்.எப்.ஐ வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்த முறை அனைத்துப் பொறுப்புகளுக்குமே மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது.