articles

img

வற்றிய வயிறு - பெரணமல்லூர் சேகரன்

வற்றிய வயிறு -  பெரணமல்லூர் சேகரன்

பிரபு ஐந்தாம் வகுப்பு படித்தாலும் எதையும் துருவித் துருவிக் கேட்பது  வழக்கம். அது பள்ளியாக இருந்தா லும் வீடாக இருந்தாலும் விளையாடும் இட மாக இருந்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான். அரசுப் பள்ளியில் அவன் படிப்பதால் கேள்வி கேட்பதைப் பெரும்பாலான ஆசிரி யர்கள் கடிந்து கொள்வதில்லை. ஒரு சில  ஆசிரியர்கள் எரிச்சலடைவதும் உண்டு. மாணவர்கள் கேட்கும் கேள்விகள் எதுவாயி னும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆசிரி யர்கள் விளக்க வேண்டும் என்பது கல்வித்  துறையின் உயர் அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவு. தெருவில் விளையாடும்போது பெரிய மாணவர்களாகப் பார்த்து கேள்விகள் கேட்டு  விளக்கத்தைப் பெறுவான் பிரபு. விளக்க முடியாத சில மாணவர்கள் பிரபுவைக் கடிந்து  கொள்வதுண்டு. சில மாணவர்கள் பிரபுவின்  கேள்விகளுக்குத் தெரிந்தவரை பதில் சொல்வதுண்டு.  வீட்டில் படிக்கும்போதும் தொலைக் காட்சியைப் பார்க்கும்போதும் யார் இருக்கிறார்களோ அம்மாவோ அப்பாவோ அண்ணனோ அவர்களிடம் பிரபு கேள்வி களைக் கேட்பான். அவனது அம்மா ஜானகி எப்போதும் அடுப்படி வேலையிலோ வேறு வகையான வேலையிலோ இருக்கும்போது பதில் கூறாமல் தட்டிக் கழித்து விடுவாள். அவனது அப்பா தெரிந்ததை பதிலாகக் கூறுவார். அண்ணனும் அப்படித்தான். தெரி யாததற்குப் பதில் கூறாமல் அவனை திசை  திருப்பி சமாளித்து விடுவான். வீட்டின் கூடத்தில் தரையில் உட்கார்ந்த படி இன்று தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபுவின் அப்பா கஜேந்திரன் கலங்கிய கண்களைத் துடைத்தபடி இருந்ததைக் கண்ட பிரபு அவர் அருகில் வந்தமர்ந்தான். மீண்டும் கண்கலங்கியபடி அப்பா தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் பிரபுவும் தொலைக்காட்சியை உற்று நோக்கினான்.  இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்கள் மீது  குண்டு மழை பொழிந்ததில் குழந்தைகளும் பெண்களும் பலியாகிக் கிடந்த காட்சியைப்  பார்த்தான் பிரபு. அதனைத் தொடர்ந்து காசா வில் பட்டினியால் வாடும் குழந்தைகளையும் பெண்களையும் பார்த்துக் கொண்டிருந்த பிரபுவின் அப்பா கஜேந்திரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பிரபுவுக்கும் இயல்பாகக் கண்ணீர் வந்தது. பிரபு ஓரளவுக்கு செய்தித் தொகுப்பைப் புரிந்து கொண்டான். இப்போது அப்பாவைப் பார்த்தான் பிரபு. “அப்பா, தட்டேந்தி சாப்பாட்டுக்கு அலை யுறாங்களே அந்தப் பசங்களுக்கு வீட்ல சோறில்லையாப்பா” “வீடே இல்ல கண்ணு. வீடுங்கள அழிச்சிட்டாங்க. கூடாரம் போட்டுத்தான் தங்கியிருக்காங்க. வீட்ல இருந்ததெல்லாம் மண்ணோடு மண்ணாப் போச்சில்ல” “அதோ பாருப்பா அந்தப் பசங்க அழுவறாங்க.” “அவங்க சாப்டு எத்தன நாளாச்சோ தெரியலயேப்பா. அவங்க வயிறெல்லாம் எப்படி ஒட்டிக் கிடக்கு பாரு. வேதனையா இருக்குப்பா” “ஏம்பா, நாம ஏதாவது உதவி செய்ய லாமேப்பா” “நம்ம நாடா இருந்தா செய்யலாம்பா..காசா ரொம்ப தூரம்பா. ஏரோப்ளேன்லதான் போகனும். நம்மால முடியாதில்ல” “பக்கத்து ஊர்ல இருந்து யாரும் உதவி பண்ணலையாப்பா” “பக்கத்து நாடுகள்ள இருந்து பெரிய பெரிய வண்டிகள்ள வர்ற உணவுப் பொருள்கள வாங்கப் போகும்போது அவங்க  மேல குண்டு விழுது. என்ன செய்வாங்க. உயிர்தான முக்கியம்” “சாப்பிடாம இருந்தால்கூட உயிர் போயிடுமாப்பா?” “ஆமா பிரபு. தொடர்ந்து சாப்பாடு கிடைக்காம நிறைய பசங்க செத்துப் போச்சுங்க. குழந்தைக்கு பாலில்லாம செத்துப் போச்சுங்க.” “குழந்தைங்களுக்கு அவங்கவங்க  அம்மா பால் கொடுக்க வேண்டியது தானப்பா” “பல குழந்தைகளோட அம்மாங்க  இஸ்ரேல் குண்டுகளுக்கு பலியாகிட்டா ங்கப்பா. தப்பிச்ச அம்மாங்ககூட தொடர்ந்து  சாப்பிடாம இருக்கிறதால பால் கிடைக்க மாட்டேங்குதுப்பா” இப்போது தொலைக்காட்சியில் குண்டு மழை பொழிவதையும் கட்டிடங்கள் இடிந்து  விழுவதையும் பார்த்து உச்சுக் கொட்டு வதைக் கவனித்து பிரபுவும் உச்சுக் கொட்டி னான். இன்னொரு காட்சி தொலைக்காட்சியில் விரிந்தது. பெருங்கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் இருந்து போடப் படும் சாப்பாட்டுப் பொட்டலங்களையும் உணவுப் பொருட்களையும் பிடிக்க ஓடி யது. சிறுவர்களும் பெண்களும் ஆண்களும்  என மோதிக் கொண்டு ஓடும்போது ஒரு சிறுவன் மிதிபட்டுத் தரையில் விழுந்தான். அவனைக் கண்டுங் காணாமல் கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது.  அப்போது வந்திருந்த பிரபுவின் அம்மா ஜானகி,”அய்யய்யோ அந்தக் குழந்தையைத் தூக்க ஆளே இல்லையா? அந்தப் புள்ள சாப்டு எத்தன நாளோச்சோ தெரியலையே. அவன் வயிறையே காணோமே”என்று சொல்லிக் கொண்டே பிரபுவின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளது கண்களில் கண்ணீர் வழிந்ததைப் பார்த்த பிரபுவின் கண்களிலும் இப்போது கண்ணீர் வழிந்தது. தெருவில் விளையாட்டை முடித்துக் கொண்டு வந்த பிரபுவின் அண்ணன் வினோத்,”வாம்மா, சாப்பாடு போடு. எனக்குப் பசிக்குது” என்றபடி அவனது அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன்  சொன்னது மற்ற மூவரின் காதுகளில் விழ வில்லை. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரே லின் தாக்குதலையும் அதன் பாதிப்புக்களை யும் தொலைக்காட்சி விவரித்துக் கொண்டி ருந்தது. அவன் பெரியவன் ஆனதால் தொலைக்காட்சி விளக்கத்தைப் புரிந்து கொண்டான்.பசிக்கிறது என்று சொன்ன வினோத் பசியை மறந்து கண் கலங்கியபடி தொலைக்காட்சியின் கோரக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  வற்றிய வயிறுகளுடன் பாலஸ்தீன சிறு வர்கள் சோகமே உருவாக உயிரை மட்டும்  வைத்துக் கொண்டு காசாவின் தெருக்களில் படுத்துக் கிடந்த காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மூவரும் தங்களின் கண்களைத் துடைத்தபடி தேம்பிக் கொண்டிருந்தனர். உள்ளே யாரோ வருவதறிந்து பிரபுவின்  அப்பா கஜேந்திரன் எழுந்தார். சிவப்புத் துண்டுடன் வந்த பக்கத்து வீட்டுக்காரர், கஜேந்திரன் கையில் நோட்டீசைக் கொடுத்து, “இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த நாளைக்கு நம்ம ஊர் பஸ் ஸ்டேண்ட்ல ஆர்ப்பாட்டம் வச்சிருக்கோம். அவசியம் வாங்க”என்றதும்,”நான்கூட வரேன் அங்கிள்” என்றான் பிரபு.”நானும்தான் வரேன் அங்கிள்”என்றான் வினோத்.”நாம குடும்பத்தோட போவம்” என்றான் கஜேந்திரன். “சரிங்க” என்றாள் கண்களைத் துடைத்த படி கஜேந்திரனின் மனைவி.