ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளம் சேகுவேரா - செ.முத்துக்கண்ணன்
1929 ஜூன் 14இல் பிறந்த சேகுவேரா இரண்டரை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டு தனது இறுதி நாட்கள் வரை அதோடு போராடிய வர். 3000 கிலோமீட்டருக்கு மேல் தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனாவுடன் லத்தீன் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது தான் பெரு நாட்டில் தொழுநோய் முகாமை கண்டறிந்து அங்கு சேவை செய்கிறார். இதன் பின்னணியில் பாதியில் நிறுத்திய தனது மருத்துவப் படிப்பை முடித்து மருத்து வர் பட்டத்தை 1953 ஜூனில் பெற்ற கையோடு அமெ ரிக்காவிற்கு ஜூலையில் பயணம் மேற்கொள்கிறார். 1948இல் தனது பள்ளிப் பருவத்தின் முதலாண்டு மருத்துவப் பிரதிநிதியாக மாணவர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டதாக சேகுவேரா பதிவு செய்கிறார். (அந்த சங்கம் இரு பிரிவாக இருந்தது. ஒன்று சீர்திருத்த வாதிகள் தரப்பும், மற்றொன்று கம்யூனிசச் சார்பு டையதாகவும் இருந்தது. சே கம்யூனிஸ்டாக இல்லை யென்றாலும் இடதுசாரியாக, சோசலிஸ்டாக இருந்தேன் என அவரே கூறியுள்ளார். இயல்பாக அன்றைய நிலையில் பெரோனிச எதிர்ப்பு, நாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில் ஒன்றாய் இருந்தோம் என்று கூறுகிறார். அன்று ஜப்பானின் நாகசாகி, ஹிரோசிமா நகரங்களின் மீது அமெரிக்கா குண்டு வீசியதை கண்டித்து பிரகடனத்தில் கையெ ழுத்திட்டதில் அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்ட தாகக் கூறுகிறார்.) 1955இல் ஆகஸ்டில் பெரு நாட்டைச் சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடி யாவை சே திருமணம் செய்து கொண்டார்.
புரட்சிகர நடவடிக்கைகள்
1955இல், மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து ஜூலை 26 இயக்கத்தில் கியூபப் புரட்சிக் கான போராளிக் குழுவோடு மருத்துவப் பணியாற்றச் சென்று தன்னை போராளியாக மாற்றிக்கொள்கிறார். பாடிஸ்டா ஆட்சிக்கு எதிராகப் போராடி கியூபப் புரட்சி யில் முக்கியப் பங்கு வகித்தார். கிளர்ச்சிப் படையில் தளபதியாகப் பணியாற்றினார் மற்றும் பல முக்கிய மான போர்களில் முக்கியப் பங்கு வகித்தார். 1958இல் கியூப சர்வாதிகாரி பாடிஸ்டாவின் படை களை தோற்கடித்து முன்னேறுகிறது புரட்சிப்படை. போரில் இறுதியாக பிடலின் தலைமையில் பல்வேறு வேலை நிறுத்தங்கள், மக்கள் பங்கேற்பு, கொரில்லா யுத்தம் என தோழர்களின் முயற்சியில் கியூபா யுத்தம் வெற்றிபெறுகிறது. சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாக கொரில்லா போருக்கு அவர் ஒரு வலுவான வக்கீலாக இருந்தார். பின்னணியில் நின்ற அமெரிக்க ஏகாதி பத்தியம் மூக்குடைந்து மண்ணைக் கவ்வுகிறது. அனைத்திற்கும் பிடலின் புரட்சிகர நடவடிக்கைக்கு உடன் நின்றவர் சேகுவேரா. சேகுவேரா தனிநபர் சாகசத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. “சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். என்ற அவரின் முழக்கம் இன்றும் புரட்சிகர நடவடிக்கைக்கு உரம் பாய்ச்சுகிறது. கொரில்லா யுத்தத்தின் சிற்பியாகச் செயல்பட்ட சே குவேராதான் யுத்த களத்தில் எதி ரிக்கும் வைத்தியம் பார்த்தார். தோட்டாச் சத்தங்களுக்கு இடையே புத்தகங்களை கையில் ஏந்தி வாசித்தவர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உறுதியாக நடத்தியவர். எனவேதான் நியூ யார்க்கில் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டி யளித்த சேகுவேரா மிக தைரியமாக அமெரிக்க மண்ணிலேயே “அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, அதன் ஏகாதிபத்தியத்தை அதன் மண்ணிலேயே நான் வேரறுப்பேன்” என்றார். இது அவரின் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்துகிறது.
புரட்சிக்குப் பிந்தைய கியூபாவில்
கியூப அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் கியூப தேசிய வங்கியின் இயக்குநர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார். கியூப நலன்கள் மற்றும் சோசலிச சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக விரிவாகப் பயணம் செய்தார். சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, கியூபப் புரட்சியில் அவரது பங்கு பாத்திரம் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் புரட்சியின் நீடித்த அடையாளமாக மாற்றியுள்ளன. மூன்று பிரதான அம்சங்களை தனது புரட்சிகர நடவடிக்கைக்கு அச்சாரமாக கொண்டிருந்தார். முதலாவதாக சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை அடைய வர்க்கப் போராட்டத்தின் மூலம் மாற்றத்தின் அவசியத்தையும், அதற்கான செயல் திட்டத்தையும் மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் முன்னெடுப்பதையும், இரண்டாவ தாக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையை முழுமை யாக உணர்ந்திருந்தார். அதனால் ஏகாதிபத்தி யத்தாலும், வெளிநாட்டு சக்திகளாலும் லத்தீன் அமெரிக்க நாடுகள் சுரண்டப்படுவதை கடுமையாக எதிர்த்தார். மூன்றாவதாக சமூக நீதிக்கான அர்ப்ப ணிப்பு என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒடுக்குதலுக்கு ஆளானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், சமத்துவ மின்மையை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை அழித்தொழிப்பதற்கு மக்களை களத்தில் நின்று பயிற்றுவிப்பதற்கு களமாடினார். கரும்பு விவசாயிகள் மத்தியிலும், சுரங்கத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மத்தியிலும் என நேர டியாக அவர்களோடு களத்தில் உடல் உழைப்பு பணியில் ஈடுபட்டார். இந்தச் செயல்பாடும், சிந்தனைத் தெளிவும், துணிச்சலும் அவரை தனித்துவத்தோடு சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க நபராக உலக அரங்கில் உயர்த்தியது. மேலும் புரட்சிகர இயக்கங்க ளிடையே சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப் பின் முக்கியத்துவத்தை சேகுவேரா நம்பினார்.
புரட்சிகர குணாம்சம்
மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். ஏகாதிபத்திய உலகமய மாக்கலுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் ஆயுதந் தாங்கிய போராட்டத்தின் மூலமே புரட்சியை நடத்திட முடியும் என நம்பினார். மாறிவரும் உலக பொரு ளாதாரக் கட்டமைப்பில் பரஸ்பரம் நாடுகளிடையே மனிதநேயத்துடன் கூடிய உதவியளிக்கும் திட்டங்களை வலியுறுத்தினார். வளரும் நாடுகளில் புரட்சிகர நடவடிக்கைக்குப் பிந்தைய சோசலிசத்தை கட்டமைப்பதில் மனித உணர்வு மற்றும் தார்மீக ஊக்கத்தொகைகளின் பங்கும், உதவியும் அவசி யம். குறிப்பாக சோவியத் யூனியனின் உதவியை பெரிதும் எதிர்பார்த்தார். சோவியத் யூனியனின் பொருளாதார மாதிரியை அப்போதே விமர்சித்தார். அது அதிகாரத்துவம்மிக்கதாக இருந்தது. பொரு ளாதாரத் திட்டமிடலுக்கு மிகவும் பரவலாக்கப்பட்ட மற்றும் ஜனநாயக அணுகு முறையை அவர் வாதிட்டார். சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதில் தன்னார்வ உழைப்பை முக்கிய அம்சமாகக் கருதினார். சோசலிச உணர்வையும், கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க அது உதவும் என நம்பினார். தொழிலா ளர்களை ஊக்குவிக்கும் வழிமுறையாக பொருள் ஊக்கத் தொகைகளை பயன்படுத்துவதை சேகுவேரா நிராகரித்தார். அதற்குப் பதிலாக தார்மீக ஊக்கத் தொகைகள் மற்றும் சமூகக் கடமை உணர்வை ஆதரித்தார். சோசலிசத்தைக் கட்டமைப்பதில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார். அது லாபத்தைவிட சமூகத் தேவைகளால் இயக்கப்பட வேண்டும் என்றார். நமது ஒவ்வொரு செயலும் இனவெறி, சுரண்டல், ஆதிக்கம், அலட்சியம் இவற்றின் அடையாளமாக உள்ள ஏகாதிபத்திய காலனித்துவத்திற்கும், அதன் அனைத்து வடிவிலான குழந்தைகளுக்கும் எதிரான போராட்டமாக இருக்க வேண்டும் என்றார். இன்றும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் முன்னத்தி ஏராகவும் அவரது சிந்தனையும் செயலும் உள்ளது.
செயல் அதுவே சிறந்த சொல்
“புரட்சி என்பது பழம் போன்று பழுத்தபோது தானாக விழும் ஒன்றல்ல. அதை விழச்செய்ய வேண்டும்.” எனவே அதற்கான சித்தாந்தப் பயிற்சியும், களச் செயல்பாட்டையும் மக்களிடம் இருந்தே முன்னெடுக்க வேண்டும். “நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன், அது ஒன்றும் ரகசியமல்ல, நான் ஒரு அர்ஜெண்டினன், ஒரு கியூபன், அதே சமயம் அனைத்து லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் தேச பக்தனாகவும் உணர்கிறேன். தேவைப்பட்டால் யாருடைய வேண்டுகோளும் இன்றி, இதில் எந்தவொரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் உயிரைத் தரவும் சித்தமாக இருக்கிறேன்”. இறுதி யாக கியூபாவைவிட்டு கிளம்புவதற்கு முன்பு சேகுவேரா கூறிய வார்த்தைகள், இந்த உலகின் கோடிக்கணக்கான இளைஞர்களின் அடையாளமாக மாறிப்போனவர் சேகுவேரா. வாழ்ந்த காலம் சொற்ப மாக இருந்தாலும் தனக்கான நிலைபாட்டில் உறுதி யாகத் திகழ்ந்தவர். வறிய மனிதனின் நிலையைக் கண்டு மனம் இரங்குவதல்ல, நிலையை மாற்றுவது. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது என கியூப மக்க ளைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் சர்வதேச உணர்வோடு உலகை மாற்றி அமைப்பது குறித்து கனவு கண்டார். அவர் வார்த்தைகளில் “நாங்கள் எதார்த்தவாதிகள். அதனால் தான் அசாத்தியங்களை பற்றி கனவு காண்கிறோம்”. அமெரிக்காவின் ஜனாதி பதி டிரம்ப் போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளின் யுத்தவெறி பிடித்த கொக்கரிப்பிற்குப் பின்னுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டமே உலகைப் பாதுகாக்க உதவும். இன்றும் காசாவில் நேரடியாக அந்த கொடுமை களைப் பார்த்து வருகிறோம். எனவே இன்றைய ஏகாதிபத்திய வல்லூறுகளை முறியடிப்பதே நமது கடமையாகும்.
