அமித்ஷாவே ஒப்புக் கொண்டார், சுதர்சன் ரெட்டி மனித உரிமை காப்பவர் என்று
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி சுதர்சன்ரெட்டி களம் இறங்கியிருப்பது பாஜக தலைமைக்கு ஒவ்வாமை யை ஏற்படுத்தி யிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு அதைத்தான் காட்டுகிறது. கொச்சி நகரில் ‘மலையாளமனோரமா’ பத்திரி கைக் குழுமம் வெள்ளியன்று நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற அமித்ஷா, கலந்துரையாடலின் போது வந்த ஒரு கேள்விக்கு, “நக்சலிசத்துக்கு உதவியவர் சுதர்சன் ரெட்டி. சல்வாஜுடூம் படைக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர். அப்படித் தீர்ப்பளிக்காமல் இருந்தி ருந்தால், 2020ஆம் ஆண்டிலேயே நக்சல் தீவிரவா தம் முடிவுக்கு வந்திருக்கும்” என்று பதிலளித்தார். “சுதர்சன்ரெட்டி நக்சல் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர். இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத் தால் காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றம் போன்ற ஒரு அமைப்பின் மூலம் நக்சலிசத்துக்கு ஆதரவாக இருந்தவரை வேட்பாளராகநிறுத்தியிருக்கிறது. கேரளமும்நக்சல்இயக்கங்களால்பாதிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அவர் கூறிக்கொண்டார். அடுத்த ஆண்டு கேரளத்தில்சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவையும் அதன் அதிகாரமய தேசியவாதத்தையும் நிராகரித்து வந்துள்ள கேரள மக்கள், இப்படி நக்சலிசத்தோடு முடிச்சுப் போட்டால் மனம் மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார் போலிருக்கிறது.
ஆயுதப் படை
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்குழுக்களைக்கட்டுப்படுத்துவதற்காக என்று 2005ஆம் ஆண்டில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு “சல்வா ஜுடூம்” (தூய்மை வேட்டை) படையை ஏற்படுத்தியது. குறிப்பாகப் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதில் சேர்க்கப்பட்டார்கள். சிறப்புக்காவலர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர்களுக்குப் பயிற்சிகளோடு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் பலர் சிறப்புக் காவல் அதிகாரி களாக (எஸ்பிஓ) நியமிக்கப்பட்டனர். உள்நாட்டுக் கலகத்தை அடக்கி, சட்டம் - ஒழுங்கை மீட்பதில் மக்களை வலிமைப்படுத்துவதே நோக்கம் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. அன்று ஒன்றியஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதை ஏற்றுக் கொண்டது. அந்தப் படை செயல்படத்தொடங்கிய பின், பரவலாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கிராமங்களிலிருந்து. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம் களில் அடைத்து வைக்கப்பட்டனர். பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தப் படைக்குழுக்களில் குழந்தைகளும் சேர்க்கப்பட்டு ‘ஆயுத ருசி’ ஏற்படுத்தப்பட்டது. பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான மோதல்களாகவும் மாறின. கொலைகளிலும், பாலியல் வன்கொடுமைகளி லும் படையினர் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு களை மனித உரிமை அமைப்புகள் எழுப்பின. அந்தக் குழுக்களுக்கும் நக்சலைட் அமைப்பு களுக்கும் நடந்த மோதல்களின் இடையே பொதுமக்கள் சிக்கினார்கள். அச்சமும் வன்முறைச்சூழலும் பரவின.
பொதுநல வழக்கு
இத்தகைய பின்னணியில்தான், சமூகவியலாளர் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் நந்தினி சுந்தர், 2007ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். 2011இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சல்வா ஜுடூம்அமைப்பைக் கலைக்க ஆணையிட்டது. காவல்துறை மேற்கொள்ள வேண்டிய கடமைகளைச் குடிமக்களே செய்யுமாறு அவர் களுக்கு ஆயுதம் வழங்குவது அரசமைப்பு சாசனத்துக்குப் புறம்பானது, அரசாங்க ஆதரவுட னான ஆயுதக்குழுக்கள்சட்டப்படியானகாவல்துறைக்கு மாற்றாக முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. குழுக்களிடமிருந்துதுப்பாக்கிகளைத் திரும்பப் பெற ஆணையிட்டது. இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு அரசாங்க நிதியைப்பயன்படுத்துவதற்குத்தடைவிதித்த அந்தத் தீர்ப்பு, அதற்கு ஒன்றிய அரசு நிதி உதவி செய்வதையும் நிறுத்த ஆணையிட்டது. குடிமக்களைப் பாதுகாப்பது அரசின் பிரிக்க முடியாத கடமை, அது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாக வேண்டும். ஆயுதக்குழுக்களைச்சார்ந்திருப்பதற்கு மாறாக, தீவிரவாதப்போக்குகளுக்கு அடிப்படைக்காரணங்களான சமூகப் பாகுபாடு கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போனற வற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
தீர்ப்பைத் தொடர்ந்து...
நீதிபதிகள் சுதர்சன்ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்தது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் அரசு சல்வாஜுடூம்அமைப்பைக் கலைத்தது. அதற்காக உருவாக்கப்பட்டிருந்த எஸ்பிஓ பதவிகளை விலக்கிக்கொண்டது. பின்னர் காவல்துறையிலேயே இதற்கென தனிப்பிரிவுகளை ஏற்படுத்தியது. அமித்ஷா கூற்றின் படி நீதிபதி நிஜ்ஜார் ஒரு நக்சலைட் ஆதரவாளர்தானா? பல வழக்கு களில், சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் செய்தவர் களாகவே இருந்தாலும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துத் தீர்ப்புகள் அளிக்கப்பட்ட துண்டு. அவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள் குற்றவாளி களின் ஆதரவாளர்களா? பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சமூகப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்று கூறுவதைத்தான் ‘நக்சல்’ சித்தாந்த ஆதரவு என்று கூறுகிறாரா? அந்தத் தீர்ப்பு வராமல் இருந்திருந்தால் நக்சல் இயக்கம் முடிவுக்கு வநதிருக்கும் என்கிறார் – ஆனால், அந்தத் தீர்ப்பு சத்தீஸ்கர் மக்களிடையேயான கொலை மோதல்கள் முற்றுவதைத் தடுத்தது என்பதே உண்மை.
மார்க்சிஸ்ட் கட்சி கருத்து
இத்தீர்ப்பு வருவதற்கு முன் அப்போது ஒன்றிய ஆட்சியில் இருந்த ஐமுகூ – இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சல்வா ஜுடூம் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள இடது சாரிக் கட்சிகள் கோரின. அதை பாஜக கடுமையாக விமர்சித்தது. அந்த விமர்சனம் சத்தீஸ்கர் பாஜக அரசின் உண்மை நோக்கத்தை அம்பலமாக்குகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட அறிக்கையில் (2009 ஆகஸ்ட் 9) இவ்வாறு கூறி யுள்ளது: “பாஜக கூறுவது போல சல்வாஜூடும் ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. இது ஒரு காவல்துறை நடவடிக்கைதான். இதனால், காவல்துறை யினர், நக்சலைட்டுகள் இரு தரப்பினரின் வன் முறைக்கு அப்பாவிப் பழங்குடி மக்கள் இலக்கா கின்றனர். சத்தீஸ்கர் அரசு அமைத்துள்ள முகாம்களில் பழங்குடி மக்கள் வாழ முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமாக உள்ளன.” “சத்தீஸ்கர் அரசு நிலச்சீர்திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், உபரி நிலங்களைப் பழங்குடியினருக்கு விநியோகிக்கவும் மறுக்கிறது. வனப் பொருட்கள் மீது பழங்குடி மக்களின் உரிமை களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. டெண்டு இலை (பீடி இலை) தொழிலில் பணிபுரியும் பழங்குடியினர் ஒப்பந்ததாரர்களால் இரக்கமின்றிச் சுரண்டப்படுகின்றனர். அந்தச் சுரண்டலைத் தடுக்காவிட்டால், நக்சலைட் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்விதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்க முடியாது. மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளைக் கெண்டுவந்து செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்.” - மிகச் சரியான முறையில், இப்பிரச்சனையை அம்பலப்படுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. மன்மோகன்சிங் அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது. அந்தக் கட்சியும் நக்சலைட் சித்தாந்த ஆதரவாளர்கள்தானா? பல்வேறு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும், ஊடகவிய லாளர்களும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றார்கள். மேற்கண்ட அனைவரையும் ‘நக்சல்’ ஆதரவா ளர்கள் என்று அமித்ஷா சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது. பாஜக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகசி.பி. ராதாகிருஷ்ணனைப் பல அரசியல் கணக்குகளோடு நிறுத்தியிருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி, அரசமைப்பு சாசன மாண்புகளைக் காக்கும் அரசியல் நிலைப்பாட்டோடு சுதர்சன்ரெட்டியை வேட்பாளராக்கியிருக்கிறது. அந்த விவாதங்களுக்குள் வராமல் இப்படி அவரை விமர்சிப்பதில் என்ன அரசியல் பண்பு இருக்கிறது? ஆனால் ஒன்று –இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மனித உரிமைகளுக்காக நிற்பவர் என்பதை அமித்ஷா நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்தியிருக்கிறார்.