articles

img

நினைவில் நின்ற களம் திருச்சி ரயில்வே கூட்ஸ் ஷெட் சுமை தொழிலாளர்களை தோளில் சுமந்த செங்கொடி இயக்கம்

நினைவில் நின்ற களம்  திருச்சி ரயில்வே கூட்ஸ் ஷெட் சுமை  தொழிலாளர்களை தோளில் சுமந்த செங்கொடி இயக்கம்

திருச்சி ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் ரேஷன் கடைகளுக்கான அரிசி, ஜீனி, கோதுமை மற்றும் உரம், சிமெண்ட், டெல்டா மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் ஒன்றிய அரசின் தொகுப்பான மத்திய குடோன்களுக்கு செல்லும் சரக்குகள் ரயில்வே வேகன்களில் வந்து இறங்கும். இவற்றை அரசு, தனியார் குடோன்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு லாரிகளில் ஏற்றிவிடும் வேலைகளை தொழிலாளர்கள் செய்து வந்தனர். சங்க அமைப்பு சிஐடியு மற்றும் ஐஎன்டியுசி என்ற இரு சங்கங்கள் இருந்தன. மத்திய தொகுப்பு அரிசி, கோதுமை வேலை செய்யும் தொழிலாளர்கள் ஐஎன்டியுசியிலும், மற்றவர்கள் சுமார் 250 பேர் சிஐடியுவிலும் இருந்தனர். மேஸ்திரி என்பவர் வேலை செய்யாமல் 20 தொழிலாளர்களை வைத்து மேற்பார்வை செய்து கூலி எடுத்துக்கொள்வார்.

தலைமுறையாக இந்த முறை நடைபெற்று வந்தது. உட்கட்சி மோதல் இந்நிலையில் தொழிலாளர்கள் இரண்டு கோஷ்டியாக செயல்படத் தொடங்கினர். பழிக்கு பழி என்ற ரீதியில் முன்விரோதம் சில படுகொலைகளைச் சந்தித்தது. சங்கத்தை ஒற்றுமைப்படுத்தும் பணி சவாலாகவே இருந்தது. போராட்ட நடவடிக்கைகள் அதே நேரத்தில் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, கூலி, கூட்ஸ் ஷெட் அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் மீது தொழிலாளர்களைத் திருப்பி போராட்டங்களை நடத்தினோம். வெளியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய முயற்சித்த காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கு எதிராகவும், ரயில்வே காவல்துறையின் சதிச்செயலையும் சந்தித்து தொழிலாளர்களுக்குள்ளே மோதலை உருவாக்கும் முயற்சியை முறியடித்தோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, மறியல் என போராட்டம் நீண்டது. காண்ட்ராக்ட் முதலாளிகள் சங்கம் கூடி தொழிற்சங்கத்தோடு இணக்கமாகச் செல்வது என முடிவெடுத்தனர்

. போராட்ட வெற்றிகள் விளைவாக பல உரிமைகள் பெறப்பட்டன: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மே 1 முதல் கூலி உயர்வு, கால தாமதம் ஏற்பட்டால் மே 1 முதல் அரியர் தொகை, இறக்கும் லாரிக்கு மாமூல், அட்டிக்காசு, மாலை 6 மணிக்கு மேல் ஓவர் டைம், தீபாவளி பண்டிகை போனஸ், வருங்கால வைப்பு நிதி கட்டாயமாக்கியது, சாலை, ஓய்வறை, கழிப்பறை, குளியலறை என அடுக்கடுக்கான உரிமைகள் பெறப்பட்டன. அச்சுறுத்தல் சம்பவம் ஒருமுறை மத்திய தொகுப்பு - எப்சிஐ (FCI) அரிசி வேலை செய்து வந்த ஒரு தொழிலாளி - திருச்சியில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கூட்டாளி - சங்க செயலாளர் சேகரை மிரட்டி பணம் கேட்டும் வேலை கேட்டும் தொந்தரவு செய்தார். சங்கக் கமிட்டி கூட்டத்தில் இந்த பிரச்சனை எழுந்தபோது, அந்த நபர் இடுப்பில் சொருகிவைத்திருந்த ரிவால்வரை எடுத்து என் வயிற்றில் வைத்து “சுட்டுத் தள்ளிவிடுவேன்” என்று மிரட்டினார். அதற்குள் அவரது தந்தையும் நமது தோழர்களும் கூடிவிட்டனர். கடும் குடிபோதையில் இருந்தவர் “கொல்லாமல் விடமாட்டேன்” என கத்திக்கொண்டே சென்றுவிட்டார். அவரது கோஷ்டியைச் சேர்ந்த சிலரும், தாய், தந்தை கேட்டுக்கொண்டதால் விட்டுவிடும் நிலை ஏற்பட்டது. போனஸ் வெற்றி 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு காண்ட்ராக்ட் முதலாளிகள் சுமார் 15 பேர், அதன் தலைவர், செயலாளர், நிர்வாகிகள், அதேபோல் சங்க மேஸ்திரிகள், நிர்வாகிகள் 15 பேர் ஒரு பெரிய ஹாலில் பேசுவோம். வழக்கமாக சென்ற ஆண்டு செய்த வேலையை ஒப்பிட்டு இந்த ஆண்டு எத்தனை டன் வேலை என மதிப்பீடு செய்வோம்.

2006ஆம் ஆண்டு வரை இந்த முறை நடைபெற்றது. பிறகு “நாங்கள் எவ்வளவு வேலை காண்ட்ராக்ட் எடுத்துச் செய்கிறோமோ அதைக் கணக்கிட்ட அடிப்படையில் தருகிறோம்” என முதலாளிகள் கூறினர். நாம் சதவீத அடிப்படையில் டன்னுக்கு 14% கேட்பது என முடிவெடுத்தோம். பேச்சுவார்த்தையில் டன் ஒன்றுக்கு 12% போனஸ் என முடிவானது. அபாரமான போனஸ் தொகை செட் மேஸ்திரி மற்றும் கணக்குப்பிள்ளை வங்கிக் கணக்கில் வைத்திருந்து ஆயுதபூசையன்று பிரித்துத் தரப்படுகிறது. அதிகபட்சமாக எல்லா நாளும் வேலை செய்த சங்க துணைத் தலைவர் ஆனந்தன் ₹1,72,000உம், சங்க செயலாளர் சிவக்குமார் ₹1,60,000உம் போனஸாக சென்ற ஆண்டு பெற்றனர். ₹3,000 முதல் ₹6,000 பெற்ற தொழிலாளர்கள் செய்த வேலைக்கு ஏற்றார்போல் கணிசமான தொகையைப் போனஸாகப் பெற்று வருவது தொழிற்சங்க செயல்பாட்டில் மைல்கல்லாகும்.