articles

img

எதேச்சதிகார ஆட்சியை தூக்கிப் பிடித்திடும் கொடுங்கோல் சட்டங்கள் ரத்தாக வேண்டும் -- ஜி.ராமகிருஷ்ணன்

“நீதிமன்றத்தில் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு மறுப்பு தெரிவித்து மாற்றுக்கருத்தை ஒரு நீதிபதி முன்வைப்பது என்பது, எதிர்காலத்தில் இது தொடர்பாக ஓர் ஆழமான பரிசீலனை மேற்கொள்ளப் பட்டு, இப்போது பெரும்பான்மையோரால் கூறப்பட்டுள்ள பிழை திருத்தப்படக்கூடும் என்று நம்பியிருக்கலாம்.”

(“A DISSENT in a court of last resort is an appeal to the brooding spirit of law to intelligence of a future day, when a later decision may possibly correct the error into which the dissenting judge believes the court to have been betrayed”.)

இவை, 1976இல் ஒரு மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஓர் அமர்வாயத்தில் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு மாறுபட்டு கருத்து கூறிய நீதியரசர் எச்.ஆர். கன்னா எழுதியுள்ள சொற்றொடராகும். இந்திரா காந்தி அரசாங்கம் இருந்த சமயத்தில் குடியரசுத்  தலைவர், அரசமைப்புச் சட்டத்தின் 359(1)ஆவது  பிரிவின்கீழ் நாட்டில் ஒவ்வொரு நபரும் அரச மைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமை பறிக்கப்பட்டு, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்படுவதற்கு எதிராக நீதி மன்றத்திற்குச் செல்லும் உரிமையைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வாயத்தில் நான்கு நீதிபதிகள் ஒருவிதமாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதி எச்.ஆர்.கன்னா வும் கருத்து தெரிவித்திருந்தார்கள். 1975இல் இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்கள் ‘மிசா’ எனப்படும் உள்நாட்டுப் பாது காப்பு பராமரிப்புச் சட்டம் (MISA-Maintenance of Internal Security Act) என்பதன்கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட னர். அவசரநிலையைப் பிரகடனம் செய்யும் சமயத்தில், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டால் அதற்கெதிராக நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமையைப் பறித்தும் குடியரசுத் தலைவர், 1975 ஜூன் 27 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் பல உயர்நீதிமன்றங்க ளில் ஆட்கொணர் மனுக்கள் (Habeas corpus) தாக்கல் செய்தார்கள். நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்ப தால் (சஸ்பெண்ட் செய்திருப்பதால்) இந்த மனுக்கள்  செல்லத்தக்கதல்ல என்று பூர்வாங்க ஆட்சே பணையை (preliminary objection) ஒன்றிய அர சாங்கம் எழுப்பியது. இந்தப் பூர்வாங்க ஆட்சேபணை யை அலகாபாத், பம்பாய், தில்லி, கர்நாடகா, மத்தி யப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் நிராகரித்தன. எனவே, இவற்றுக்கு எதிராக ஒன்றிய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. (வழக்கு எண் ஏடிஎம் ஜபல்பூர் (எதிர்) ஒன்றிய அரசாங்கம், இந்தியா 1976 என்பதா கும்.) (ADM Jabalpur vs. Union of India, 1976).

உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை அமலை பாதிக்காது

“சுதந்திரம் என்பது சட்டத்தால், அது பொது சட்டமாக இருந்தாலும் சரி அல்லது சட்டத்தொகுப்பில் எதுவாக இருந்தாலும் சரி, கட்டுப்படுத்தப்படுகிறது. அவசரநிலை என்பது அசாதாரணமான ஒன்று  என்பதால், அதன் அடிப்படையில் அரசாங்கத்திற்கு அசாதாரணமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அவை அவசரநிலைக் காலத்திற்கு வரையறுக்கப்பட்டவை,” என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வாயத்தில் எச்.ஆர். கன்னா தவிர இதர நான்கு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்திருந்தார்கள். அரசாங்கத்தால் பிரஜைகளின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதை (அதாவது சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருப்பதை), உச்சநீதிமன்றம் இவ்வாறு உறுதி செய்தது. ஆனால், இவ்வாறு நான்கு நீதிபதிகளின் கருத்துக ளுக்கு முற்றிலும் மாறான விதத்தில், நீதியரசர் எச்.ஆர். கன்னா, “அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டிருப்பதன் மூலம் அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் உரிமையை அமல்படுத்தக்கோரி நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, உயிர் மற்றும் சுதந்தி ரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை அமல்படுத்தப்படுவதைப் பாதிக்காது,” (“the suspension of the right to move any court for the enforcement of the right under Article 21, upon a proclamation of emergency, would not affect the enforcement of the basic right to life and liber ty”.) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

41 ஆண்டுகள் கழித்து...

மேற்படி ஏடிஎம் ஜபல்பூர் (எதிர்) இந்திய அரசு வழக்கில் 1976இல் உச்சநீதிமன்றத்தின் அமர்வாயம்  வழங்கிய தீர்ப்பை, 41 ஆண்டுகள் கழிந்தபின், 2017இல், கே.எஸ்.புட்டாசாமி (எதிர்) இந்திய அரசு (K.S.Putta samy vs. Union of India) வழக்கில் விரிவான அமர்வா யம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம்  அளித்த தீர்ப்பில், “ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் பெரும் பான்மையாக உள்ள நான்கு நீதிபதிகள் வழங்கிய  தீர்ப்புகள் மிகவும் தவறானவை,” என்று கூறப் பட்டது. 2017 தீர்ப்பு மேலும், “வாழ்க்கையும், தனிப்பட்ட சுதந்திரமும் உயிரோடிருக்கும் ஒவ்வொரு மனிதனிட மிருந்தும் பிரிக்க முடியாததாகும். கேசவானந்த பாரதி வழக்கில் அங்கீகரிக்கப்பட்டதுபோல, இந்த உரிமை கள் அனைத்தும் ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வரும் உரிமைகளாகும். அவை இயற்கை நீதியின் கீழும் உரிமைகளாக இடம் பெற்றிருக்கின்றன. 

ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையும், வாழ்க்கை யின் புனிதத்துவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள் ளது. கண்ணியம் என்பது சுதந்திரம் மற்றும் விடுதலை யுடன் பின்னிப்பிணைந்தது. எந்தவொரு நாகரிக அர சும் தனிநபர்களின் வாழ்க்கையின்மீதும் மற்றும் தனி நபரின் சுதந்திரத்தின்மீதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. வாழ்வு என்பதோ சுதந்திரங்கள் என்பதோ அரசால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதங்களும் அல்ல,  அல்லது அரசமைப்புச்சட்டம் இந்த உரிமைகளை உருவாக்கவும் இல்லை. அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னாலேயே உயிர்வாழ்வதற்கான உரிமை இருந்து வந்தது,” என்று கூறியிருக்கிறது. அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல், எவருடைய உயிரையோ அல்லது தனிநபர் சுதந்திரத்தையோ பறித்திட முடியாது. ஏ.கே.கோபாலன் வழக்கு முதல் 2017இல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கே.எஸ்.புட்டாசாமி (எதிர்) இந்திய அரசு வழக்கு வரை, பல வழக்குகள் மனிதன் உயிர் வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரத்திற்கான உரிமையும் அடிப்படை உரிமை யாகும் என்று பிரகடனம் செய்திருக்கின்றன. சமீப காலங்களில், உச்சநீதிமன்றமும், பல உயர் நீதிமன்றங்களும் கே.எஸ். புட்டாசாமி (எதிர்) இந்திய அரசு வழக்கின் தீர்ப்புரையில் உள்ள உணர்வினைப் பின்பற்றாமல் செயல்பட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமேயாகும்.

மோசமான நிலையிலிருந்து  மிக மோசமான நிலைக்கு...

2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், நம் நாட்டின் நிலைமை மோசமான நிலையிலிருந்து மிக மிக  மோசமான நிலைக்கு (from bad to worse) மாறியது. இப்போதுள்ள நிலைமை, ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலை சூழலைப்போலவே உள்ளது. மோடி அரசாங் கத்தின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், ஜனநாய கத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் நடை பெற்றதைப் பார்த்தோம். சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச் சட்டம் (UAPA), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA), பணபரிமாற்ற மோசடித் தடைச் சட்டம் (PMLA- Prevention of Money Laundering Act)  போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களும், ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கிடும் அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் வருமான வரித்துறை போன்ற முகமைகளும் எதிர்க் கட்சித் தலைவர்களையும், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து விமர்சிப்பவர்களையும் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டன. இக்கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவருவது நடை முறையில் சாத்தியமற்ற நிலை இருந்ததைக் காண முடிந்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டமும், பணமாற்றல் மோசடித் தடைச் சட்டமும் 2019ஆம் ஆண்டில் முன்பு இருந்ததைவிட மிகவும் கொடுங்கோன்மை மிக்கதாக திருத்தி அமைக்கப் பட்டன.

மூத்த பத்திரிகையாளரான என்.ராம், நாட்டில் நிலவும் மிக மோசமான நிலை குறித்து கூறுவதா வது: “ஒன்றிய பாஜக அரசாங்கம் பேச்சுரிமை மீதும்,  ஊடக சுதந்திரத்தின் மீதும், இதர அடிப்படை உரி மைகள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது. தங்களை விமர்சனம் செய்திடும்  இதழாளர்கள், மாணவர்கள், மனித உரிமைப் பாது காவலர்கள் முதலானவர்கள் மீது எளிதில் பிணையில் வெளிவரமுடியாத அளவிற்கு பயங்கரவாத, தேசத் துரோக மற்றும் கொடுங்கோன்மைச் சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்கிறது. அவற்றின் மீது விசார ணையையும் அது முறையாக நடத்தாமல் நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கிறது. 2014க்குப் பின்னர், எல்லைகளற்ற செய்தியாளர்களின் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் உலகில் உள்ள 180 நாடுகளில் இந்தியா 161ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு, குற்றங்கள், ஊழல், வருமான வரி மீறல்கள் மற்றும் பண மாற்றல் மோசடி முதலானவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை கள் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புலன் விசாரணை முகமைகள் அனைத்தையும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது.”

பீமா கொரேகான் வழக்கில் ரோனா வில்சன், வரவர ராவ், சுதா பரத்வாஜ், ஃபாதர் ஸ்டான் சுவாமி, அருண் ஃபெரெய்ரா, கௌதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்டே மற்றும் வெர்னான் கான்சால்வேஸ் போன்று சில புகழ்பெற்ற சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த வழக்கு எல்கார் பரிஷத் வழக்கு என்றும் அறியப்படும். இவ் வழக்கில் பிணைக்கப்பட்ட அனைவரும், நாட்டிற்கு  எதிராக யுத்தம் புரிந்ததாகவும், வெவ்வேறு சாதிக் குழுக்களிடையே பகைமை உணர்வை ஊக்குவித்ததா கவும், மாவோயிஸ்ட் சித்தாந்தத்தைப் பரப்பிக் கொண் டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார்கள். நீண்ட காலத்திற்கு இவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு வந்தது. ஃபாதர் ஸ்டான் சுவாமி  2021 ஜூலை 5 அன்று சிறையிலேயே இறந்துவிட்டார். 84 வயதான அவர் பார்கின்சன் நோயாலும் மற்றும் முதுமை காரணமாகவும் பல்வேறு நோய்களாலும் அவதிக்கு உள்ளாகி இருந்தபோதிலும் அவருக்கு மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக பிணை மறுக்கப் பட்டு வந்தது. அவர் உணவருந்த இயலாமையைச் சுட்டிக்காட்டி அவருக்கு உணவை உறிஞ்சி குடிப்ப தற்காக ஸ்ட்ரா மற்றும் சிப்பர் (straw and sipper) போன்ற எளிய பொருட்களை அளிக்கக்கூட தேசியப் புலனாய்வு முகமை மறுத்துவிட்டது என்று விமர்ச கர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

பூர்வாங்க சாட்சியம் கூட இல்லாமலே...

இதற்கிடையில், அமெரிக்க முன்னணி டிஜிட்டல் தடய வியல் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை யானது, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் கணினி சாதனங்கள் மோசடியான முறை யில் மாற்றப்பட்டிருக்கின்றன (‘ஹேக்’ செய்யப்பட்டி ருக்கின்றன) என்றும், இவ்வாறு 22 கோப்புகள் அவற்றில் புகுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கூறியி ருக்கிறது. இந்தக் கோப்புகள்தான் பீமா-கொரேகான் வழக்கில் முக்கியமான சாட்சியங்களாகும். ரோனா வில்சனின் கணினி சாதனங்களில் இவற்றைப் புகுத்து வதற்கு இஸ்ரேலிய மென்பொருள் ஒன்று பயன் படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை மறுத்துள்ளது. நீதிமன்றமும் இதனை ஆழமான முறையில் எடுத்துக் கொள்ளவில்லை.     கைது செய்யப்பட்ட 16 பேர்களில், வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் முதலில் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஓராண்டு கழித்து,  உயர்நீதிமன்றம் ஆனந்த் டெல்டும்டேவுக்குப் பிணை வழங்கியது. 82 வயதான கவிஞரும், செயற்பாட்டா ளருமான பி.வரவர ராவ், உச்ச நீதிமன்றம் அவருடைய முதுமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவருக்கு பிணை வழங்கி இருந்தது.

கவுதம் நவ்லகாவுக்கு உச்சநீதிமன்றம் சற்றே இளைப்பாறிக்கொள்ளும் விதத்தில் வரையறுக்கப் பட்ட பிணை உத்தரவையே பிறப்பித்தது. அதாவது 70 வயதான அவரை வீட்டுக் காவலில் வைத்திட ஆணை பிறப்பித்தது. அவரை மேலும் துன்புறுத்தும் விதத்தில் அவ்வாறு வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமானால் அதற்கான செலவினமாக அவர் 1.8 கோடி ரூபாய்க்கும் மேலாக அளித்திட வேண்டும் என்று தேசியப் புல னாய்வு முகமை கோரியது. பின்னர், உச்சநீதிமன்றம் வெர்னன் கான்சால்வேஸ் மற்றும் அருண் ஃபெரெய்ரா ஆகியவர்களுக்கும் பிணை வழங்கியது. இறுதியாக, பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டதைப்போல, பேராசிரியர் சோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 5 அன்று பிணை வழங்கியது. இவ்வாறு அவர் உச்சநீதிமன்றத்தால் பிணை வழங்கப்படுவதற்கு முன், சுமார் ஆறு ஆண்டு காலம் பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக அவர் சிறையில் இருந்தார்.  இவருக்கு பிணை வழங்குகையில், உச்ச நீதிமன்றம், இவர் பயங்கரவாதத்துடனோ அல்லது எந்தவிதமான பயங்கரவாத அமைப்புடனுமோ தொடர்பு வைத்திருந்தார் என்பதை மெய்ப்பித்திட பூர் வாங்கமாகக்கூட சாட்சியம் (no prima facie case) இல்லை என்று திட்டவட்டமான முறையில் கூறியி ருக்கிறது. இவ்வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள மற்றவர்கள், இவர்களில் சிலர் சாதாரணமான செயற்பாட்டாளர்கள், இன்னமும் சிறையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரபிர் புர்காயஸ்தா, நியூஸ்கிளிக் ஆசிரியர், 2023 அக்டோபரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுகையில் அவருக்கு காவல் அடைப்பு அறிக்கை அளிக்கப்படவில்லை என்ற காரணத்தால், அவர் மே 15 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொடூரமான சட்டத் திருத்தங்கள்

2014இல் பாஜக ஒன்றிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்பு, கைது செய்யப்படுபவர்கள் எளிதாக பிணையில் வரக்கூடாது என்பதற்காக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், பணபரிமாற்ற மோசடித் தடைச் சட்டம் முதலானவற்றை மேலும் கொடுங்கோன்மை மிக்கதாக மாற்றும் விதத்தில் பல திருத்தங்களை இவற்றில் செய்தன. இந்தச் சட்டங்களின் கீழ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து தான் குற்றவாளி இல்லை என்பதை மெய்ப்பிக்கும் கடப்பாடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாற்றப்பட்டுள்ளதால், இவ் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் தாங்கள் அப்பாவி என்பதை மெய்ப்பிக்கும் வரை சிறையில் இருந்தாக வேண்டும். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், தன்னுடைய தீர்ப்புரை ஒன்றில், “பிணை விதியாக இருக்க வேண் டும், ஜெயில் விதிவிலக்காக இருக்க வேண்டும்,” என்று  கூறியிருக்கிறார். ஆனால், பாஜக ஆட்சியில் அரசுத் தரப்பு வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை முக மைகள் நீதிமன்றங்களில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை ஓர் உரிமையாகக் கோர முடியாது என்று வாதிடுகின்றன. இந்தப் பின்னணியில்தான், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாது காத்திட வேண்டும் என்று கோரி இருக்கிறது. அரச மைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரி மைகளைக் காலில்போட்டு மிதித்திடும் எதேச்சதி கார அமைப்பு அகற்றப்படுவதை உறுதி செய்திடும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச்சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், பணபரிமாற்ற மோசடித் தடைச் சட்டம் போன்ற கொடுங்கோன்மைமிக்க சட்டங்கள் ரத்து செய்யப் படுவதற்கும், அமலாக்கத் துறையினரிடமிருந்து சட்டத்தை அமலாக்கும் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும்.


 

;