articles

img

ஆபத்துக்கு மிக அருகில் இந்தியா! - பேரா. அசோகா மோடி

விரைவான கடன் அதிகரிப்பும் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட மாற்று விகிதமும் ஒரு ஆபத்தான கலவை என்பதை வரலாறு தெளிவாக்குகிறது. கடன் வளர்ச்சியை சார்ந்து இயங்கும் இந்தியா, மலை முகட்டை  நோக்கி பிரேக்குகள் பழுதான கார் பயணிப்பதைப் போன்றது.

“விரைவான ‘கடன் வளர்ச்சி’ பொருளா தாரத்தை நெருக்கடியில் தள்ளும்; கடன் வளர்ச்சியால் நிதித்துறை வளர்ச்சி ஏற்றம் அடைந்ததாக கருதுவது ஒரு பகுத்தறிவற்ற உற்சாகம்” என்று கூறுகிறார் ராபர்ட் ஷில்லர். கார்மென் ரெய்ஹர்ட் மற்றும் கென்னத் ரோகோப் ஆகிய வல்லுநர்கள் விளக்குவது போலகடன் வளர்ச்சி வேறுபட்ட வளர்ச்சி என்று உதாசீனம் செய்வது, நிதி முட்டாள்தனத்திற்கே மீண்டும் இட்டுச் செல்லும். இந்தியாவும் இதே போன்ற முட்டாள்தனமான செயல்களில்  சிக்கியுள்ளது. நாட்டின் “செயல் திறன்” என்று ஆட்சியாளர்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு நாகரிகமற்ற பிரச்சாரமும் நடக்கிறது. இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் கட்டமைப்பானது, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை உள்ளடக்கிய  உந்து சக்தி யாக மாறியுள்ளதாக ஒரு  தவறான சித்திரம் வரையப்படு கிறது. தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட கடன் அதிக ரிப்பையும் இந்த மிகை விவரிப்புகள் அலட்சியப் படுத்துகின்றன.

கொண்டாட்டம் ஏன்?

டிசம்பர் 2023ல் கூடிய பன்னாட்டு நிதி நிறுவன (ஐஎம்எப்) இயக்குநர்கள் குழு, இந்திய நிதித் துறை யின் செயல் திறனை பாராட்டியது. வங்கிக் கடன் வளர்ச்சி மற்றும் வராக் கடன்கள் குறைவது ஆகிய வற்றையும் மேற்கோள் காட்டியது. அதேபோல தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கவுன்சிலின் (NACER) மார்ச் (2024) மாதத்தின் பகுப் பாய்வு, வங்கிகளின் கடன்கள் முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது. இந்த அறிவிப்பு உற்சாகம் அளிக்கலாம். ஆனால் தொழில்துறையில் கடன் பெறுவது மிகக் கடினமாக மாறி வருகிறது. கடன் வளர்ச்சியின் இந்த கொண்டாட்டம், வேலைவாய்ப்பு கள் மற்றும் மனித மூலதன பற்றாக்குறை குறித்து கவலைப்படுவதிலிருந்து  ஒருவரின் கவனத்தை எளிதில் திசை திருப்பக் கூடியது.

கடனை அடைக்க புதிய கடன்!

பழைய கடன்களை, புதிய கடன்களைக் கொண்டு அடைக்கும் பொழுது நிதித்துறைக்கு அது ஆரோக்கிய மான  தோற்றத்தை தரலாம். ஆனால் அந்தக் கடன் வழங்கும்போது ஏற்படும் தாமதம் சீட்டுக்கட்டு சரிவதை போன்ற நிலையை ஏற்படுத்தும். புதிதாக கடன் பெறுவ தற்காக தகுதிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஐ எம் எஃப் இந்த வரலாற்றை அறியாதது அல்ல. அதிக கடனில் தத்தளிக்கும் குடும்பங்கள் மற்றும் வணிக  நிறுவனங்கள், கடனை திருப்பிச் செலுத்த செலவினங் களை குறைப்பது பொருளாதார நெருக்கடியை தீவிரப் படுத்துகிறது. குறிப்பாக இந்திய குடும்பங்கள், இன்றைக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கடன் வாங்கித் தான் வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்டுகின்றன. போக்குவரத்து, கல்வி, மருத்துவச் செலவுகள் மற்றும் அத்தியாவசிய அன்றாடச் செலவுகளுக்கு இது இன்றிய மையாத முறையாக மாறிவிட்டது.

வீட்டுக் கடன் அதிகரிப்பு-ஆபத்து!

வீட்டுக் கடன் (வீடு கட்ட கடன் பெறுவது) அதிக ரித்து வருவது மிகவும் ஆபத்தானது. உற்பத்தித்திறன் இதனால் அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் உள் நாட்டில் விலைவாசி ஏற்றத்திற்கு இது வழிவகுக்கும். இந்த கடன் தொகை அதிகரித்தால் பின்னாளில் சரிவும் விரைவாக வரும் என்று பொருளாதார நிபுணர்கள் அதிப் மியான் மற்றும் அமீர் சுஃபி இருவரும் கூறுகின்றனர். கார்ப்பரேட் முதலீட்டில் வறட்சி ஏற்படும்.நுகர்வோர் செலவினங்கள் குறையும்.பங்குச்சந்தை பித்தலாட் டங்களும் இதோடு சேரும்பொழுது உருவாகும் நிதி நெருக்கடி பொருளாதார வலியை ஏற்படுத்தும்.நீண்ட  கால நல்வாழ்வையும் நாசமாக்கும்.

குற்றவாளிக் கூண்டில் மோடி அரசு!

மோடி அரசின் கடந்த கால பத்தாண்டுகள் நம்மை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளன. கடந்த  30 ஆண்டு நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கங்களும் இதற்கு காரணம். வேலை வாய்ப்பு கள் நிறைந்த வளர்ச்சியை உருவாக்காமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்திக் காட்ட நிதிச் சேவை துறையில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு நிதித்துறை வளர்ச்சியின் மூலம் பெறப்பட்டுள்ளது.

கடுமையான குழப்பத்தில்  நிதிச்சேவைத்துறை!

இந்தியாவில் அமலாக்கப்பட்ட நவ தாராளமயமாக் கல் ஒரு பிரம்மாண்டமான - ஆனால் குழப்பமான நிதி சேவைத் துறையை கட்டமைத்துள்ளது. 30 க்கும் அதிக மான முக்கிய  வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முரட்டுத்தனமாக நடக்கும் வரலாற்றை உடையவை. இரவோடு இரவாக (fly by night) நாட்டை  விட்டே நடையைக் கட்டும் ஊக நிறுவனங்களும் சந்தே கத்துக்குரிய வழிகளில் செயல்பட்டுக் கொண்டுள்ளன. உற்பத்தி திறனின் மேம்பாட்டுக்கு கடன் வழங்க இவர்கள் என்றும் விரும்புவதில்லை. காலப் போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களும் கடன் அளிப்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தோடு ஒப்பிடுகை யில் மிகவும் குறைத்து வருகின்றனர். இவை எல்லாம்  எந்த உற்பத்தியும் செய்யாமல் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சந்தையில் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

1991 லிருந்து தான் துவங்கியது!

1991 இல் இருந்து தொடங்கிய பொருளாதார தாராள மயக் கொள்கை  தான், விரைவில் லாபம் ஈட்டும் மோசடிக் கொள்கைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக,  கோவிட் 19க்கு பிந்தைய ஆண்டுகளில் குடும்பங்களின் வருமானங்கள் “களவாடப்பட்ட”  நிலையில் நிதிச் சேவை நிறுவனங்கள் அவர்களை கடன் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தினர். மிக அதிக வட்டியில் இந்த கடன் சுமை அப்பாவி மக்கள் மீது ஏற்றப்பட்டது. புதிது புதிதாக இந்தத் துறையில் மோசடி நிதி நிறுவனங்கள் முளைத்தன. ஏமாளி குடும்பங்களை மிரட்டி “அநியாய வட்டி” கடனுக்கு அவர்களை இரையாக்கின. கடன் வாங்க அலைமோதும் நிலைமைக்கு பல குடும்பங்க ளுக்கு போதை ஏற்றின.

“கிரெடிட் கார்டு” எனும் வெடிகுண்டு!

தற்போது முடியவுள்ள காலாண்டில் வீட்டுக் கடன்கள் அபாயகரமாக வளர்ந்து வருகின்றன. இந்த கடன் மிகவும் ஆபத்தானது. இத்தகைய கடன்களை திருப்பிச் செலுத்த கிரெடிட் கார்டு முறை ஊக்கப்படுத்தப் படுகிறது. 2011 இல் 2 கோடிப் பேர் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தனர். இன்றைக்கு 10 கோடி மக்கள் அதை பயன்படுத்தும் அளவிற்கு” வளர்ச்சி” ஏற்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் நிதித்துறைக்கும் இது கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடனை திரும்ப செலுத்த வழிஇல்லாதவர்களிடம் உள்ள கிரெ டிட் கார்டுகள், நிதித் துறையை எப்போது வேண்டுமானா லும் வெடித்துச் சிதற வைக்கும் வெடிகுண்டாகும்.

கவர்ச்சிப் பொறிகள்?

ரோகன் (பெயர் கற்பனையானது) 25 வயது உடைய வர். டிவி,லேப்டாப், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை கிரெடிட் கார்டில் வாங்குகிறார். வெகுமதி, கேஷ்பேக், பூஜ்யம் இ எம் ஐ என்ற தேனொழுகும்  தூண்டல்களு க்கு இரையாகிறார். ஆனால் பணம் கட்ட முடியா மல் கடனில் மூழ்கி விடுவார்; கடனை அடைக்க மீண்டும் கடன் பெறுவார். பல ரோகன்கள் இப்படி உருவானால் அதுவே பொரு ளாதாரத்தை தீக்கிரையாக்கும் நிலை. ஒரு நாட்டின் நிதித்துறை திவால் இங்கிருந்து தான் துவங்கும். இத்தகைய அபாயகரமான வீட்டுக் கடன் இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம்.சர்வதேச அளவுகளின் படி இது குறைவுதான். ஆனாலும் வட்டியின் சுமை அதிகம். 12 சதவீதம் வட்டி. உலகி லேயே மிக அதிகமான வட்டி விகிதம் இந்தியாவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் 2008 நிதி நெருக்கடிக்கு முன்னால் இதே போன்ற நிலை ஏற்பட்டது. அதிக குடும்பக் கடன், வீட்டுக் கடன், வட்டி சுமைகள் மிகப்பெரும் பொருளாதார சரிவை அங்கே  ஏற்படுத்தின. பொருளாதார வல்லுநர் ரூடி டோர்ன் புஷ்ஷின் எச்சரிக்கை நமக்கும் பொருந்தும்: “நீங்கள் நினைப்பதை விட நெருக்கடி வருவதற்கு அதிக நேரம் ஆகும். வந்துவிட்டால், நீங்கள் நினைப் பதை விட மிக வேகமாக உங்களை தாக்கி அழிக்கும்!”

தீர்வு என்ன?

கடன் நிறுத்தப்படுவது நெருக்கடியைத் தூண்ட லாம். கடன் வழங்கும் திறனை உற்பத்தி கடனுக்கான தேவைகளோடு சரியாகப் பொருத்த வேண்டும். ஏற்று மதி விரிவாக்கம், அதற்கு ஏற்ற ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பின் நிர்ணயம் தேவை. விரைவான கடன் அதி கரிப்பும் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட மாற்று விகிதமும் ஒரு ஆபத்தான கலவை என்பதை வரலாறு தெளி வாக்குகிறது. நிதிச் சந்தை மட்டுமே வளர்ச்சியை தூண்டும்; மனித வள அபிவிருத்தியின் குறைபாட்டைக் களையும் என்பது ஆட்சியாளர்களின் கண்மூடித்தனமான கனவு. நிதி நெருக்கடி வேலைவாய்ப்புகளை விழுங்கி விடும். தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் வேளாண் துறையை நோக்கி திரும்பும் நிலை ஏற்கனவே உரு வாகியுள்ளது. கடன் வளர்ச்சியை சார்ந்து இயங்கும் இந்தியா, மலை முகட்டை  நோக்கி பிரேக்குகள் பழு தான கார் பயணிப்பதைப் போன்றது. ஏழைகளும் பலவீனமானவர்களும் விழி பிதுங்கி  நிற்கின்றனர். வேலையின்மை நாட்டை சீர்குலைக்கும்.சமூக ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் கூர்மை அடை யச் செய்யும்.

கட்டுரையாளர் : அமெரிக்க பிரின்ஸ்டன் 
பல்கலைக்கழக பேராசிரியர். 
தி இந்து : 12/6/24 
தமிழில்: கடலூர் சுகுமாரன் 








 

;