articles

img

அதானி–பாஜக கூட்டணியிடமிருந்து பொதுச் சொத்துக்களைக் காப்போம்! - எஸ். கண்ணன்

அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு கள் வருகின்றன. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு இந்திய பெரு நிறுவனத்தின் மீதும் இல்லாத குற்றச்சாட்டு அதானி மீது மட்டும் ஏன் வருகிறது என்ற கேள்வி முக்கியமானது. எந்த ஒரு பெரு நிறுவனமும் 10 ஆண்டுகளில் மிகப்பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக வளரவில்லை என்ற உண்மையில் இருந்து, அதானி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் ஊழலுக்கு  அப்பாற்பட்ட நிறுவனம் அல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.

அதானி சொத்துக் குவிப்பில் பொதுத் துறை நிறுவனங்கள்

819 % உயர்வு

முதலில் 2023 ஜனவரியில், ஹிண்டன்பர்க் ரிசர்ச்  நிறுவனம் அதானி எப்படி பங்குச் சந்தை வர்த்தகத்தை  முறைகேடாக பயன்படுத்தினார் என்பதை அம்பலப் படுத்தியது. அதானியின் சில குறிப்பிட்ட நிறுவனங் களின் பங்கு மதிப்பு 819 சதவீதம் திடீரென உயரும் வகையில் முறைகேடுகள் செய்யப்பட்டதை, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அம்பலப்படுத்தியது. பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி ஆகிய  நிறுவனங் களின் பெயரும் இதன் மூலம் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பி னர் மெஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப் பட்டார். பாஜக ஆட்சி, அந்த அளவிற்கு அதானி ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடாளு மன்ற உறுப்பினர்கள் பலர் இடைக்கால நீக்கம் செய்யப்படும் அளவிற்கு, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அதீதமாக நடந்து கொண்டனர். 

தேர்தல் பத்திரம்

இரண்டாவது, உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறுவது, சட்டவிரோதம் என்றது. அதில்  அதானி பெரிய அளவில் இடம் பெறாதது எப்படி என  கேள்வி எழுப்பினர். ஆனால் அதானி நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான ABC இந்தியா, வெல்ஸ்பர்ன்  லிவிங் லிமிடெட் ஆகியவை மூலம் ரூ.55.4 கோடி பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் வழங்கியதாக பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரம் அம்பலப்படுத்தியது. பாஜகவுடன் அதானி நிறுவனம் நெருக்கமாக உள் ளது என்பதற்கு இது கூடுதல் உதாரணம் ஆகும்.

துறைமுகங்கள்

மூன்றாவதாக, அதானி நிறுவனம் கோலோச்சும் துறை கப்பல் துறைமுகம் ஆகும். 355 மில்லியன்  டன் (35.5 ஆயிரம் கோடி கிலோ) சரக்குகளை கையாளும் அளவிற்கு 8 பெரிய  துறைமுகங்களை தன்வசம் கொண்டிருக்கிறது. மேற்கு கடற்கரையில், முந்த்ரா, டுனா, டாஹ்ஜ், ஹாஜிரா, திஹி, மோர்குவா மற்றும் விழிஞ்ஞம் என ஒன்றிய அரசிற்கு சொந்த மானதை விடவும் அதிக எண்ணிக்கையிலான துறை முகங்களை மேற்கு கடற்கரையில் அதானி உடைமை யாக்கிக் கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி துறைமுகமும் அதானிக்கு சொந்தமானது ஆகும். 

விமான நிலையங்கள்

10 ஜனவரி, 2024 நிலவரப்படி, மங்களூரு, லக்னோ,  அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் மற்றும் மும்பை ஆகிய 7 விமான நிலையங்கள் 100  சதமானம் அதானி கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இந்த விமான நிலையங்கள் மூலமாக  80 மில்லியன் (8கோடி) பயணிகள் கடந் தாண்டு வந்து சென்றுள்ளனர். அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற பெயரில், அதானியின் மகன் ஜீத் அதானியின் பொறுப்பில் இவை இயங்கி  வருகின்றன. இந்தியாவின் 25 சதமான பயணிகளை யும், 33 சதமான கார்கோ (சரக்கு போக்குவரத்து) பணி களையும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் கையாண்டு வருகிறது. அடுத்து சென்னை  விமான நிலையத்தை கைப்பற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

எண்ணெய்

அதானி நிறுவனமும், இந்தியாவின் மகாரத்னா நிறுவனம் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில்  நிறுவனமும் இணைந்து, இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிட்., என்ற நிறுவனத்தை நடத்து கின்றனர். இந்தியாவின் 8 சதமான நுகர்வோர் இந்த  நிறுவனத்தை சார்ந்து இருப்பதாக சொல்லப்படு கிறது. இது இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

நிலக்கரி சுரங்கம்

அதானியின் நிலக்கரி சுரங்கங்கள் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், இரும்புத் தாது சுரங்கம் ஒடிசா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளது. ஏறத்தாழ அரசுக்கு இணை யாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனமாக அதானி நிறுவனம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலும் நிலக்கரி சுரங்கம் அதானிக்கு இருக்கிறது. 

மின்சாரம்

மின்சார உற்பத்தி, அதானியின் அடுத்த பெரிய தொழிலாகும். அதானிபவர் டாட் காம் இணைய தளம்,  15,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தெர்மல் பவர் பிளாண்ட் (அனல் மின் நிலையம்) நடத்தி வருவதாக கூறுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் மின் தேவை அதானியின் “சேவை” யில் சிக்கி இருப்பதை அறிய முடிகிறது. இதன் காரணமாகவே கார்ப்பரேட்  - பாஜக அரசு கள்ளக் கூட்டணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மொத்தத்தில் அதானியிடம் இல்லாத தொழில் இல்லை. அரசு படிப்படியாக தனது பொதுத்துறை நிறுவனங்களை கூட்டு அல்லது தனியார் மயம் என்ற பெயரில் இழந்து வருகிறது. அரசின் கைவசம் உள்ள போது சேவை நிறுவனங்களாகவும், தனியாரிடம் செல்லும் போது கொள்ளை நிறுவனங்களாகவும் மாறும் என்பதற்கு, பைனான்சியல் டைம்ஸ் அம்பலப் படுத்தியுள்ள, நிலக்கரி பேரம் குறித்த பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் மிகப் பெரிய உதாரணம் ஆகும். 

அதானி – பாஜக – அதிமுக கூட்டணி

மே 22 தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் என்ற வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தை காப்பதற்காக, அதிமுக அரசு, துப்பாக்கிச்சூடு நடத்திய நாள். இந்தாண்டு அதே நாளில் லண்டனில் வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் இதழ் அதானி – பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் கூட்டுக் கொள்ளை குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த ஜார்ஜ் சோரஸ் முதலீட்டில் இயங்கும் ஆர்கனைஸ்டு கிரைம் அண்ட் கரப்சன்  ரிப்போர்ட்டிங் புராஜக்ட் (ஓ.சி.சி.ஆர்.பி) என்ற  அமைப்பு, ஏராளமான ஆவணங்களை வெளிப்படுத்தி, மேற்கண்ட ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. 2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை 24 கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, முதலில் தரம் குறைந்தது என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் மூன்று மடங்கு விலையில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இது பாஜக ஆட்சி துவங்கிய காலம். அதன் பின் விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்றால், பாஜக அரசின் துணை இல்லாமல் எப்படி சாத்தியம்? பாஜக துணையுடன் அதிமுக இந்த கொள்ளைக்கு உடந்தையாக இல்லாமல் எப்படி, அதானி இவ்வளவு பெரிய மோசடிக்கு தமிழ்நாடு மின்வாரியத்தை பயன்படுத்தி இருக்க முடியும்? டான்ஜெட்கோ என்ற தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தை ஆஸ்திரேலிய நிலக்கரி அடையும் முன், கப்பலுக்கான ஆவணங்கள் சுப்ரீம் யூனியன் இன்வெஸ்ட்ரஸ் லிமிடெட் என்ற இடைத்தரகர் நிறுவனம் மூலம் வரி தளர்வுகள் அதிகம் கொண்ட  பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்டதாக ஓ.சி.சி.ஆர்.பி என்ற அமைப்பு வெளிப்படுத்துகிறது. முற்றிலும் அதானி செய்த மோசடி குறித்த விவரங்களாக இந்த புலனாய்வு அமைந்திருப்பதை கணக்கில் கொள்ள வேண்டும். சுமார் 7 ஆண்டுகள் இந்த கொள்ளைப் பயணத்தை அதானி, பாஜக, அதிமுக கூட்டணி நடத்தி இருக்கிறது.   விலை அதிகம் மட்டுமல்ல, அந்த நிலக்கரியின் தரமும் செல்லுபடி ஆகக் கூடியதல்ல. இந்தோனே சியாவில் உள்ள ஜான்லின் சுரங்க குழும நிறுவனத்தி டம் பெற்ற நிலக்கரியின் எரிதிறன் கிலோவுக்கு 3000  கலோரி தான். இதை இந்தியாவுக்கு விற்க அதானி  இடைத்தரகராக இருந்து செயல்பட முடிவாகியுள்ளது. இதன் விலை 86 டாலர் என தீர்மானித்துள்ளனர். இதை தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விலை அதிகம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால் கிலோவுக்கு 6000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியே இறக்குமதிச் செலவுகள் உள்பட 81 டாலருக்கு கிடைக்கிறது. 

ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி

விலை மிக அதிகம் என்று தெரிந்த பின்னரும் ஒன்றிய பாஜக அரசும், அதிமுக அரசும் இதற்கு உடந்தை என்ற காரணத்தால் தான், அதானியின் மேற்படி கொள்ளை தடுக்கப் படவில்லை. 2016ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர்களாக அருண் ஜெட்லி மற்றும் ஜெயந்த் சின்ஹா இருந்துள் ளனர். தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சராக பி.  தங்கமணி இருந்துள்ளார். தரம் குறைவான நிலக்கரி யை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் பணி துவங்கிய காலத்தில் அமைச்சராக, நத்தம் விஸ்வ நாதன் இருந்துள்ளார்.  இந்த பேரத்தில் மட்டும் ரூபாய் 6000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை, மோசடி செய்யப்பட்ட தாகவும் ஓ.சி.சி.ஆர்.பி நிறுவனம் கூறுகிறது. இந்த  மோசடி நுகர்வோரின் மீது, கட்டண உயர்வு செய்ய வும், மின்வாரிய ஊழியர்களின் நலன் காக்கும் திட்டங் களை கைவிட்டு, ஒப்பந்த ஊழியர்கள் மூலம், உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தவும் இட்டுச் சென்றுள்ளது. 

மனித உயிர்களைக் காவு வாங்கும் ஊழல்

அதேபோல் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கவும் இந்த தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி காரணமாகி யுள்ளது. 2022ஆம் ஆண்டில் தி லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழ் நடத்திய ஆய்வு, ஒவ்வொரு ஆண்டும், காற்று மாசு காரணமாக இந்தியாவில் 20  லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சிகர மான செய்தியை வெளியிட்டுள்ளது. அனல் மின் நிலை யங்களை சுற்றி 100 மைல் சுற்றளவிற்கு குழந்தைகள் இறப்பு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. தரமற்ற நிலக்கரியால் மனித இழப்பும், பொருள் இழப்பும், அதானி – பாஜக- அதிமுக கஜானாக்களை நிரப்பி இருப்பது உண்மை.

தேவை பெரும் போராட்டங்கள்

இந்தியாவிலும், உலக அனுபவத்திலும், நவ தாராளமயக் கொள்கை அமலான 1990களுக்கு முன் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு எதிரான போராட்டங் கள் தீவிரமாக இருந்தன. தாராளமயக் கொள்கைகள் அமலாக துவங்கிய பின், அம்பலமாகும் ஊழல்கள்  மீதான எதிர்ப்பு இயக்கங்கள் குறைந்து வருகிறது.  போபர்ஸ் எதிர்ப்பு, முந்த்ரா எதிர்ப்பு உள்ளிட்டவை  வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக இருந்த போராட்டங்கள். பொதுமக்களும், வாலிபர், மாணவர் அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். பாஜக ஆட்சிக்கு வந்த  பின், ரபேல் ஊழல், அதானி நிறுவனங்கள் செய்துள்ள வகை வகையான ஊழல்கள் ஆகியவை கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் வழிநடத்தும் ஊடகங்களால் மறைக்கப்பட்டு திசை திருப்பப்படுகின்றன. உண்மை யை வெளிப்படுத்தும் ஊடகங்கள் பாஜகவினால் அச்சுறுத்தப்படுவதும், கைப்பற்றப் படுவதும் அதி கரித்தது. எனவே அதானி நிறுவனத்தின் கொள்ளை யை, அதற்கு உடந்தையாக இருந்த பாஜக மற்றும் அதிமுகவை அம்பலப்படுத்தவும், பொதுச் சொத்துக்களை, பொதுத் துறை நிறுவனங்களை காக்கவும் தீவிர போராட்டங்கள் அவசியம்.

 கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
 








 

;