articles

img

வ.உ.சிதம்பரனாரை மீண்டும் சிறையில் தள்ளாதீர்! - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

திருநெல்வேலியில் அருந்ததியர் சமூகத்து இளைஞர் மதன்குமார், மற்றொரு சமூகத்துப் பெண் உதய தாட்சாயிணி ஆகியோர் சாதி  மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டது விவாதப் பொருளாகி இருக்கிறது. இத்திருமணத்தை நடத்தி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகம் சூறை யாடப்பட்டிருக்கிறது. அந்த செயலில் ஈடுபட்டவர்கள் அந்த பெண்ணின் உறவினர்கள் மட்டுமல்ல; மாறாக சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட வெறியர்கள் மற்றும் கூலிப்படையினர் இதை செய்திருக்கிறார்கள்.  சாதி வெறியர் மற்றும் கூலிப்படையினர் நோக்கம் அலுவலகத்தை சூறையாடுவதல்ல; சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இருவரையும் வேட்டை யாடுவதுதான். உதய தாட்சாயிணி மதன்குமாரை பிரிந்து வரவில்லையென்றால், தனது கணவர் தன்  பெண்ணையும், தன்னையும் கொன்று புதைத்து விடுவார் என்பதுதான் அவரது தாயாரின் ஆதங்கமாக இருந்திருக்கிறது. ஆனால் சாதி வெறியர்களுக்கும், கூலிப்படையினருக்கும் அது நோக்கமல்ல. அவர்களை கொன்று குவிப்பதுதான் நோக்கம். 

வஉசி பெயரை  நீங்கள் பயன்படுத்தலாமா?

நிற்க. பந்தல் ராஜா என்ற நபர் வெள்ளாளர் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளராம். அவரும், ஆதரவாளர்களும் வ.உ.சி.யையும், அவரது பெயரையும், படத்தையும் பயன்படுத்துகிறார்கள். இது மன்னிக்க முடியாத, மன்னிக்க கூடாத குற்றம்.  வ.உ.சிதம்பரனார் சாதியைக் கடந்த, தமிழக எல்லையை கடந்த மிகப்பெரும் மக்கள் தலைவர்.  அவரை சாதிச் சிமிழுக்குள் அடைப்பது சதிச் செயல். மிக கேவலமான தரம்தாழ்ந்த சிந்தனை. வ.உ.சி. தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்களின் முன்னத்தி ஏர். தொழிற்சங்க இயக்கம், சுதேசி இயக்கம், கூட்டுறவு இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், ஊழல் ஒழிப்பு இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கான முழக்கம், பெண் சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு என சமூக இயக்கங்கள் பலவற்றின் முன்னோடித் தலைவர், முழுமையான தலைவர்.    அவர் எந்த சாதிக்கும் தலைவரல்ல. அப்படிச் சொல்வது, அதற்காக அவரது பெயரை உச்சரிப்பது, படத்தை பயன்படுத்துவது அப்பட்டமான அயோக்கியத் தனம். வ.உ.சி. எனும் மகத்தான தலை வரை அவமதிக்கும் செயல். வ.உ.சி. வாழ்ந்த போதே சாதிவெறி பிடித்த சிலரின் சவடால்களையும், சதிகளையும் எதிர்கொண்டவர். அதற்கான விலை கொடுத்தவர். பட்டியல் சமூகத்தவருக்கு பணி செய்வதை பெருமையாக கருதியவர். வஉசியே தமது  சுயசரிதையில் இதைக் குறிப்பிடுவதை சொல்லியே தீர வேண்டும்:

“வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை  ஏது மில்லாமலே எண்ணிலா வழக்கில்  அமிழ்த்தினர் போலீசார்; அனைத்தினும் திருப்பினேன்”. 

ராமையா தேசிகன் என்பவரை, வஉசி தன் வீட்டில் வைத்து வளர்த்து வந்தார். அவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர். கண்பார்வையற்றவர். சாப்பிடும் போது, கண் பார்வை இழப்பால், அவரின் கை அலைந்து திரிவதைப் பார்த்து, அவருக்கு தன் கையால் உணவு ஊட்டிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வஉசி இதைப் போன்று கண்பார்வையற்ற பட்டியலினத்தவர் பலரையும் தன்வீட்டில் வைத்து பாதுகாத்து தமிழும், கல்வியும் கற்றுத் தந்த பெருமனிதர் வ.உ.சி. இதற்காக அவரை அன்றும், அவர் சார்ந்த சமூகத்தவர் மட்டு மின்றி இதர சமூகத்தவரும் சொல்லொண்ணா துன்பத்திற்கு உள்ளாக்கினர். இரவில் வீட்டை உட்புறம் தாழிட்டு, தூங்கிவிட்டு காலையில்  கதவைத் திறந்தால், கதவின் மேல் சாத்தப்பட்டு இருந்த கனமான மரத்தடிகள் முதலில் வீட்டை திறப்பவர்கள் மேலே விழும். இப்படி ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சுவாமி சகஜானந்தாவை உருவாக்கியவர்

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சகஜானந்தா என்பவரை தன் வீட்டில் ஒருவாரமாக காலமாக வைத்து  வ.உ.சி. பாதுகாத்து வந்திருக்கிறார். சைவ சித்தாந்த மும் கற்றுக் கொடுத்தார். பின்னாளில் ‘சுவாமி சகஜானந்தா’ என்று புகழ்பெற்ற மனிதர் தான் அவர். சிதம்பரத்தில் பட்டியலினத்தவரின் கல்வி முன்னேற்ற த்திற்காக ‘நந்தனார் கல்விக்கழகம்’ என்ற அமைப்பை துவக்கினார்  சுவாமி சகஜானந்தா. அந்த அமைப்பிற்கு நிதியுதவி செய்யும்படி தன் நண்பர்களுக்கெல்லாம் கடிதம் கொடுத்து, அந்த கல்விக்கழகம் உருவாகவும் நிலைத்து நிற்கவும் உதவியிருக்கிறார் வஉசி. இந்த  காரணங்களுக்காக ‘சொந்த சாதியினராலும்’ மற்ற  சாதியினராலும் தூற்றப்பட்டிருக்கிறார். எல்லா வற்றிற்கும் மேலாக அவரை சாதி விலக்கம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அவரை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு அதைச் செய்தார்கள். ஆனால் மகத்தான அந்த மனிதர், அதற்கு முன்பாகவே இந்த குறுவட்டங்களில் இருந்து தன்னை விடுவித்தவராக இருந்தார். அந்தக் காரணத்தினால் தான் சுய சாதியைப் பழித்து “பாப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே” என்றும், “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என்றும் பாடிய பாரதியும், சாதியின் அடையாளமாக கருதப் பட்ட பூணூலை துறந்த சுப்பிரமணிய சிவாவும் வஉசியின் இயல்பான, உணர்வுப்பூர்வமான  நண்பர் களாக இருந்தார்கள்.  இந்த காரணங்களால்தான் அவர் தனது அரசியல் குருவாக மிகுந்த மரியாதையுடன் பின்பற்றி வந்த பாலகங்காதர திலகர், தீண்டத்தகாத சமூகத்தவர் உயர்நிலை கல்வியை பெறக்கூடாது என்றும் சட்டமன்றத்திற்குள் சென்று சட்டம் இயற்றும் அதிகாரங்களைப் பெற ஆசைப் படக்கூடாது என்றும் தத்தமது சாதிக்குரிய தொழிலையே கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் கூறிய போது, அதற்கு எதிராக நிலை எடுத்த மகத்தான தலைவர் வ.உ.சி. 

பெண்ணடிமைத்தனத்தின் எதிரி

இப்போதே இப்படி என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் சாதி வெறி எத்தனை உச்சத்தில் இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது கடின மல்ல. வ. உ. சி. சாதி வெறிக்கு எதிராக மட்டுமல்ல.  பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக இருந்தவர். தன் மனைவியின் சரித்திரத்தை எழுதிய முதல் மனிதர் வ.உ.சி. தான்.  “நம் நாட்டில் பெண் மக்களை சமைக்கும் எந்திரங்கள் ஆக்கிவிட்டனர். நம்மைப் போலவே அவர்களுக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்தம் ஆலோசனை வேண்டும். அவ்வாறே ஆலோசனை தருவதற்கு அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டியது அவசியம்”  என்று உரத்து முழங்கியவர். 1928ஆம் ஆண்டு காரைக்குடியில் அவர் ஆற்றிய மேலே கண்ட உரையின் தொடர்ச்சியாக...   “ஆயிரம்பேர் சாப்பிட்ட இலையில் புருஷன் சாப்பிட்ட இலையைத் தேடி அதில் மண் விழுந்திருந்தா லும், அதிலேயே அவர் மனைவி சாப்பிட வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் புருஷன் மேல் பற்று இல்லாதவர் என்று கூறப்படுகிறது. எனக்கு கல்யாணம் ஆனது முதல் எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன்.  பெண்களுக்கு சம சுதந்திரம் தர வேண்டும். உரிமைகளை தரப் போராடுதல் வேண்டும்” என, உரிமையைக் கொடு என்று ஆண்களுக்கும்; உரிமையை பெறப் போராடு என்று பெண்களுக்கும் அறைகூவல் விடுத்தவர் வ.உ.சி. 

இன்றைக்கு உதயதாட்சாயிணி தனது உரிமைக்காகப் போராடுவதை வ.உ.சி.யின் பெயரால் ஒடுக்குவது, கொலைக்கருவிகளோடு விரட்டுவது, அவர்களுக்கு ஆதரவளித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் தாக்குவது, அலுவலகங்களை சூறையாடுவது; இவை அனைத்தையும் வ.உ.சி.யின் பெயரால் நியாயப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! 

வஉசியின் வரலாறு தெரியுமா?

அவரை ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர் என்று பார்க்கா மல், தங்கள் தலைவராக அறிவித்து ஆங்கிலேயரி டம் வேலை பார்த்த சிறை காவலர் ஒருவர் அவருக்காக தண்டனை ஏற்ற வரலாறு, சாதி ஆதிக்க வெறிகொண்டு துரத்தும் நபர்களுக்கு தெரியுமா? ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு வ.உ.சி.யின் மீது தீரா வன்மம் இருந்தது; செக்கிழுக்க வைத்ததன் மூலம் மட்டும் அதைத் தீர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவரது உணவில் கல்லும், மண்ணும் சில நேரம் மலமும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இதை சகித்துக் கொள்ளாத கோவை ஜெயில் வார்டன் ராமையா கவுண்டர் என்பவர், தன் வீட்டில் இருந்து வ.உ.சி.க்கு  உணவு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலயே நிர்வாகம் அவருக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு சிறையில் கல் உடைக்கும் பணியினையும் கொடுத் திருக்கிறது என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா? அவர் சாதி கடந்த தலைவராக இருந்ததினால்தான் ரங்கசாமி ஐயங்கார் என்பவர் பாதி வழித்த முகத்தோடு ஊர் ஊராக அலைந்திருக்கிறார். சவரம் செய்து கொண்டிருந்தபோது ரங்கசாமி ஐயங்கார், வ.உ.சி. குறித்து இழிவாகவும், ஆங்கிலேயர்க்கு ஆதரவாகவும்  பேசியதால் கோபமுற்ற அந்த சவரத் தொழிலாளி,  சவரம் செய்வதை பாதியில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டார். அந்த காலத்தில் சுய  சவரமும் கிடையாது. ஒருவர் செய்யும் சவரத்தை பாதியில் நிறுத்திவிட்டால் அந்த ஊரின் இதர தொழிலாளிகள் அந்தப் பணியைச் செய்ய மாட்டார்கள். வ.உ.சி.யின் மீதான சவரத் தொழி லாளியின் மரியாதை சாதி கடந்தது, அல்லவா? 

தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்

தீண்டாமை, சாதியப் பாகுபாடு மட்டுமின்றி 1927-ல் காங்கிரஸ் மாநாட்டில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதை முழுமையாக வலி யுறுத்தி நின்றார் வஉசி. தொழிற்சங்க இயக்கம், 8 மணி நேர வேலைக்கான இயக்கம் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தெருக்கள்தோறும் கூட்டு உணவக முறை  என்று பலவிதமான முற்போக்கு முன்னெடுப்புகளில் முன்னவராகத் திகழ்ந்தவர் வஉசி. தந்தையின் மீது அபரிமிதமான மரியாதை வைத்திருந்த வ.உ.சி., தொழில் தர்மம் என்ற பெயரில்  தன் தந்தை, தவறு செய்தவர்களுக்காக வாதாடும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று வாதாடியிருக்கிறார். கையூட்டு வாங்கிய நீதிபதி ஏகாம்பர ஐயர் என்பவ ருக்கும், வாசுதேவ ராவ், பஞ்சாப கேசரி ஐயர் என்பவருக்கும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். நியாயம் என்று வந்து விட்டால் தந்தைக்கு எதிராகவும், அரசியல் குருவுக்கு எதிராகவும் சண்டமாருதம் செய்வதை தனது இயல்பாக கொண்டிருந்த வ.உ.சி.யை சாதிப் பெட்டிக்குள் அடைப்பது, திட்டமிட்டு அவரை இழிவு படுத்துவதாகும். அவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை விதித்த ஆங்கிலேய நீதிமன்றத்தை விடவும் கொடூரமானவர்களால்தான் இதைச் செய்ய முடியும்.

வ.உ.சி.க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து அவரது சகோதரர் சுய நினைவற்றவராகவே இருந்தார். தமிழ்நாடே கலங்கித் தவித்தது.  சினந்து எழுந்தது. இந்த நிலையில் பாரதி தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பாடினான்.

“வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்று  கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ” என்று பாடினார். நவீன காலத்தில் சாதிய சக்திகள் வ.உ.சி.யை சாதிச் சிறைக்குள் பூட்ட நினைக்கிற போது உரத்த குரலில் நாம் சொல்லுவோம்: “வ.உ.சி.யை சாதிச் சிறைக்குள் மாட்ட நினைக்கின்றீர் தோழனாக மீண்டான் என்றே  கேளாத கதை விரைவில் கேட்பாய் தமிழகமே..!” இந்த உறுதியோடு களம் காண்கிறது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி.  வீரவணக்கம் தோழர் வ.உ.சி!

 

 

;