articles

img

கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் - பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. இப்போரில் பாசிச சக்திகளுக்கு எதிராக சோவியத் மக்களும் செஞ்சேனையும் வகித்த  பாத்திரம் உலக வரலாற்றில் நிகரற்றது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான ஆட்சிக்கும், அநியாயத்திற்கும் சொந்தமான பாசிச சக்திகளை வீழ்த்துவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் சோவியத் மக்கள், செஞ்சேனை மற்றும் இதற்கு தலைமையேற்ற கம்யூனிஸ்ட்டுகள் என்பது வரலாறு. இங்கு சோவியத் யூனியனுடன் இணைந்து பாசிச ராணுவத்தை வீழ்த்துவதில் நேச நாடுகள் வகித்த பாத்திரமும் முக்கியமானதே. இதனை நாம் மறுக்கவில்லை. இயல்பாகவே, பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகெங்கும் ஜனநாயக, மனிதநேய,  தேசபக்த சக்திகளிடையே பெரும் உத்வேகமும், எழுச்சி யும் கரைபுரண்டோடின. பல நாடுகளில் காலனியாதிக்கத் திற்கு எதிரான விடுதலைப்போராட்டங்கள் வீரிய மடைந்தன. அதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

பாசிச யுத்தத்திற்கு முன்பாகவே இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்ட்டுகள் வகித்த பாத்திரம் மகத்தானது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்கள் விடுதலைப்போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க அத்தியாயங்கள் ஆகும். பாசிச சக்திகளின் வீழ்ச்சியும் அதில் கம்யூனிஸ்ட்டுகள் வகித்த பாத்திரமும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளித்தது. இக்காலத்தில் தான் இந்திய விடுதலைப்போரில் சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின. இந்திய கப்பற்படை மாலுமிகள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கினார்கள். இந்த மாலுமிகள் ஏற்கனவே நேச நாடுகளின் ராணுவத்தோடு இணைந்து பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடி உத்வேகம் அடைந்தவர்கள். கப்பற்படையில் பிரிட்டிஷ் மாலுமிகளுக்கும் இந்திய மாலுமிகளுக்கும் இடையே பெரும் பாகுபாட்டை அன்றைய பிரிட்டிஷ் அரசு கடைப்பிடித்தது. ஒரே மாதிரி யான ராணுவ சேவையாக இருந்தபோதும் ஊதியம், வாழ்நிலை, உணவு, உடை என அனைத்திலும் இந்த பாகு பாடுகள் இருந்தன. இதற்கு எதிராக தங்களது போர்க்கு ரலை எழுப்பினர் இந்திய கப்பற்படை மாலுமிகள். பாசிச வீழ்ச்சி - இந்திய விடுதலைப்போரின் எழுச்சி இவற்றின் பின்னணியில் “ஆசாத் இந்துஸ்தான்” என்ற ரகசிய அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு கப்பற்படை மாலுமிகளிடையே செயல்பட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்தியதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது.

1946 பிப்ரவரி 18 - இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் இது. அன்றைய தினம் பம்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த “தல்வார்” போர்க்கப்பலில் இருந்த 1100 மாலுமிகள் வேலைநிறுத்தத்தை துவக்கினார்கள். இவர்களோடு பம்பாயின் தரைத்தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 5000 கப்பற்படை மாலுமிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு சமமான ஊதியம், உணவு, இதர உரிமைகள் தங்களுக்கும் வழங்க வேண்டுமென்பது தான் இவர்களது பிரதான கோரிக்கை. போராடிய மாலுமிகள் தல்வார் போர்க்கப்பலில் பறந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் யூனியன் ஜாக் கொடியை கிழித்தெறிந்தார்கள். மாறாக, அக்கப்பலில் இந்திய விடுதலைக்குப் போராடி வந்த காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகளை பறக்கவிட்டார்கள். அவர்கள் தங்கள் கரங்களில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கப்பலில் இருந்த வெள்ளை ஏகாதிபத்திய உயர் அதிகாரிகளை சிறைப்பிடித்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் தல்வார் கப்பலுக்கு வெளியே “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இந்தியாவை விட்டு வெளியேறு - ஏகாதிபத்தியம் ஒழிக” என முழக்கமிட்ட பி.சி. தத் என்ற மாலுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தல்வார்  கப்பல் மாலுமிகளும் வெளியே போராடிக் கொண்டிருந்த கப்பற்படை மாலுமிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வலுவான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

இந்நிகழ்வுகள் இதர பகுதி மாலுமிகள் - ராணுவ வீரர்களிடையேயும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பம்பாய் தல்வார் கப்பல் மட்டுமல்ல, கராச்சி துறைமுகத்தி லிருந்த “இந்துஸ்தான் கப்பல் படை மற்றும் தரைத்தள மாலுமிகளும் வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். இப்போராட்ட வேகம் அனலாகப் பரவியது. அடுத்த ஓரிரு நாளில் சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா, தில்லி, கொச்சி, ஜாம்நகர், அந்தமான், பகரின் மற்றும் ஏதன் பகுதிகளில் உள்ள வீரர்கள், போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக ஒருமைப்பாடு தெரிவிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். இப்போது போராட்ட முழக்கம் பொருளாதார கோரிக்கைகளாக மட்டும் இருக்கவில்லை. “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இந்தியாவை விட்டு வெளியேறு” என்ற விடுதலைப் போராட்ட அரசியல் முழக்கமாக மாறியது. மாலுமிகள் - ராணுவ வீரர்களின் எழுச்சியால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்திய தளபதி அட்மிரல் காட்பிரே வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நாள் குறித்தான். அந்த குறிப்பிட்ட நாளுக்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லையென்றால் போராட்டக் களத்தில் உள்ள அனைத்து கப்பல்கள் மீதும் குண்டுமழை பொழிந்து அழிக்கப்போவதாக மிரட்டினான். ஆயினும் போராட்டத்திற்கு ஆதரவாக மரைன் டிரைவ், அந்தேரி, சியான், கல்கத்தா, புனே, அம்பாலா, ஜலந்தரில் இருந்த விமானப்படை வீரர்களும் ஒருமைப்பாடு தெரிவித்து ஆதரவு வேலை நிறுத்தம் செய்தனர். போராட்டக்களத்தில் 78  கப்பல்களும், 28 தரைத்தளங்களும் இருந்தன. இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் போராட்டக்களத்தில் இருந்தனர். இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வகித்த பாத்திரம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. கப்பற்படை மாலுமிகளின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை பிரகடனப்படுத்தியது. காட்பிரேயின் மிரட்டலை வன்மையாகக் கண்டித்தது. அவனுடைய மிரட்டலை எதிர்த்து பிப்ரவரி 22ஆம் தேதி ஒருநாள் முழு அடைப்பு - பொதுவேலைநிறுத்தத்திற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் அறைகூவல் விடுத்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பொதுவேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஊர்வலங்கள், ஆவேச உணர்வோடும் எழுச்சியோடும் நடந்தன. பல்வேறு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

பம்பாய் மாநகரில் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு வரலாறு காணாத முழு அடைப்பு நடந்தது. இப்போராட்டம் இந்து - முஸ்லிம், கிறித்தவர் மதவேறுபாடுகளை கடந்து ஒற்றுமையாக நடந்தது. தேசத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து தேசமே ஒன்று பட்டு நிற்கிற உணர்வோடு லட்சோபலட்சம் மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டார்கள். பிரிட்டிஷ் ராணுவம் இப்போராட்டங்களை அடக்க ஆயுதங்களோடு தெருக்களில் அணிவகுத்து வந்தது. பம்பாய் உட்பட பல இடங்களில் கூடி நின்ற மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். எந்த முன்னெச்சரிக்கையும் கடைப்பிடிக்கப்படவில்லை. பிப்ரவரி 21 முதல் 23 முடிய இத்தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் கம்யூனிஸ்ட் இயக்க முக்கிய தலைவரும் மகளிர் அமை ப்பின் பிரதான நிர்வாகியுமான கமல் தோண்டேயும் ஒருவர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்குமாறு காங்கிரஸ், முஸ்லிம் லீக் உட்பட இதர இயக்கங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது. ஆனால், காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆதரவளிக்காதது மட்டுமல்ல போராடும் மாலுமிகள், தொழிலாளர்களுக்கு எதிராக அணி திரண்டனர். மாலுமிகளின் போராட்டத்தை விடுதலைப்போரின் ஒரு பகுதியாக பார்க்காமல் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்த பிரச்சனையாக பார்த்தார்கள். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வல்லபாய்படேல் “ராணுவ தளபதி காட்பிரேயின் எச்சரிக்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவே” என கூறியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை புளகாங்கிதம் அடையச் செய்தது. முஸ்லிம் லீக் தலைவர் முகமதுஅலி ஜின்னாவின் குரலும்  வித்தியாசமானதாக இல்லை.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்களின் வார்த்தைகள் போராடும் வீரர்களை நிலைகுலைய வைத்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் அதன் தலைமையிலான தொழிற்சங்க மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ஆதரவு மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் லீக் தலைவர்கள் இதோடு நிற்கவில்லை. போராடும் ராணுவ வீரர்கள் உடனடியாக பிரிட்டிஷ் அரசிடம் சரணடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தேசபக்த உணர்வோடும் ஏகாதிபத்திய எதிர்ப்போடும் போராடிய ராணுவ வீரர்கள் ஒட்டுமொத்த நிலைமையை கணக்கில் எடுத்து இறுதியாக பின்வருமாறு அறிவித்தார்கள். “நாங்கள் சரணடைகிறோம் ஆனால், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திடம் அல்ல - இந்திய மக்களிடம் சரணடை கிறோம்” - எவ்வளவு உணர்ச்சிமயமான, ஆதர்சனமான வார்த்தைகள் இவை. ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம், தீரத்துடன் போராடிய மாலுமிகள், ராணுவ வீரர்களையும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடிய லட்சோபலட்ச தொழிலாளர்களையும் பாராட்டி வாழ்த்தியது. இப்போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விடுக்கப் பட்ட எச்சரிக்கை என கண்டனம் செய்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் விடுத்த போராட்ட அறைகூவல், இதில் லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகள் - இவை அட்மிரல் காட்பிரேயின் எச்சரிக்கையை அதாவது போராடும் மாலுமிகள், ராணுவ வீரர்களையும் இவர்கள் பணியாற்றிய கப்பல்களையும் குண்டுமழை பொழிந்து அழிக்கப்போவதாக அறிவித்த மிரட்டலை கைவிட வைத்தது என்பதை வரலாற்றில் எவரும் மறுக்க முடியாது.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் எடுத்த நிலைபாடுகளுக்காக கம்யூனிஸ்ட் இயக்கம் தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியது. அப்போது கம்யூ னிஸ்ட் இயக்கம் வெளியிட்ட பிரகடனம் வருமாறு: “கப்பற்படை மாலுமிகள் / ராணுவ வீரர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களும் அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் தேசம் தழுவிய எழுச்சியும் வீண்போகாது. இந்நிகழ்வுகள் தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களுக்கு உத்வேகமூட்டும். கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய விடுதலைக்கான போராட்டத்தை  - அதன் சரித்திரக் கடமையை உறுதிபட நிறைவேற்றும் என உறுதியேற்கிறோம்.” இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பின்னர், வரலாறாக மாறிய நிகழ்வுகள் ஆகும்.