articles

img

மாற்றம் கண்ட இலங்கை மக்கள் : ஒன்றுபட வேண்டிய தமிழ் மக்கள் - எஸ்.இஸட்.ஜெயசிங்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : ஓர் ஆய்வு

உலக நாடுகளால், குறிப்பாக இந்திய தேசத்தால் கூர்ந்து கவனிக்கப்பட்ட, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், செப்டம்பர் 21 அன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பெரும் வெற்றியைப் பெற்று வந்த ராஜபக்சேவின் குடும்ப ஆட்சியை, இன்றைய ஜனாதிபதி தேர்தல் மூலம் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளதைக் காண முடிகிறது. அத்துடன் இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு வலது சாரி கட்சிகளின் குடும்ப குழுமம் சார்ந்த, ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இன்றைய ஜனாதிபதி தேர்தல் முடிவு அமைந்துள்ளது. 

காத்திருந்த இலங்கை மக்கள்

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகிய அண்ணன் தம்பி இருவருக்கும் அபரிமிதமான ஆதரவை அள்ளிக் கொடுத்து ஜனாதிபதியாக, பிரதமராக ஆட்சியில் அமர்த்திய இலங்கை மக்கள், 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். ராஜபக்சே வகையறாக்கள் நாட்டையும்,  நாட்டின் வரு மானத்தையும் கொள்ளையடித்ததோடு நிற்காமல்,  நாட்டையும் மக்களையும் பிச்சைப் பாத்திரத்தோடு தெருத்தெருவாக அலைய விட்டனர்.  உணவு,  எரிபொருள் என எல்லா வற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட மக்கள் பட்டினி யால் வாடினர். விலைவாசி விண்ணைத் தொட்டது.  அப்போது அம்மக்களுக்கு ‘இரட்சக ராக’ , ஜேவிபி தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்க வெளிப்படலானார். மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர்.  2022 ஆம் ஆண்டு, ‘அறகலய’ என்ற காலி முகத் திடல் எழுச்சியின் மூலம் ஜனாதிபதி கோத்த பயவையும்,  பிரதமர், மகிந்த ராஜபக்சேவையும் நாட்டை விட்டு விரட்டி அடித்த இளைஞர்கள்,  பெரிய ஒரு மாற்றம் வேண்டி தேர்தல் வரை காத்திருந்தனர். அதனைச் சரிவர புரிந்து கொண்டு,  அதற்கு ஏற்ற தளத்தை உருவாக்கியதுடன்,  உத்தரவாதத்தையும் ‘தேசிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியை உரு வாக்கிய தலைவர் அனுர குமார திஸாநாயக்க வழங்க முன் வரலானார்.  அதன் வெளிப் பாடாகவே செப்டம்பர் 21 தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இலங்கையின் மக்கள் தொகை 2,31,03,565, பேர். இவர்களில் 1,71,49,354  பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப் பட்டிருந்தனர்.  இவர்களில் 11 இலட்சம் பேர் புதிய வாக்காளர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாகும்.  இந் நிலையில் 1,36,19,916 பேர் தேர்தலில் வாக்களித்துள்ள னர்.  20.54 %, பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.  2019 ஆம் ஆண்டு  தேர்தலில் வாக்களிப்பு 83.72 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.  முடிவடைந்த தேர்தலில் மூன்று பிரதான கட்சி வேட்பாளர் களையும் உள்ளடக்கி 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட விருப்ப வாக்குகளின் முடிவில், ஜேவிபி கட்சியின் தலைவரும்,  தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைந்த தலைவருமான  அனுர குமார திஸாநாயக்க 55.89 சதவீத வாக்குகளைப் பெற்று,  கடந்த செப்டம்பர் 22 அன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். 

விரிவான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் சராசரியாக 75 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.  சிங்கள மக்கள் மிக அதிகமாக வாழும் கம்பஹா  மாவட்டத்திலும் மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடந்துள்ளது.  இலங்கைத் தமிழர் பெரும் பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி,  மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் சராசரி வாக்குப் பதிவு விகிதம் 68.4 % ஆகும். 38 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும் அனுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவர் இடையே மட்டுமே கடுமையான போட்டி நிலவியது.  அனுர குமார திஸாநாயக்க 22 அமைப்புக்களை ஒருங்கிணைத்து, ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற பெயரிலும், சஜித் பிரேமதாச பதினோரு சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆத ரவுடன், ‘மக்கள் சக்தி’ என்ற பெயரிலும் போட்டி யிட்டனர். இடைக்கால ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஏழு சிறு கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் சுயேட்சையாகவும், ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, பொது ஜன பெரமுன என்ற கட்சி பெயரிலும், முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரன் இலங்கைத் தமிழர்களின் பொது வேட்பாளராகவும் போட்டியிட்டனர். இவர்களைத் தவிர முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 33 பேர் சுயேட்சையாகவும்,  மிகவும் சிறிய கட்சிகள் சார்பிலும் போட்டியிட்டனர். 

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அனுர குமார திஸாநாயக்க, 42.3% என்ற வீதத்தில், 56,34,915 வாக்குகளையும், சஜித் பிரேமதாச, 32.76% என்ற விகிதத்தில், 43,63,035 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.  கடும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட, ரணில் விக்கிரமசிங்க அவர்களால், 17.27% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. நாமல் ராஜபக்சே வெறும் 2.57% வாக்குகளைப் பெற, 2010 தேர்தலில் 40% மேல், வாக்குகளைப் பெற்றிருந்த முன் னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இத்தேர்தலில் 0.02% வாக்குகளை மட்டுமே பெற்றமை கவனிக்கத் தக்கதாகும்.

தமிழ் வேட்பாளர்களின் நிலை

இலங்கைத் தமிழர் மத்தியில் அதிக வாக்கு களைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட,  பொது  வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினருமான அரிய நேந்திரன் மிகக் குறைவான 1.70%, என்ற விகிதத்தில், 2,26,343 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மலையகத்தில் இருந்து போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் 0. 02% என்ற விகி தத்தில் வெறும் 2,138 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.  இவர்களைத் தவிர, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஏனைய 31 வேட்பாளர் கள் பெற்ற வாக்குகள் 3.38%க்கும் குறைவாகும். முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எவரும் 50% எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில்  விருப்ப வாக்கு

மிகப்பெரிய இந்திய நாட்டின் ஜனநாயகத் தேர்தல் முறையில் இல்லாத சிறப்பான தேர்தல் நடைமுறைகள்,  இலங்கை அரசியல் அமைப்பில் இருப்பது கவனிக்கத் தக்க தாகும்.  நாடாளுமன்ற தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவமும், ஜனாதிபதி தேர்தலில் விருப்ப வாக்கு முறையும் முக்கிய ஜனநாயக அம்சங் களாக பார்க்கப்படுகிறது.  இலங்கையில் ஜனாதி பதியாக வெற்றி பெற 50% மேல் வாக்குகள் பெற வேண்டும் என்பது விதி முறையாகும்.  ஆனால் இந்திய தேர்தல் முறையில் 37% மட்டுமே பெற்ற ஒருவர் பிரதமராவதையும் காண லாம். 1982 முதல் 2019 வரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்ற அனைவருமே முதல் சுற்றில் 50% மேல் வாக்குகள் பெற்றவர் களாவர். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் முதற்தடவை யாக,  முதல் இரண்டு இடங்களையும் பெற்றி ருந்த அனுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் 50% குறைவான வாக்குகளையே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றியாளரைத் தேர்வு செய்திட மக்கள் அளித்த இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.  மக்கள் வாக்களிக்கும் போது 1,2,3 என தம் விருப்ப வாக்குகளை அளிக்கும் ஏற்பாடு இருந்தமையால் 50% எட்ட,  விருப்ப வாக்கு கருத்தில் கொள்ளப்பட்டது.  முதல் இரண்டு வேட்பாளர்கள் தவிர, ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட 36 வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் இருந்து, முதல் இரண்டு வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணப்பட்டது. இவ்வாறு அளிக்கப் பட்ட 2,73,131 விருப்ப வாக்குகளில் அனுர குமார திஸாநாயக்க 1,05,264 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 1,67,867 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர் களை தவிர்த்து கணக்கிட்டு கவனித்தால், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு விருப்ப வாக்குகளை அளிக்க வாய்ப்பு இருந்தும், 3 லட்சத்துக்கும் குறைவானவர்களே விருப்ப வாக்குகளை அளித்துள்ளனர் என்பது  புலனாகிறது. தங்களின் முதல் வாக்கு செல்லாத தாகிவிடக் கூடாது என்ற அக்கறையும், விருப்ப வாக்கு தொடர்பாக போதிய விழிப்புணர்வு இன்மையும் விருப்ப வாக்கு எண்ணிக்கை குறைவுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.  இவ்வாறு இரண்டாம் கட்ட விருப்ப வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அனுர குமார திஸாநாயக்க 55.89% வாக்குகளையும், சஜித் பிரேமதாச 44.11% வாக்குகளையும் பெற,  வெற்றிக்கு தேவைப்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்ற அனுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டார். 2019 தேர்தலில், 3.16% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த அனுர குமார திஸாநாயக்க, இம்முறை பெரும் பாய்ச்சலாக முதல் கட்டத்திலேயே,  கடந்த முறையைவிட 39% வாக்குகள் அதிகம் பெற்று உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

வாக்களிப்பு முறை

கடந்த 75 வருட காலமாக ஆட்சி புரிந்த வந்த இருபெரும் வலதுசாரி அமைப்புக்களை தூக்கி எறிந்து,  சோஷலிசக் கொள்கை கொண்ட மாற்றுக் கட்சியான ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி, வேட்பாளரை, இலங்கை மக்கள், ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளனர்.  ஆனால் இலங்கை, மக்களின் இன்றைய வாக்களிப்பு முறை கடந்த  காலங்களில் இருந்தது போன்றே இப்போதும் இருப்பதாகத் தெரிகிறது.  இதுவரை நடந்த தேர்தல்களை கவனிக்கும் போது பெரும்பான்மை சமூகத்தின்,  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக, இருந்து வந்துள்ளார். கடந்த முறை ராஜபக்சே வின் இனவாதத்திற்கு இணங்கி வாக்களித்த அதே, சிங்கள மக்கள், இம்முறை இன வாதத்தை  முன் நிறுத்தாத, பொருளாதார மாற்றங்களை கொண்டு வருவோம் என உறுதி அளித்த, ஜேவிபி கட்சி வேட்பாளருக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 22 தேர்தல் மாவட்டங்களில், சிங்கள சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் 15 மாவட்டங்களிலும் அனுர குமார திஸாநாயக்க அவர்களே அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருப்பதைக் காண முடிகிறது.  சிறுபான்மைச் சமூகம் அதிகமாக வாழும் அம்பாறை,  பதுளை,  மட்டக்களப்பு,  யாழ்ப்பாணம்,  நுவரெலியா,  திருகோணமலை,  வன்னி ஆகிய ஏழு மாவட்டங்களில், அனுர குமார திஸாநாயக்க இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தமிழ்ப் பகுதிகளில் அதிக அளவில், 40% மேல் வாக்குகளைப் பெற்றுள்ளமை காணக் கூடியதாக இருக்கிறது.

இதேபோன்று சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி,  நுவரெலியா மாவட்டங்களில் சுயேச்சை வேட்பாளரும் இடைக்கால ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்கவை பின்னுக்குத் தள்ளி, சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த படியாக அதிக அளவு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.  தமிழர் அதிகமாக வாழும் பகுதி களில் அனுர குமார திஸாநாயக்க ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அனுராதாபுரம்,  கொழும்பு,  காலி,  கம்பஹா,  அம்பாந்தோட்டை, களுத்துறை,  கண்டி,  கேகாலை,  குருனாகலை, மாத்தளை, மாத்தறை,  மொனராகலை,  பொலன்னறுவை,  புத்தளம்,  இரத்தினபுரி ஆகிய 15 மாவட்டங்களில் கிடைக்கப் பெற்ற அதிகப்படியான வாக்குகளே அவரது வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.  தமிழ்ப் பகுதிகளில் போதிய கட்சி கட்டமைப்பு ஜேவிபி கட்சிக்கு இல்லாத நிலையுடன், அக்கட்சி மீதான நம்பிக்கை அம்மக்கள் மத்தியில் போதிய அளவு ஏற்படாமை,  பொது வேட்பாளர்,  தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல கார ணங்கள், தமிழ்ப் பகுதிகளில் ஜேவிபி கட்சியின் குறைவான வாக்குகளுக்கு காரணங்கள் ஆகும்.  எனினும் தமிழர் அதிகமாக வாழும் ஏழு  மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு 10 லட்சத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகள் கிடைத்த நிலையில் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு 5 லட்சத்துக்கும் சற்று கூடுத லான வாக்குகள் கிடைத்திருப்பதையும், காண லாம்.  எனவே இப்பகுதிகளில் முக்கிய கட்சிகளின் பரப்புரைகளையும் மீறி, படித்தவர்கள், இளை ஞர்கள் பெருவாரியாக அனுர குமார திஸாநா யக்கவை ஆதரிக்க முன் வந்துள்ள போக்கை யும் காண முடிகிறது. 
 

பௌத்த பிக்குகளின் கதி

இலங்கை ஒரு பௌத்த நாடு என அரசியல் அமைப்பு கூறுகிறது.  70% மேற்பட்டவர்கள் பௌத்தர்கள்.  அதனால் பௌத்த மதமும்,  பௌத்த குருமார்களும் முக்கியத்துவம் பெற்று  வருகின்றனர்.  ஆனால் தேர்தல் என்று வரும் போது பௌத்த பிக்குகளை ஆதரிக்க மக்கள் முன்வருவதில்லை என்ற நிலையும் இலங்கை யில் இருக்கிறது.  நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகள் போட்டியிட்டனர்.  அவர்கள் 0.09%, 0.05% வாக்குகளையே பெற முடிந்தது. எனவே இதுவரை இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இனம்,  மொழி,  மதம் சார்ந்து  வாக்களிக்காத தேர்தலாக இது பார்க்கப்படு கிறது.

சிறுபான்மையினரின் தேர்தல் வாக்களிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருந்த காலங்களைத் தவிர்த்து பெருமள வில் எல்லா காலங்களிலும் வட கிழக்கு தமிழ் பேசும் மக்கள்,  இலங்கைத் தேர்தல்களில் தங்க ளின் பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர்.  2019 ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் வெவ்வேறு நிலைப் பாட்டில் நின்று வாக்களித்துள்ளனர். முன்னாள் வட இலங்கை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம் பலம் ஆகியோரும் தமிழர் தேசிய கூட்டமைப் பின் ஒரு பகுதியும் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அதையும் மீறி 66% அதிகமானோர் வாக்களித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் சார்ந்தவர்கள்,  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தர முன்வர,  சஜித் பிரேமதாசவுக்கு 40% மக்கள் வாக் களித்துள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதி, தமிழர் கூட்டமைப்பின் ஒரு பகுதி, இன்னும் சில தமிழ் அமைப்புகள் இணைந்து முன்னாள் மட்டக் களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரன் அவர்களை பொது வேட்பாளராக நிறுத்த, அவர் பெற்ற வாக்குகள் தேசிய அளவில் 1.70 சதவீதமும்,  தமிழர் வாக்குகளில் 12.91 சதவீதமும் ஆகும்.  வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளை விட பொது வேட்பாளர் குறைவாகவும் சில மாவட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற வாக்குகளை விட குறைவாகவும் பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் இடையே ஒருங்கிணைந்த செயற்பாடு இல்லை என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  இவர்கள் தங்களின் பிரச்சனைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த முயன்று, முடிவில் தங்களின் ஒற்றுமை இன்மையை நிரூபித்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் வழக்கமான அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களை புறந்தள்ளி, மாற்றம் ஒன்றை எதிர் பார்த்து முதற் தடவையாக அனுர குமார திஸாநாயக்கவிற்கும் வாக்களித்துள்ளதை,  தமிழ் பகுதி தேர்தல் முடிவுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்று தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் வடக்கு கிழக்கு மக்கள் தம் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.  தென்னிலங்கையில் உருவாகிவரும் இளைஞர் எழுச்சி, இளைஞர் தலைமைத்துவம் தமிழர் பகுதிகளிலும் உருவாக வேண்டும். 

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவைச் சார்ந்து வாக்களித்த நிலையில்,  சில பகுதியினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் தம் வாக்குகளை அளித்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது.  இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் தங்கள் இனம் சார்ந்த கட்சிகள் இருந்த போதும் பெருமளவில் தேசிய  கட்சிகளுடன் இணைந்து செயல்படும் போக்கை பெருமளவுக்கு காணக் கூடியதாக இருக்கிறது.  மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நெடுங்காலமாக தேசியக் கட்சிகளை யும்,  தேசிய வேட்பாளர்களையும் ஆதரித்தே வந்துள்ளனர்.  தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் அவர்களுக் கென தனித்துவமான அரசியல் கட்சிகள் இல்லாத நிலையில்,  தொழிற் சங்கங்கள் ஊடாக தங்களின் ஆதரவை தேசிய கட்சி களுக்கு வழங்கி வருகின்றனர்.  நீண்ட காலமாக தோட்டப் பகுதிகளில் இருந்து வரும் பெரிய தொழிற் சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  நேரிடையாக ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிக்க,  மலையக முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆத ரவை தெரிவிக்கலாயிற்று.  இவ்வாறு இரு பெரும் அமைப்பு ஊடாக மக்கள் வாக்களித்த போதும், மலையக இளைஞர்கள், படித்தவர்கள், மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்த நடுத்தர மக்கள் என பலரும் அனுர குமார திஸா நாயக்கவுக்கு தங்கள் வாக்குகளை அளித்துள்ளமையையும் காணக் கூடியதாக இருக்கிறது.  தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை மக்கள் பெரும் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து வாக்களித்துள்ளமை தெளிவாகத் தெரிகிறது.  இன,  மத வாதங் களுக்கு உட்படாமல்,  பணத்திற்காகவும் தங்களின் வாக்குகளை விற்காமல்,  இலங்கை மக்கள் தங்களின் ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.