articles

img

டிஜிட்டல் மயமாக்கமும் உழைப்புச் சுரண்டலும் : ஓர் ஆய்வு-கே.சி.கோபிகுமார்

தற்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தீவிரமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 1992-இல் அறிமுகமான தாராளமயக் கொள்கையின் விளைவாக, தகவல் தொழில்நுட்பத் துறை மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சி நம் சமூக-பொருளாதார கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

வேலை நேரச் சுரண்டலும் கண்காணிப்பும்

எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. “நெகிழ்வான வேலை நேரம்” என்ற பெயரில் பன்னிரண்டு மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேர வேலையை பரிந்துரைத்தது இதற்கு சிறந்த உதாரணமாகும். 

கூடுதலாக, ஊதியமற்ற உழைப்பு வடிவங்கள் பெருகியுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்தல், ஆன்லைன் கூட்டங்கள், தொடர் தகவல் பரி மாற்றங்கள் என பல வடிவங்களில் கூடுதல் வேலை நேரம் கணக்கிடப்படாமலேயே தொழிலாளர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பிளவும் சமத்துவமின்மையும்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உரிமையும் கட்டுப் பாடும் முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கையின் படி, நாட்டின் சாதாரண தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப அணுகல், உரிமை மற்றும் பயன்பாடு என்பவை கனவாகவே உள்ளன. 2018-இல் நிரந்தர ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் இடையே கணினி உரிமையில் 22 மடங்கு வித்தியாசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலின ஏற்றத்தாழ்வுகள் தீவிரம்

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்கனவே நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகளை மேலும் ஆழப்படுத்தி யுள்ளது. “வேலைநேர நெகிழ்வு” என்ற பெயரில் பெண் கள் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்ய நிர்பந்திக் கப்படுகிறார்கள். கிக் தொழில் (செயலி வழித் தொழில்)  மற்றும் வீட்டிலிருந்து செய்யும் வேலைகளில் பெண்கள் இரவு பகலாக உழைத்தாலும், அவர்கள் “வீட்டில் இருப்பவர்கள்” என்றே கருதப்படுகிறார்கள். இது அவர்களின் உழைப்பை மறைக்கவும், குறைந்த ஊதியத்தை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப் படுகிறது.

டிஜிட்டல் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள்

இந்தச் சுரண்டலுக்கு எதிராக உலகளவில் குரல்கள் எழுந்துள்ளன. 2024 மே மாதம் ஐரோப்பிய கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்ட மைப்பு வெளியிட்ட பிரகடனம் டிஜிட்டல் சமத்துவ மின்மை, மனிதாபிமானமற்ற வேலை நேரங்கள், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்தது. 2016-இல் பிரிட்டிஷ் தொழி லாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் முன்வைத்த “டிஜிட்டல் ஜனநாயகத்திற்கான முழக்கம்” டிஜிட்டல் தளங்களின் கூட்டுறவு உரிமையை வலியுறுத்தியது.

தனிநபர் தரவு பாதுகாப்பும் தொழிலாளர் உரிமைகளும்

2023-இல் கொண்டுவரப்பட்ட இந்திய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் தொழிலாளர்க ளின் தனிப்பட்ட தகவல்கள் முதலாளிகளால் கண்கா ணிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ளத் தவறி யுள்ளது. இந்நிலையில் சமீபத்திய சாம்சங் தொழி லாளர் போராட்டம் போன்றவை டிஜிட்டல் யுகத்தில் தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தின் சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன.

புதிய தொழிலாளர்  சட்டங்களின் பிரச்சனைகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழி லாளர் சட்டத் தொகுப்புகளில் டிஜிட்டல் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த எந்த குறிப்பும் இல்லை. திட்டப்பணி தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர் கள், கிக் தொழிலாளர்கள், செயலி சார்ந்த தொழிலா ளர்கள் போன்ற புதிய தொழில் வடிவங்கள் இன்னும்  சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவில்லை. இது தொழிலா ளர்களை தொடர்ச்சியான கண்காணிப்பு, தொழில் பாதுகாப்பின்மை, தகவல் அணுகல் தடை போன்ற புதிய சவால்களுக்கு உள்ளாக்குகிறது.

சமூக ஊடகங்களின் பங்கு

சமூக ஊடகங்கள் தொழிலாளர் விரோத கருத்துக் களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழி லாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, தொழிற் சங்க உரிமைகளை அங்கீகரிக்காத கலாச்சாரம், ஊதிய உயர்வு கோரிக்கைகளை நியாயமற்றவை என காட்டும் முயற்சிகள் ஆகியவை தீவிரமாக முன்னெ டுக்கப்படுகின்றன. இந்துத்துவா சக்திகளும் மத அடிப்படைவாத குழுக்களும் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

தொழிலாளர் இயக்கத்தின் எதிர்காலப் பணிகள்
தொழிலாளர் இயக்கம் புதிய சவால்களை எதிர் கொண்டுள்ள இந்நிலையில், அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் உரிமைகளுக்கான போராட்டம், புதிய போராட்ட வடிவங்களை உருவாக்குதல் ஆகியவை முக்கியப் பணி களாக உள்ளன. டிஜிட்டல் தளங்களை தொழிலாளர்க ளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், சமத்துவ மான டிஜிட்டல் அணுகலை உறுதிப்படுத்துவதும் முக்கிய இலக்குகளாக இருக்க வேண்டும்.

இரட்டைத் தாக்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பம் தொழிலாளர்களின் வாழ்வில் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் இது வேலைவாய்ப்புகளையும் புதிய வாய்ப்பு களையும் உருவாக்கியுள்ள அதே வேளையில், மறுபுறம் சுரண்டலின் புதிய வடிவங்களையும் உரு வாக்கியுள்ளது. நீண்ட வேலை நேரம், தொடர் கண்கா ணிப்பு, டிஜிட்டல் பிளவு, பாலின ஏற்றத்தாழ்வுகள் என பல வடிவங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர் இயக்கம் இரட்டை பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று, டிஜிட்டல் சுரண்டலை எதிர்த்து போராடுவது. இரண்டு, டிஜிட்டல் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தொழி லாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலமே இதை சாத்தியமாக்க முடியும்.

தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு, தொழில்நுட்ப பயிற்சி, உரிமைகள் குறித்த விழிப்பு ணர்வு ஆகியவற்றை வழங்குவது அவசியம். அதே சமயம், புதிய தொழில் வடிவங்களை அங்கீகரிக்கும் சட்டங்கள், தரவு பாதுகாப்பு விதிகள், தொழிற்சங்க உரிமைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகிய வற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்.

விடுதலைக்கான  கருவியாக மாற்றுவோம்!

முக்கியமாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் தொழி லாளர் நலனுக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது யார் கைகளில் உள்ளது, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். தொழிலா ளர்களின் கூட்டு உரிமையின் கீழ், அவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் போது, டிஜிட்டல் தொழில் நுட்பம் விடுதலைக்கான கருவியாக மாறும்.

எனவே, டிஜிட்டல் யுகத்தில் தொழிலாளர் போ ராட்டம் என்பது வெறும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; அது சமூக-பொருளாதார உறவுகளின் ஜனநாயகமயமாக்கலுக்கான விரிவான போராட்டமாகும். இப்போராட்டத்தின் வெற்றியே எதிர் கால சமூகத்தின் ஜனநாயக தன்மையை நிர்ணயிக்கும்.

கே.சி.கோபிகுமார்

கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்