articles

img

“அரசியலமைப்பின் அடிப்படை பண்புகளை ஒன்றிய அரசு சிதைக்கிறது” - ஆ.இராசா எம்.பி.,

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற மக்களவையில் அரசியலமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விவாதம் 14.12.2024 அன்று நடைபெற்றது.  இவ்விவாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.இராசா ஆற்றிய உரையின் பகுதிகள்

“அரசியலமைப்பின் ஆவணத்தை ஒரு கட்சியின் ஆவணமாக மட்டுமே கருத முடியாது” என்ற, அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கூற்று சரியானதே. ஆனால் நேரு, ராதா கிருஷ்ணன், வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு,  ஜெயகர், ஷியாம் பிரசாத் முகர்ஜி உட்பட அனை வரும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்களித்த போது, ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து மகாசபையின் பங்களிப்பு வரலாற்றில் இல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1946 நவம்பர் 13 அன்று நேரு அவர்களால் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழியப்பட்ட கொள்கைத் தீர்மானமே (Objectives Resolution) மதச்சார் பின்மைக்கு முதல் அடித்தளம். இதில் இஸ்லாமி யர்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதற்கும் முன்னரே, 1931ல் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் ‘மதச்சார் பின்மையே சுதந்திர இந்தியாவின் ஆன்மா’ என்ற கருத்தை முன்வைத்தார்.

அம்பேத்கரின் மூன்று  அடிப்படைக் கோட்பாடுகள்

அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்தினார்:
1. அரசியலமைப்பு (Constitution)
2. அரசியலமைப்பு கோட்பாடு (Constitutionality)
3. அரசியலமைப்பின் தத்துவம் (Constitutionalism)
அம்பேத்கரின் கருத்துப்படி, அரசியலமைப்பு சட்டம் இருப்பதால் மட்டுமே ஒரு நாடு அரசியல
மைப்பு தத்துவத்தை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் தத்துவமே வேறுபட்டது.
 

கேசவானந்த பாரதி வழக்கு

1973-ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்கு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல். இதுவரை இல்லாத அளவிற்கு பதின்மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட பெரு அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. பிரபல வழக்கறிஞர் நானி பால்கிவாலா 68 நாட்கள் தொடர்ந்து வாதிட்ட இந்த வழக்கில் 1000 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு வெளியானது. ஒரு சட்ட மாணவராக நான் இதை பலமுறை படித்துள் ளேன். இந்த விவாதத்திற்காக கூட, நேற்று இரவு மூன்று முறை படித்தேன்.

அரசியலமைப்பின் மாற்ற முடியாத ஆறு அடிப்படைக் கூறுகள்:

1. ஜனநாயகம்; 2.மதச்சார்பின்மை; 3. சட்டத்தின் ஆட்சி; 4. சமத்துவம்; 5.கூட்டாட்சி; 6.சுதந்திரமான நீதித்துறை.  விரலுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யலாம்; கைகளுக்குக் கூட அறுவை சிகிச்சை செய்யலாம்; என் தலையை வெட்டிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதுபோலத்தான், அரசியலமைப்பின் அடிப்படை பண்பு, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைத் தவிர அனைத்து அரசியலமைப்புப் பிரிவுகளையும் நாம் திருத்தலாம், மாற்றலாம்.

அரசியலமைப்பின் உயிர்நாடி: மதச்சார்பின்மை

இந்தியாவில் ‘இந்து தேசியம்’ மற்றும் ‘முஸ்லிம் தேசியம்’ என்ற இரு தேசக் கோட்பாட்டை முதலில் முன்வைத்தது ஜின்னா அல்ல, 1924-லேயே சாவர்க்கர்தான். ஆனால் அம்பேத்கர் இந்த கோட்பாட்டை கடுமையாக எதிர்த்தார். “இந்த நாட்டிற்கு இந்து ராஜ்யம் வந்தால், அது மிகப்பெரிய ஆபத்தான அழிவாக இருக்கும். என்ன விலை கொடுத்தாவது அதை நிறுத்த வேண்டும்” என்று அவர் உறுதிபட கூறினார். ஆனால் இன்று, பிரதமர் மோடி மிகவும் கவனமாக, புத்திசாலித்தனமாக, தந்திரமாக தன் சுதந்திரதின உரையில் சாவர்க்கர் மற்றும் அம்பேத்கர் இருவரை யும் ஒரே நேர்கோட்டில் வைத்து ஒரே அளவுகோலில் புகழ்கிறார். இது முற்றிலும் தவறானது.

ஜனநாயகச் சிதைவும்  அரசியல் கைதிகளின் அவலமும்

ஸ்டான் சுவாமி என்ற 85 வயது மனிதர், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது முழு வாழ்க்கையையும் பழங்குடியினருக்காக அர்ப்ப ணித்தவர். பாஜக அரசு அவரை கைது செய்தது. பிணை மறுக்கப்பட்டது. என்.ஐ.ஏ அனுமதிக்க வில்லை. மூன்றாவது முறையாக பிணை விண் ணப்பம் கொடுத்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கையிலேயே அவர் மருத்துவ மனையில் இறந்துவிட்டார். அவரது இறுதிக்குறிப்பில் எழுதியது: “இன்று எனக்கு நடப்பது எனக்கு மட்டுமே நடக்கும் தனித்த  செயல் அல்ல. முக்கிய அறிவுஜீவிகள், வழக்கறி ஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் தலைவர்கள் என இந்த அரசின் தவறுகளுக்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும் சிறையில் அடைக் கப்படுகிறார்கள்.”

நீதித்துறையின் சுதந்திரமும் இன்றைய சவால்களும்

நாட்டில் நீதிபரிபாலனம் தன்னிச்சையாக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ராஜ்நாத் சிங் அவசர நிலைக் காலத்து நீதியரசர் கண்ணா நியமனத்தை குறிப்பிடுகிறார். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு நீதியரசர் 23 நீதிபதிகளைத் தாண்டி மூப்பு அடிப்படை யின்றி பதவி உயர்வு பெற்றுள்ளார். மற்றொரு நீதியரசர் 30 பேரை தாண்டி பதவி பெற்றுள்ளார். மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு உயர் நீதிமன்ற தலித் நீதிபதி, உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகளும் பெற்றிருந்தும், பாஜக அரசு அவரை கேரளாவில் தலைமை நீதிபதியாக நியமித்து, அவரது திறமையையும் தகுதியையும் புறக்கணித்துள்ளது.

மூன்று முக்கிய சவால்கள்

இன்று மூன்று முக்கிய சவால்கள் நம் முன் உள்ளன:

1. நாட்டின் இரண்டாவது உயர் பதவியில் உள்ளவரின் கருத்து:

குடியரசு துணைத் தலைவர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பண்புகள் (Basic structure of the Constitution) மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்.

2. ‘இந்து ராஷ்டிர’ முழக்கம்

பாஜகவின் துணைத் தலைவர் ஒருவர், தேர்தலில் 400 இடங்கள் பெற்றால் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரம்’ ஆக மாற்றுவோம் என பகிரங்கமாக அறிவிக்கிறார்.

3. சட்டத்தின் ஆட்சி சிதைவு

மணிப்பூர், பில்கிஸ் பானு மற்றும் மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் நீதி மறுக்கப் படுகிறது. மலைவாழ் பெண்கள் மீது பகல் நேரத்தில் வன்புணர்ச்சி! பகலில் கொலை! ஆனாலும் நீதி இல்லை! இதுதான் சட்டத்தின் ஆட்சியா?

இன்றைய அவசர நிலை

அவசரநிலை காலத்தில் ஜனநாயகம் மட்டுமே காயப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை சுதந்திரம் என அனைத்தும் அடியோடு சிதைக்கப்படுகிறது. அம்பேத்கரின் எச்சரிக்கை அம்பேத்கரின் முன்னுணர்வு எவ்வளவு சரியா னது என்பதை இன்றைய காலம் காட்டுகிறது. அவர்  சொன்னார்: “நான்தான் அரசியல் சட்டத்தை எழுதிய தாக சொல்கிறார்கள். சில நேரத்தில் வாடகைக் குதிரையாக நான் பயன்படுத்தப்பட்டேன். அதை எரிக்கும் முதல் ஆளாகவும் நானிருப்பேன்” என்று. பத்திரிகையாளர்கள் கேட்டபோது அம்பேத்கர் ஒரு முக்கியமான உவமையைப் பயன்படுத்தினார்: “கடவுளுக்காக ஒரு கோயில் கட்டுகிறோம். அதில் பிசாசு வந்து குடியேறினால் கோயிலை இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை அல்லவா?” அம்பேத்கர் சொன்னதுபோல், “கோயிலில் பிசாசு குடியேறிவிட்டதா அல்லது கடவுள் வாழ்கிறாரா” என்பதை இந்த தேசம் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. என்றும் அரசியலமைப்பின் காவலராக, ஜனநாய கத்தின் பாதுகாவலராக நிற்கும். “பாஜக பிசாசா அல்லது கடவுளா என்பதை இந்த தேசம் முடிவு செய்யட்டும்!”