நடுநிசியில், கும்மிருட்டில், போகும் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறி நடப்பவருக்குத் தொலைதூரத்தில் சிறு ஒளி ஒன்று தோன்றியது. கல்வியின்மை, சாதிக் கொடுமை, பெண் அடிமை, கடன் சுமை, சமூகச் சீர்கேடுகள் என திரும்பும் பக்கம் எல்லாம் தென்பட்ட இருளை விரட்டிய ஒளி அது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக கல்விப் பணியாற்றி, கணவரால் கைவிடப்பட்ட பெண்க ளுக்கும், விதவைத் தாய்மார்களுக்கும் தங்கும் விடுதி அமைத்து, தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து, வட்டிக்கு வட்டி போடும் கந்துவட்டிக்காரர்களைச் சாடி, போய் கல்வி கல் என்று பெண் குழந்தைகளை கல்வியின் பக்கம் திருப்பி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் சாவித்திரிபாய். 13 வயதான ஜோதிராவ் பூலே தான் பெற்ற கல்வியை தனது 9 வயது மனைவி சாவித்திரிபாய் பெற வேண்டும் என்று விரும்பினார். படிப்பித்தார்.
முதல் பெண்கள் பள்ளி
பூலே தம்பதியினர், பெண் குழந்தைகளுக்கு என்று 1848 ஆம் ஆண்டில், பிதேவாடா என்னும் இடத்தில் பெண்களுக்கான தனிப் பள்ளி துவங்கினர். ஊராரின் எதிர்ப்புகளைத் தாண்டி அப்பள்ளியின் ஆசிரியராக களம் இறங்கினார் சாவித்திரிபாய். சும்மா விடுமா சமூகம்! சாணம், சேறு, மலம் என நாற்றமெடுக்கும் அத்தனையும் வாரி சாவித்திரியின் மீது வீசினர். சேறால் அடி வாங்கிய பின், பள்ளிக்குச் சென்று குளித்துவிட்டு, உடைமாற்றி குழந்தைகளுக்கு பாடம் எடுத்தார். பள்ளியில் சாவித்திரியோடு சேர்ந்து பயணித்தவர் பாத்திமா ஷேக். இவர் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.
பெண்கள் அடிமைத்தனமும் பார்ப்பனிய ஆணாதிக்கமும்
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டிற்கும் பார்ப்ப னிய மதத்திற்கும் எதிராக முதன்முதலில் போர் தொ டுத்தவர்கள் பூலே தம்பதியினர். பெண்கள், சூத்திரர் கள், ஆதி சூத்திரர்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் என அனைவரையும் ஒடுக்கப்பட்டோர் என்றே பேசினர். இந்தியாவில் தோன்றிய அனைத்து சமூக இயக்கங்களின் கண்ணோட்டங்களோடு ஒப்பிடுகை யில் ஆணாதிக்கத்தை சாதியோடு இணைத்துப் பார்த்த வர் இவர் ஒருவர் மட்டுமே என்று கூறுகின்றனர் பிரஜ் ரஞ்சன் மணி மற்றும் பமிலா சர்தார். (மறக்கப்பட்ட விடுதலைப் போராளி நூல் தொகுப்பு ஆசிரியர்கள்) 1852 ஆம் ஆண்டிலேயே ‘மகிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சங்கத்தையும் சாவித்திரிபாய் தொடங்கினார். பெண்களின் பிரச்சனைகளையும் அவர்களின் மீது செலுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பற்றி இச்சங்கம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பெண்கள் அப்போது இரட்டை அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தனர். ஒன்று பாலின அடக்குமுறை; மற்றொன்று பார்ப்பனிய ஆணாதிக்க அடக்குமுறை. இதை எளிதாக அடையாளம் கண்டவர் சாவித்திரிபாய். கணவனை இழந்த பெண்களின் தலையை மொட்டை போடும் வழக்கத்தை எதிர்த்து நாவீதர்க ளை ஒன்று திரட்டி 1860 இல் பெரும் பேரணி நடத்தி ‘இனி விதவைப் பெண்களுக்கு நாங்கள் மொட்டை போட மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்கச் செய் தார். திருமணம் ஆகாமல் கருவுற்ற பெண்கள், திருமண உறவை தாண்டி கருவுற்ற விதவைகள் போன்றோர் கௌரவமான வாழ்க்கை கிடைக்கப்பெறா மல் தற்கொலைக்கு முயலும் அவலத்தை தடுக்கும் விதமாக அவர்கள் கௌரவமாக குழந்தைகளை பெற் றெடுக்கத் ‘தாய் சேய் நலவிடுதி’ அமைத்து தந்தார். அவர்களை தற்கொலைகளில் இருந்து காப்பாற்றி னார். தனது சொந்த வீட்டையே கைவிடப்பட்டப் பெண் கள் மற்றும் குழந்தைகளின் புகலிடமாக மாற்றினார்.
முன்னோடிக் கவிஞராக...
நவீன மராத்தியில் முன்னோடி கவிஞராக சாவித்திரி பாய் திகழ்ந்தார். அவரது கவிதைகள் சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மனுதர்ம எதிர்ப்பு, கல்வியின் முக்கி யத்துவம், ஆங்கிலக் கல்வியின் மகத்துவம் ஆகிய வற்றை கருப்பொருளாகக் கொண்டிருந்தன. பார்ப்பனம் தான் அடிமைத்தனத்தின் வேர் என்று அவர் நம்பினார். எனவே தான் ‘பார்ப்பன வேதங்களை தூர வீசு’ என்று கவிதை முழக்கம் செய்தார். ‘மனு காட்டிய வழியில் தீமைகளும் இழிவுகளும் நிறைந்தி ருந்தன’, ‘நம்மை கல்வி கற்காமல் தடுத்தவர் மனு’ என்று மனுவின் விஷத்தன்மையை மக்களுக்கு எடுத்தி யம்பினார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுயமரியாதை, சுதந்திரம், சமத்துவம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத் தும் விதமாக அவரது கவிதைகள் அமைந்தன. 1854 ஆம் ஆண்டில் ‘காவிய பூலே’ என்ற தலைப்பில் வெளி யிடப்பட்ட இவரது கவிதை தொகுப்பே அனேகமாக பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியான முதல் இந்திய கவிஞரின் நூலாக இருக்கும்.
சீர்திருத்தப் பணிகள்
1873 ஆம் ஆண்டு ஜோதிபா ‘சத்திய சோதக் சமாஜம்’ எனும் அமைப்பை தோற்றுவித்தார். அதன் பெண்கள் பிரிவு தலைவராக சாவித்திரிபாய் விளங்கினார். பார்ப்ப னிய ஆதிக்கத்தில் இருந்து சூத்திரர்களையும், ஆதி சூத்திரர்களையும் விடுவிப்பதும்; மனித உரிமைகளை அவர்களுக்கு கற்றுத் தருவதும்; மத அடிப்படைவா தத்தில் இருந்து மக்களை விடுவிப்பதுமே இச்சங்கத் தின் நோக்கங்களாகும். சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள், புரோகிதர்களை புறந்தள்ளு கின்ற திருமணங்களை சாவித்திரியும் அவரது கண வரும் முன் நின்று நடத்தி வைத்தனர். சமாஜத்தின் வேலைகள் புரோகிதர் மறுப்பு திரு மணங்களோடு நின்றுவிடவில்லை. 1877 கடுமையான பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தின்போது உண்ண உணவின்றி, குடிக்க நீர் இன்றி மக்கள் மடிந்தனர். இதையடுத்து சுமார் 52 உறைவிடப் பள்ளிகள் தொ டங்கப்பட்டன. இவ்விடங்களில் தாழ்த்தப்பட்ட மாண வர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டனர். 25 முதல் 30 மாணவர்களுக்காக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விடுதி பின் தேவைக்கு ஏற்ப 52 இடங்களில் துவங்கப் பட்டது. இவ்விடத்தில் தங்கி இருந்த மாணவர்களை சாவித்திரிபாய் கனிவோடு பார்த்துக் கொண்டார். மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முகாம் அமைத்தார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2000 குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் மகத்தான சேவையை செய்தார் சாவித்திரிபாய்.
கடனுக்கு எதிரான பிரச்சாரம்
கர்ஸ் (கடன்) என்ற தன்னுடைய கட்டுரையில் பணத்தை கடன் வாங்கி பண்டிகை கொண்டாடுவதை யும், அதன் மூலமாக கடன் சுமையை அதிகரித்துக் கொள்வதையும் அவர் கண்டனம் செய்தார். மதுப்பழக் கம் குடிகாரர்களையும் அவர்களுடைய குடும்பங்களை யும் எப்படி அழிக்கின்றன என்பது குறித்தும் அவர் கட்டுரையை எழுதினார். பஞ்சத்தால் இன்னலுறும் மக்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கந்துவட்டிக்காரர்கள் இப்பஞ்சத்தை பயன்படுத்தி பணம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நேர்மைக் கேடா கவும் நடந்து கொண்டனர். சமாஜத்தின் ஊழியர்க ளின் துணையோடு கந்துவட்டிக்காரர்களின் கொட் டத்தை அடக்கினார் சாவித்திரிபாய். அதோடு மட்டு மல்லாமல் பஞ்ச நிவாரண பணிகள் குறித்தும், எடுக்கப் பட வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார் சாவித்திரிபாய். இவ்வாறாக சமாஜப் பணிகள் முற்றிலும் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் சமத்துவத்தை நிறுவுவ தற்காகவும் நடந்து கொண்டிருந்தது. 15 நாட்களுக்கு ஒரு முறை சமாஜின் கூட்டம் நடைபெறும். கிருஷ்ணா ராவ் பாலேக்கர் என்பவரால் துவங்கப்பட்ட தீனபந்து சத்திய சோதக் சமாஜின் பணிகளை வெளிச்சம் போட்டு சமூகத்திற்கு காட்டியது. சாவித்திரிபாய் ஜோதிராவின் மறைவுக்கு பின் சத்திய சோதக் சமாஜத்தின் தலைமை பொறுப்பை தானே ஏற்றார். 1890களின் மத்தியில் பிளேக் நோயால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக முகாம்களை ஏற்பாடு செய்தார். ஊருக்கு வெளியே ஒரு மருத்துவமனையை நிறுவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் வளர்ப்பு மகனான யஷ்வந்தைக் கொண்டு மருத்துவ உதவி வழங்கினார். அந்தத் தொற்று நோயின் போது தினந்தோறும் 2000 குழந்தைகளுக்கு அவர் உணவ ளித்தார். நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்குப் பராமரிப்புப் பணிகள் செய்த போது சாவித்திரிபாயை யும் பிளேக் நோய் தாக்கியது. அதனால் 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் அவர் மரணமடைந்தார்.
என்றும் மறையாத புகழ்!
‘கிரந்தி ஜோதி’ அதாவது ‘புரட்சி விளக்கு’ என்று புகழ்பெற்றார் சாவித்திரிபாய் பூலே. பூலே தம்பதி யினர் ஆற்றிய கல்விப் பணிகளுக்காக 1852 ஆம் ஆண்டு சாவித்திரி பாயும் ஜோதிராவும், பிரிட்டிஷ் அர சாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இந்திய அரசு 1998 ஆம் ஆண்டு சாவித்திரிபாய் பூலேவின் தபால் தலையை வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு புனே பல் கலைக்கழகம் சாவித்திரிபாய் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்பட்டது. தம் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டோர்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் தனது கணவரோடு தோளோடு தோள் நின்று பாரங்களை சுமந்தவர் சாவித்திரிபாய் பூலே. தன்னலமற்ற போராளி சாவித்திரிபாய் ஒடுக்கப்பட்டோரின் வழிகாட்டியாக இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.