articles

img

பாட்டாளி வர்க்க போராளிகளை வரவேற்க தயாராகிறது மதுரை - வை.ஸ்டாலின்

1940-ம் ஆண்டில் மதுரை நகரில் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சிறிய அளவில் தொடங்கியது. கட்சியின் ஆரம்பகட்டத்தில் 9 தோழர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். 1942-ல் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பின்னர் கட்சி உறுப்பினர்கள் 160 ஆக உயர்ந்தது. மதுரை நகரத்தில் மட்டும் 96 பேர் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் ஜனசக்தி பத்திரிகையை வாங்கி வாசிப்பது வழக்கமாக இருந்தது. மில் தொழிலாளிகள் மத்தியிலும் கட்சி தனது அமைப்பை வலுப்படுத்தி வந்தது.

தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்கள்

தொழிலாளர் மற்றும் விவசாயி வர்க்கத்தின் உரிமைகளுக்காக கட்சி தீவிரமாக செயல்பட்டது. மதுரை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களாக பி.ராமமூர்த்தி மற்றும் பொதுச் செயலாளராக எஸ்.கிருஷ்ணசாமி தேர்வு செய்யப்பட்டனர். கிராமப்பகுதிகளில் நில உடமையாளர்களுக்கு எதிராக கிராமங்கள் தோறும் விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டன. “உழுபவருக்கு நிலம்” என்ற முழக்கம் முழங்கப்பட்டது. வைகை ஆற்றில் நடைபெற்ற நெசவாளர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். பெண் தலைவர்கள் மதுரை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்தனர். தோழர்.ஜானகியம்மாள் மற்றும் மீனா சிறப்பிடம் பெற்ற தலைவர்களாக அறியப்பட்டனர். 1942-ம் ஆண்டின் போராட்டத்தில் மீனா கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1943-ல் விடுதலை பெற்ற பின்னர் அவர் தினசரி ஜனசக்தி பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டார். 1944 பிப்ரவரி 27-ல் மீனா மற்றும் கிருஷ்ணசாமி கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வரலாற்றுத் திருப்புமுனைகள் மாநாடுகள்

1946-ம் ஆண்டு மார்ச் மாதம் பி.சி.ஜோஷி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1972-ம் ஆண்டு 9வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. அன்றைய நிலையில் ஜனநாயகம் பறிக்கப்படும் அபாயம் நிறைந்த சூழலில் இந்த மாநாடு நடைபெற்றது.  2025 ஏப்ரல் 2 முதல் 6 வரை 24வது அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் இலக்கு பாசிச சக்திகளையும் பாஜகவையும் அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதாகும். அரசியல் நோக்கம் கட்சியின் அரசியல் நோக்கம் மக்கள் மேம்பாடு, சமூக நீதி மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பாதுகாப்பது. இடது ஜனநாயக அணி கட்டமைப்பு என்பது கட்சியின் தற்போதைய அரசியல் செயல்பாட்டின் அடிப்படை.

தற்போதைய செயல்பாடுகள்

2024 செப்டம்பர் மாதம் நகர்ப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கல் தொடர்பான பிரச்சாரத்தை மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மாவட்ட செயலாளர் மா.கணேசன்  இரா.விஜயராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இப்பணியில் முக்கிய பங்கு வகித்தனர். மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தல், சமூக மாற்றத்திற்கான தொடர் முயற்சிகள் மற்றும் மக்கள் சார்பான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்தல் ஆகியவை கட்சியின் எதிர்கால நோக்கமாக அமைந்துள்ளது. இத்தகைய புரட்சிகர பாரம்பரியமிக்க மதுரையில் நடைபெறவுள்ள கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான வரவேற்புக் குழுவின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநகரிலும், மாவட்டம் முழுவதிலும் திரும்பிய திசையெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்த விளம்பரங்கள் பளிச்சிட துவங்கியுள்ளன. இந்தப் பணிகளை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வியாழனன்று நேரில் பார்வையிட்டு, பணியில் ஈடுபட்டுள்ள தோழர்களை உற்சாகப்படுத்தினார்.  நாடெங்கும் இருந்து வரவிருக்கும் பாட்டாளி வர்க்கப் போராளிகளை வரவேற்க எழுச்சியுடன் தயாராகிறது மதுரை.