கடலூர் மாவட்டத்தின் இரு ஆளுமைகளில் ஒருவர் பிற்படுத்தாட்ட வகுப்பை சேர்ந்த இராமலிங்க வள்ளலார். மற்றொருவர் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த சுவாமி சகஜானந்தா அவர்கள். வள்ளலார் மறைந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. வள்ளலார் சனாதனத்தை எதிர்த்து சண்டமாருதம் செய்தவர். சாதி, மத துவேசங்களை எதிர்த்து களமாடி யவர். அணையா அடுப்பு ஏற்றி பசித்த வயிற்றுக்கெல்லாம் உணவளித்த உத்தமர். சுவாமி சகஜானந்தா ஒடுக்கப் பட்ட மக்கள் வாழ்வில் கல்வி விளக் கேற்றிய மகத்தான மனிதர். ஒன்று பட்ட தென்னார்காடு மாவட்டத்தில் உண்டு உரைவிட பள்ளியை துவங்கி ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேற உழை த்தவர். வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என தமிழக ஆளுனர் ரவியை பேசவைத்து தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம், அடுத்து சுவாமி சக ஜானந்தாவை குறிவைக்கின்றனர். அவரது 135 ஆவது பிறந்த தினத்தில் (ஜனவரி 27) அதே ஆளுநரை வைத்து சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா நிகழ்வை நடத்த உள்ளனர்.
ஆலய நுழைவு உரிமை
எந்த சக்திகள் ஆண்டாண்டு கால மாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத் திற்கு வெளியே நிற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அந்தக்கூட்டத்தை எதிர்த்துதான் சுவாமி சகஜானந்தா போராடினார். 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து சாதி யினரும் ஆலயத்திற்குள் நுழைய லாம் என சட்ட மசோதா கொண்டு வந்தார். ஆனால் அந்த மசோதா தோற் கடிக்கப்பட்டது. ஆனாலும் ஆலய நுழைவுக்காக சுவாமி சகஜானந்தா தொடர்ந்து போராடினார். தேச விடு தலைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, 1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத் திற்குள் சென்று ஆண்டவனை வழி படலாம் என்ற சட்டம் நிறைவேற்றப் பட்டது. சுவாமி சகஜானந்தா 1926-32, 1936-47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952,1957 ஆகிய காலங்களில் சிதம்பரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். மொத்தம் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந் தார்.
பிறப்பும் பின்னணியும்
ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதி யினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தான் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெ ரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அதன் பிறகு உயர்நிலைக் கல்விக்காக திண்டி வனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவருக்குச் சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது. பிழைப்பு தேடி அவரது பெற்றோர் கோலார் தங்க வயலுக்கு இடம்பெயர்ந்தனர் அவர் களோடு அவரும் அங்கே சென்றார். தனது 17வது வயதில் பெற்றோரை விட்டு வெளியேறினார். பல்வேறு ஊர்களிலும் அலைந்து திரிந்து பல ஆன்மீக கல்வியைப் பெற்றார். சென்னை வியாசர்பாடியில் இருந்த சுரபாத்திர சுவாமிகளை அவர் சந்தித்ததுதான் அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவரது பெயரை சகஜானந்தா என்று மாற்றியவரும் சுரபாத்திர சுவாமிகள் தான். மேலும் அ. முருகேசம் பிள்ளை அவர்கள் 1910 ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்கு சுவாமி சகஜானந்தா அவர்களை அழைத்துச் சென்று சிதம்பரம் ஓமக்குளத்தின் கரை யில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டி டத்தில் தங்க வைத்தனர்.
கல்விக் கழகம் கண்டார்
நந்தனைத் தனது முன்னோடியாக எடுத்துக்கொண்ட சகஜானந்தா அவர்கள், நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச் சாலை ஒன்றை யும் ஏற்படுத்த முடிவெடுத்து 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவி னார். இதனிடையே அவருக்கு நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல் லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத் தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச் சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந் தது. சுவாமி சகஜானந்தா துவக்கிய நந்த னார் கல்விச்சாலையில் முதலில் 25 மாணவர்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அது ஒரு கூரைக் கொட்டகையில் நடந்துவந்தது. அதன் பிறகு 1918ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போது சென்னை மாகாண உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பெண் கல்வியே கூடாது என்று கருதிய 1920-ல், 20 மாணவிகளைக் கொண்டு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார் சுவாமி சகஜானந்தா. இதில் மதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள்தான் முதல் பெண் மாணவி. முன்னாள் அமைச்சர் ராஜாங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருதூர் ராமலிங்கம், வானூர் மாரிமுத்து, சீர்காழி மணி, புதுச்சேரி முருகேசன், அரூர் அன்பழகன், ஐ.ஏ.எஸ். தங்க ராஜ் என பலரும் இப்பள்ளியில் படித்த வர்கள்தான். இப்பள்ளியின் பெருமை யினைக் கண்டு, மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, முத்தையா செட்டியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி, ஜனாதி பதிகள் கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, விஞ்ஞானி ஜி.டி.நாயுடு ஆகியோர் இப்பள்ளியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இப்பள்ளிக்கு மகாத்மா காந்தி, காமராஜர், கக்கன் ஆகியோர் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28க்கும் மேற்பட்ட உயர் பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
ஆன்மீகவாதி மட்டுமல்ல
சுவாமி சகஜானந்தாவை ஆன்மீக வாதியாக மட்டும் முன்நிறுத்தும் போக்கு துவங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு ஆன்மீகவாதி மட்டுமல்லாமல் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலவை பெற்றவர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரதி வாதி பயங்கரம் சீனுவாசாச் சாரியி டம் அவர் சமஸ்கிருதத்தைப் பயின்ற தாக தகவல் உள்ளது. வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜானந்தா சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக் காட்டுகிறது. வ.உ.சி. மறைந்தபோது அவரது குடும்பத்துக்காக சுவாமி சக ஜானந்தா அவர்களே முன்னின்று நிதி திரட்டி அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அரசியலில் சுவாமி சகஜா னந்தாவுக்குத் தெளிவான பார்வை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளிடம் புரட்சியாளர் அம்பேத்கர் போரா டிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், பூனா ஒப்பந்தத்தின் மூலமாகப் பறிக்கப் பட்டபோது அம்பேத்கருக்கு ஆதர வாகத் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிப் பொதுக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜா னந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று விடாமல் வலி யுறுத்தியவர் அவர். கோயில்களில், தேவஸ்தான கமிட்டிகளில் ஆதிதிரா விடர்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். திருப்பதி தேவஸ்தானத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தினார். அப்போது இருந்த ஜில்லா போர்டு களில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப் பட வில்லை. தென்னாற்காடு மாவட் டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கில் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஜில்லா போர்டில் 40 உறுப்பினர்கள் உள்ள னர். மக்கள்தொகை கணக்குப்படி தாழ்த்தப்பட்டவர்கள் குலம் குறைந்த பட்சம் பத்துப் பேராவது ஜில்லா போர்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். இது நியாயம் அல்ல என்று முழங்கியவர்.
மணிமண்டபம் அமைத்த மார்க்சிஸ்ட் கட்சி
அந்த மகத்தான மனிதருக்கு அவர் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபம் வேண்டும் என்று 2011 - 15 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பின ராக இருந்த கே.பாலகிருஷ்ணன் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். சுவாமி சகஜானந்தா குறித்த குறிப்பு களை அனைத்து சட்டமன்ற உறுப்பி னர்களுக்கும் அளித்து அதன் முக்கி யத்துவத்தை வலியுறுத்தினார். இவருடன்சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் குரல் எழுப்பினர். கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தில் 1 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2.05 ஏக்கர் நிலத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை தமிழக அரசு அமைத் தது.
அடிப்படைவாதிகளின் இலக்கு
1959ல் மறைந்த சுவாமி சக ஜானந்தா சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இப்போதும் ஆவணமாய் கிடைக்கிறது. அதை படிப் பவர்கள் அவருடைய குரல் யாருக்காக எழுந்தது என அறிந்துகொள்ள முடியும். இப்படிபட்ட மகத்தான ஆளு மைகளை ஆன்மீகத்தின் பெயரால் தன்வயப்படுத்தி இவருக்கு பின்னால் இருக்கும், இவர் மீது அன்பு வைத்தி ருக்கும் ஆயிரக்கணக்கான ஒடுக்கப் பட்ட மக்களை இந்துத்துவ அமைப்பு களுக்கு ஆதரவாக திரட்ட முயல்கின் றனர். ஆளுனர் ரவி ஓடோடி சென்று இத்தகைய ஆளுமைகளை சனாதன வாதிகளாக சாயம் அடித்துகொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். சுவாமி சகஜா னந்தா அவர்களின் 135 வது பிறந்த நாளில் அவரது புகழை எல்லோருக் கும் கொண்டு சேர்ப்போம்.