articles

img

அரசமைப்புச் சட்டத்தின் முன்னோடி ஒரு கம்யூனிஸ்ட் தலைவரே! - மு.ஆனந்தன், வழக்கறிஞர்/எழுத்தாளர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் யார் என்று கேட்டால்  அண்ணல் அம்பேத்கர் என்று சொல்வோம். அரசமைப்புச்  சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கருக்கு இணையாக ஒரு கம்யூனிஸ்ட் தலை வர் பங்களித்துள்ளார். ஏன் அம்பேத்கருக்கு முன்பா கவே பெரும் பங்காற்றியுள்ளார். ஆம், அவர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவரான எம்.என்.ராய் ஆவார்.  அரசமைப்புச்சட்டம் எழுதும் பணியை அம்பேத்கரிடம் ஒப்படைக்கும் முன்னரே தானாகவே தன்னார்வத்துடன் சுதந்திர இந்தியாவிற்காக ஒரு அரசமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தவர் எம்.என்.ராய். இதுவரை அதிகம் பேசப்படாத, சொல்லப்படாத அவரின் அந்த வரலாற்றுப் பங்களிப்பை அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது நிறைவு ஆண்டிலாவது  நாம் பேச வேண்டும். பேசுவோம். 

அரசமைப்புச் சட்டத்திற்கான கருத்துரு 

சுதந்திரம் கொடுத்தால் இந்தியர்களுக்கு நாட்டை ஆளத் தெரியாது என்று பிரிட்டிஷ்காரர்கள் ஐரோப்பிய நாடுகளில் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தியா விற்கு சுதந்திரம் வழங்கினால் அதிகாரத்திற்காக இந்தி யர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள், அரசியல் சச்சரவுகளில் சிக்கி இந்தியா சீர்குலைந்துவிடும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறுமாப்புடன் பேசினார். ஆனால் அதே கால கட்டத்தில் அந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு  மாறாக  சுதந்திரம் கிடைத்த பிறகு  இந்தியாவிற்கென்று தனியாக ஒரு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமென்ற சிந்தனை ஊற்றெடுத்தது.   அப்படி ஒரு ஆலோசனையை முதன் முதலாக முன் மொழிந்தவர்  எம்.என்.ராய் ஆவார். ஆம், 1934 இலேயே  அவர்  சுதந்திர இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஒரு  அரசமைப்பு நிர்ணய அவையை அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையைச் சொன்னார். அந்த ஆலோசனையை முதல் முதலில் சொன்னவர் அவர்தான். இதுதான் 75 ஆண்டுகளை நிறைவு செய்த  நம் அரசமைப்புச் சட்டத்திற்கான  கருத்துரு, தொடக்கப்புள்ளி எனலாம்.  இதனை 1935 இல்  இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. அதனை வலியுறுத்தி 1938 இல் லக்னோவில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. 1940 இல் பிரிட்டிஷ் அரசு “ஆகஸ்ட் முன்மொழிவுகள்”  (August Offer) மூலம் அந்தத் தீர்மானத்தை ஒப்புக்கொண்டது. 

முன்னோடி அரசமைப்புச் சட்டம் 

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு 29.08.1947 அன்று நடந்த அரசமைப்பு நிர்ணய அவைக் கூட்டத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வரைவுக்குழு அமைக்கப்பட்டது.  ஆனால் அதற்கு மூன்று ஆண்டுக ளுக்கு முன்பே எம்.என்.ராய் அவர்கள் அந்தப் பணியை தொடங்கிவிட்டார். ஆம் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் தோழர் எம்.என்.ராய் அவர்கள் 1944 இலேயே சுதந்திர இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கிவிட்டார்.  அவர் முதலில் பல்வேறு நாடு களின் அரசமைப்புச் சட்டத்திலுள்ள சிறந்த  அம்சங்களை அறிந்து வந்து நமக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதி னார்.  அதன் பெயர் “சுதந்திர இந்தியாவின் அரச மைப்புச் சட்டம் – ஒரு வரைவு” (Constitution of Free India – A Draft) ஆகும்.  அந்த சட்ட வரைவில் 13 அத்தியா யங்களில்  137 சட்டக்கூறுகள் இடம் பெற்றிருந்தன.  இதுதான் இந்தியாவிற்காக எழுதப்பட்ட முன்னோடி அரசமைப்புச் சட்ட வரைவு ஆகும்.  அதுமட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டுமென பல கட்டுரைகள் எழுதினார். 

அரசமைப்பு நிர்ணய  அவைத் தேர்வும் முரண்களும்   

1945 இல் இங்கிலாந்தில் கிளமெண்ட் அட்லி தலைமை யிலான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1946 பிப்ரவரி 18 அன்று பம்பாய் துறைமுகத்தில் தல்வார் கப்பற் படை எழுச்சியால் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. இனியும் சுதந்திரம் வழங்குவதை தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்த கிளமெண்ட் அட்லியின் பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது என்று முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக மார்ச் 1946 இல்  பிரிட்டிஷ் அமைச்சரவை தூதுக்குழுவை  (Cabinet Mission) இந்தியாவிற்கு அனுப்பியது. அதன் பரிந்து ரையின்படி சுதந்திர இந்தியாவிற்கான அரசு, அரச மைப்புச் சட்டம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக அரசமைப்பு நிர்ணய அவை அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 389 உறுப்பினர்கள் கொண்ட அவை  அமைக்கப்பட்டது. ஜூலை 1946 இல் நடைபெற்ற தேர்தல் மூலம் 296 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியமன உறுப்பினர்களாக சமஸ்தானங்கள் என்றழைக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய அரசின் கட்டுப் பாட்டிலிருந்த மன்னராட்சி  அரசுகளின் பிரதிநிதிகளாக  93 பேர் நியமிக்கப்பட்டனர். மேற்சொன்ன தேர்தல் மக்கள் வாக்களித்த பொதுத்தேர்தல் அல்ல. அப்போது இருந்த 12  மாகாண சட்டப் பேரவைகளுக்கு 1946 இல் தேர்தல் நடைபெற்றது. அதில்  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்கள்தான் அரசியல் நிர்ணய அவைக்கான தேர்தலில்  வாக்களித்தனர். மாகாண சட்டப் பேரவைத் தேர்தல்களில் பொதுமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அப்போது இல்லை. செல்வந்தர்களுக்கு மட்டுமே அப்போது வாக்குரிமை இருந்தது. அதாவது நிலப் பிரபுக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகள் என  சுமார் 14% மக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எப்படிப் பார்த்தாலும் பொது மக்களுக்கும் அரசமைப்பு நிர்ணய அவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுக பங்களிப்பு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.  சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்தியது காங்கிரஸ் என்பதால் அப்போது மாகாண சட்டப் பேரவைகளில் காங்கிரஸ் செல்வாக்குதான் இருந்தது. முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் முஸ்லீம் லீக் செல்வாக்கு பெற்றிருந்தது. அதனால் 296 இடங்களில்  காங்கிரஸ் கட்சி 211 இடங்களிலும் முஸ்லீம் லீக் 73 இடங்களிலும் வெற்றி பெற்றன. இடையில் பாகிஸ்தான் பிரிவினை முடிவாகி அதற்கென தனி அரசியல் நிர்ணய அவை அமைக்கப்பட்டதால் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இந்தி யாவிற்கான அவையில் பங்கேற்கவில்லை. அவர்கள் தவிர்த்து இந்தியாவிற்கான அவையில்  மொத்தம் 299 உறுப்பினர்கள் இருந்தனர். அதில்  15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தச் சமயத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அத னால்  அந்தத் தேர்தலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை  சார்ந்த ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் வங்காள மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோம்நாத் லகரி என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார்.  அதே போல் யூனியனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருவர், அம்பேத் கரின் பட்டியலினத்தவர் கூட்டமைப்பைச் சார்ந்த ஒரு சிலர் என காங்கிரஸ் அல்லாதவர் மிகச் சொற்பமாகவே இருந்தனர்.  

சிறப்பு ஆலோசகராக  தோழர் எம்.என்.ராய் 

அரசமைப்பு நிர்ணய அவைக்கு வித்திட்ட  கம்யூ னிஸ்ட் தலைவர் எம்.என்.ராய் அவர்கள் அந்த அவை யில் உறுப்பினராக இடம்பெறவில்லை. எனவே அவரு டைய பங்களிப்பின் முக்கியத்துவம் கருதி அவர் அரசி யல் நிர்ணய அவைக்கு சிறப்பு ஆலோசகராக நிய மிக்கப்பட்டார். அவையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  எழுதப் படவுள்ள அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் விளக்கும் கொள்கை நோக்கத் தீர்மானத்தை  13.12.1946 அன்று ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.01.1947 அன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 29.08.1947 அன்று நடந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு, மாகாண அரசுகளின் அரசமைப்பு மற்றும் அதிகாரங்கள் குறித்த தனித்தனி குழுக்கள், அடிப்படை உரிமைகள் குழு, சிறுபான்மையினர் உரிமைக்குழு உள்ளிட்ட  பல்வேறு  குழுக்கள் அமைக்கப்பட்டன. அரச மைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம்.முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபாலசாமி ஐயங்கார், சையத் முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கெய்தான் மற்றும் பி.எல்.மிட்டல் ஆகியோர் உறுப்பி னர்களாக இருந்தனர்.  1944 இல் எம்.என்.ராய் தான் எழுதிய “சுதந்திர இந்தி யாவின் அரசமைப்புச் சட்டம்” என்ற   சட்ட வரைவை  1947 அக்டோபரில் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டார். அது அந்தக் குழுக்கு பேரு தவியாக இருந்தது.  அதன் பிறகு  மேற்சொன்ன பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளைப் பெற்று, விவாதித்து மீண்டும் புதிதாக எழுதிய ஒரு வரைவுச் சட்டத்தை ஜனவரி 1948 இல் வெளியிட்டது. அது குறித்து கருத்துச் சொல்ல மக்களுக்கு 8 மாத கால அவகாசம் வழங்கப் பட்டது. வரப்பெற்ற கருத்துகள் அரசியல் நிர்ணய அவை யில் தாக்கல் செய்யப்பட்டு 114 நாட்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 2473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டு 7635 திருத்தங்கள் செய்யப்பட்டன. 26.11.1949 அன்று இறுதி வரைவுச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  26.01.1950 அன்று நடை முறைக்கு வந்தது.  நமது நாடு குடியரசு நாடானது. அரசி யல் நிர்ணய அவை மொத்தம் 2 ஆண்டுகள் 11 மாதங் கள் 17 நாட்கள் இருந்தது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26 தினத்தை அரசமைப்புத் தினமாகவும் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26 தினத்தை குடியரசு தினமாகவும் கொண்டாடுகிறோம். 

அரசமைப்புச் சட்டத்தின் இதயம் 

அரசமைப்பு நிர்ணய அவையில்  பல அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் இருந்தாலும்  நிலப்பிரபுக்கள், பெரும் செல்வந்தர்கள், முற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், இந்து மத சனாதானிகளும் கணிசமாக இருந்தனர்.  ஜவ ஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், எம்.என்.ராய், கே.எம்.முன்ஷி, அபுல்கலாம் ஆசாத்  உள்ளிட்ட பலர்  மக்களுக்கானவர்களாக இருந்தனர். அவர்களின் பெரும் முயற்சியால்தான் சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான இலட்சியங்கள்  அரசமைப்புச் சட்டத்தில் பிரதிபலித்தது. அடிப்படை உரிமைகள், சோஷலிசம், மதச்சார்பின்மை  தீண்டாமை ஒழிப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட  சமதர்ம, சமநீதி, சமூகநீதி அம்சங்கள், சுதந்திரமான நீதித்துறை ஆகியவை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை அடை வதற்காக பல்வேறு சட்ட விதிகள் சேர்க்கப்பட்டன.  அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் கம்யூனிஸ்ட் தலை வர் எம்.என்.ராய் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.  தேர்தலையும் கடந்து கம்யூனிஸ்ட் கட்சி, நீதிக்கட்சி, பட்டியலினத்தவர் கூட்டமைப்பு  உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் கணிசமாக அரசமைப்பு நிர்ணய அவையில் இணைத்திருந்தால் அதாவது சிவப்பு, கருப்பு, நீல நிறங்களை சரிசமமாக கலந்திருந்தால் நமது அரச மைப்புச் சட்டத்தின் இதயத்திற்கு இன்னும் கூடுதலாக மனித நேய நிறம்  கிடைத்திருக்கும்.  இந்தியாவின் அரசி யல், சமூக மற்றும் பொருளாதார திசைவழி எளிய மக்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கும். அதற்காகத்தான் இடதுசாரி இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.  அதே சமயம் தோழர் எம்.என்.ராய், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை, சிறப்பம் சங்களை, அடிப்படைக் கட்டமைப்பை பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு சிதைத்து வருகிறது. தன்னுள் கண்டறியப்படும் பலவீனங்களையும் குறைகளையும் சரிபடுத்திக்கொண்டும் சமூக, அரசியல் மற்றும் பொரு ளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது தன்னை சீர்திருத்திக் கொண்டும்  கடந்த 75 ஆண்டுகளாக எண் ணற்ற சவால்களை முறியடித்து காத்திரமாகக் களமாடி வரும் நம் அரசமைப்புச் சட்டத்தை பாசிச பாஜகவின் தாக்கு தலிலிருந்து நாம் பாதுகாப்பது அவசியம்.