கும்பமேளா துவங்கி விட்டது. பல லட்சக் கணக்கான பேர் கங்கை யமுனை சங்கமத்தில் நீராடும் காட்சிகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 13 துவங்கி பிப்ரவரி 26 வரையிலான 6 வார காலத்தில் 40 கோடி பேர் கும்பமேளாவில் பங்கேற்க வருவார்கள். ஆயிரம் ஆண்டு திருவிழாவின் பிரம்மாண்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகும். உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரம் காணும் காட்சி இது. ஆனால் உலகத்தின் கவனத்தை ஈர்க்காத, ஊடகங்களின் கேமராக்களில் பெரிதும் சிக்காத ஓர் பேரவலமும் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாவத்தைக் கழுவ பல கோடி பேர் சங்கமமாகும் போது, அவர்கள் கழிக்கும் மலத்தை கழுவுவது யார் என்ற கேள்வியே அது.
ஏஎப்பி ஊடகத்தில் அருணாப் சைக்கியா என்பவ ரின் செய்திக் கட்டுரை தரும் தகவல்கள் சாதிய அமைப்பின் குரூரத்தை வெளிக் கொணர்ந்துள்ளது. 1,50,000 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. 5000 பேர் தூய்மை பணியாளர்களாக நிய மனம் பெற்றுள்ளனர். 2000 கால்பந்து மைதானங் களை விட அதிகமான பரப்பில் இவை நிறுவப்பட்டுள் ளன. அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தி கழிப்பறைகளை பயன்படுத்த வைப்பதே பெரும் சவால். 100 பேருக்கு ஒரு கழிப்பறை, 2000 பேர் கழிவை சுத்தம் செய்ய ஒரு தூய்மைப் பணியாளர் எனில் எப்படி சமாளிக்க முடியும்?
கழிப்பறை கழுவ நியமிக்கப்பட்டுள்ள பணி யாளர்கள் அனேகமாக தலித்துகளே. அலுவல் ரீதியான தகவல்களே 10 க்கு 9 பேர் தலித்துகள் என்று கூறு கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளாவுக்கு வந்த பிரதமர், 5 தூய்மைப் பணியாளர்களின் கால் களை கழுவி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு சில மாதங்களுக்கு பின்பு தேர்தல் வந்தது. அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பிரதமர் தூய்மைப் பணியாளர் களின் கால்களை கழுவக்கூடும். ஆனால் தூய்மைப் பணி செய்யும் தலித்துகள், நாங்கள் மலத்தை கழுவி சுத்தம் செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? வர்ணாசிரம அடுக்குகள் “டர்ன்” போட்டு இந்த வேலைகளைப் பார்க்குமா! ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கானவர்களின் கழிவுகளை தலித்துகள் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவிய பிரதமர், கழிவகற்றும் பணியை முழுமையாக இயந்திர மயமாக்கும் 2020 ஆம் ஆண்டு மசோதாவை [The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation (Amendment) Bill, 2020] கை கழுவி விட்டார் என்பது தனிக் கதை. சட்டத்திற்கு பதிலாக “நமஸ்தே திட்டம்” என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். தூய்மைப் பணி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “தெய்வீகக் கடமை” என்று நினைப்பவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? துப்புரவு பொறியியல் கல்வி, ஆராய்ச்சி என்றெல்லாம் எப்படி யோசித்து முன்னேற முடியும்?
“நான் கழுவுகிறேன்... நான் கழுவிக் கொண்டே இருக்கிறேன்... ஆனால் வருகிற கும்பல் 10 நிமிடங்களில் பாழாக்கி விடுகிறது” என்கிறார் சுரேஷ் வால்மீகி. கழிப்பறையில் மிதந்து கொண்டிருக்கும் மலக்குவியல் மீது ஹோஸ் பைப்பை பிடித்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருக்கிறார். பக்கத்து கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டி ருக்கிறார் 17 வயது இளைஞர். அவர் சுரேஷ் வால்மீகி யின் மகன் விகாஸ் வால்மீகி. கும்பமேளாவுக்கு 1000 ஆண்டு கொண்டாட்ட வரலாறு உண்டு எனில், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், 1000 ஆண்டு களாக தலைமுறை தலைமுறையாக வால்மீகிகள் மீது ஏவப்படும் குரூர வரலாற்றை கங்கையும் யமுனையும் எழுதிக் கொண்டே இருக்கின்றன. சுரேஷ் வால்மீகியும், விகாஸ் வால்மீகியும் கழுவிக் கொண்டே இருக்கிறார்கள்.