articles

img

தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவானதில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு - அ.அன்வர் உசேன்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்களை உருவாக்கிட வலுவான முயற்சிகள் செய்தது  போலவே பல உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஈடுபட்டனர். மின் திட்டங்கள், அணைகள், நீர் நிலைகள், புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், ரயில்கள்  என பல திட்டங்கள் உருவாக கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி இயக்கங்களை நடத்தியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும் மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்ததன் மூலம் இந்த திட்டங்கள் சாத்தியமாயின.  அவற்றில் சில முக்கிய திட்டங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.

முல்லை பெரியாறு மின் திட்டம்

முல்லை பெரியாறு அணையின் தனித்துவம் என்பது அதன் பாசன பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும் அணை கேரளாவில் இருக்கிறது. பாசன நீர் தேவைக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில் அணையின் நீரை பயன்படுத்தி ஒரு புனல் மின் நிலையம் உருவாக்க தமிழ்நாடு விரும்பியது. அதற்கு கேரளா அரசாங்கத்தின் உதவி தேவைப்பட்டது. அப்பொழுது கேரளாவின் திருவாங்கூர் - கொச்சி பகுதிக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி- காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையின் முதல்வராக பட்டம் ஏ. தாணுப் பிள்ளையும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இராஜாஜியும் ஆட்சியில் இருந்தனர். எனினும் உடன்பாடு எட்ட முடியவில்லை. இந்த சூழலில் தோழர் பி.ராமமூர்த்தி தமிழ்நாட்டுக்கு தேவையான புனல் மின்சாரம் குறித்து தாணுப்பிள்ளையிடம் பேசினார். ஆனால் தாணுப்பிள்ளை மறுத்தார். மறுப்புக்கு காரணம் கூறும்படி பி.ஆர். வற்புறுத்தினார். முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரும் தமிழகத்திற்கு செல்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு அணா மட்டுமே கேரளா பெறுகிறது. இப்பொழுது மின்சாரமும் தமிழகத்திற்கு எனில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என தாணுப்பிள்ளை கேட்டார். அப்படியானால் மின்சாரத்திற்கு நியாயமான விலை கொடுத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என பி.ஆர். கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. பி.ஆர். தமிழக முதல்வர் ராஜாஜியிடம் இந்த விவாதங்களை கூறினார். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 பைசா எனில் ஏற்றுக் கொள்ளலாம் என ராஜாஜி கூறினார். அதன் அடிப்படையில் பி.ஆர். அவர்கள் மீண்டும் தாணுப்பிள்ளையிடம் பேசினார். அவர் 4 பைசா என்று கூற பி.ஆர். ஒரு பைசா என முன்வைக்க இறுதியில் இரண்டு பைசா என தாணுப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். அதனை பி.ஆர். அவர்கள் ராஜாஜியிடம் தெரிவிக்க பின்னர் இரண்டு அரசாங்கங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் 140 மெ.வா. மின்சாரம் தமிழ்நாடு பெறுவதற்கு வழி உருவானது. இதன் மூலம் தென் மாவட்டங்கள் இன்றும் பலன் அடைகின்றன. இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் பங்கு இன்றியமையாதது.

பரம்பிக் குளம்- ஆழியாறு திட்டம்

1947 முதல் 1957 வரை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தாலும் இந்த முக்கியமான திட்டம் உருவாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கேரளா மக்களிடம் செய்த பிரச்சாரம்தான். இந்த சூழலில்தான் 1957ம் ஆண்டு தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. அப்பொழுது கேரளா கட்சி பணிகளுக்கு தோழர் பி.ஆர். பொறுப்பாளராக இருந்தார். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் பாசன தேவை குறித்து பி.ஆர். அவர்கள் இ.எம்.எஸ். அவர்களிடமும் பாசனத்துறை அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களிடமும் பேசினார். கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் இதனை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. அப்பொழுது தமிழகத்திற்கு காமராஜர் முதல்வராகவும் சி. சுப்பிரமணியம் நிதி அமைச்சராகவும் இருந்தனர்.  எனினும் ஒரு பிரச்சனை இருந்தது. இ.எம்.எஸ். ஆட்சியை கலைக்க காங்கிரஸ் நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பரம்பிகுளம் - ஆழியாறு திட்டத்தை தனது அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தாமல் இருக்க உத்தரவாதம் தேவைப்பட்டது. பி.ஆர். அவர்கள் காமராஜரிடமும் சி. சுப்பிரமணியம் அவர்களுடனும் இது குறித்து பேசினார். அவர்களும் காங்கிரசின் அகில இந்திய தலைமையிடம் பேசுவதாகக் கூறினர். அப்பொழுது உள்துறை அமைச்சராக கோவிந்த வல்லபபந்த் இருந்தார். அவரிடம் பி.ஆர். அவர்களும் பேசினார். ஆனால் கேரளாவில் உள்ள காங்கிரசாரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கூற முடியாது என அவர் கை விரித்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் குறித்து இ.எம்.எஸ். அவர்களிடம் பி.ஆர். பேசினார். அப்பொழுது கேரளா மற்றும் தமிழகம் இரண்டும் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட வரைவு அறிக்கை தயார்படுத்தப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு எடுபடாமல் போனது. இந்த திட்டம் குறித்து காமராஜரும் இ.எம்.எஸ். அவர்களும் நேரடியாக பேசினர். இந்த தொடர் முயற்சிகள் காரணமாக இரு மாநிலங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் பரம்பிகுளம் ஆழியாறு நீர் பாசனத் திட்டம் உருவானது. இந்த திட்டத்திற்கான பணி தொடங்கிய சில மாதங்களில் இ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. ஒரு வேளை இ.எம்.எஸ். ஆட்சியில் இந்த ஒப்பந்தம் உருவாகாமல் இருந்திருந்தால் பின்னர் இந்த திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். மேற்கு மாவட்டங்களுக்கு பலனளிக்கும் இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் தொடர் முயற்சியும் இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளாவில் இருந்ததும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.

நிறைவேறாத திட்டங்கள்

அவினாசி மற்றும் பல்லடம் பகுதிகள் பலன் அடையும் வகையில் குந்தா நீர்ப்பாசன திட்டத்தை அமலாக்க கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே. ரமணி பல முயற்சிகள் எடுத்தார். அதற்காக அவரும் தோழர் அனந்தன் நம்பியார் அவர்களும் அன்றைய பாசன அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்களை சந்தித்து பேசினர். கே.எல்.ராவ் ஒரு சிறந்த இஞ்ஜினியரும் ஆவார். பில்லூர் அணையின் கொள்ளளவை அதிகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியம் என ராவ் கூறியது மட்டுமல்லாது கே.ரமணியின் வேண்டுகோளுக்கிணங்க அதனை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். அவரது கடிதத்தை ரமணி அவர்கள் முதல்வர் அண்ணாவிடம் சமர்ப்பித்தார். சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை வலியுறுத்தினர். தமிழக அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு திட்ட ஆய்வுக்காக காரமடையில் அலுவலகம் திறந்தது. இந்த திட்டம் தேவை என கோவில்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. எனினும் சுமார் இரு வருட ஆய்வுகளுக்கு பின்னர் சில சுயநல சக்திகள் காரணமாக இந்த திட்டம் நிறைவேறவில்லை. இதே போல பாண்டியாறு-புன்னம்புழா நீர் மின்திட்டம் மூலம் 100 மெ.வா. நீர் மின்நிலையத்தை உருவாக்க தோழர் ரமணி முன்முயற்சி எடுத்தார். இந்த திட்டம் ஐந்தாண்டு திட்டத்திலும் இணைக்கப்பட்டது. எனினும் இந்த திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறியிருந்தால் மேற்கு மாவட்டங்கள் கூடுதலாக பலன் அடைந்திருக்கும்.

புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் உதயம்

திருச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த புதுக்கோட்டை சமூக பொருளாதார அம்சங்களில் திருச்சியின் இதர பகுதிகளை ஒப்பிடும்பொழுது பின் தங்கியிருந்தது. 1962ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் உமாநாத் தேர்வாகியிருந்தார். புதுக்கோட்டை முன்னேற்றத்திற்காக உமாநாத் அவர்களும் அனந்தன் நம்பியார் அவர்களும் விவாதித்து ஒரு நீண்ட மனுவை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் நேரில் தந்தனர். இந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாத அதே நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு கமிட்டியை நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற உமாநாத் புதுக்கோட்டைக்கு மட்டும் ஏன் வஞ்சனை என நேருவை கேள்வி கேட்டார். “நேருஜி பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை மக்கள் பிறக்காததுதான் அவர்கள் குற்றமா?” என கர்ஜித்தார். இதன் பின்னர் புதுக்கோட்டையில் மக்களை திரட்டி தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்த மறியல் போராட்டங்களில் உமாநாத் உட்பட பலர் கைதாகினர். இத்தகைய நீண்ட போராட்டங்களின் விளைவாகவே 1974ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவானது. எனினும் ஆட்சியாளர்களால் இந்த நிகழ்ச்சிக்கு உமாநாத் அழைக்கப்படவுமில்லை; சிபிஐ(எம்)மின் பங்கு அங்கீகரிக்கப்படவுமில்லை.  பெரிய மாவட்டமாக இருந்த தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனும் மக்களின் கோரிக்கையை நாகை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் உமாநாத் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார். தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகை மாவட்டத்தை பிரித்து திருவாரூர் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நாகை மக்கள் அதிருப்தியுற்றனர். இது இரண்டு மாவட்டங்களிலும்  போராட்டங்கள் வெடிக்கும் சூழலை உருவாக்கியது.  நாகை, திருவாரூர் இரு தொகுதிகளிலும் சிபி(ஐ)எம் சட்டமன்ற உறுப்பினர்கள். இரு மாவட்ட மக்களிடையே மோதலை உருவாக்காமல் இந்த பிரச்சனையை தீர்க்க கட்சி முயன்றது. இதன் விளைவாக தஞ்சை, திருவாரூர், நாகை என மூன்று மாவட்டங்கள் என எம்.ஜி.ஆர். அறிவித்தார். எனினும் நாகை மாவட்டம் 1991ஆம் ஆண்டும் திருவாரூர் மாவட்டம் 1997ஆம் ஆண்டில்தான் உருவாயின. 

கம்யூனிஸ்ட் கட்சியால்  உருவான கிராமம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகாடு மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை வனத்துறையினர் தமது நிலம் எனக் கூறி சாதாரண மக்களை துன்புறுத்தி வந்தனர். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது அல்ல என ஆதாரங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி நிரூபித்தது. தோழர் வி.கே. கருப்பசாமி, எம்.ஏ. வெங்கடாசலம் போன்ற தலைவர்கள் மக்களை திரட்டி போராடினர். கைது, சிறை, மறியல், பாதயாத்திரை என பல போராட்டங்கள் நடத்தியதன் பலனாக தமிழ்நாடு அரசாங்கம் சர்வே நடத்தி 600 குடும்பங்களுக்கு பட்டா தரப்பட்டது. இன்று வடகாடு 7000 மக்களை கொண்ட ஒரு ஊராட்சியாக திகழ்கிறது. வடகாடு கிராமம் முற்றிலும் மக்கள் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் உருவானது ஆகும்.  திருவாரூர், கீழ்வேளூர், நாகை பகுதிகளில் மக்கள் இயக்கம் மூலமும் நம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்லமுத்து, வே.மாரிமுத்து, நாகை மாலி ஆகியோரின் முயற்சிகள் மூலம் புதிய பேருந்து நிலையங்கள், ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம மாணவர்கள் பயில பள்ளிகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாயின.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜி.எஸ்.மணி, டி.மணி, லீமா றோஸ் ஆகியோரின் முயற்சியால் 15க்கும் அதிகமான முக்கிய பாலங்கள்  கட்டப்பட்டுள்ளன. 

மருத்துவக் கல்லூரிகள்,  ரயில்கள், நீர் நிலைகள்:

கீழ்கண்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு நமது தோழர்கள் முன்முயற்சி கொடுத்தனர்:
•    மதுரை எய்ம்ஸ்  - பி.மோகன், சு.வெங்கடேசன்
•    நாகர்கோவில் - ஏ.வி.பெல்லார்மின்
•    திண்டுக்கல் - கே.பாலபாரதி 
•    கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி- 
பி.ஆர்.நடராஜன் 
•    குமரி மாவட்ட சித்த மருத்துவமனை - 
ஜான் ஜோசப்
•    திருவட்டார் அரசு மருத்துவமனை - 
ஜே. ஹேமச்சந்திரன்
•    குழித்துறை அரசு மருத்துவமனை - டி.மணி
 

ரயில்கள்:

•    கோவை எக்ஸ்பிரஸ் – கே. ரமணி 
•    மதுரை-பெங்களூர் வந்தேபாரத்- எக்ஸ்பிரஸ் சு.வெங்கடேசன்
•    கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் நிரந்தரம் மற்றும் 11 ரயில்கள் கோவை வந்து செல்வது, மோனோ ரயில் திட்டம் முதல் கட்ட ஆய்வு - பி.ஆர்.நடராஜன்.
 

பேருந்து நிலையங்கள்:

• நாகை, நாகூர் - ஆர்.உமாநாத்
• குலசேகரம்- ஜே.ஹேமச்சந்திரன்
• தக்கலை - எஸ்.நூர் முகமது
 

குடிநீர் திட்டங்கள்:

• சின்னவேடம்பட்டி நீர் நிலை- கே. ரமணி
• கொள்ளிடம் திட்டம்- கே.பாலகிருஷ்ணன் 
• திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டம் -     கே.பாலபாரதி 
•    பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம் - 
எஸ்.நூர் முகம்மது
•    திருவெறும்பூர் கூட்டு நீர் திட்டம் - பாப்பா உமாநாத்
 

இவ்வாறாக ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக இருந்துள்ளது. சில பதிவு செய்யப்பட்டுள்ளன. பல பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. தற்பொழுது ஒவ்வொரு இடைக்குழு,மாவட்ட குழு மாநாட்டிலும் பல திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த திட்டங்களுக்காக கட்சி வலுவான மக்கள் இயக்கங்களை நடத்தும்.