articles

img

சுதந்திர பாலஸ்தீனம் அமைவதே இஸ்ரேலுக்கு பாதுகாப்பு!-பேரா. ராமி ஜி கோவ்ரி

இஸ்ரேலுக்கும் முழு மத்தியக் கிழக்குப் பகுதிக்கும் நிலையான பாதுகாப்பு என்பது பாலஸ்தீனர்களுடன் சமத்துவமான அமைதியை ஏற்படுத்துவதில்தான் உள்ளது. ஆனால் இதை ஏற்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை.

பெய்ரூட் மற்றும் டெஹ்ரானில் ஹிஸ் புல்லா மற்றும் ஹமாஸின் மூத்த தலைவர்கள் மற்றும் சில ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்குப் பதிலடிதரும் விதமாக ஈரான், அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது.

‘யூதர்களின் ஆபத்தான இடம்’

இந்தத் தாக்குதலை எதிர்பார்த்து, தனது கூட்டாளி நாடான இஸ்ரேலைப் பாதுகாக்க, அமெரிக்கா ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் இருந்த தனது இராணுவப் படைகளை மத்திய கிழக்கில் மேலும் அதிகரித்தது. அதன் போர்க் கப்பல்கள், இஸ்ரேலின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தடுக்க உதவின. இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு வழக்கமானதாகிவிட்டன. கடந்த  பல தசாப்தங்களாக இஸ்ரேலைப் பாதுகாக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கா பலமுறை தலையிட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன: அவை இஸ்ரேலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக்கி, அமெரிக்க இராணுவ வலிமையை மேலும் அதிகமாகச் சார்ந்திருக்கச் செய்துள்ளன. இந்த விளைவுகள், உலகிலேயே யூதர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இஸ்ரேலை மாற்றியுள்ளன என்பதுதான் உண்மை.

இஸ்ரேல் எதிர்ப்பு அணியின் பலம்

அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டணி இராணுவ பலத்தை மட்டுமே நம்பியிருப்பதால், இப்பகுதியில் பதற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களை - முக்கியமாக பாலஸ்தீன - யூத இனவாத மோதலை - கையாள முயற்சிக்கவில்லை. இது மத்திய கிழக்கில் புதிய வலிமைமிக்க இராணுவ அமைப்புகளையும் மக்கள் எதிர்ப்பு இயக்கங் களையும் உருவாக்கியுள்ளது. ஹிஸ்புல்லா, ஹமாஸ், அன்சார் அல்லா (ஹவுதிகள்) மற்றும்  பிற குழுக்கள் இப்போது வழக்கமாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைத்தாக்குகின்றன.

தற்போது இஸ்ரேலை எதிர்க்கும் அணியின் வலிமை அதன் ஆயுதங்களிலிருந்து மட்டுமல்ல; அரபு பொதுமக்களின் கருத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதிலிருந்தும் வருகிறது. 1973க்குப் பிறகு எந்த அரபு நாடும் செய்யாததை இந்த அணி செய்கிறது;  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அரபு மக்களை அடிமைப்படுத்துவதையும் இராணுவ ரீதியாக எதிர்க்கத் தயாராகவும் திறன் கொண்டதாகவும் இந்த அணி உள்ளது. 

இஸ்ரேலுக்கு அமெரிக்கா விரைவாகவும் பெரிய அளவிலும் இராணுவ ஆதரவு அளிப்பது வன்முறைச் சுழற்சியைத் தொடரச் செய்கிறது. மேலும் இது காசாவிலும் லெபனானிலும் பதற்றத்தைக் குறைத்து போர் நிறுத்தம் செய்ய  வேண்டும் என்ற அதன் சொந்த வேண்டுகோள் களுக்கே முரணாகவும் உள்ளது. மத்திய கிழக்கில் உள்ள மக்களில் மிகச் சிலரே அமெரிக்காவின் வார்த்தைகளை நம்புகின்றனர். ஏனெனில் அதன் செயல்கள் - மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர -  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர், தடைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவக் குவிப்புகள்  என்பதாகவே இருந்துள்ளன. 

ஒரு பிராந்தியப் போர் உருவாகிறது

ஒரு பிராந்தியப் போர் படிப்படியாக உருவாகி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலால் இதில் இழுக்கப்படவில்லை, மாறாக தானாகவே இதில் ஈடுபட்டுள்ளது. இதற்குக் காரணம் அமெரிக்கா போரை விரும்புவதும், இஸ்ரேலுக்காகப் போருக்குச் செல்ல விரும்புவதும் ஆகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

போர் என்பது தனது பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது என்பதால் அமெரிகக் போருக்கு ஆர்வம் காட்டுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் இப்போது கிட்டத்தட்ட 850 பில்லியன் டாலராக உள்ளது. இது ஆண்டு தோறும் 2-3 சதவீதம் அதிகரிக்கிறது. இதற்கு ஒரு காரணம் உண்டு. போர் பாதுகாப்பு செல வினங்கள் என்பவை முதலீடுகள், வேலை வாய்ப்புகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நூற்றுக் கணக்கான பெரிய மற்றும் சிறிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபங்களை அதிகரிக்கிறது. 

அமெரிக்கா செய்யும் செலவுகள்

இதுவரை, ஏமனில் உள்ள அன்சார் அல்லாவை (ஹவுதிகளின் அமைப்பு) தாக்கு வதற்காக வாஷிங்டன் 1.8 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர் வரை செலவழித்துள்ளது. ஆனால் இது,  காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பாக - செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை நிறுத்த இயலவில்லை. 

ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கான இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கூட்டு நட வடிக்கைக்கு 1.1 பில்லியன் டாலர் செலவான தாக மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 1 இராணுவ பதிலடியும் அதே அளவு செலவு பிடித்திருக்கலாம். இஸ்ரேல் இனி தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதால்,  சில அரபு நாடு களும் ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்க உதவின.

வாஷிங்டன் இந்தப் பெரிய தொகைகளை விருப்பத்துடன்தான் செலவிடுகிறது. இது  உலகளாவிய அந்தஸ்தை வலுப்படுத்துவதற்காக வும், உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான லாபகரமான ஒப்பந்தங்கள் மூலம் தனது விரிவான இராணுவ-தொழில் வளாகத்திற்கு தொடர்ந்து லாபம் அளிப்பதற்காகவும் ஆகும்.

பனிப்போரின் எச்சம்

ஆயுதக் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறி தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் அமெரிக்கா இஸ்ரேலுக்காகப் போருக்குச் செல்ல விரும்புகிறது.

இஸ்ரேலுடனான அமெரிக்காவின் நெருக்கமான அரசியல் மற்றும் இராணுவ உறவுகள் ஓரளவு ‘பனிப்போரின்’ எச்சம் என்றும் சொல்லலாம். ‘பனிப்போர்’ என்பது, 1945 முதல் 1990 வரை சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் நடந்த யுத்தமல்லாத, நீடித்த மோதல் ஆகும். அப்போது சோவியத் யூனியனுடன் கூட்டணி வைத்திருந்த நாடுகள் செல்வாக்கு செலுத்திய பகுதியில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் முக்கிய கூட்டாளியாக இஸ்ரேல், பார்க்கப்பட்டது. பனிப்போருக்குப் பிறகும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தைப் பராமரிக்க உதவும் முதன்மைக் கூட்டாளியாக அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலைப் பார்த்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதிகளிடையே இஸ்ரேலின் மிகவும் உண்மையான தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் அர சியல் ரீதியாக பயனடைகிறார்; மேலும் 1960கள் மற்றும் 70களில் இஸ்ரேலை மிக நெருக்கமான கூட்டாளி ஆக்கியதன் உச்சக்கட்ட அமெரிக்க அரசியலில் அவரது ஆரம்பகால அனுபவங்கள் அமைந்தன. இன்னும் அந்த உறவைப் பேணு கிறார் அவர். 

அமெரிக்க  நாடாளுமன்றமும் இதைப் பிரதிபலிக்கிறது. இது இஸ்ரேலுக்கு தாராளமான உதவி மற்றும் சிறப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சலுகைகளின் தொடர்ச்சியாக அளிப்பதையும், அதன் அனைத்து எதிரிகளை விட  இஸ்ரேலை அதிக சக்திவாய்ந்ததாக வைத்திருக்க சட்டப்பூர்வ உறுதிப்பாட்டையும் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் சாய்மானம்

அமெரிக்க பிரதான ஊடகங்கள் அமெரிக்க பொதுமக்களை பாலஸ்தீன உண்மைகள் குறித்து அறியாமல் வைத்திருப்பதிலும், இஸ்ரே லுக்கும் அமெரிக்க கொடைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவை வெளிநாடுகளில் நடக்கும் அமெரிக்க இராணுவ அட்டூழியங்களை - சாகசங்களாக நியாயப்படுத்தி, பாலஸ்தீனர்கள், லெபனான், ஈரான் மற்றும் பொதுவாக மத்திய கிழக்கு ஆகிய வற்றுடனான மோதல்கள் குறித்த இஸ்ரேலிய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தங்கள் செய்திகளை ஒருதலைப் பட்சமாகச் சாய்த்துள்ளன.

அமைதியை விரும்பாத அமெரிக்கா

இத்தகைய பின்னணியில் ஈரான் - இஸ்ரேல் சமீபத்திய மோதல் கடைசியானதாக இருக்காது. பிராந்திய மோதல் தீவிரமடையும்போது, அமெரிக்க படைகள் தொடர்ந்து இங்கு வந்தடைந்து, பிராந்தி யத்தையும் உலகையும் நிலைகுலையச் செய்யும். கடந்த கால்நூற்றாண்டில் அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த விளைவு  மத்திய கிழக்கில் சுமார் 60 அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற வசதிகளை புதிதாக உருவாக்கியுள்ளது.

இந்தப் போக்கு அனைத்து தரப்பிலும் உள்ள புத்திசாலித் தலைவர்கள் பாலஸ்தீனிய-இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க-ஈரானிய மோதல் களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கும் வரை தொடரும். இந்தப் பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான் மற்றும் பிற  ஆர்வமுள்ள தரப்பினர் அனைவரும் நாடு,  இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில் நங்கூரமிடப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும்  தெளிவற்ற வார்த்தைகளைப் பேசுகின்றன;  தீவிர அமைதி முயற்சிகளைத் தடுக்கவும் நிரந்தர இராணுவ மோதல்களை ஊக்குவிக்கவும் செயல்படுகின்றன.

அரபு உலகின் பெரும்பான்மை மக்கள், அரபு - இஸ்ரேலிய அமைதிச் செயல்முறையின் ஒரு பகுதியாக பாலஸ்தீனர்களுக்கு இறையாண்மை மிக்க நாடு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலுவாக உணர்கிறார்கள். இந்த உணர்வு அமெரிக்க பொதுமக்களிடையேயும் மெதுவாகப் பரவி வருகிறது.

உண்மையில், உண்மையான அமைதி முயற்சி களில் முதலீடு செய்வது எளிதாகவும், நியாயமாக வும், குறைந்த செலவினமாகவும், தற்போதைய காலனித்துவ சூழ்நிலையை நிலைநிறுத்துவதை விட குறைந்த அழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதற்கான சிறந்த மற்றும் ஒரேயொரு வழி இதுதான். 

கட்டுரையாளர்: பெய்ரூட் அமெரிக்க  பல்கலைக்கழக பேராசிரியர்.
- நன்றி : அல் ஜசீரா - தமிழில்: ராகினி

இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தம் ஓராண்டில் சுடுகாடாய் மாறிய காஸா

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் இனப் படுகொலை யுத்தம், 2023 அக்டோபர் 7 அன்று துவங்கி யது. இன்றுடன் (2024 அக்டோபர்) ஓராண்டு நிறை வடைகிறது. நம் காலத்தின் மிகப்பெரிய இனப்படுகொலை இது. உலகெங்கிலும் இன்றைய தினம் போர் எதிர்ப்பு முழக்கம் ஒலிக்கிறது. இஸ்ரேலே, காசா போரை நிறுத்து என்ற ஆவேசக்குரல் உயர்கிறது. இந்தியாவில் இடதுசாரிகள் அந்த மாபெரும் போராட்டத்தை இன்று நடத்துகிறார்கள்.

காஸாவில் கடந்த ஒரு வருடத்தில்  இஸ்ரேலின் இனப்படுகொலை பாதிப்பும்

அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர்.

ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க மருத்துவ  வல்லுநர்கள் கூறுகின்றனர். 

26,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரை இழந்துள்ளனர்.

தினமும் சராசரியாக 6 முதல் 8 குழந்தைகள் கை அல்லது கால்களை இழக்கின்றனர். 

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம்

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் எண்ணிக்கை- 10,000 முதல் 12,000.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்- 175.

கொல்லப்பட்ட ஐ.நா ஊழியர்கள்- 125.

பாலஸ்தீனத்தில் உள்ள 1245 மசூதிகளில் 962 மசூதிகள் தரைமட்டம்

3 தேவாலயங்கள் தகர்ப்பு

மொத்தமுள்ள 60ல் 19 கல்லறைகள் அழிப்பு

அனைத்து பல்கலைக்கழகங்களும் தகர்ப்பு

344 பள்ளிகள் தகர்ப்பு

60% வீடுகள் தரைமட்டம்

67% விவசாய நிலங்கள் பாதிப்பு

53% கிணறுகள் நாசம்

95% கால்நடைகள் உயிரிழப்பு

காசாவின் 85% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

உலக வங்கியின் கணிப்பின்படி சுற்றுச்சூழல் சேதம் 411 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்)டாலர்.

39 மில்லியன் டன் போர் கழிவுகள் உருவாகியுள்ளன.

எரிசக்தி, கடல்சார் சுற்றுச்சூழல், மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேத மடைந்துள்ளன.

நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 2-8 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது.

மாசுபட்ட நீரால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவியுள்ளன.

இடிபாடுகளால் தூசி பரவி நுரையீரல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன.

இடிபாடுகளில் 800,000 டன் அஸ்பெஸ்டாஸ் இருக்கலாம்.

இடிபாடுகளை அகற்ற 513-647 மில்லியன் டாலர் செலவாகும்.

சோலார் பேனல்கள் அழிவால் நச்சு பொருட்கள் வெளியேறியுள்ளன.

1,675 கிலோ ஈயம் சுற்றுச்சூழலில் கலந்துள்ளது.

விவசாய துறை சேதம் 629 மில்லியன் டாலர்.

மரங்கள், பசுமை இல்லங்கள், பாசன கட்டமைப்புகள் சேதம்.

38-48% மரங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளன.

விவசாய மண்ணில் கன உலோகங்கள் கலந்துள்ளன.

கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.

காசாவின் ஒரே மின் நிலையம் சேதமடைந்தது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

நீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது.

கடலோர பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளன.

வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் சீரமைப்புக்கு பல ஆண்டுகள் ஆகும்.

மேற்கு கரை பகுதியில் ஒரு வருடத்தில்

741 பேர் கொல்லப்பட்டனர்.

11,000 பேர் கைது- பெண்கள், சிறுவர்கள் உட்பட.

4க்கும் அதிகமான அகதிகள் முகாம் மீது 50 முறை குண்டு வீச்சு

1429 வீடுகள் தகர்ப்பு

50% சாலைகள் நாசம்

லெபனானில் கடந்த 3 வாரங்களில்

2056 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 127குழந்தைகளும் 200பெண்களும் அடங்குவர்.

9000 பேர் படுகாயம்

34 மருத்துவமனைகள் தகர்ப்பு

73 மருத்துவ உழியர்கள் உயிரிழப்பு.

இதுமட்டுமல்லாது சிரியா, ஈராக் மீதும் 
இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தி பலரை கொன்றுள்ளது. ஈரானில் புகுந்து, ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஏமன் மீது குண்டுகளை வீசுகின்றன.

- அ.அன்வர் உசேன்