இன்றைய உலகில் நாம் காணும் போர்கள் மற்றும் இரத்தக்களரியின் வேர்கள் ஆக்கிர மிப்பாளர்கள் மற்றவர்களின் உரிமை களை மீறியது, நாடுகளின் உரிமைகளை புறக்க ணித்தது, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை அமல்படுத்தியது, குறிப்பிட்ட குழுக்களை பலவீனமாகவும் வளர்ச்சியடையாமலும் வைத்தி ருந்தது மற்றும் தனிநபர்களின் உரிமைகளை புறக்கணித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அநீதி, ஒடுக்குமுறை, பேராசை, வறுமை மற்றும் அறியாமை ஆகியவை எந்தவொரு பகுதியிலும் நிலவும் வரை, வன்முறையும் மோதலும் தொடரும். இத்தகைய குழப்பங்களின் மூல காரணங்களை நாம் எதிர்கொள்ளாவிட்டால், நமது குழந்தை களின் எதிர்காலத்தை இருளில் இருந்தும் அழிவில் இருந்தும் காப்பாற்ற முடியாது.
இஸ்ரேலின் பயங்கரவாதம்
கடந்த ஓராண்டில், இஸ்ரேலிய ஆட்சியின் உண்மையான தன்மையை உலகம் கண்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் எவ்வாறு கொடூரங்களை நிகழ்த்துகிறது என்பதை உலகம் கண்டுள்ளது. பதினொரு மாதங்களில் 41,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை - பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை - கொடூரமாக கொன்றுள்ளது.
அதன் தலைவர்கள் இந்த இனப்படு கொலையை, குழந்தைகளைக் கொல்வதை, போர்க் குற்றங்களை மற்றும் அரசு பயங்கரவாதத்தை “சட்டப் பூர்வமான தற்காப்பு” என்று அழைக்கின்றனர்.
அவர்கள் மருத்துவமனைகள், குழந்தைகள் பள்ளிகள் மற்றும் பள்ளிகளை “சட்டப்பூர்வமான இராணுவ இலக்குகள்” என்று அழைக்கின்றனர்.
அவர்கள் உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மற்றும் துணிச்சலான மக்களை, இனப்படுகொலைக்கு எதிரான அவர்களது போராட் டத்தை “யூத எதிர்ப்பு” என்று முத்திரை குத்து கின்றனர்.
ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு மற்றும் அவ மானத்திற்கு எதிராக எழுந்து நின்ற ஒடுக்கப்பட்ட (பாலஸ்தீன) மக்களை அவர்கள் “பயங்கரவாதி கள்” என்று அழைக்கின்றனர்.
எமது விஞ்ஞானிகள், தூதர்கள் மற்றும் எமது மண்ணில் உள்ள விருந்தினர்களைக் கூட படு கொலை செய்தது இஸ்ரேல்தான். ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு மறைமுக மாகவும் வெளிப்படையாகவும் ஆதரவளித்தது இஸ்ரேல்தான்.
ஈரான் செய்தது என்ன?
மாறாக ஈரானோ, இஸ்ரேலிய ஆட்சியின் நான்கு தலைமுறைக் குற்றங்கள் மற்றும் காலனியா திக்கத்தின் பாதிப்புக்கு உள்ளான மக்களின் பிரபல மான விடுதலை இயக்கங்களை ஆதரித்து வந்துள்ளது.
இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிராக கோ பத்துடன் தெருக்களில் வெள்ளமெனப் பெருகிய -உலகெங்கிலும் உள்ள மக்களின் பக்கம் ஈரான் நின்றுள்ளது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற குற்றங்களை நாம் கண்டிக்கிறோம்.
அவசரக் கடமை
அரபு பிராந்தியத்தையும் உலகத்தையும் அது விழுங்குவதற்கு முன், காசாவில் உடனடியாக வன்முறையை நிறுத்தி, நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டியதும், லெபனானில் இஸ்ரே லின் காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதும் சர்வதேச சமூகத்தின் அவசர கடமையாகும்.
பதிலடி இல்லாமல் போக முடியாது
காசாவில் இஸ்ரேல் தோல்வியடைந்துவிட்டது. தனது காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் இஸ்ரேல் எதையும் சாதிக்க முடியவில்லை. இயல்பாகவே, கடந்த சில நாட்களாக லெபனா னில் இஸ்ரேல் நடத்திய அரசு பயங்கரவாதம், தொ டர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறித்துள்ளது. இது பதிலடி இல்லாமல் போக முடியாது. இந்த பயங்கர பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய முயற்சிகளை முறிய டித்த, மனித உரிமைகளின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் கொடியவர்கள்தான் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
சுதந்திர பாலஸ்தீனமே தீர்வு
மேற்கு ஆசியாவிலும் உலகிலும் 70 ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி அனைத்து பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதுதான். பாலஸ்தீனத்தின் அனைத்து மக்களும் - தாய்நாட்டில் வசிப்பவர்க ளும், புலம்பெயர்ந்தவர்களும் - தங்கள் எதிர் காலத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். இந்த வழிமுறையின் மூலம் நிலையான அமை தியை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகி றோம். இனவாதம் மற்றும் இனவெறியின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் ஒரே நிலத்தில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியும்.
ஈரானின் பொறுப்பு
அரபு பிராந்தியத்தின் சமகால வரலாற்றைப் பாருங்கள்: ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்க வில்லை. வெளி ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே அது தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. இத னால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் செயல்க ளுக்கு வருந்தினர்.
ஈரான் எந்த நாட்டின் நிலப்பரப்பையும் ஆக்கிர மிக்கவில்லை. எந்த நாட்டின் வளங்களையும் அது நாடவில்லை. நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதை நோக்க மாகக் கொண்ட பல்வேறு முன்மொழிவுகளை அது தனது அண்டை நாடுகளுக்கும் சர்வதேச அரங்குக ளுக்கும் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ளது.
ஒற்றுமைக்கு என்ன வழி?
இப்பிராந்தியத்தில் ஒற்றுமையின் முக்கியத்து வத்தையும், “வலுவான பிராந்தியத்தை உருவாக்கு வதையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். “வலுவான பிராந்தியம்” என்பது பல அடிப்படை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:
முதலாவதாக, நாம் அண்டை நாடுகள் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும், இந்த பிணைப்பின் காரணமாக நாம் எப்போதும் ஒன்றாகவே இருப் போம். நமது பிராந்தியத்தில் வெளி சக்திகளின் இருப்பு நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. நமது வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்துள்ளன, பாதுகாப்பை பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள சக்திகளிடம் ஒப்படைப்பது நம் யாருக்கும் பயனளிக்காது.
இரண்டாவதாக, புதிய பிராந்திய ஒழுங்கு அனைத்து அண்டை நாடுகளையும் உள்ளடக்கிய தாகவும் பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அண்டை நாட்டின் நலன்களையும் பாதுகாக்கத் தவறும் ஒரு ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது.
மூன்றாவதாக, அண்டை மற்றும் சகோதர நாடுகள் தங்கள் மதிப்புமிக்க வளங்களை போட்டி மற்றும் ஆயுதப் போட்டிகளுக்காக வீணடிக்கக் கூடாது. நமது பிராந்தியம் போர், மதச்சார்பு பதற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், நீர்ப்பற்றாக்குறை, அகதிகள் நெருக்கடி, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் வெளி தலையீடுகள் ஆகியவற்றால் பாதிக் கப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்கு சிறந்த எதிர்காலத்திற்காக இந்த பொதுவான சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
போரை விரும்பவில்லை
நான் ஒரு நாட்டின் அதிபர், அந்த நாடு தனது நவீன வரலாறு முழுவதும் அச்சுறுத்தல்கள், போர், ஆக்கிரமிப்பு மற்றும் தடைகளை சகித்துக் கொண்டது. மற்றவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வில்லை; அல்லது நாங்கள் அறிவித்த நடுநிலை மையை மதிக்கவில்லை. உலக வல்லரசுகள் ஆக்கிரமிப்பாளர்களின் பக்கம் கூட நின்றன. எங்களால் எங்கள் சொந்த மக்கள் மற்றும் எங்கள் சொந்த உள்நாட்டு திறன்களை மட்டுமே நம்ப முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
ஈரான் தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய முயல்கிறது, மற்றவர்களுக்கு பாதுகாப்பின் மையை உருவாக்க அல்ல. நாங்கள் அனைவ ருக்கும் அமைதியை விரும்புகிறோம், யாருடனும் போர் அல்லது சச்சரவை நாடவில்லை.
உரையாடல் மட்டுமே வழி
உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்களுக்கு நிலை யான அமைதி மற்றும் பாதுகாப்பை நாங்கள் விரும்பு கிறோம். ஈரான் போருக்கு எதிராக நிற்கிறது. உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை முடி வுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்துகிறது. அமைதியான தீர்வுகளை நாங்கள் ஆதரிக்கிறோம், இந்த நெருக்கடியைத் தீர்க்க உரை யாடல் மட்டுமே வழி என்று நம்புகிறோம்.
அமெரிக்காவின் அழுத்தம்
தற்போதைய உலகமயமாக்கப்பட்ட உலகில், எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் நலன்களை யும் மற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை அச்சுறுத்துவதன் மூலம் அடைய முடியாது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை. அத்தகைய அணுகுமுறை, அச்சுறுத்தல்களால் பீடிக்கப்படு வதற்குப் பதிலாக வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அணுகுமுறை மூலம், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் கண்டறிய முடியும்.
அந்த புதிய பார்வையின் அடிப்படையில்தான், ஈரானும் உலக வல்லரசுகளும் 2015 இல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அணு ஒப்பந்தத்தை எட்டின. எங்கள் உரிமைகளை அங்கீகரிப்ப தற்காக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எங்கள் அணுசக்தி அமைப்புகள் மீதான மேற் பார்வைக்கு ஒப்புக்கொண்டோம். அந்த ஒப்பந்தத்தி லிருந்து டிரம்ப் அரசு ஒருதலைப்பட்சமாக வில கியது, அரசியலில் அச்சுறுத்தல் நிறைந்த அணுகு முறையையும், பொருளாதாரத் துறையில் நிர்ப் பந்தம் செய்யும் உத்தியையும் வெளிப்படுத்தியது.
இங்கே, அமெரிக்க மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்:
உங்கள் எல்லைகளில் இராணுவ தளங்களை நிறுவியது ஈரான் அல்ல. உங்கள் நாட்டின் மீது தடைகளை விதித்து, உலகத்துடனான உங்கள் வர்த்தக உறவுகளுக்கு தடையாக இருப்பது ஈரான் அல்ல. மருந்துகளை அணுக உங்களைத் தடுப்பது ஈரான் அல்ல. உலகளாவிய வங்கி மற்றும் நிதி அமைப்பை அணுகுவதை உங்களுக்கு கட்டுப் படுத்துவது ஈரான் அல்ல.
உங்கள் இராணுவத் தலைவர்களை நாங்கள் இலக்கு வைக்கவில்லை. மாறாக, பாக்தாத் விமான நிலையத்தில் ஈரானின் மிகவும் மதிக்கப் படும் இராணுவத் தளபதியைக் கொன்றது அமெ ரிக்காதான்.
தடைகள் என்பவை ஒரு நாட்டின் பொருளா தாரத்தை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அழிவுகரமான மற்றும் மனிதாபிமானமற்ற ஆயுதங்கள். அத்தியாவசிய மருந்துகளை அணுக முடியாமல் தடுப்பது தடைகளின் மிகவும் வேத னையான விளைவுகளில் ஒன்றாகும். இது ஆயிரக்க ணக்கான அப்பாவி மக்களின் உயிரை ஆபத்திற் குள்ளாக்குகிறது. இந்த நடவடிக்கை மனித உரிமைகளை வெளிப்படையாக மீறுவது மட்டு மல்லாமல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றமா கவும் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக தடைகளால் ஏற்பட்ட பல இன்னல்களை எங்கள் நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த தடைகளால் ஏற்பட்ட காயங்கள் எங்கள் சமூ கத்தின் ஆழத்தில் இருந்தாலும், இந்த கசப்பான அனுபவத்தை எதிர்கொள்வது எங்களை அசைக்க முடியாத உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் கூடிய வலுவான நாடாக மாற்றியுள்ளது.
ஈரானிலிருந்து வரும் இந்த செய்தி கவனமாக கேட்கப்படும் என்று நம்புகிறேன்.
செப். 24 அன்று ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில்
ஆற்றிய உரையின் பகுதிகள்...
தமிழில் : ராகினி