தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த விபரங்களை ஒரு வெள்ளை அறிக்கையாக பொதுமக்களிடம் முன்வைத்திருக்கிறார் தமிழக அரசின் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ஆகஸ்ட் 13 அன்று தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் வெள்ளை அறிக்கை என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தமிழக அரசின் நிர்வாக குறைபாடுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகுறித்த விபரங்களையும் பிரதான உள்ளடக்கமாக அறிக்கை கொண்டிருந்தாலும், அதன் இறுதிப் பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்மொழிவுகளையும் முக்கியமானதாகவே கருத வேண்டியிருக்கிறது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக பார்ப்போம்.
நெருக்கடிக்கான நான்கு காரணங்கள்
தமிழ்நாட்டின் தற்போதையை நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை குறித்து கூடுதலான விபரங்களை கொண்டுள்ள அறிக்கை அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. 1. அதிமுக அரசின் பிறழ்வான நிதி மேலாண்மை, 2. வருவாயை பெருக்குவதற்கான திட்டமிடலில் பலவீனம், 3. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, கோவிட் நெருக்கடி, 4. ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை ஆகிய நான்கு அம்சங்களை பிரதான காரணங்களாக சுட்டிக் காட்டியிருக்கிறது அறிக்கை. அதிமுக அரசை மட்டும் பிரதான குற்றவாளியாக கருதாமல் ஒன்றிய அரசின்அணுகுமுறை, பொருளாதார புறச்சூழல் தமிழகத்தின் மீது உருவாக்கியுள்ள தாக்கம் ஆகியவையும் அறிக்கையின் உள்ளடக்கங்களாக உள்ளன. பொதுவாக ஒரு விளைவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பது இயல்பானது. அதைபோலவே, தற்போதைய நெருக்கடிக்கான காரணங்களையும் கோணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது இவ்வறிக்கை. எனவே இது அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கை என்பதாகவோ, நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய நிதி நிலைமை எங்களை அனுமதிக்கவில்லை என திமுக அரசு வெளியிடுகிற ஒரு முன்னோட்டமாகவோ இதை கருத வேண்டியதில்லை. ஆனாலும் இவ்வறிக்கையின் தொடர்ச்சியாகஅரசாங்கம் மேற்கொள்ளும் அணுகுமுறையையொட்டியே அதற்கான விமர்சனங்களும், எதிர்வினையும் வெளிப்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதிமுக அரசின் அணுகுமுறை
”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
எனும் குறள் சுட்டுவதைப்போல தேவையான திட்டமிடல்களை மேற்கொள்வதிலும், அதற்கான நிதியைதிரட்டுவதிலும் முனைப்பாக செயல்படுகிற ஒரு அரசாக கடந்த பத்தாண்டுகளின் அரசு செயல்படவில்லை என்பது உண்மை. கடந்த 2011 ல் ஆட்சிக்குவந்த பிறகான இரண்டு ஆண்டுகளில், அதாவது 2013 வரையிலும் கூட நிதி நிலை என்பது உபரியாகத் தான் இருந்தது. அதற்கு பிறகான காலத்திலிருந்துதான் சரிவு உருவாக துவங்கியது. 2012-13 ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இதர மாநிலங்களை ஒப்பிடுகிற போது 3 வது நிலையில் இருந்த தமிழகம் 2018–19 இல் 11 வது இடத்திற்கு கீழே இறங்கி விட்டது. பொதுவாக ஒரு மாநிலத்தின் மொத்தஉற்பத்தியில் அம்மாநிலத்திற்கான கடன் வரம்பு என்பது 25 விழுக்காட்டிற்கு கீழே தான் இருக்க வேண்டும் எனும் 14 வது நிதிக்குழுவின் வழிகாட்டுதல். ஆனால் அதை கடந்தும் தமிழகத்தின் மொத்த கடன்விகிதம் என்பது 26.69 % ஆக, அதாவது ரூபாய்5,70,000 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தகைய வீழ்ச்சியிலிருந்து உடனடியாக மீள்வது கடினமானதே.
மேலும் அரசின் நிர்வாகத் தவறுகளால் ஒருலட்சம் கோடி அளவிற்கு இழப்பீடும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மத்தியத் தணிக்கை அறிக்கையும் (CAG Report) இதனை விபரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளது. வரி வருவாயை பெருக்குவதற்கும், வரிகளல்லாத வருமானங்களை உயர்த்துவதற்குமான உரிய திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை என்பது அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இத்துடன் பொதுத்துறைகளின் செயல்பாட்டை லாபமீட்டும் தன்மையோடு வலுப்படுத்துவதில் பலவீனம், ஒட்டு மொத்த நிதி பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறையின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றதால், மேலும் மேலும்பெற்ற கடன்கள் மூலமே நிலைமைகளை சமாளித்ததுஆகியவையும் அதிமுக அரசின் நிர்வாக குறைபாட்டின் எடுத்துக்காட்டுகளாக வெளிப்பட்டுள்ளன. எனவே தற்போதைய நிதி நெருக்கடிக்கான பிரதான பொறுப்பு கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிலிருந்த அதிமுக அரசு தான்.
ஒன்றிய அரசின் பாரபட்சம்
அதிமுக அரசியல் ரீதியாகவும், ஆட்சி என்ற வகையிலும் பாஜகவோடும், ஒன்றிய அரசோடும் பலவகைகளில் மிக நெருக்கமாகவே இருந்து வருகிறது. இத்தகைய நெருக்கம் மாநில நலனுக்கு எந்த வகையிலும் பலனளிக்கவில்லை என்பதோடு, எதிர்மறை விளைவுகளைதான் உருவாக்கியுள்ளது. உதாரணமாக ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த வரிவிகிதம் என்பது 2.20% லிருந்து 1.28% ஆக குறைக்கப்பட்டு விட்டது. இது மாநில பொருளாதாரத்தின் மீதுதொடுக்கப்பட்ட நேரடியான தாக்குதலாகும். மேலும் தமிழ்நாடிற்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை என்பது ரூ.20,033 கோடி உள்ளது. இந்நிலுவைத் தொகையும் இதுவரை அளிக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் வரிவிதிப்பில் ஒன்றிய அரசு கொண்டு வந்த கொள்கை மாற்றத்தால், மாநிலத்திற்கான நியாயமான ஈவு கிடைப்பதிலும் பெரும் துரோகம் இழைக்கப்பட்டது.
ஒன்றிய அரசோடு இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும் என அதிமுக அரசின் முதல்வரும், அமைச்சர்களும் ஓயாமல் சொல்லி வந்தார்கள். ஆனால் கிடைத்ததென்னவோ பெரிய பூஜ்ஜியம் தான். இதையெல்லாம் விட பெரும் கொடுமை என்னவெனில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசிற்கு கிடைக்கும் வருவாயிலிருந்து, மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்கும் கணக்கீட்டு முறையிலும் பெரும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 எனும் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை விட குறைவாக வருவாயை அளிக்கும் மாநிலங்களுக்கு கூடுதலாகவும், அதை விட குறைவாக தமிழ்நாட்டிற்கு அளிக்கும் விதத்திலும் தான் பாஜக வின் கொள்கையும் கருணையும் இருந்தது.
”வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு”
என்பதைப் போல வேல் கொண்டு மிரட்டி, வழிப்போக்கர்களிடம் வழிப்பறி செய்வதை போல, கோல் கொண்ட ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களிடமும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது. இத்தகையவரிக் கொள்ளையில் ஈடுபட்ட பாஜக ஒன்றிய அரசு,அவர்களுக்கு கைகட்டி சேவகம் செய்த அதிமுக மாநில அரசு என இருவருமே கூட்டான குற்றவாளிகள் தாம் என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாமும் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
தீர்வுக்கான திசை எது?
நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதோடு, தமிழ்நாடு இழந்த தனது இடத்தை மீண்டும் பெற்று விடும் எனும் நம்பிக்கை அறிக்கையின் இறுதி பகுதியில் வெளிப்படுவதோடு, அதற்கான அரசியல் உறுதியும், நிர்வாக திறனும் (Political Will and Administrative Skill) அரசுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முற்றிலும் ஒரு மாறுபட்ட அணுகுமுறை இனி உருவாக்கப்படும் எனவும், பரவலான சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும், வரிக் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படுமெனவும் எதிர்காலஇலக்குகளாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் நிதியமைச்சர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ஒன்றிய அரசு மாநிலங்களை பாரபட்சமாக அணுகுவதை அரசியலாகவும் எதிர்கொள்வதும் தேவையாக இருக்கிறது எனும் கருத்தை முன்வைத்திருப்பதும மிக முக்கியமானது. ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக கூடிய அரசியல் நிர்ணய சபையில் கே.சந்தாளம் அவர்கள் உரையாற்றும் போது ‘மத்திய அரசின் வாயிற்படியில் மாநிலங்கள் தட்டை ஏந்தி நிற்கும் நிலை எதிர்காலத்தில் உருவாகும்’ எனும் கருத்தை முன்வைத்திருக்கிறார் மத்திய அரசின் வரிகள் நீட்சியடையும் (Elastic) தன்மை கொண்டவை. ஆனால் மாநிலங்களின் வரிகள் நீட்சியடையாத (Inelastic) தன்மை கொண்டவை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போன்றவை மத்திய அரசின் வரி ஆதாரங்கள் எனில், கொப்பரை நீரைப் போன்றது மாநில வரி ஆதாரங்கள் என்றெல்லாம், முரண்பாடுகள் எழுகிற பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே நிதியமைச்சரின் கருத்தும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார மீட்பிற்கான அரசின் முயற்சிகள் வரவேற்கக் கூடியவையே, எனினும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது இதுவரையிலும் அமலாக்கப்பட்டு வரும் சமூக நல நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பாதகம் ஏற்பட்டு விடாமலும், வரிக் கொள்கைகளால் எளிய மக்களின் மீதான சுமைகள் கூடுதலாகி விடாமலும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் புதிய அரசுக்கு இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் அளிக்கப்பட்டுள்ள ஏழு உறுதிமொழிகளில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள, “தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு நான்கு லட்சங்களாக அதிகரிக்கச் செய்வது, ஒவ்வோரு ஆண்டும் பத்துலட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக குறைப்பது, வறுமையில் வாடும் ஒரு கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்பது ஆகியஇலக்குகளையும் எட்டும் வகையிலும் புதிய அரசின் எதிர்கால அணுகுமுறைகள் அமைய வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.எனவே மாநில நிதி நிலைமைகள் குறித்த விபரங்களை பட்டியலிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் தொடர்ச்சியாக வெளியாகவிருக்கும் அரசின் கொள்கை அறிக்கையான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) என்பது மாற்றங்களோடு கூடவே எளிய மக்களுக்கான நம்பிக்கைகளையும் விதைக்கட்டும்.
கட்டுரையாளர்: ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)