1982 ஜனவரி 19-ல் இந்திய தொழிலாளி வர்க்கம் நாடு தழுவியபொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது. சுதந்திர இந்தியாவில் நாடு தழுவிய அளவில் முதல் முறையாக நடைபெற்ற இவ் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் மட்டுமே அழைப்புவிடுத்தன. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியகம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழி லாளிகள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தொழிலாளர் சங்கங்கள் விவசாய வேலைகளை நிறுத்தி தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தத்தன்று அதிகாலை 5 மணிக்கு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் பேருந்து நிறுத்தப்பட்டதால் வேலை நிறுத்தத்தை நடக்கவிடாமல் செய்ய முனைப்பாக இருந்த அதிமுக அரசின் காவல்துறை அடக்குமுறைகளை எங்கும் ஏவியது. அதன் பகுதியாக காலை 8.30 மணி அளவில் அம்மனாற்றுப் பாலத்திற்கு விரைந்த அரசின் ஏவல்படையான காவல்துறை அம்மனாற்றுப் பாலத்திலிருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் திருமெய்ஞானம் கிராமத்தை குறி வைத்துச் சென்றது. போகும்வழியில் இருந்த பிச்சைக்கட்டளை என்ற கிராமத்தையும் அதிரடியாக தாக்கியது. வீடுகளிலிருந்து பண்ட, பாத்திரங்கள் எல்லாம் எடுத்து வெளியில் வீசியது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தெறித்து ஓடினார்கள். அதைத் தொடர்ந்து திருமெய்ஞானம் கிராமத்திற்குச் சென்று, காலை வேளையில் டீக் கடையில் நின்று கொண்டிருந்த விவசாயத் தொழிலாளிகள் மீதுதடியடி நடத்தி கிராமத்துக்குள் சென்று துப்பாக்கிச் சூடும் நடத்தியதில் தியாகிகள் அஞ்சான், நாகூரான் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளிகள் துப்பாக்கிச் சூட்டில்படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். பாதிக்கப்பட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீதே காட்டுதர்பார்காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதேபோல் மன்னார்குடி அருகில் உள்ள ரெட்டைப்புலி கிராமத்தில் சி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஞானசேகரன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அடுத்தநாள் மருத்துவமனையிலேயே இறந்து போனார். இவ்வேலை நிறுத்தப் போராட்டம் அன்று கடுமையாக உயர்ந்து வந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்விற்கேற்ப தொழிலாளர்களுக்கு பஞ்சப்படிவழங்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும்,தொழிற்சங்கங்க உரிமைகளை பாதுகாக்க வும், மத்திய அரசை வலியுறுத்தி நடத்தப்பட்டபோராட்டமாகும். இதுமாநில அரசிற்கு எதிரானதல்ல. இருந்தும் மக்கள் செல்வாக்கு தனக்கு இருக்கிறது என்ற ஆணவத்தில் தனது ஆட்சியில் வேலை நிறுத்தமா? என்ற அதிகாரச் செருக்கில் எம்.ஜி.ஆர் அரசு காவல்துறையை ஏவி இந்த காட்டுதர்பாரை நடத்தியது.
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
அடுத்த நாள் காலையில் தியாகிகள் அஞ்சான், நாகூரான் உடல்கள் ஆக்கூர் முக்குட்டிலிருந்து 6 கி.மீ. தூரம் உள்ள திருமெய்ஞானம் கிராமத்திற்கு பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப் பட்டன. பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் மாவட்டம் முழுவதும் நிதி திரட்டிஉதவியது. மயிலாடுதுறையில் பொதுக் கூட்டம் நடத்தி இச்சம்பவத்தை கண்டித்தது. அன்றைய அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல்துறை தொடுத்த வழக்கிலும் வெற்றி பெறப்பட்டது.
இதை தொடர்ந்து 1983 டிசம்பரில் சிஐடியுதமிழ் மாநில மாநாடு கோவையில் நடை பெற்றது. அம்மாநாட்டில் திருமெய்ஞானம் தியாகிகள் தினத்தை மாநிலம் முழுவதும் வர்க்க போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் வீர வணக்க நாளாக அனுசரிக்கவேண்டும். தமிழக தியாகிகள் தினமாக திருமெய்ஞானம்தியாகிகள் தினம் நினைவுகூரப்பட வேண்டும். சிஐடியு சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டுதோறும் தாங்கள் செலுத்துகின்ற சந்தா தொகையுடன் விவசாய இயக்க ஆதரவுநிதியாக ஒரு ரூபாய் அளித்திட வேண்டும்என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி 19 திருமெய்ஞானம் தியாகிகள்தின நினைவு பொதுக் கூட்டத்தில் தொழிலாளர்கள் அளிக்கும் விவசாய இயக்க ஆதரவு நிதி சிஐடியு மாநில நிர்வாகிகளால் விவசாயிகள் இயக்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய மத்திய பாஜக ஆட்சியாளர்கள் விவசாயிகளை, தொழிலாளர்களை, ஏன் அனைத்துப் பகுதி மக்கள் வாழ்வையும் புறக்கணித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். இச்சூழலில் வர்க்கப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்வதும் அவர்கள் எந்த இலட்சியத்திற்காக உயிர் நீத்தார்களோ அந்தஇலட்சியத்தை அடைவதற்கான போராட்டங்களை மேலும் வலிமையாக முன் எடுப்பதும் அவசியமாகிறது. திருமெய்ஞானம் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!.