“தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பணப்புழக்கமின்றி முடங்கியுள்ளனர்.இந்நிலையில் மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வியாபாரமின்றி பரிதவிக்கின்றனர்.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு 20 பேர் கொண்ட மகளிர் குழுக்களிடம் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குழுக் கடன்கள் வழங்கி வருகின்றனர். அவ்வாறு கடன் பெற்றவர்கள் கொரோனா பேரிடர் மற்றும் பொது முடக்கத்தால் வருமானம் இன்றித் தவிக்கின்றனர்.இதன் விளைவாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடன் வசூல் என்ற பெயரில் குடும்ப பெண்களை மிரட்டும் நடவடிக்கையில் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரம் குடும்பங்கள் சொல்லொணா துயரில் மூழ்கியுள்ளன. தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரை போலியாக வைத்துக்கொண்டு பலர் கடன் சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
குறைந்த வட்டிக்கு கடன் என்ற பெயரில், கடன் வாங்கி பெண்கள் அதில் இருந்து மீளமுடியாமல் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.மதுரை, திருச்சி,தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,சேலம்,கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றீசல் போல் பெருகி கிடக்கின்றன மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள். இவற்றில் பல, முறையான அனுமதியுடன் செயல்படுபவை அல்ல. இந்த நிறுவனங்களின் நோக்கம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை தேடிப் பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பது தான். 10 பெண்கள் சேர்ந்து சுயஉதவிக்குழு துவக்கினால் கடன் தருகிறார்கள்.அதில் ஒரு உறுப்பினருக்கு 10 ஆயிரம் தருவார்கள். மாதம் இவர்கள் 640 வீதம் 20 மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும்.அதாவது 10 ஆயிரம் ரூபாய் பெற்று 12500 ரூபாய் திரும்பி செலுத்த வேண்டும்.
குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதுமே ஏராளமான பெண்கள் இந்த குழுக்களில் இணைந்து கடன் வாங்குகிறார்கள். மகளிர் குழுவில் கடன் தரும் போதே குழுவிற்கு 10 பேர் சேர்ந்து தலைவியை தேர்ந்தெடுக்கிறார்கள். 10 ஆயிரம் தரும் போதே ஆவணச்செலவு என்று கூறி 750 ரூபாய் எடுத்துக் கொள்வார்கள்.ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் குழு தலைவியின் வீட்டுக்கு வந்து பணத்தை மொத்தமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் வசூலித்து செல்வர். குழுவில் யாராவது கட்டாவிட்டால் குழுவில் உள்ள தலைவி தான் பொறுப்பு.மேலும் குழுவில் அனைவரும் சேர்ந்து கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்படும். அதோடு கட்டாதவர்களுக்கு பலவிதமான தொல்லைகள் வரும். இதனால் எதையாவது விற்று கூட கடன் தொகைக்கான தவணையை செலுத்தியே ஆக வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் பணத்தை எளிதாக வசூலித்து விடுகிறார்கள்.எந்த சர்ச்சையும் இல்லாமல் திருப்பி செலுத்தும் குழுவில் உள்ளவர்களுக்கு 20 ஆயிரம் கடன் கொடுப்பார்கள். இதன்படி மாதத்தவணையை இரட்டிப்பாக அவர்கள் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா கிராமங்களிலுமே மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை பறித்து வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு, மாவட்டம் தோறும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைத்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கந்து வட்டி போன்ற இக்கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாத்திட வேண்டும். அதோடு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடனை பொது முடக்க காலத்தில் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கட்டுரையாளர் : ஆரூரான்