மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களுக்கான சேவை மையத்தை திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் கடந்த 23.5.2021 அன்று தொடங்கியது. அன்றைய தினமே பல தரப்பான மக்களிடம் விளம்பரம் கொண்டு செல்லப்பட்டது. இந்த செய்தியை அறிந்த பல பத்திரிக்கை நிருபர்கள் நம்மை தொடர்புகொண்டு நம்முடைய சேவை மையம் குறித்தான விஷயத்தை பாராட்டினர்.
அன்று இரவு 11 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து கண்ணீர்குரலுடன் நம்மை தொடர்பு கொண்டார் ஒருவர். தானும் தன்னுடைய நிறைமாதக் கர்ப்பிணி மனைவியும் கோவிட் நோயால்பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவ மனையில் மதியம் 2 மணியில் இருந்து படுக்கை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறோம். ஏதாவது உதவி பண்ணுங்க என்று அழுதார். 11 மணிக்கு மேல் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டோம். பிறகு அரசு மருத்துவ மனையின் முதல்வரை அணுகினோம். உடனடியாக அவரும் தலையிட்டு இரவு 1 மணிக்கு அவர்கள் இருவருக்கும் படுக்கை தயார் செய்து கொடுக்கப்பட்டது. ‘முதல் நாள் அனுபவமே சவாலாய் அமைந்தது.
அதன் பிறகு தினமும் சராசரியாக உதவி மையத்திற்கு 25க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்தான தகவல்களை சேகரித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய பணியினை தொடர்ந்து கொண்டேஇருந்தோம். அதேபோல மருத்துவம் குறித்தான சந்தேகங்களுக்கும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற தகவல்களை பெறுவதற்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டனர். அவர்களது மருத்துவ ஆய்வுகளை வாட்ஸ்அப்மூலமாக பெற்று சிபிஎம் மக்கள் சேவைமையத்தின் மருத்துவர் குழுக்களுக்கு அனுப்பி அடுத்த கட்டம் என்ன வகையான மருத்துவம் என்று ஆலோசனை பெறப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து வந்த அழைப்புகளில் ஒருவர் ‘சிபிஎம் - ஹெல்ப் லைனா’ என ஆரம்பித்தார். நான் வெளிநாடு வந்து தற்பொழுது ஒரு மாதம்ஆகிறது; என் மனைவி, இரண்டு குழந்தைகள், என் தாயார் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்; என் மனைவிக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; எனது வயதான தாயாரையும் இரு குழந்தைகளையும் பராமரிப்பதற்கு சிரமமான சூழலில் உள்ளோம், நீங்கள் உதவ முடியுமா எனக்கேட்டார். ஒரு வாரம் மூன்று நேரமும் வீடுகளுக்கே சென்று உணவு அளித்தனர் தோழர்கள். அதே போன்று மருத்துவமனையில் நோயுற்ற நோயாளிக்கும் நல்ல உணவினை ஏற்பாடு செய்து பல உதவிகளை செய்து தந்தோம். அதற்கு அவர் கூறினார், நான் தற்பொழுது பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி உள்ளேன்; நான் சரியாகி வந்தவுடன் உங்களை வந்து சந்திப்பேன்; உங்களோடு நானும் இணைந்து இதுபோன்ற மக்கள் பணியைத் தொடருவேன் என்று உறுதி அளித்தார்.
மறுநாள் இரவு இரண்டு மணியளவில் நம்மை தொடர்பு கொண்ட நோயாளியின் உறவினர் கதறினார். என்னவென்று கேட்டோம். திருச்சி அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ மனைக்கு சென்றால் படுக்கை கிடைக்குமென சொன்னார்கள் அதனை நம்பி திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்துஎஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுசென்றோம். எஸ்.ஆர்.எம் மருத்துவமனையிலும் படுக்கை காலி இல்லை எனகூறிவிட்டதால் மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை சேர்க்க கொண்டு வந்துள்ளோம். தற்பொழுது ஆம்புலன்ஸ்க்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்டால் 18,000 ரூபாய் கொடுக்க வேண்டுமென்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை என கதறினார். உடனடியாக தலையீடு செய்தோம். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பேசுகிறோம்; சட்டத்திற்குப் புறம்பாக செயல்படக்கூடிய உங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என கூறியதன் அடிப்படையில் உரிய கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு விடைபெற்று சென்றார் ஆம்புலன்ஸ் டிரைவர். நோயாளியின் உறவினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இந்த இரவிலும் கூட எங்களுக்கு உதவி செய்தமைக்கு மிகவும் நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது போன்ற ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளை குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட ஆட்சியரிடம் கண்காணித்திட புகார் மனு அளித்தார்.
கோவிட் சிகிச்சைக்காக நாமக்கல்லில் இருந்து திருச்சி வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியிடம் மிகப்பெரும் கட்டணத்தை கட்ட சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியது சிபிஎம் மக்கள் உதவி மையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்தோடு பேசிபெரும் தொகையை குறைத்து நோயாளிகள் பயன் பெறும் வகையில் தலையீடு செய்தோம்.கரும்பூஞ்சை நோய்க்கான முறையான சிகிச்சை மேற்கொள்ள வில்லை என உதவிட வேண்டுமென்று நம்மை அணுகினர். மருத்துவ முதன்மையருடன் பேசி உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.
தடுப்பூசி மையங்கள்
தினமும் எந்த மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்ற தகவல்களை பெற்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது மக்கள் உதவிமையம்.
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான உதவிகள்
கோவிட் நோய் பாதிப்பால் வயதான கணவன் மனைவி இருவரும் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட னர். அவர்களுக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுத் தரவேண்டும் என நமது உதவி மையத்தை அணுகிய உடன் இந்திய மாணவர் சங்கத்தினர் அரசின் அனுமதி மற்றும் அடையாள அட்டைகள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது; அதனைப் பொருட்படுத்தாமல் உடனடியாக மருந்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கொடுத்து வருவதற்குள் காவல்துறையின் பலவிதமான தடைகளை மீறி சென்று வரக்கூடிய நிகழ்வுகள் பெரும் சவாலாக அமைந்தன.
நிவாரணப் பொருள்கள் வழங்கல்
மாவட்டம் முழுவதும் மிகவும் ஏழ்மையிலுள்ள 500 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் நன்கொடையாக பெறப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்
ஆம்புலன்ஸ் கொள்ளையை அறிந்த தோழர்கள் நாங்கள் ஆட்டோவை இலவசமாக இயக்கி மக்களுக்கு சேவை செய்ய தயாராகவுள்ளோம்; உரிய ஏற்பாடு செய்யுங்கள் என வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 5 தோழர்கள் முன்வந்தனர். திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியினை மனதார செய்தனர். இதையறிந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலவச ஆம்புலன்ஸ் மற்றும் இரத்ததான முகாமை துவக்கி வைத்து வாலிபர் சங்கத்தின் சேவையைப் பாராட்டினார்.
நித்தம் நித்தம் இரத்தம் தானம்
பெரும் தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்தம் தட்டுப்பாடு அதிகரித்து வந்த சூழலில் நம்மை தொடர்பு கொண்டவுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஜங்ஷன் பகுதி குழுதோழர்கள் 18 யூனிட் ரத்தம் உடனடியாக தானம் செய்தனர். அதேபோன்று காட்டூர்பகுதி குழுவின் சார்பில் அரியமங்கலத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து 60 யூனிட்டுகள் ரத்தம் தானம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது, தினம் தினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் ரத்த தேவையை பூர்த்தி செய்ய இதுவரை 112 யூனிட் ரத்தம்தானம் செய்யப்பட்டுள்ளது; இடையறாதுதினமும் ரத்ததான சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது; ரத்த தான முகாம்களும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கபசுர குடிநீர் வழங்கல்
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நோக்கில் கபசுர குடிநீர் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக வாலிபர் சங்க கிளைகளில் பகுதி மக்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்பட கூடிய வேலையை தொடர்ந்து கொண்டே உள்ளனர். முக கவசமும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
மலிவு விலையில் காய்கறிகள்
ஊரடங்கினை பயன்படுத்தி காய்கறியின் விலை தாறுமாறாக உயர்ந்து அல்லல்படும் மக்களை பாதுகாத்திடும் வகையில் வாலிபர் சங்கத் தோழர்களின் முன் முயற்சியால் 50 ரூபாயில் 6 கிலோ காய்கறிகள் 650 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
உணவு மற்றும் மருந்து விநியோகம்
மாணவர் சங்கத் தோழர்கள் பல்வேறுதன்னார்வ குழுக்கள் மற்றும் திருநங்கைகளோடு இணைந்தும் சாலையோர வசிப்பவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு மருந்து உள்ளிட்ட பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியினை 15 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்
மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவுவது வறுமையில் வாடக் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தன்னார்வ குழுக்கள், ஊர் பிரமுகர்கள் மூலமாக உணவுப் பொருட்களை பெற்று இதுவரை 500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தடுப்பூசி குறித்தான ஐயத்தைப் போக்கிட பல்வேறு கிராமங்களில் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு தற்போது பலர் தடுப்பூசி போட்டுள்ளனர்.இந்த மக்கள் சேவை மைய பணிகளை 15 தோழர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பு குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வாலிபர், மாணவர், சிஐடியு, காப்பீட்டு ஊழியர் அரங்கங்களின் தோழர்கள் பணியாற்றி வருகின்றனர்.மருத்துவ ஆலோசனை குழுவாக அறிவியல் இயக்கம் மருத்துவப் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரி சிந்தனையுள்ள மருத்துவர்களையும் இணைத்து செயல்படுகின்றனர்.மாற்று திறனாளிகளுக்கான மருத்துவஉதவிகளுக்கு மாற்று திறனாளி சங்கபொறுப்பாளர்கள் சிறப்பு கவனமெடுத்தனர்.வாலிபர் சங்க இரத்ததான கழகம் மற்றும் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸை செயல்படுத்தவும் வாலிபர் சங்க தோழர்கள் மக்களுக்கான உதவி மையத்தை செயலாக்க பெரும் பங்காற்றினர். இது போன்ற பணிகள் மக்கள் மத்தியில் பெரும் நன் மதிப்பு உருவாகியுள்ளது.சூழன்று கொண்டே இருப்போம் பேரிடர் மக்களிடம் இருந்து விலகும் வரை!
கட்டுரையாளர் : பா.லெனின், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்