articles

img

மக்கள் நல்வாழ்வு காக்க அரசு மருத்துவமனைகள் மேம்பட வேண்டும்.....

தமிழக அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வை பாதுகாக்கவில்லை. நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளை நோக்கி விரட்டுகிறது. ஆனாலும் மருத்துவச் செலவு செய்ய வழியேதும் இல்லா மக்களுக்கு அரசு மருத்துவமனைகளே கதியாக உள்ளது. அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுமக்களின் நோயை போக்குவதற்கு பதிலாக நோய்களை உருவாக்கும் இடமாக காட்சியளிக்கிறது. போதிய மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்தாளுனர்கள், பெண் செவிலியர்கள், உதவியாளர்கள், ஆண் செவிலியர்கள், உதவியாளர்கள் என பல முக்கியமான பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக ஏராளம் உள்ளன. துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் பணிகளும் கூட ஒப்பந்த முறையிலேயே நடக்கிறது. மருத்துவமனைகளின் சுகாதாரச் சீர்கேடுகள் சகிக்க முடியாத நிலையில் உள்ளன. மொத்தத்தில் அரசு மருத்துவமனைகள் பெயரளவில் செயல்படும் நிலைதான். 

மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அவ்வப்பொழுது பத்திரிகைகளுக்கு பேட்டிஅளித்து தன் முதுகில் தானே தட்டிக்கொள்வார். போதாக்குறைக்கு சமீபத்தில் 2000 அம்மா கிளினிக் திறந்து மருத்துவ சேவையில் தமிழகம் முதலிடம் எனக் கூறிக்கொண்டார். உண்மை நிலவரம் அதுவல்ல. திறக்கப்பட்ட மினி கிளினிக்குகளில் மருத்துவர்கள், அவுட்சோர்சிங் முறையிலும் பணியாளர்கள்  ஒப்பந்த முறையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மினி கிளினிக்குகள் திறப்புவிழா நடக்கும்பொழுதே அவசரத்தில் கட்டிய கட்டிடங்கள் இரண்டு மூன்று இடங்களில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பார்க்க முடிந்தது.

முதல்வர் எடப்பாடி அரசு நல்வாழ்வுத்துறையிலும் வெற்றி நடைபோடுவதாக வெற்றுப் பிரச்சாரம் செய்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ரேபிட்கிட் கொள்முதல் செய்ததில், மருந்துகள் வாங்கியதில், ஒப்பந்தம் முறையில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதில் உட்பட அனைத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. மக்கள் வரிப்பணம் ஆளுவோரால் வாரி சுருட்டப்பட்டது. இன்றைய மருத்துவச் சூழல் சாமானிய மக்கள் நல்வாழ்வை நாடமுடியாத அவலமே அதிகரித்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் இத்துறையில் மகாகொள்ளை நடந்தேறியது.    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளைவிட ஒப்பீட்டளவில் தனியார் மருத்துவமனைகளே அதிகம் உள்ளன. மருத்துவம் கொள்ளை இலாபம்ஈட்டும் வியாபாரமாகவே நடக்கிறது. தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள்  விளம்பரங்கள் மூலம் மக்களிடம் உயிர்ப் பயத்தை ஏற்படுத்தி தங்கள் மருத்துவமனையை நோக்கி ஈர்க்கின்றன. அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கு அரசும் துணை போகிறது. 

மருத்துவக் காப்பீடு யாருக்காக?
அரசு நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்படும் ஒருபகுதிநிதி மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது. இந்நிதி முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்குமே அதிகமாகச் சென்று சேர்கிறது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத்திட்டத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்றாலும் அத்தொகைசிறிதளவே சென்று சேர்கிறது. தனியார் மருத்துவமனைகளோ காப்பீட்டுத் திட்டத்தின் பலனை முழுமையாக பெற்றுக்கொண்டு நோயாளிகளிடமும் இரண்டு மடங்கு,மூன்று மடங்கு கட்டணங்களை வசூலித்துக் கொள்கிறார்கள். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பணம் பறித்ததனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, அரசு அறிவித்த ஊரடங்கின்போது  இரண்டு மாத காலம் முடக்கப்பட்டன. கொரோனா நோயாளிகளின் சிகிச்சை  பெரிதும் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றது. பிற அவசர நோயாளிகளும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க இரண்டு மாதங்களுக்கு பிறகு அனுமதி க்கப்பட்டது.அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அடித்த கொள்ளைக்கு அளவு இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறச் சென்றகொரோனா நோயாளிகளை காப்பாற்ற முடியாத நிலையில் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து மனிதாபிமானமற்ற முறையிலும் அவைநடந்து கொண்டன. கொரோனா பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க கைவிரித்தபோது, அரசு மருத்துவமனைகளே மக்களுக்கு உதவியாக இருந்தன. 

பொதுவாக மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதும் அரசு மருத்துவமனைகள் தரமாகச் செயல்பட வேண்டியதும், மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவை என்பதைபேரிடர் காலம் நமக்கு உலக அனுபவமாக உணர்த்தியுள்ளது. குறிப்பாக இக்காலத்தில் சோசலிச நாடுகள், மருத்துவத்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இடதுசாரிஜனநாயக நாடுகள் தொற்றை பெரிதும் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாத்தன என்பதை பார்க்க முடிந்தது. குறிப்பாக சின்னஞ்சிறிய நாடான சோசலிச கியூபா தனது மக்களை பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்ததோடு அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு தனது நாட்டிலிருந்து மருத்துவர்களை அனுப்பி வைத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய மோடி அரசோ இப்பேரிடரை எப்படி அறிவியல்பூர்வமற்ற முறையில் அணுகியது என்பதும், கொரோனாதொற்றை கட்டுப்படுத்துவது என்ற பெயரால் மருத்துவத்துறையை பணம் பறிக்கும் இடமாக மாற்றியது என்பதையும் நாம் அறிவோம். கொரோனா சிகிச்சை குறித்த பொதுநல வழக்கில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு அரசை பார்த்து, தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக சிகிச்சை அளிக்கக் கூடாது? அதற்கான உத்தரவை ஏன் அரசு பிறப்பிக்கவில்லை? என்ற கேள்வியையும், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டாமா? அரசு மருத்துவமனைகள் தரம் உயர வேண்டாமா? மக்களுக்கான மருத்துவம் அரசின் கடமை என்பது உறுதியாக வேண்டாமா? என்ற கேள்விகளையும் எழுப்பியது.

அரசு மருத்துவமனைகளின் அவலம்
தமிழகத்தில் 80 சதவீதமான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிறார்கள். 60 சதவீதமான மக்கள் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெறுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் வியாபாரநோக்கில் நடப்பதால் சுகாதாரமாகவும், நல்ல படுக்கை வசதிகளுடனும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளை  அரசு, நிலம் உட்பட பல சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு அரசுஒதுக்கீடு செய்யும் நிதியும் முழுமையாக செலவிடப்படுவதில்லை. லஞ்சம், ஊழல் முறைகேடுகள் மூலம் ஆளுவோர் அபகரித்துக் கொண்டு மக்களின் நல்வாழ்வை புறக்கணிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளின் சீர்கேடுகளுக்கு தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளே உதாரணம். 
தஞ்சை மாவட்ட மக்கள் தொகை 25 இலட்சம் பேர். இவர்களுக்கு நல்வாழ்வளிக்க  வட்டார மருத்துவமனைகள் 13, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 68, நகராட்சி மருந்தகங்கள் 14, ESI மருத்துவமனைகள் 2, அரசு மாவட்டமருத்துவமனை கும்பகோணம் 1, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இராஜா மிராசுதார் மருத்துவமனை என உள்ளன. இவைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை விட தனியார் மருத்துவமனைகளில் , கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகிறவர்களே  அதிகம். மாவட்ட அரசு மருத்துவமனை கும்பகோணம், தஞ்சைமருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இராஜாமிராசுதார் மருத்துவமனைகளை தவிர வேறு எந்த மருத்துவமனைகளோ, மருந்தகங்களோ முழுநேரமாக செயல்படுவது இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை. மருத்துவ பணியாளர்கள் இல்லை. அத்தியாவசிய மருந்துகள் கூட இருப்பதில்லை. மருத்துவமனைகளின் சுகாதாரம் மோசமாக உள்ளது. 

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
மாவட்டம் முழுவதிலிருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு வசதி இல்லாதவர்களும், வழியேதும் இல்லாத சாமானிய மக்களும் இங்குதான் சிகிச்சைக்கு வரவேண்டியுள்ளது. தினசரி சராசரியாக 2000 முதல் 2500 வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகளாக 2000 லிருந்து இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை தொடர்ந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. படுக்கை வசதி 1422 மட்டுமே.  கூடுதலாக நோயாளிகள் வந்தால்  தரையில் படுக்கும் அவலம்உள்ளது.நோயாளிகள் இருக்கும் வார்டுகளில் சுகாதார வசதி மிகவும் மோசமாக உள்ளது. நோயாளிகள் குணமடைவதை விட வேறு நோய்களோடு வீட்டிற்கு செல்லும் நிலைதான் உள்ளது. இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவைசிகிச்சை, எலும்பு முறிவு, மார்பக நோய், இதயநோய், புற்றுநோய், சிறுநீரகம் மருத்துவம், அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் போன்ற சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட இருபத்தெட்டு வகையான துறைகள் இருக்கின்றன. இதற்கான மருத்துவ கட்டமைப்பு சிகிச்சைகள் முழுமையாக இல்லை. புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய கட்டிடம் சமீபத்தில்திறக்கப்பட்டது. இதில் பயன்படுத்துவதற்காக ஹீமோதெரபி, ரேடியோ தெரபி மருத்துவ உபகரணங்கள் வாங்பப்பட்டன. இவ்வுபகரணங்கள் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத்திற்குள் பொறுத்தமுடியாமல் கடந்த ஓராண்டாக செயல்பாடு இல்லாமல் உள்ளது. இப்படித்தான் அனைத்து துறைகளிலும் பல்வேறு சீர்கேடுகளை பார்க்க முடிகிறது.

கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பிரிவு மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் இவர்கள் எண்ணிக்கையோ 195 பேர்தான். கல்லூரியில் படிக்கும் முதுநிலை மருத்துவப்பட்டப்படிப்பு மாணவர்கள் 50 பேர், பயிற்சி மருத்துவர்கள் 100 பேர் இவர்கள்தான் பெரும்பாலும் மருத்துவம் பார்க்கிறார்கள். படித்து வேலையில்லாத மருத்துவர்கள் ஏராளம் இருந்தும் இங்கு தேவையான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் நிலைமையும் இதுதான். 152செவிலியர்கள், 160 உதவியாளர்கள் உள்ளனர். இது எந்தவகையிலும் பொருத்தமானதாக இல்லை. ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், ஓசுயல, ஊவு ஸ்கேன் பிரிவில் பணிபார்ப்பவர்கள், மருந்தாளுனர்கள், இவர்கள் அனைவரும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றுகிறார்கள். துப்புரவுப் பணியோ மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவமனை வளாகங்களில் குப்பைகளும், மருத்துவக்கழிவுகளும் எங்கும் நீக்கமறக் கிடக்கின்றன. வார்டுகளில் பயன்பாட்டிற்குள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. மருத்துவமனை வளாகத்திற்குள் நாய்களும், குரங்குகளும் 100க்கணக்கில் குடியேறிக்கொண்டு நோயாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் தொல்லையாக இருக்கின்றன. 

கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துத் துறைகளையும் சீரழித்த  மோசடிமோடியின் எடுபிடி எடப்பாடி அரசு அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகளில் திளைத்து சீரழித்ததுபோல் மக்கள் நல்வாழ்வுத்துறையையும் நாசப்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியை வெளியேற்றப் போகும் இந்த தருணத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த கீழ்க்காணும் மக்கள் கோரிக்கைகளை  தேர்தல் களத்திலும் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டியுள்ளது. தேர்தலுக்குப் பின் வரும் புதிய தமிழக அரசு கீழ்க்காணும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

* மருத்துவத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.

*  அரசு மருத்துவமனைகளில் படித்து வேலையில்லாமல் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இவர்களை தேவையான அளவிற்கு பணிநியமனம் செய்து காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 

*  மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

* தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்திட வேண்டும்.

*  ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மினி கிளினிக் அமைத்திட வேண்டும். 

*  பதினைந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்பசுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட வைக்க வேண்டும்.

*  அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்துகள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டும். 

*  அரசு மருத்துவமனைகளின் உள்நோயாளிகள் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். 

*  மருத்துவக்கல்லூரி மருத்துமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கும் அனைத்து பிரிவுகளும் தரம்பட செயல்பட வேண்டும்.

*  மக்கள் நல்வாழ்வை காக்க அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : தஞ்சை ஆர்.மனோகரன், சிபிஐ(எம்) தஞ்சை மாவட்ட  செயற்குழு உறுப்பினர்