articles

img

மின்சாரம் இல்லாமல் குளிர் பதனம்  

மின்சாரம் இல்லாமல் குளிர் பதனம்  

உலகில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் 70 கோடி மக்களுக்கு  மின்சார வசதி கிடைப்பதில்லை. ஆகவே சுற்றுச்சூழல் மாசுபடாமலும் மின்சாரம் இல்லாமல் குளிர்விக்கவும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை பேராசிரியர் பெங் வாங் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள். சில வேதிவினைகள் வெப்பத்தை வெளியிடும்; சில வெப்பத்தை உள்வாங்கும். இரண்டாவது வகை எண்டோதெர்மிக் எனப்படும். அம்மோனியம் நைட்ரேட் உப்பானது தண்ணீரில் கரையும்போது இந்த வகை வினை நிகழ்கிறது. இந்த ஆய்வாளர்கள் பல உப்புக்களையும் பரிசோதித்த பின் மற்ற உப்புக்களைவிட அம்மோனியம் நைட்ரேட் அதிக கரைதிறன் கொண்டது என்று கண்டனர். மேலும் அதன்  விலை குறைவானது; நீண்ட காலம் சேமிக்க இயலும்; இதனால் மின்சார இணைப்பு இல்லாத  தொலைதூர இடங்களின்  பயன்பாட்டிற்கு சிறந்தது.   வெப்ப பாதுகாப்பு செய்யப்பட உலோகக் கலனில் தண்ணீரையும் அம்மோனியம் நைட்ரேட்டையும் கலந்த போது 20 நிமிடத்தில் அதன் வெப்பம் 77டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து 38 டிகிரியாக தாழ்ந்தது. 15 மணி நேரத்திற்கு 59 டிகிரியிலேயே இருந்தது. மொத்த உப்பும் தீர்ந்தபின் தண்ணீரை சூரிய ஒளியில் ஆவியாக்கி உப்பு படிகங்களை மீட்கலாம். ஆவியான நீரை சூரிய சக்தி மூலம் குளிர்வித்து ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்கலாம். வறண்ட நிலப்பகுதியில் இது பயனுள்ளது.   கிராமப்புற மற்றும் தனித்த பகுதிகளில் கட்டடங்களை குளிர்விக்க, மின்சாரம் இல்லாமலேயே உணவுப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்புத் தளங்களில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த, மின்சார தடை நேரங்களில் அவசர குளிர்விக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும். இந்த ஆய்வு எனர்ஜி அண்ட் என்விரான்மெண்டல் சயின்ஸ் என்கிற இதழில் வந்துள்ளது என்கிறது சயின்ஸ் அலர்ட்.

ஒப்பனைப் பொருட்கள் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்குமா? 

நறுமண ஸ்பிரே, நகப் பூச்சு, டாட்டூ எனப்படும்  கோலங்கள் போன்ற பெரியவர்களுக்கான  ஒப்பனைப் பொருட்களை  மழலைகளுக்கும் சிறு பிராய குழந்தைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்று டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஆபத்தில்லாதது என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு மகிழ்வதற்கு உகந்ததாகவும் தோன்றும். ஆனால் குழந்தைகளின் சருமம் பெரியவர்களின் சருமத்திலிருந்து வேறுபட்டது. அது மெல்லியது; அதிகம் உறிஞ்சக்கூடியது; இன்னும் வளர்ந்து கொண்டிருப்பது. இளம் தோலானது அதிக நீர் பொருண்மையும் சீபம் எனப்படும் எண்ணெய் குறைவாகவும்  கொண்டது. சீபம் தோலை பாதுகாக்கவும் ஈரமாக வைத்திருக்கவும்  உதவுகிறது. சீபம் குறைவாக இருப்பதால் நீர் இழப்பு, வறட்சி மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மணமூட்டிகள் மற்றும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படாத பொருட்களை தடவுவதால், தோலிலுள்ள நன்மை பயக்கும் உயிரிகள் படலம் மெதுவாக வளர்கிறது. மூன்று வயதில்தான் முதல் உயிரி படலம் ஏற்படுகிறது. அதற்கு முன், தடவப்படும் வேதிப்பொருட்கள் மென்மையான சம நிலையை குலைத்து விடும்.    மணமூட்டிகளில் பெரும்பாலும் ஆல்கஹால் கலந்திருக்கும். இது சருமத்தை உலரவைத்து விடுகிறது. இதனால் தோல் சிவந்து அரிப்பு மற்றும் அசவுகரியம் ஏற்படும். சில ஒப்பனைப் பொருட்கள் எரிச்சல் அல்லது அலர்ஜி போன்ற உடனடி விளைவுகளை உண்டாக்கும். சில நேரங்களில் ஹார்மோன் சிதைவு போன்ற நீண்டகால உடல்நலக் கேடுகளுக்கு இட்டுச் செல்லும். ‘இயற்கை’, ‘சுத்தமானது’ என்கிற லேபிளுடன் வரும் ஒப்பனைப் பொருட்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடல் கூறியல்  பேராசிரியர் ஆடம் டெய்லர் அவர்களின் கட்டுரை(சயின்ஸ் அலர்ட்டில் வந்துள்ளது.)  

ஏஐ பயன்பாட்டில் சில எச்சரிக்கைகள்

செயற்கை நுண்ணறிவு துறையில் மூன்றாவது நிலை இப்போது வந்துள்ளதாம். முதலில் ‘சேட் பாட்ஸ்’, அடுத்து ‘அஸிஸ்டண்ட்ஸ்’ இப்போது ’ஏஜெண்ட்ஸ்’. இது அதிக சுயேச்சை தன்மையுடனும் ‘குழுக்கள்’ஆகவும் சிக்கலான பணிகளை முடிக்க கருவிகளை பயன்படுத்தவும் செய்யுமாம்.  பல்வேறு நிறுவனங்கள் உண்டாக்கியுள்ள இவற்றிற்கு ‘ஆப்பரேட்டர்’, ‘கோபைலட் ஏஜெண்ட்’, ‘வெர்டெக்ஸ் ஏஐ’,  ‘லலமா ஏஜெண்ட்ஸ்’ என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ளன. சீனாவின் மோனிக்கா புத்தொழில் நிறுவனம் உருவாக்கியுள்ள  ‘மேனஸ் ‘ எனும் ஏஜெண்ட் நிலங்கள் வாங்குவது, பதிவு செய்யப்பட்ட உரைகளை சுருக்கமான குறிப்பாக்குவது போன்றவற்றை செய்து காட்டியது.    எல்லா ஏஜெண்ட்களும் பொது பயன்பாட்டிற்கல்ல; சிலவை  குறிப்பான களங்களுக்கான சிறப்பு கருவியாகும். ஏஜெண்ட்கள் நிறைய பணிகளை செய்யும் என்றாலும் அவை தவறும் செய்யலாம். தவறுகளையும் ஆபத்துகளையும் தவிர்க்க மனித மேற்பார்வை தேவை என்கிற எச்சரிக்கையுடன் இவை வருகின்றன. தங்களது ஏஜெண்ட் உயிரி மற்றும் வேதி போர்க் கருவிகள் உண்டாக்க உதவக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது  என்கிறது ஓப்பன் ஏஐ. சில சமயம்  நகைச்சுவையான விளைவுகளும் உண்டானதாம். எடுத்துக்காட்டாக ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் ‘வெண்ட் திட்டம்’ குளிர்பதனக் கருவியில் உணவுப் பொருளுக்கு பதிலாக டங்ஸ்டன் கட்டிகளை நிரப்பியதாம். இன்னொரு ஏஜெண்ட் தான் ‘பயந்து போய்’ (panic) மொத்தத் தரவுகளையும் அழித்துவிட்டதாகக் கூறியதாம். இவை வளர வளர, பல துறைகளிலும் பல பணிகளிலும்  மனிதப் பணியாளர்களை விரட்டிவிடும் என்பதே பிரதான ஆபத்து.  இதற்கான உண்மையான செலவினமும் தெளிவாகவில்லை. எல்லா ஏஐ அமைப்புகளுக்கும் குறிப்பாக  சிக்கலான பணிகளை செய்யும் ஏஜெண்ட்களுக்கு அதிக மின்சாரம் தேவை. எனவே இவற்றின் விலைகள் அதிகமாக இருக்கும்.  இந்த பிரச்சனைகள் இருந்தாலும் ஏஐ ஏஜெண்ட்கள் அதிக திறன் கொண்டதாகவும் பணியிடங்களிலும் அன்றாட வாழ்விலும் அதிகப் பங்கு வகிக்குமாம். இவற்றின் பலம், பலவீனம், எல்லைகள் ஆகியவற்றை புரிந்து கொண்டு இவற்றை பயன்படுத்த வேண்டும். லா டிராப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏ ஐ & அனாலிடிக்ஸ் பேராசிரியர் டாஸ்வின் டி சில்வா எழுதியுள்ள பதிவு சயின்ஸ் அலர்ட்டில் வந்துள்ளது.