articles

இடது ஜனநாயக மாற்றை கட்டமைக்க சிபிஎம் ஆந்திர மாநில மாநாடு உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 27வது ஆந்திர மாநில மாநாடு பிப்ரவரி 1 முதல் 3, 2025 வரை நெல்லூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மாநிலத்தில் வளர்ந்து வரும் வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க அழைப்பு விடுத்தது. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனரான தோழர் பி. சுந்தரய்யாவின் சொந்த மாவட்டமான நெல்லூரில் கடைசியாக மாநில மாநாடு 1978ல் அவரது வழிகாட்டுதலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் துவக்கமாக சிபிஐ(எம்) முன்னாள் மாநில செயலாளர் பி. மது கொடியை ஏற்றினார். இதற்கு முன்னதாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஐந்து ஊர்வலங்களின் தலைவர்களிடமிருந்து கொடிகள் பெறப்பட்டன. இந்த ஊர்வலங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தன:

1. போலாவரம் திட்டத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு

2. விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு

3. அதானி குழுமத்தின் சூரிய மின் திட்டத்தில் மாநில மின்வாரியம் செய்துள்ள உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தல், கட்டண சுமைகளை எதிர்த்தல்

4. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி கடப்பாவில் எஃகு ஆலை அமைத்தல் மற்றும் அமராவதியை மாநிலத் தலைநகராக நிறுவுதல் மாநாட்டுக்கு வந்த அகில இந்தியத் தலைவர்கள், விருந்தினர்கள், மாநிலத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் தோழர் சீதாராம் யெச்சூரி பெயரில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கிற்குள் நுழைவதற்கு முன் தியாகிகள் நினைவுத் தூணில் மலர் அஞ்சலி செலுத்தினர். பிரதிநிதிகள் அமர்வு மாநில செயலாளர் வி. சீனிவாச ராவ் அரசியல்-அமைப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பழங்குடி மற்றும் கடலோர பகுதிகளில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவி வருவதை அவர் விவரித்தார். கண்ணூரில் நடைபெற்ற 23வது கட்சி காங்கிரஸ் மற்றும் தடேபள்ளியில் நடத்தப்பட்ட 26வது மாநில மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்துவதற்கான கட்சியின் முயற்சிகளை அவர் விளக்கினார். இடதுசாரி-ஜனநாயக மாற்றை உருவாக்குவதிலும், கட்சியின் சுயேச்சையான அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும் உள்ள முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். விவாதங்களில் பங்கேற்ற 83 தோழர்கள் அனைவரும் அரசியல்-அமைப்பு அறிக்கையின் சுய-விமர்சன மற்றும் விளக்கமான தன்மையை வரவேற்றனர்.  மாநாட்டில் 362 பிரதிநிதிகள் மற்றும் 27 மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளில் இருந்து 101 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் கைது செய்யப்பட்டவர்கள். 76 சதவீதம் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 49 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மாநிலக் குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் குழு உறுப்பினர்களின் சராசரி வயது 51.9 ஆண்டுகளாக குறைந்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் குழு வி. சீனிவாச ராவ்வை மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெடுத்து, 15 பேர் கொண்ட செயற்குழுவை ஒருமனதாக அமைத்தது.