articles

img

இந்தி மொழித் திணிப்பும், சந்துமுனை சிந்து பாடிகளும்

இந்தி மொழித் திணிப்பும்,  சந்துமுனை சிந்து பாடிகளும்

தமிழ்நாட்டில் வம்படியாக இந்தியைத் திணிக்க பாஜக பரிவாரம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆசை வார்த்தைகளையும், மிரட்டல்க ளையும், விளக்கங்களையும் கொடுத்து வருகிறது. இவர்களின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கொஞ்சம் வித்தியாசமானவர். மறைத்து வைத்தி ருப்பதை பட்டென்று போட்டு உடைத்துவிட்டார். அகில பாரதிய மராத்தி சாகித்ய மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், “ஒரு பிராந்தியத்தை வீழ்த்த வேண்டு மானால் அதை கைப்பற்ற வேண்டியதில்லை, அந்த  பிராந்தியத்தின் கலாச்சாரத்தை முறியடித்து மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஆக்கிரமிப்பாளர் அதே வழியைத்தான் கடைப் பிடித்தனர்” என்று கூறியுள்ளார். அன்றைக்கு ஆக்கிர மிப்பாளர் செய்ததாக இவர் கூறும் ஒன்றைத்தான் இன்றைக்கு மும்மொழியை முன்மொழியும் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எல்.முருகனும்,  ராம.சீனிவாசனும்...

ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்பதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ள காரணம் விசித்திரமாக மட்டுமல்ல, விலாநோக சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.  ரயிலில் ஏறி கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஒருவர் திட்டுவது கூட நமக்கு தெரியாது. ‘சிரித்துக் கொண்டே திட்டு வார்கள்’ என்று கூறிவிட்டு ஒரு மொழியை கூடுதலாக கற்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். இவர் யார் யாரிடம் எந்தெந்த மொழியில் திட்டு வாங்கினாரோ தெரியவில்லை. அனுபவம் பேசுகிறது. அதிலும் பாவம், சிரித்துக் கொண்டே திட்டியிருக்கிறார்கள். இவரும் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சமாளித்தி ருக்கிறார் போலும்.  ஒரு மொழியின் இலக்கிய மேன்மையை, இலக்கண அடர்த்தியை, வாழ்வியல் நுட்பங்களைச் சொல்லி அந்த மொழியை படியுங்கள் என்பது வேறு.  ஆனால் இவர் ஒருவர் உங்களை என்ன சொல்லித் திட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ள அந்த மொழியை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார். பாஜகவைச் சேர்ந்த பெரும் பேராசிரியர் ராம.சீனிவாசன் இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார். தமிழர்கள் இந்தி படித்தால் பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்பதை தெரிந்து கொண்டு விடுவார்கள் என்பதற்காகத்தான் இந்தியை படிக்கவிடாமல் திமுக தடுக்கிறது என்று ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டு தனக்குத்தானே கைதட்டிக் கொள்கிறார். அப்படியென்ன, தமிழர்களுக்கு மோடி சொல்லிவிடப் போகிறார். பேரிடர் நிதி துவங்கி, ஜிஎஸ்டி நிலுவை, பள்ளிக்கூடத்திற்கான நிதி என்று தமிழ்நாடு எதைக் கேட்டாலும் ‘நஹி’ என்றுதான் இந்தியில் சொல்லப் போகிறார். இதை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு இந்தியை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமாம்.  

பிரதமர் தமிழ் கற்கலாமே!

பிரதமர் இந்தியில் பேசுவதைத் தெரிந்து கொள்வ தற்காக எட்டரை கோடி தமிழர்களும் இந்திப் படிக்க வேண்டுமா? அதற்கு பதிலாக பிரதமர் மோடி தமிழ் கற்றுக் கொண்டு பேசலாமே. ஏற்கெனவே அவர்  தமிழ்நாட்டிற்கு வரும் போது ஒன்றிரண்டு திருக் குறளை இந்தியில் எழுதி வைத்து சொல்லத்தானே செய்கிறார். குஜராத் மொழியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் மோடி இந்தியை எளிதாக கற்றுக் கொண்டது போல தமிழையும் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? மகாத்மா காந்தி கூட அடுத்த பிறவியில்  திருக்குறளை மூல மொழியில் கற்றுக் கொள்வதற்கா வது நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்றைக்கு இருக்கிற நவீன தொழில்நுட்ப வசதியில் அந்த பேற்றை இப்பிறவி யிலேயே பிரதமர் அடையலாமே?  

இந்தி வழி  சமஸ்கிருதத் திணிப்புக்காக

நாங்கள் என்ன தமிழ்நாட்டில் மட்டுமா மூன்று மொழி கற்க வேண்டுமாறு கூறுகிறோம். மற்ற மாநில மாணவர்களும் மூன்று மொழி படிக்கிறார்கள் தெரியுமா? என்று கயிறு திரித்து முழம் முக்கால் ரூபாய் என்று விற்க முயல்கிறது பாஜக பரிவாரம். உண்மையில் இவர்களது நோக்கம் இந்தித்  திணிப்பு மட்டுமல்ல, அதன் வழியாக சமஸ்கிருத மொழியை திணிப்பதுதான். இதுதான் ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்துள்ள புதிய கல்விக் கொள்கை யின் நோக்கம். அவர்கள் ஒன்றும் மறுக்கவில்லை. வெளிப்படையாகத்தான் எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சமஸ்கிருதத்துக்கு  அள்ளி வழங்கும் காரணம்

“1960இல் இந்தியை மையமாகக் கொண்டிருந்த மொழிக் கொள்கை தற்போது சமஸ்கிருதமயப் படுத்தப்பட்ட மொழி தேசியவாதத்திற்கு மாறி யுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு பிரிவுகள் இதை தெளிவாக்குகின்றன. சமஸ்கிருத அறிவுமுறை, அதன் பெருமை, அதனுடன் தொடர்பு டைய கலை, கலாச்சாரம் என்று அந்தக் கொள்கை ஆவணம் முழுவதும் கூறப்பட்டிருப்பதிலிருந்தே கொள்கை வகுப்பாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்” என்கிறார் அவர்.  “ஏக் பாரத், ஸ்ரேஸ்ட பாரத்” அதாவது ஒரே பாரதம்,  உன்னத பாரதம் என்ற முழக்கத்தின் கீழ் ஒரே பாரதத்தின் ஒரே மொழியாக தேவபாஷை என்று  அவர்கள் கூறும் சமஸ்கிருதத்தையே முன்னிறுத்து கிறார்கள். அதற்காகத்தான் சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கில் அள்ளி வழங்குகிறார்கள்.  உண்மையில் புதிய கல்விக் கொள்கையின்படி அனைத்து மாநிலங்களிலும் சமஸ்கிருதம் அல்லது இந்தி தவிர பிற மொழிகளை கற்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கப் போவதில்லை என்று ஜவஹர் நேசன் எச்சரிக்கிறார்.  

இந்தி பேசும் மாநிலங்களின் மூன்றாவது மொழி சமஸ்கிருதமே...

அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளும் இதை மெய்ப்பிக்கின்றன.  இந்தி பேசுகிற மாநிலங்க ளாக வரையறுக்கப்பட்டுள்ள உ.பி., ம.பி., பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்கண்ட் ஆகிய மாநி லங்களில் மூன்றாவது மொழி என்று சமஸ்கிருதம் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது. நாங்கள் வேறு ஏதாவது ஒரு மொழியை பிற மாநில மாணவர்களுக்கும் கற்றுத் தருவோம் என்று இங்கு சிலர் கம்பு சுத்துகிறார்கள். அப்படியென்றால் ஏன் இந்தி பேசுகிற ஒரு மாநி லத்தில் கூட தமிழோ, மலையாளமோ, தெலுங்கோ மூன்றாவது மொழியாக கற்றுத் தருவதற்கான ஏற்பாடே இல்லை. அனைத்து இந்தி பேசும் மாநி லங்களிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயில வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?  இந்தி பேசாத மாநிலங்களின் மூன்றாவது மொழி யாக பெரும்பாலும் இந்தி மட்டுமே உள்ளது. இந்தி  மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது.  உண்மையில் இந்தி என்பது இடைக்கால ஏற்பாடு தான். ஏக் பாரத், ஏக் பாஷா என்ற பெயரில் இந்தியாவை சமஸ்கிருதமயமாக்குவதுதான் இவர்களது நோக்கம்.  

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது ஒன்றே பயிற்று மொழிச் சிக்க லுக்கு மட்டுமல்ல, வயிற்று மொழிச் சிக்கலுக்கும் தீர்வாகும். மக்கள் சீனத்திலும் கூட மாகாணங்களின் பட்டியலில்தான் கல்வி உள்ளது. இதைச் சொன்னால் கோவித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு பிடித்த அமெரிக்காவிலும் முற்போக்கான கல்வி முறை யைக் கொண்டுள்ள ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் கல்வி மாகாணப் பட்டியலில்தான் உள்ளது.  மற்றபடி சிலர் தாங்கள் இருப்பை காட்டிக் கொள்வ தற்காக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர் பாஜகவைச் சேர்ந்த சுப்பிர மணியசாமி. இந்தியை ஏற்காவிட்டால் அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டும் என்று அவர் கனைத்துள்ளார். கூட்டாட்சி என்பதை கனவிலும்கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் கூட்டம் இது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.