இந்தியாவின் வரலாற்றில் இன்னொரு கறுப்பு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. 1947-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா, 2026-ல் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறது. பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்ப்பும் அறிவித்துள்ள வர்த்தக ஒப்பந்தம் என்பது வெறும் பொருளாதார உடன்பாடா, அல்லது இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் சரணாகதியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெற்றது என்ன? இழந்தது என்ன? நாம் சுயசார்பு என்ற கனவை நித்திரையிலேயே கைவிட்டுவிட்டோமா? விவசாயிகளின் கண்ணீரை அமெரிக்க டாலருக்காக விற்றுவிட்டோமா? சிறுதொழில்களின் உயிரை பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலி கொடுத்துவிட்டோமா? இந்த வேதனையான கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள் தேவை.
இது சுதந்திரமா, அடிமைத்தனமா?
அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 18% வரி விதிக்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரி - பூஜ்ஜியம்! இது என்ன நியாயம்? முன்பு நாம் அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரி விதித்து நம் சந்தையைப் பாதுகாத்தோம். காரணம், அமெரிக்க விவசாயி 400 ஏக்கரில் இயந்திரங்களைக் கொண்டு விளைவிக்கும் பொருட்களுடன், வெறும் 2 ஏக்கரில் வியர்வை சிந்தி உழைக்கும் இந்திய விவசாயி போட்டி போட முடியாது.
அதிலும் அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்பட்டால், மானியம் பெற்ற அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து, நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும். ஆனால் இன்று அந்தப் பாதுகாப்பு அரணைக் கோட்டை விட்டு, அமெரிக்காவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு மோடி அரசு வாசல் திறந்து விட்டிருக்கிறது.
வரி விதிப்பின் பின்னணி :
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளை, அந்நிய நாட்டிலிருந்து குறைவான விலையில் இறக்குமதி செய்தால் உள்ளூர் தொழில் பாதிக்கப்பட்டு படிப்படியாக அழியும்; இதனால் வேலையின்மையும் அதிகரிக்கும். இறக்குமதி செய்வதால் அந்நியச் செலாவணி கையிருப்பும் கடுமையாகக் குறையும். அதன் காரணமாகவே, உள்ளூரில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும்போது, அப்பொருள் உள்ளூர் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
அப்படி இறக்குமதி செய்யும் போது கூட, பற்றாக்குறையின் அளவைப் பொறுத்தே இறக்குமதியின் அளவு நிர்ணயம் செய்யப்படும். இதற்காகவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான ‘அளவுக் கட்டுப்பாடுகளை’ (Quantitative Restrictions) அரசு விதிக்கும். ஆனால், அப்படி விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கச் சொல்லி அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. அதற்குப் பணிந்து, 2001-ஆம் ஆண்டு அன்றைய பா.ஜ.க அரசின் பிரதமர் வாஜ்பாய் 715 பொருட்களுக்கான இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கினார்.
இதனால் வெளிநாட்டுப் பொருட்கள் கட்டுப்பாடின்றி உள்ளே வரத் தொடங்கின. அப்போது இடதுசாரி கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர், உள்ளூர் தொழில்களைப் பாதுகாக்கும் வண்ணம், அளவு அடிப்படையில் கட்டுப்படுத்த முடியாது என்பதால், இறக்குமதி வரியை (Customs Duty) உயர்த்துவதன் மூலம் வெளிநாட்டுப் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்தது அன்றைய அரசு. அப்போது அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 125 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.
அப்படி இருந்த வரியைத்தான், தற்போது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் 'விஷ்வகுரு' எனப் போற்றப்படும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல் காரணமாக 0 சதவீதமாக முற்றிலும் நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2025 ஆகஸ்ட் மாதத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது அதிரடியாக வரிகளை உயர்த்தியது. இது இரண்டு கட்டங்களாக நடந்தது:
- ஆகஸ்ட் 1, 2025 அன்று இந்தியப் பொருட்கள் மீது 25% 'பரஸ்பர வரி' (Reciprocal Tariff) விதிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 27, 2025 அன்று ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, மேலும் 25% அபராத வரி விதிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது மொத்தம் 50% வரி சுமத்தப்பட்டது. ஆனால், வரலாற்று ரீதியாக இந்தியப் பொருட்கள் மீதான சராசரி வரி 2% முதல் 3% வரை மட்டுமே இருந்தது. அந்த வகையில் பார்த்தால், தற்போதுள்ள 18% வரி என்பது முந்தைய காலத்தை விட 600% அதிகம்! அதேநேரம், இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு 0 சதவீத வரி! இதை ஒரு 'வெற்றி' என்று கொண்டாடும் மோடி அரசாங்கம், நம்மை முட்டாள்களாக நினைக்கிறது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
அமெரிக்க மானியம் vs இந்திய விவசாயம்!
இந்தியாவில் 60 கோடி மக்கள் விவசாயத்தைச் சார்ந்து வாழ்கிறார்கள். 8 கோடி குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த 60 கோடி பேரின் எதிர்காலத்தை ஒரே ஒப்பந்தத்தில் அழித்துவிடலாமா?
2024-2025 நிதியாண்டில் அமெரிக்க விவசாய மானியம் நேரடியாக 40.5 பில்லியன் டாலர் (2025). பயிர் காப்பீட்டு மானியங்கள்: சுமார் 12-13 பில்லியன் டாலர். பேரழிவு உதவி 31 பில்லியன் டாலர் என சுமார் மொத்தம் 80-85 பில்லியன் டாலர் (சுமார் ₹7.68 லட்சம் கோடி ) இதில் பல்வேறு விவசாய திட்டங்கள் உள்ளன.
2026-27 நிதியாண்டில் இந்திய அரசின் ஒட்டுமொத்த விவசாய அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடே சுமார் ₹1.40 லட்சம் கோடி தான். ஆனால், அமெரிக்கா தனது ஒரு சில லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கும் மானியம் இதைவிட ஐந்தரை மடங்குஅதிகம்.
இந்தியாவில் இந்தத் தொகை 14 கோடி விவசாயக் குடும்பங்களுக்குப் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவில் வெறும் 20 லட்சம் பண்ணைகளுக்கு மட்டுமே இந்த ₹2.26 லட்சம் கோடி சென்றடைகிறது. மானியம் பெற்று விளைவிக்கப்படும் அமெரிக்கப் பொருட்கள், 0% வரியில் இந்தியாவுக்குள் வரும்போது, இந்திய விவசாயிகளால் விலையில் போட்டி போடவே முடியாது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கக் காத்திருக்கும் ஒரு பொருளாதார ஆயுதம்.
யார் வார்த்தையை நம்புவது?
இந்த ஒப்பந்தத்தில் விவசாயம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். ஆனால் அமெரிக்க வேளாண் செயலர் புரூக் ரோலின்ஸ், "இந்தியச் சந்தை அமெரிக்க விவசாயிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கொண்டாடுகிறார். யாரது வார்த்தையை நம்புவது? இந்தியாவின் அமைச்சரையா, அமெரிக்காவின் செயலரையா?
ஆபத்தில் சிறு தொழில்கள்
இந்திய உற்பத்தித் துறையின் முதுகெலும்பு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை (MSME). 5.77 கோடி நிறுவனங்கள் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பளிக்கின்றன. இது இந்தியாவின் GDP-யில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 45 சதவீதமும் பங்களிக்கிறது.
அமெரிக்காவின் நவீன தொழில்நுட்ப மின்னணுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் 0% வரியில் நுழையும்போது, சிறுதொழில்கள் போட்டியிட முடியாமல் மூடப்படும். வேலையின்மை அதிகரித்து சமூகப் பதற்றம் உருவாகும்.
ஜவுளித்துறை: நெசவாளர்களின் துயரம்!
4.5 கோடி பேருக்கு வேலை தரும் ஜவுளித்துறையில், 35 லட்சம் கைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் 70 லட்சம் கைவினைஞர்கள் உள்ளனர். அமெரிக்காவின் 'H&M', 'Zara' போன்ற நிறுவனங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் ஆடைகளைத் தயாரிக்கின்றன. இவை வரி இன்றி இந்தியாவுக்குள் நுழையும்போது, நெசவாளர்களின் கைத்தறி ஆடைகளை யார் வாங்குவார்கள்? இது நமது பாரம்பரியக் கலைக்கும் கலைஞர்களுக்கும் விடுக்கப்பட்ட 'மரண சாசனமாக' மாறும்.
அமெரிக்கா தீர்மானிக்கும் இந்தியா!
இந்தியாவின் பெருமை 'அணிசேராக் கொள்கை'. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்ற ட்ரம்ப்பின் அழுத்தத்தை மோடி ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வருகின்றன. 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி மற்றும் பொருட்களை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதுவா சுதந்திரம்? இதுவா இறையாண்மை?
ரஷ்யாவை எதிர்க்கும் அமெரிக்கா, வெனிசுலா எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்துவது நியாயமா? வெனிசுலாவில் உள்ள இந்திய நிறுவனமான ONGC விதேஷ்வின் நிலை என்ன? ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது தற்செயலானதா? இதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என நம்ப முடியுமா?
சுயசார்பு என்ன ஆனது?
'மேக் இன் இந்தியா', 'ஆத்மநிர்பர் பாரத்' இவையெல்லாம் வெறும் கோஷங்களா? அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டிருப்பது இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் 80-90% தொகையாகும். இந்த பட்ஜெட்டில் மின்னணு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி குறைப்பு முன்கூட்டிய அமெரிக்கா கட்டளையின் அமலாக்கமா?
ஜனநாயக விரோதம்!
நாட்டின் மிக முக்கியமான ஒப்பந்தம் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. ட்ரம்ப்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகத்தான் இந்தியர்கள் இதனை அறிந்தனர். இது இந்தியாவிற்கு அவமானம் இல்லையா? 'விஷ்வகுரு' எங்கே போனார்? எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஏன்?
மோடி -அதானி- எப்ஸ்டீன் தொடர்பு: பிளாக்மெயிலா?
அதானி மீதான சட்ட நடவடிக்கைகள் மற்றும் எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடி, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் அடிபடுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
2019 தேர்தலுக்கு முன்பு தொழிலதிபர் அனில் அம்பானி எப்ஸ்டீனைத் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்னுடைய சீப் ஸ்ட்ராடஜிஸ்டா இருந்த ஸ்டீவ் பேனோனோட (Steve Bannon) ஒரு மீட்டிங்கை ஏற்பாடு பண்ணி கொடுங்க அப்படின்னு பிரதமர் மோடியின் சார்பாகக் கேட்டதாக அந்த சாட்ல இருக்கு. இதற்கான ஆதாரமாக சில மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளன. பாதுகாப்பு ரீதியிலான ஒப்பந்தங்களுக்கு உதவுமாறு அனில் அம்பானி கேட்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் இதுவரை அனில் அம்பானி அதிகாரப்பூர்மாக இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலுக்கு வரும் முன்பே எப்ஸ்டினோடு மூன்று முறை பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அது இந்தியாவில் உள்ள பிசினஸ் ஆப்பர்சுனிட்டிஸ் தொடர்பாக மட்டுமே இருந்தது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆவணங்களை வைத்து அமெரிக்கா இந்தியாவைப் 'பிளாக்மெயில்' செய்கிறதா? அதானி வழக்கை நீர்த்துப்போகச் செய்ய இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதா?
மக்களின் எதிர்ப்பு
அமெரிக்காவின் வரி மிரட்டலை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 13, 2025 அன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தின. "கார்ப்பரேட்டுகளே வெளியேறு" என்ற முழக்கத்துடன் டிராக்டர் பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்த ஒப்பந்தம் வெறும் வர்த்தகம் அல்ல; இது இந்தியாவின் எதிர்காலத்தைச் சூறையாடும் செயல். 1947-ல் விடுதலை பெற்ற இந்தியா 2026-ல் மீண்டும் அடிமைத்தனத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது. பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும்.
விவசாயிகளின் உயிர் முக்கியம்; சிறுதொழில்களின் வாழ்வாதாரம் முக்கியம்; நாட்டின் இறையாண்மை முக்கியம். எந்த ஒப்பந்தமும் இவற்றை விடப் பெரியதல்ல.
நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள்
இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் முன், ஒவ்வொரு இந்தியரும் இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டும்:
1. இந்தியாவின் இறையாண்மை: அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இந்தியா அடிமையாக ஒப்புக்கொண்டுவிட்டதா? நாம் சுதந்திர தேசமா, அல்லது அமெரிக்காவின் பொருளாதார காலனியா?
2. வெளியுறவுக் கொள்கை: இனி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா தீர்மானிக்குமா? எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும், எந்த நாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று வாஷிங்டன் முடிவெடுக்குமா?
3. விவசாயிகளின் பலி: 60 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவின் நலனுக்காக காவு கொடுப்பதா? மானியம் பெற்ற அமெரிக்க விவசாயப் பொருட்களுடன் போட்டியிட இந்திய விவசாயிகளால் முடியுமா?
4. சிறு தொழில்களின் அழிவு: 20 கோடி பேருக்கு வேலை தரும் சிறு தொழில்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலி கொடுப்பதா? கைத்தறி நெசவாளர்கள், கைவினைஞர்கள் - இவர்கள் அனைவரும் வேலையிழந்து வீதிக்கு வரவேண்டுமா?
5. சுயசார்பு என்ன ஆனது: 'மேக் இன் இந்தியா', 'ஆத்மநிர்பர் பாரத்' என்பது வெறும் கோஷங்களா? உள்நாட்டு உற்பத்தியை வளர்க்காமல், அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதா சுயசார்பு?
6. ஜனநாயக மதிப்புகள்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மக்களுக்கு விளக்காமல், ட்விட்டர் மூலம் அறிவிக்கப்படும் ஒப்பந்தம் ஜனநாயகமா?
7. வருங்கால சந்ததியினர்: நாம் நமது குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது என்ன? சுதந்திரமான, சுயசார்பான இந்தியாவா, அல்லது அமெரிக்காவின் பொருளாதார அடிமையான இந்தியாவா?
