articles

img

வெனிசுலாவின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

வெனிசுலாவின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலைக் கண்டித்தும் ஜனாதிபதி மதுரோ, அவரது மனைவியும் வெனிசுலாவின் முதல் பெரும் பெண் போராளியுமான சிலியா புளோரஸ் ஆகியோரை உடனடியாக  விடுதலை செய்ய வலியுறுத்தியும் தில்லியில் ஜனவரி 12 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்,  பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா எம்.பி.,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஐ(எம்எல்) தலைவர்களில் ஒருவரான ரவி ராய், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தாகர், சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜாவேத் அலி கான், ராஷ்ட்டிரிய ஜனதா தள  மூத்த தலைவர் மனோஜ் ஜா எம்.பி., ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் பதக் ஆகியோர் உரையாற்றினர். வெனிசுலாவுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக தலைவர்கள் கைகோர்த்து நின்ற காட்சி. 

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அவர்களையும் அவரது மனைவியையும் கடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல் சர்வதேச அரசியலில் ஒரு வெட்கக்கேடான செயல். டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் இத்தகைய அநாகரீக நட வடிக்கைகளை எந்த ஒரு தர்க்கத்தின் அடிப்படையிலும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. இவற்றுக்குப் பின்னால் இருக்கும் ஒரே ‘தர்க்கம்’ என்னவென்றால், அவருக்கு முன்னால் அமெரிக்காவை ஆண்ட ஏகாதி பத்திய ஜனாதிபதிகள் செய்த அதே சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் கொடூரங்களும்தான். வரலாற்றில் தொடரும் அமெரிக்க சர்வதேச பயங்கரவாதம் முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளான புஷ் சீனியர், புஷ் ஜூனியர் ஆகியோர் எந்த தர்க்கமும் இன்றி பல நாடுகளை ஆக்கிரமித்தனர்.

குறிப்பாக, இராக் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை நாம் நினைவு கூர  வேண்டும். இராக்கிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapons of Mass Destruction)  இருப்பதாக உலகை ஏமாற்றி புஷ் தாக்குதலைத் தொடங்கினார். ஒருவேளை சதாம் உசேனிடம் அத்தகைய ஆயுதங்கள் இருந்திருந்தால், அவர் அதைத் தனது நாட்டைத் தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தியிருப்பார் அல்லவா? ஆனால் இறுதியில் இராக்கில் அப்படி எந்த ஆயுதமும் இல்லை என்பதுதான் உண்மை. சதாம் உசேன் பிடிபட்டு, ஒரு போலி விசாரணையின் மூலம் ‘கொலை’ செய்யப்பட்டார். இது புஷ்ஷால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சர்வதேச பயங்கரவாதம். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமான இத்தகைய கூட்டுப் படுகொலைகளை விசாரித்துத் தண்டிக்க  இன்று சர்வதேச அளவில் வலுவான நீதி அமைப்பு இல்லை என்பதுதான் வேதனை. ‘டான்றோ’ கொள்கையும்  லத்தீன் அமெரிக்க ஆக்கிரமிப்பும் டொனால்டு டிரம்ப், 19-ஆம் நூற்றாண்டின் பழைய ‘மன்றோ கொள்கையை’ (Monroe Doctrine) இன்று தனது பெயரில் ‘டான்றோ கொள்கை’ என மாற்றியமைத்துள்ளார். வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேறு எந்த சக்தியும் இருக்கக்கூடாது, அமெரிக்கா மட்டுமே  ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த ஏகாதிபத்திய வெறியினால் இன்று 80-க்கும் மேற்பட்ட அப்பாவி வெனிசுலா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச கடமையாற்றச் சென்ற 32 கியூபத் தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  

டிரம்ப் தனது பார்வையை கிரீன்லாந்து பக்கமும் திருப்பியுள்ளார். கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அவர் துடிக்கிறார். அங்கிருக்கும் 57,000 குடிமக்களுக்கு தலா ஒரு மில்லியன் டாலர் தருவதாக ஆசை காட்டுகிறார். இதுதான் அமெரிக்காவின் ‘டாலர் மற்றும் குண்டு’ (Dollar and Bomb) கொள்கை. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் ஒருமுறை வரைந்த கேலிச்சித்திரம் நினை வுக்கு வருகிறது. அதில் புஷ் உலக உருண்டை யைப் பார்த்து, “முழு உலகமுமே அமெரிக்கா வின் மாகாணங்களாக மாற்றப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று வியப்பார். டொனால்டு டிரம்ப்பின் இன்றைய நடவடிக்கைகள் அந்த கேலிச்சித்திரத்தை நிஜமாக்கத் துடிக்கின்றன. இந்திய வெளியுறவுக் கொள்கையின் வீழ்ச்சி நரேந்திர மோடி அரசின் இன்றைய வெளியுறவுக் கொள்கை இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. ஏகாதி பத்தியத்திற்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற நாடு இந்தியா. வியட்நாம் தாக்கப்பட்ட போது தெருவில் இறங்கிப் போராடி, “உன் பெயர் வியட்நாம், என் பெயர் வியட்நாம்” என்று முழக்கமிட்ட உன்னத வரலாறு நமக்கு உண்டு. ஆனால், ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருக்கும் இன்றைய மோடி அரசு, இந்தியாவின் அந்தப் பெருமைமிக்க பாரம்பரியத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. பாலஸ்தீனத்தில் காசா நகரில் பிஞ்சு குழந்தைகளும் பெண்களும் இஸ்ரேலியப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படும்போது, அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இந்தியா தவறிவிட்டது.

அதற்கும் மேலாக, ஹைதராபாத்தில் உள்ள அதானி தொழிற் சாலையில் இஸ்ரேலியக் கூட்டுடன் தயாரிக்கப்பட்ட ஆயுதமேந்திய ட்ரோன்கள், பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்க ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது இந்திய மக்களின் உண்மையான உணர்வலைகளுக்கு எதிராகச் செய்யப்படும் துரோகம். போராட்டக் களத்தில் ஒன்றுபடுவோம் ஏகாதிபத்தியம் என்பது காலாவதியான சொல்லல்ல; அது டொனால்டு டிரம்ப்பின் செயல்களாக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், மெக்சிகோ, பனாமா கால்வாய் மற்றும் கனடா மீதான அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கு என அனைத்தும் அதன் வடிவங்களே. ஒரு கவிஞனின் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:

• “எங்கே மக்கள் சங்கிலியால் பிணைக்கப்படுகிறார்களோ, அங்கே நானும் பிணைக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். எங்கே மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே நானும் ஒடுக்கப்படுகிறேன்.” இதுதான் இந்திய மக்களின் பண்பாடு. இந்த உணர்வோடு, வெனிசுலாவுக்காகவும், கியூபாவிற்காகவும், பாலஸ்தீனத்திற்காகவும் நாம் குரல் எழுப்ப வேண்டும். ஏகாதிபத்தி யத்தின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து நாடு களின் மக்களுடனும் நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம். ஏகாதிபத்தியம் ஒழிக!   வெற்றி நமதே!  ஜனவரி 12 தில்லி கூட்டத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்.