ஊடகங்களின் குரல்களை ஒடுக்கும் மோடி அரசு
புதிய அஞ்சல் விதிமுறைகள் - 2024 இந்தி யாவின் சிறிய செய்தித்தாள் மற்றும் மாத, வார பருவ இதழ்களின் உயிர்வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே செயல்பட்டு வந்த இந்திய செய்தித்தாள் பதிவாளர் (RNI) எனும் அமைப்பு ரத்து செய்யப்பட்டு, “பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவாளர்” - (PRGI) என்ற புதிய அமைப்பு நிறுவப் பட்டுள்ளது. இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர செய்தித்தாள்களுக்கான அஞ்சல் கட்டணங்களை கணிசமாக அதிகரிக்கும் புதிய விதிமுறைகளை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் தற்போதைய அளவைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல சிறிய வெளியீடு கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாட்டில் இதுவரை சுதந்திரமாக செயலாற்றி வந்த பத்திரிகைகளின் குரல்களை அடக்கு வதற்கான ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு இத்தகைய முடிவை மேற்கொண்டு உள்ளது.
2023 மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள புதிய விதி முறைகள் - 2024 அஞ்சல் சேவைகளையே நம்பி யுள்ள சிறு மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பத்திரிகை மற்றும் புத்தக பதிவாளர் சட்டம் - 1867 (Press and Registration of Books Act 1867)-க்கு மாற்றாக இந்திய பத்திரிகை பதிவாளர் சட்டம் (press and Registration of periodicals Act 2023) என்று மாற்றம் செய்யப்பட்டு 2024 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய விதிமுறையின் கீழ், ஒருவார கால இடைவெளிக்குள்ளாக வெளி வரும் பத்திரிகை- இதழ்கள் மட்டுமே பதிவு செய்யப் பட்ட செய்தித்தாள்களாக (Registered News papers) ஏற்றுக்கொள்ளப்படும். ஒருவார கால இடை வெளிக்கு மேல் வெளிவரும் பத்திரிகை-இதழ்கள் கால முறை அஞ்சல் (periodical post) என வகைப் படுத்தப்பட்டு அவற்றுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அஞ்சல் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. அதா வது, இருவார இதழ்கள், மூன்றுவார இதழ்கள், மாதாந்தர இதழ்கள், இருமாத இதழ்கள், காலாண்டு, அரையாண்டு இதழ்கள் இனிமேல் அஞ்சல் சலுகைகளைப் பெறமுடியாது. தற்போது இயங்கிவரும் பெரும்பாலான பருவ இதழ்கள் மிகக் குறைந்த முதலீடுகளையும், மிகக் குறைந்த பட்ஜெட்டுகளையும் கொண்டுள்ளன. மேலும், அவை அடிப்படையில் பத்திரிகையாளர்கள், தனிநபர்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களால் லாப நோக்கத்திற்காக அல்லாமல் சமூக சேவை நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றன. இந்த சிறிய மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் வர லாற்று ரீதியாக அரசாங்க மானியங்களையும் ஆத ரவையும் பெற்றுள்ளன, ஏனெனில், அவை பொது மக்களின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் ஒன்றிய அரசின் தற்போதைய முடிவு பருவ இதழ்கள் மற்றும் பத்திரிகைகளின் செயல்பாட்டை முடக்கி விடும்.
சுதந்திரமான பத்திரிகைகளை ஆதரித்த அஞ்சல் மானியங்கள்
கடந்த காலங்களில், செய்தித்தாள் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் இருந்த போது, அரசாங்கமே மாநில வர்த்தகக் கழகம் மூலம் காகிதத்தை இறக்குமதி செய்து பதிவுசெய்யப்பட்ட செய்தித்தாள்களுக்கு தள்ளுபடி விலையில் வழங்கியது. பல செய்தித்தாள்கள் இந்த ஏற்பாட்டால் பல பத்தாண்டுகள் பயனடைந்தன. இருப்பினும், உள்நாட்டு காகித உற்பத்தி அதிகரித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்த சேவை கள் நிறுத்தப்பட்டன. பதிவுசெய்யப்பட்ட செய்தித் தாள்கள் மற்றும் இதழ்கள் பெற்றுவந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை அஞ்சல் கட்டணச் சலுகை கள். செய்தித்தாள்களின் வாசகர்கள் மற்றும் சந்தாதாரர்கள் பெரும்பாலும் தொலைதூர நகரம் - கிராமத்தில் வசிப்பதால், செய்தித்தாள்களால் அதிக போக்குவரத்துச் செலவுகளைச் செலுத்த முடிய வில்லை. சமூகநல நடவடிக்கையாக, அரசாங்கம் பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்களுக்கு சிறப்பு, மானிய விலை மற்றும் குறைந்த விலை அஞ்சல் சேவை களை வழங்கியது.
இந்த அஞ்சல் சலுகை பல பத்தாண்டுகள் வரை இருந்து வந்தது, 1990கள் வரை. ஒரு பதிவு செய்யப் பட்ட செய்தித்தாள் நாட்டில் எங்கும் அதன் சந்தா தாரருக்கு ஒரு பிரதியை இரண்டு பைசாவிற்கு அனுப்ப முடியும், 1990 களுக்கு பிறகு இது பதினைந்து அல்லது இருபது பைசாவாக உயர்ந்தது. தற்போது 95 பைசா வாக இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவாக தனியார் கூரியர் சேவைகள் அதிகரித்த பிறகும்கூட, அஞ்சல் கட்டணங்களுக்கும் கூரியர் நிறுவனங்க ளுக்கும் இடையே மிகப்பெரிய கட்டண வேறுபாடு இருந்தது. கூரியர் சேவைகளின் கட்டணத்தைத் தாங்க முடியாமல் பெரும்பாலான வெளியீட்டாளர்கள் தபால் சேவைகளைத் தொடர்ந்து நம்பியிருந்தனர்.இருப்பி னும், 2023-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ், செய்தித்தாள்களை “பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்கள்” என வகைப்படுத்து வது நீக்கப்பட்டுள்ளது, மேலும், இப்போது “பருவ இதழ்கள்- பத்திரிகைகளுக்கு அஞ்சல் சலுகை இன்றும் பொருந்துமா என்பது சட்டத்தில் தெளிவாக இல்லை. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் அஞ்சல் துறை டிசம்பர் 16, 2024 அன்று புதிய விதிமுறைகளை அறி முகப்படுத்தியது.
அஞ்சல் சலுகை நீக்கம்
முதல் நடவடிக்கையாக நீண்ட காலமாக இருந்து வந்த நூல் அஞ்சல், பதிவு அஞ்சல், சேவையை நிறுத்தி யது. அஞ்சல் கட்டணச் சலுகைகளை அனுபவித்து வந்த சிறிய செய்தித்தாள்கள் இனி அந்தச் சலுகை களைப் பெறமுடியாது. இந்தியாவில் தினசரி, வாரம், மாதம், என பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் 1,49,809 உள்ளன. அவற்றில் குறைந்தது 21,139 தினசரி மற்றும் வார இதழ் பத்திரிகைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது வரை அஞ்சல் சலுகையை பெற்றுவந்த 1,28,670 பருவ இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு அஞ்சல் சலுகை நீக்கப்பட்டுள்ளது. 2023 சட்டத்திற்கு முன்பு, இந்த அனைத்து பத்திரிகைகளும் “பதிவுசெய்யப்பட்ட செய்தித்தாள்களாக” அஞ்சல் சலுகையைப் பெற்று வந்தன. இந்த வெளியீடுகள் மக்களின் தகவல் அறியும் உரிமையின் ஒரு பகுதியாக இருந்தன. மேலும், சமூக சேவை நடவடிக்கையாக அரசாங்க உதவியைப் பெற்றன. புதிய கட்டணக் கட்டமைப்பு பத்திரிகை அனுப்பும் செலவுகளை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இருப்பி னும், புதிய விதிமுறைகள் “பருவ இதழ்களுக்கான” அஞ்சல் கட்டணங்களை அவற்றின் விலையின் அடிப்ப டையில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகின்றன. பத்திரிகையின் அட்டை விலையை அஞ்சல் கட்ட ணங்களுக்கான அடிப்படையாக மாற்றுவது ஒரு அபத்தமான முடிவு. ஏனெனில், அஞ்சல் துறைக்கு செய்தித்தாளின் விலையுடன் எந்த தொடர்பும் இல்லை. ஒரு செய்தித்தாள் இலவசமாகவோ அல்லது குறைந்தபட்ச விலையிலோ விநியோகிக்கப்படலாம் அல்லது அதன் உற்பத்திச் செலவுக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால் அது அஞ்சல் துறைக்கு முக்கியமல்ல.
புதிய கட்டண விகிதங்கள்
புதிய கட்டண விகிதங்கள் பின் வருமாறு: ரூ.1 முதல் 20 வரை விலை கொண்ட செய்தித்தாள் கள் முதல் வகையின் கீழ் வருகின்றன. முதல் 100 கிராமுக்கு ரூ.2 கட்டணமும், கூடுதலாக வரும் ஒவ்வொரு 100 கிராமுக்கும் அல்லது அதன் ஒரு பகு திக்கும் ரூ.3 கட்டணமும் உயர்ந்துள்ளது. ரூ.21 முதல் ரூ.50 வரை விலை கொண்ட செய்தித்தாள்கள் இரண்டாவது வகையின் கீழ் வருகின்றன. முதல் 100 கிராமுக்கு ரூ.4, கூடுதலாக ஒவ்வொரு 100 கிரா முக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் ரூ.5 கட்டண மும் உயர்ந்துள்ளது. ரூ.51க்கு மேல் விலையுள்ள செய்தித்தாள்கள் மூன்றாவது வகையின் கீழ் வருகின்றன. முதல் 100 கிராமுக்கு ரூ.8 விலையும், கூடு தலாக வரும் ஒவ்வொரு 100 கிராமுக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் ரூ.9 கட்டணமும் உயர்ந்துள்ளது. இதுவரை 50 பைசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு செய்தித்தாள், இப்போது ரூ.2 முதல் ரூ.28 வரை அல்லது ரூ.5 முதல் ரூ.17 வரை கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், சிறிய செய்தித்தாள்க ளுக்கான அஞ்சல் செலவுகள் நான்கு முதல் பதினேழு மடங்கு அதிகமாக இருக்கும்.
இது பத்திரிகைகளின் உயிர் வாழ்வை நெருக்கடியில் தள்ளக்கூடும். இந்த கட்டண மாற்றத்திற்கு முன்பே, சிறு மற்றும் நடுத்தர செய்தித்தாள்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குவதற்கு அஞ்சல்துறை பல நடவ டிக்கைகளைக் கட்டாயப்படுத்தி வருகிறது. செய்தித் தாளை ஒரு உறையுடன் பேக் செய்வதைத் தடை செய்தல், கடைசி அட்டையில் முகவரி எழுதப்பட்ட எந்த உறையும் இல்லாமல் பத்திரிகைகளை அனுப்பச் சொல்லுதல், செய்தித்தாள் அதன் இலக்கை அடை யும் நேரத்தில் சேதமடையும் வகையில் அதன் தொ டக்கப் பக்கத்தைக்கூட ஸ்டேபிள் செய்வதைத் தடை செய்தல், செய்தித்தாள் அலுவலகங்களே மாவட்ட வாரி யாக அனைத்தையும் வரிசைப்படுத்தச் சொல்லுதல், சட்டப்படியான அஞ்சல் கட்டணங்களுக்கு மேல் கூடுதல் சேவைக் கட்டணங்களை வசூலித்தல் போன்றவை இதில் அடங்கும். இது அஞ்சல் சேவை களை நியாயப்படுத்துவதற்கோ, நவீனப்படுத் துவதற்கோ அல்லது அஞ்சல் துறையின் நிதியை மேம் படுத்துவதற்கோ நடக்கிறதா, அல்லது ஏதேனும் மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா? இது ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குதல்
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் முக்கிய செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை தங்க ளுக்கு சாதகமான முறையில் கையாண்டுவருவதால் “கோடி மீடியா” என்ற வார்த்தை பிரபலமாகவும், இழிவா கவும் மாறிவிட்டது. ஊடகங்களின் இந்தப் பிரிவு இனி சமூக யதார்த்தங்களை வெளியிடப் போவதில்லை அல்லது ஒன்றிய அரசை ஆட்சியை விமர்சிப்ப தில்லை என்ற நிலையை மேற்கொண்டு வருகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இன்னும் சிறிய மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை யாக உண்மையைச் சொல்லி, தங்கள் செயல்களை விமர்சிப்பதால் வருத்தப்படுகிறார்கள். இந்த சுதந்திரமான குரல்கள், ஆட்சி நெருக்கடி, பொதுப்பிரச்சனைகள் மற்றும் மக்களின் போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றன. அதனால் அர சாங்கம் அவர்களை முடக்குவதற்கும், அவற்றின் குரல்களை அடக்குவதற்கும், புதிய சட்டம்- விதி முறைகளின் மூலம் பத்திரிகைகள் இயங்குவதே கேள்விக்குள்ளாகிறபோது, வெகுமக்களுக்கு உண்மைச் செய்திகள் சென்றடைவதைத் தடுப்பதற் குமே இந்த விதிகள் -வழிகள் உருவாக்கப்படுகின்றன.
ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள்
தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டு தல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 என்ற போர்வையில், சமூக ஊடகங்களில் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா என்ற மிகவும் கடுமையான மசோதா விரை வில் அல்லது பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளை-குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும், பத்திரிகை கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும், அவற்றுக்கு நிதி நெருக்க டிகளை உருவாக்கும் மற்றும் அவற்றின் மூடலுக்கு இட்டுச் செல்லும். சுதந்திரமான ஊடகங்களை அடக்குவதே அர சாங்கத்தின் நோக்கமாகும்.
இந்தச் சிறு மற்றும் நடுத்தர செய்தித்தாள்களும் சமூக ஊடகத் தளங்களும் உண் மையில் மக்களின் தகவல் அறியும் உரிமைகளுக்குப் பயன்படுத்துகின்றன. இந்தப் பத்திரிகைகள் தங்களின் கொள்கைகளை விமர்சிப்பதால், சிறிய வெளியீடுகளின் குரல்களை அடக்குவதே ஒன்றிய ஆட்சியாளர்களின் குறிக்கோள். எதிர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாத அதிகாரத்தில் இருப்ப வர்கள், குறைவான செய்தித்தாள்களை வைத்திருப் பது நல்லது, அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களின் நோக்கம், சுதந்திர ஊடகங்களுக்குத் தடைகளை உரு வாக்குவது, அவை தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகாத போது அவற்றை அடக்கி ஒடுக்குவதே ஒன்றிய அரசின் அணுகுமுறையாக உள்ளது. அச்சு ஊடகம், அச்சு இயந்திரங்கள், அச்சு மை, காகிதம் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே பத்திரிகைகள் தள்ளாடி வருகின்றன. அஞ்சல் கட்டணங்களின் இந்த உயர்வு பல சிறிய வெளியீடுகளுக்கு பெரும் ஆபத்தாகும். ஒன்றிய மோடி அரசின் உண்மையான நோக்கம் அஞ்சல் கட்ட ணங்களை அதிகரிப்பது மட்டுமல்ல, சிறிய செய்தித் தாள் மற்றும் பருவ இதழ்களின் குரலை முற்றிலும் ஒடுக்குவதாகும். எனவே, அஞ்சல் விதிமுறைகள் 2024-ஐ முற்றிலுமாக திரும்பப் பெறவைப்பதற்கான போராட்டங்களை அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்கவேண்டும். கட்டுரையாளர் : பொது மேலாளர், தீக்கதிர் மதுரைப் பதிப்பு