எரிவாயு உருளைகளும் ஏகாதிபத்திய சுரண்டல்களும்!
“விறகு வாங்கலையோ விறகு...” என்று அன்றைக்கு சிவாஜி கணேசன் பாடி வந்த காட்சி, இன்று உண்மையாகவே நமது தெருக்களிலும் ஓங்கி ஒலிக்குமோ என்ற அச்சம் எழுந்துள் ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை யாக, சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று ஒரு மிகப்பெரும் சர்வதேச மற்றும் உள் நாட்டுப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தட்டுப்பாட்டின் பின்னணியில் சர்வதேச அரசியல் ஆழமாக உள்ளது என்பது உண்மை. இன்றைய தட்டுப் பாட்டுக்கு ‘போர் தான் காரணம்’ என பாஜக அரசு மேலோட்டமாகக் கூறிச் செல்வதை ஏற்க முடியாது. அதன் ஆணி வேர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிவாத போக்கில்தான் உள்ளது. மனிதாபிமான மற்ற சர்வதேச சட்ட வரம்புகளை மீறுகிற அதனுடைய போர் வெறியில் அடங்கியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டதிட்டங்களை காலில் போட்டு மிதித்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலக அமைதியையே குலைத்துள்ளன. இந்த மோதலால் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப் பட்டுள்ளது. இதனால் எரிவாயு ஏற்றி வரும் சரக்குக் கப்பல்கள் நடுக்கடலில் தத்தளிக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த பிறகும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சுதந்திரமாக உலா வருவதும், ஐநா தீர்மானங்களை அமெரிக்கா துச்ச மாக மதிப்பதும் தற் போதைய நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. பாஜக அரசின் மெத்தனப்போக்கு அணிசேராக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, அமெரிக்காவின் நலன் களுக்காகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, இந்த விவகாரத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது. ‘எஸ்மா’ (ESMA) சட்டத்தை ஏவுவோம் எனப் பதுக்கல்காரர்களை எச்சரிக்கும் அரசு, சர்வதேச அரங்கில் போரை நிறுத்தக் கோரி குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்? விலை ஏற்றமும் மானியப் பறிப்பும் இந்தியாவில் 31 கோடி குடும்பங்களும், தமிழகத்தில் சுமார் 3 கோடி குடும்பங்களும் எரிவாயுவை நம்பியுள்ளன. பெண்களைப் புகை அடுப்பிலிருந்து மீட்ட பெருமை எரிவாயுவுக்கு உண்டு. ஆனால், இன்று மீண்டும் விறகடுப்பை நோக்கி பின்னோக்கிச் செல்ல முடியுமா? எரிவாயு தட்டுப்பாடு வரும் என்று தெரிந்தே சில நாட்களுக்கு முன் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹928.50 ஆக அரசு உயர்த்தியது. வணிக சிலிண்டர் விலை ₹2000-ஐத் தாண்டியுள்ளது. முன்பு வழங்கப்பட்ட ₹300 மானியத் தொகை, மக்களின் வங்கிக் கணக்கிற்கு வராமல் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது. இது வெறும் விலை உயர்வு மட்டுமல்ல; ‘மானியம் தருகிறோம்’ என்று சொல்லி மக்களை ஏமாற்றி, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட அரசு வழிவகை செய்கிறது. மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்ட பாஜகவோடுதான் கூட்டணி வைத்து 3 சிலிண்டர் இலவசம் என தேர்தல் வாக்குறுதி தருகிறார் எடப்பாடி பழனிசாமி. எரிவாயு சிலிண்டர் விலை ஏறினாலும், கிடைக்கிறதே என்ற ஆறுதல் இருந்தது; இப்போது அதற்கும் சோதனை வந்துள் ளது. இந்தச் செயற்கை தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலிண்ட ர்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்குமா என்பதே கேள்வி. இப்போதே பல மாநிலங்களில் எரிவாயு உருளை பெற நீண்ட வரிசைகளும் தள்ளுமுள்ளுகளும் துவங்கியுள்ளன. இது நாடு முழுவதும் பரவினால் மிகப்பெரிய கலவரங்கள் வெடிக்கக்கூடும். ஆகவே உடனடியாக ஒன்றிய அரசு சில முக்கிய நடவடிக்கை களை மேற்கொண்டாக வேண்டும்: • ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து நேரடியாக எரிவாயுவைப் பெற மாற்றுப் பாதைகளை அரசு கண்டறிய வேண்டும். அமெரிக்காவின் உத்தரவுக்காக காத்திருப்பது மகா வெட்கக்கேடானது. • நிறுத்தப்பட்ட மானியத் தொகையை மீண்டும் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். • இந்தியாவில் எல்பிஜி உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும். • தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை, மாவட்டந்தோறும் சோத னைகளை நடத்தி பதுக்கலைத் தடுக்க வேண்டும். வீடுகள், மருத்துவமனைகள், கல்வி விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உலக அரசியலைச் சாக்கு சொல்லி விலை உயர்வை நியாயப்படுத்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஏகாதிபத்திய போர் வெறிக்கும் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உழைப்பாளி மக்கள் போராட்டமே தீர்வாகும். இனி சாமானிய மக்களின் சமையலறையிலிருந்தே போராட்டம் துவங்கட்டும். ஏகாதிபத்தியம் தகரட்டும்!
