articles

img

மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மை மீதான ஏகாதிபத்தியத்தின் நேரடித் தாக்குதல் - பேரா.பிரபாத் பட்நாயக்

மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மை  மீதான ஏகாதிபத்தியத்தின் நேரடித் தாக்குதல்

சர்வதேச சட்டத்தின் அனைத்து அடிப்படை விதிமுறைகளையும் தார்மீக நெறிகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மையையே முற்றிலு மாக ஒழித்துக்கட்டும் ஒரு அபாயகரமான முயற்சியில் ஏகாதிபத்தியம் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

“ஆட்சி மாற்றத்தை” (Regime change) ஏற்படுத்தும் வெளிப்படையான நோக்கத்துடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்கள் இதையே உலகிற்குப் பறைசாற்று கின்றன. இதுவரை, ஏகாதிபத்தியத்திற்கு இணங்காத அல்லது அவர்களது நலன்களுக்கு முரணாகச் செயல் படும் ஒரு ஆட்சியை மாற்ற முற்படும்போது, “பேரழிவு  ஆயுதங்கள்” (WMD) வைத்திருப்பதாக அல்லது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக போன்ற ஏதேனும் ஒரு பொய் சாக்குப்போக்கைச் சொல்லி, தனது ராணுவத் தலையீட்டை ஏகாதிபத்தியம் ஒரு தந்திரமான போர்வையின் கீழ் மறைத்து வந்தது. இராக் மீதான படையெடுப்பின் போது ‘மறைத்து வைக்கப்பட்டிருந்த பேரழிவு ஆயுதங்கள்’ என்று பரப்பப்பட்ட பொய்கள் இதற்கு ஒரு வரலாற்றுச் சான் றாகும். ஆனால், ஈரானின் விஷயத்தில் அத்தகைய எந்த ‘இலைமறை காய்மறைவு’ வேலையையும் அவர்கள் செய்யவில்லை; தங்களது தீய திட்டத்தை மறைப்பதற்கான எந்தச் சூழ்ச்சியான முயற்சியை யும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. ஈரானின் அணு சக்தித் திட்டம் குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவதாகச் சொல்லப்படும் சூழலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், காலனியாதிக்க சகாப்தம் முடிந்த பிறகு முதல்முறையாக, மூன்றாம் உலக நாடுகளின் எந்த வொரு சுதந்திரமான நாட்டின் மீதும் தான் விரும்பும் நேரத்தில் “ஆட்சி மாற்றத்தை” ஏற்படுத்தும் உரிமை யைத் தனக்கே உரித்தானதாக அமெரிக்கா தன்னிச் சையாக அறிவித்துள்ளது.

இறையாண்மை என்பது  யாருக்கான உரிமை?

இங்கே ஈரானிய மக்களிடையே அந்த நாட்டு அரசுக்கு ஆதரவு இருக்கிறதா, அங்கு பேச்சுரிமை நிலவுகிறதா அல்லது அரசியல் எதிர்ப்புகள் பொ றுத்துக் கொள்ளப்படுகின்றனவா என்பது விவாதத் திற்குரிய முதன்மையான விஷயம் அல்ல. விஷயம் என்னவென்றால், ஒரு நாட்டின் ஆட்சி மாற்றம் குறித்து முடிவெடுப்பதற்கும், அதற்காகப் பாடுபடுவதற்கும் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே முழுமையான உரிமையும் தார்மீக அதிகாரமும் உண்டு. அது அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் வேலையல்ல. மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ராணுவ ரீதியாகத் தலையிட அதற்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. ஒரு நாட்டின் ‘இறையாண்மை’ என்பது அந்த மக்களின் சுய அதிகார உரிமையையே குறிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலனி யாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்குப் பெரும் தியாகங்கள் மூலம் ஈட்டித் தந்த இந்த இறையாண்மையை, இன்று ஏகாதிபத்தியம் தனது நேரடி ராணுவத் தலையீட்டின் மூலம் நசுக்கப் பார்க்கிறது.

இதுவரை கொல்லைப்புறச் சூழ்ச்சிகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் இறை யாண்மையைச் சிதைக்க முயன்ற ஏகாதிபத்தியம், இப்போது வரலாற்றில் முற்றிலும் ஒரு புதிய அத்தி யாயத்தைத் தொடங்கி, மீண்டும் ஒரு ‘மறுகாலனி யாதிக்கத்திற்கு’ (Recolonization) பகிரங்கமாக வழிவகுக்கிறது. இது தேசங்களின் சுதந்திரத்தை முற்றிலுமாகப் பறிக்கும் செயலாகும்.

ஏகாதிபத்தியத்தின் துணிச்சலுக்குப் பின்னுள்ள அரசியல்

இத்தகைய அப்பட்டமான தாக்குதலை நடத்த ஏகாதிபத்தியத்திற்கு எங்கிருந்து இந்தத் துணிச்சல் வந்தது? இதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை நாம் ஆழமாக ஆராய வேண்டும். முதலாவதாக, சோவி யத் யூனியனின் வீழ்ச்சியும் பனிப்போரின் முடிவும், அமெரிக்காவிற்கு இருந்த சர்வதேச அளவிலான நிர்ப்பந்தங்களை நீக்கிவிட்டது. 1962-இல் கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது சோவியத் யூனியன் காட்டிய உறுதி, அமெரிக்காவைச் சமரசம் செய்ய வைத்தது.

அன்று அணு ஆயுதப் போர் மூளும் என்ற அச்சம் ஏகாதிபத்தியத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனால் இன்று அத்தகைய வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுப்பாடு சர்வதேச அரங்கில் இல்லை என்பது அமெரிக்காவிற்குச் சாதகமாகிவிட்டது. இரண்டாவதாக, ஏகாதிபத்தியம் இன்று பொரு ளாதார ரீதியாக மிக மெல்லிய பனிக்கட்டியின் மீது சறுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு பத்தாண்டு களில், வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும்  மூன்றாம் உலக நாட்டு உழைக்கும் மக்களின் வருமானப் பங்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து வருவது ஒட்டு மொத்த உலகளாவிய நுகர்வைக் குறைத்து, உற்பத்தித் தேக்கத்தையும் வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ‘வேலை பங்கேற்பு விகிதம்’ குறைவதை வெறும் புள்ளிவிவரங்களால் மறைக்க முயன்றாலும், உழைக்கும் மக்களின் துயரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நெருக்கடி யிலிருந்து தப்பிக்க ஏகாதிபத்தியத்திற்கு மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மீண்டும் நேரடியாகச் சுரண்டுவது தேவையாக இருக்கிறது.

டாலர் ஆதிக்கமும் நிதிச் சிக்கலும்

முந்தைய காலனியாதிக்க காலத்தில் பிரிட்டன் தனது காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டி, அதன் மூலம் தனது வர்த்தகப் பற்றாக்குறையைச் சரி செய்தது. ஆனால் இன்றைய பிரதான ஏகாதி பத்திய சக்தியான அமெரிக்காவிடம் அத்தகைய நேரடி காலனி நாடுகள் இப்போது இல்லை.

இதனால் அமெ ரிக்கா டாலர்களை அச்சிட்டே தனது நிதிப் பற்றாக்குறை யைச் சமாளிக்கிறது. இன்று உலகிலேயே மிக அதிகக் கடன்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. டாலருக்கு நிகராக வேறு நாணயம் இல்லை என்பதால் அதற்கு அச்சுறுத்தல் இல்லை என்று சொல்லப்படுவது ஒரு வெற்று ஆரவாரமாகும். மக்கள் டாலரிலிருந்து பொருட்களுக்கு அல்லது மற்ற சொத்துகளுக்குத் திடீரென மாறத் தொடங்கினால், அது முதலாளித்துவ உலகின் நிதி அமைப்பையே சீர்குலைத்து, மிகப்பெரிய பணவீக்கத்தை ஏற் படுத்தும். 1970-களில் இத்தகைய சூழலைச் சமா ளிக்கவே தாட்சரிஸம் மற்றும் ரீகனாமிக்ஸ் போன்ற  கொள்கைகள் மூலம் உழைக்கும் மக்கள் மீது வேலை யின்மை திணிக்கப்பட்டது. இன்று கடுமையான நெருக்கடியில் தொழிலாளர்கள் உள்ள சூழலில், இத்த கையதொரு நிலை மீண்டும் ஏற்பட்டால், அது அமைப்பின் சமூக ஸ்திரத்தன்மையையே முற்றிலு மாகச் சிதைத்துவிடும்.

நவ-பாசிசமும்  ‘சமமற்ற ஒப்பந்தங்களும்’

இந்த அச்சுறுத்தலை முன்கூட்டியே தடுக்க ஏகாதி பத்தியம் இரண்டு முக்கிய உத்திகளைக் கையாண்டு வருகிறது: l அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் போன்ற ஒரு நவ-பாசிச ஆட்சியை நிறுவுவ தன் மூலம் உள்நாட்டு எதிர்ப்புகளை ஒடுக்குவ தோடு, சர்வதேச அளவில் மிரட்டல் அரசியலை முன்னெடுப்பது. l தனக்குக் கீழ்ப்படியும் பொம்மை அரசுகளை மூன்றாம் உலக நாடுகளில் நிறுவி, மறைமுகமாக மறுகாலனியாதிக்கத்தை நிலைநிறுத்துவது. வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் குறிவைப்பது இதன் ஒரு  பகுதியே. வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது. இந்நாடுகளின் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்று வது, அமெரிக்காவின் நிதிப் பிரச்சனைகளைத் தற்காலி கமாகத் தீர்க்க உதவும். இது காலனியாதிக்க காலத்தில் நடந்த சுரண்டலின் புதிய வடிவமாகும். மறுகாலனியாதிக்கம் என்பது வெறும் வளங்க ளைச் சுரண்டுவது மட்டுமல்ல; இது இந்தியா-அமெ ரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற “சமமற்ற ஒப்பந்தங்க ளை” (Unequal Treaties) திணிப்பதன் மூலமும் நடக்கிறது.

காலனியாதிக்க காலத்தில் இருந்தது போலவே, அமெரிக்கப் பொருட்களுக்கான ஒரு பாது காக்கப்பட்ட சந்தையை இந்தியாவிற்குள் உருவாக்க அவர்கள் முயல்கின்றனர். இத்தகைய போலியான வாதங்களின் அடிப்படையில் திணிக்கப்படும் ஒப்பந் தங்கள் இந்திய விவசாயத்தையும் தொழில்துறை யையும் அடிமைப்படுத்தும் செயலாகும்.

‘மேற்கத்திய நாகரிகத்தின்’  போலி மகிமை

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செய லாளர் மார்கோ ரூபியோ, ஐரோப்பியத் தலைவர்க ளிடம் ஒரு குயுக்தியான உத்தியை முன்வைத்தார். கம்யூனிசம் மற்றும் காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கங்க ளால் ‘மேற்கத்திய நாகரிகம்’ இழந்த மகிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அவரது வாதம்.இது உண்மையில் உலகை மீண்டும் அடிமைப்படுத்து வதற்கான ஒரு நேரடி அழைப்பாகும். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குத லுக்கு ஸ்பெயினைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காதது, அவர்கள் ரூபியோவின் வாதத்தை ஒருவாறு ஏற்றுக்கொண்டதையே காட்டு கிறது. சுருக்கமாகச் சொன்னால், காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் நாம் பெற்ற அனை த்து நன்மைகளையும் தலைகீழாக மாற்றி, ஏகாதி பத்திய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மூன்றாம் உலகை அடிமைப்படுத்தும் ஒரு புதிய சகாப் தத்தின் விளிம்பில் நாம் நிற்கிறோம். இந்த ராணுவ- பொருளாதார சூழ்ச்சிமிக்க ஆபத்தை உணர்ந்து முறியடிப்பதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலை முறியடிக்க முடியும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி , மார்ச் 08, 2026 தமிழில் சுருக்கம் : எம்.கிரிஜா