ந்திய தொழிற்சங்க அரங்கில் 51 ஆண்டுகளுக்கு முன்னால் சிஐடியு தோன்றிய நாளிலிருந்தே தொழிலாளி வர்க்கம் சந்தித்து வந்த பொதுவான பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டதொரு இயக்கத்தை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகித்து வந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக வாதாடும் முன்னணிப் படை என்ற பெயரையும் சிஐடியு வென்றெடுத்துள்ளது.
அமைப்பு மாநாடு
கோவாவில் 1970 ஏப்ரல் 9-10ல் நடைபெற்ற சிஐடியுகன்வென்ஷன் முடிவுப்படி 1970 மே 28 முதல் 30 வரை கொல்கத்தா லெனின் நகரில் (ரஞ்சித் ஸ்டேடியம்) அமைப்புமாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தொழிலாளர்களிடையே பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏற்கெனவே சுற்றுக்கு அனுப்பப்பட்டிருந்தது. மாநாட்டில் சொற்பொழிவுகள் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. மே 30 அன்று புதிய அமைப்புக்கு இந்தியதொழிற்சங்க மையம் (சிஐடியு) என பெயரிடுவது என்றுதோழர் மனோ ரஞ்சன்ராய் முன்மொழிய தோழர் இ.பாலானந்தன் வழிமொழிந்தார். கொல்கத்தா நகரமே அதிரும் வகையில் பலத்த கரகோஷத்திற்கிடையே ஏகமனதாக பெயர்ஏற்கப்பட்டது. தலைவராக தோழர் பி.டி.ரணதிவே, பொதுச் செயலாளராக தோழர் பி.ராமமூர்த்தி, பொருளாளராக கமல் சர்க்கார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒற்றுமைத் தேரின் அச்சாணி
சோசலிசம் என்ற குறிக்கோளையும் வர்க்கப் போராட்டத்தையும் சிஐடியு தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வந்ததுடன் இவ்வுயரிய குறிக்கோள்களுக்கு விரோதமான அனைத்து தத்துவங்களையும் அது எதிர்த்துப் போராடியும் வந்துள்ளது. சில நேரங்களில் சில குறிப்பிட்ட நிலைபாடுகளை எடுக்கும் பாது அது தனித்து நின்ற போதிலும் கூட தொழிலாளர்களின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அது எப்போதும் கைவிட்டதேயில்லை.துவக்க மாநாட்டிலேயே சிஐடியு ஒன்றுபட்ட தொழிற்சங்கஇயக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. இந்தியஅரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் 1971 ஆம் ஆண்டில்தொழிற்சங்களுக்கிடையான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபொழுது சிஐடியு அதனை தடுத்துநிறுத்தியது மட்டுமல்ல, தொழிலாளி வர்கக்ம் சந்தித்து வந்தபல்வேறு பிரச்சனைகள் மீதும் பல்வேறு கூட்டு இயக்கங்களை நடத்தியது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை உறுதியோடு எதிர்த்தது. இந்திரா காந்தி அரசின்நெருக்கடி நிலை ஆட்சியை எதிர்த்து உறுதியோடு போராடியது. தேசிய உயர்மட்ட அமைப்பின் ஊசலாட்டங்களை எதிர்த்தும் போராடியது.சிஐடியு உதயமானபோது நம்மை பிளவுவாதிகள் என்றுஏசியவர்கள் உண்டு. ஒற்றுமைக்காக நாம் கரம் நீட்டியபோது உதறித்தள்ளி உதாசீனப்படுத்தியவர்களும் உண்டு.ஆனால், இன்று இந்திய தொழிலாளி வர்க்கத்தின், தொழிற்சங்க இயக்கத்தின் ஒற்றுமை தேருக்கு அச்சாணியாய்த் திகழுவது சிஐடியு என்பதை மறுப்பவர் எவரும் இல்லை.தொழிற்சங்க ஐக்கிய கவுன்சில் (யுசிடியு) தேசிய போராட்டக் குழு (என்சிசி) ஸ்பான்டரிங் கமிட்டி, வெகுஜன ஸ்தாபனங்களின் தேசிய மேடை என்று மாறி வரும் காலச் சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான புதிய புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டதில் சிஐடியு பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி செயலூக்கமுள்ள முன்னணி அமைப்பாகப் பாடுபட்டு வந்துள்ளது.
அனைத்து தேசிய மற்றும் சர்வதேச நடப்புகளின் மீதுசிஐடியு எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை நடத்தி வந்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள், சோசலிசத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் சிஐடியு பங்கு கொண்டுள்ளது. பல நேரங்களில் சிஐடியு தனியாகவே பிரச்சாரம் செய்ய நேர்ந்துள்ளது. இருந்த போதிலும் சிஐடியுஎப்போதுமே தொழிலாளர்களின் பக்கத்திலேயே இருந்துவந்துள்ளது. அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள்மற்றும் தேசவிடுதலை போராட்டங்கள் ஆகியவற்றிற்கு சிஐடியு அளித்து வந்த ஆதரவானது பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளைப் பெரிதும் கவர்ந்ததோடு அனைத்துகண்டங்களிலும் சிஐடியுவின் தொடர்புகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (WFTU) தலைமைப் பொறுப்பில் அங்கம்வகித்து செயல்பட்டு வருகிறது.
புதிய தாக்குதல் - வலுவான போர்
1990-ல் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த தாராளமய கொள்கைகள், நரேந்திர மோடியின் தலைமையிலான 7 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமலாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் இந்தியாவை மரண படுகுழியில் தள்ளும் வேளையில் மோடி அரசுகொரோனாவை பயன்படுத்தி நிலக்கரி, கனிமம், விமான நிலையங்கள், விண்வெளி, பாதுகாப்பு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி, காப்பீடு போன்றவற்றில் தனியார்மயத்தைபுகுத்தும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர் நல சட்டங்களுக்கு வேட்டு வைப்பது, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவது, வேளாண் தொழிலை நிர்மூலமாக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது என மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்த தாராளமய காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளி கூட்டத்திற்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. நவீன தொழிற்சாலைகளில் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் காண்ட்ராக்ட், கேசுவல், பயிற்சியாளர் என்றபெயரில் பெரும் உழைப்புக் கொள்ளை நடக்கிறது. எந்த சட்டமும் இங்கே நுழைவதில்லை. அரசு இயந்திரம் இவர்கள் முன்பு கூனிக்குறுகி நிற்கின்றன. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்காக ஒரு முதலாளி கூடதண்டிக்கப்பட்டதில்லை. அந்த அளவுக்குசட்டத்தில் சல்லடை, சல்லடையாக ஓட்டைகள், ஒழுகல்கள்,1960 களைப் போன்ற ஒரு வெடிப்புச் சூழல் தொழிற்துறையில் நாடு முழுவதும் நிலவுகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான இந்த புதிய தாக்குதலை எதிர்த்து சிஐடியு முன்வரிசைபோராளியாய் நிற்கிறது.
நவீன தாராளமய கொள்கைகளை சிஐடியு எதிர்கொண்டது. ஒற்றுமைக்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண் டது. ஒன்றுபட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. நவீன தாராளமயக் கொள்கையை எதிர்த்து 1991 நவம்பர் 29-இல் முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கி 2020 நவம்பர் 26 வரை20 வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி அரசின் கொள்கைகளை பின்னுக்கு தள்ளியதில் மத்திய தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மகத்தானது. இதில் சிஐடியுவிற்கு முக்கிய பங்குண்டு என்பதை நாடு நன்கு அறியும்.இதேபோல முறைசாரா தொழிலாளர்கள், சுய தொழில்செய்து பிழைப்போர், சிறு, குறுந் தொழில் உடமையாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் என்றுள்ள ஒவ்வொருபிரிவினரும் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உருப்படியான சமூக பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு மறுக்கிறது. இந்த வஞ்சிக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக சிஐடியுவின் போராட்டங்கள் தீவிரப்பட்டு வருகிறது.
மதிப்பிழந்த பிரதமர்
இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பிணவறையில் இடம் போதாமல், சடலங்கள் வெட்ட வெளியில் போடப்படுகின்றன. மயானங்களில் சடலங்களை எரிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை, ஆற்றங்கரை, மைதானங்கள், மேம்பாலத்தின் கீழ் என பல இடங்களில் கொத்துகொத்தாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. எரியூட்ட வசதியில்லாத மக்கள் சடலங்களை ஆற்றில் தூக்கி வீசுகின்றனர். இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் 2வது அலையைகட்டுப்படுதத மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததுதான் என சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பாதிப்பு குறையத் தொடங்கியதும் கொரோனாவை வென்றுவிட்டதாக மத்தியஅரசு மார்தட்டிக் கொண்டது.இந்தியாவில் கொரோனா 2வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது, அது தீவிரமானால் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் என ஜனவரி மாதமே இந்திய விஞ்ஞானிகளும் சர்வதேச விஞ்ஞானிகளும், மத்திய அரசை எச்சரித்தனர். ஆனால் வழக்கம் போல் மத்திய அரசு தனது பிடிவாதத்தால் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல கும்பமேளா நடத்தி லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைய வழிகோலின.தற்போது கொரோனாவை கையாளும் பெரும்பான்மை பொறுப்புகளை மாநிலங்களின் பக்கம் தள்ளி விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. பெரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகளுக்கும், தடுப்பூசிக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மறுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் மேலும்மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
“ரோம் நகரம் பற்றியெரிந்தபோது நீரோமன்னன் பிடில் வாசித்தான்” என்று படித்திருக்கிறோம்.அப்படித்தான் பிரதமர் மோடியும் நாட்டில் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவில் செத்து மடியும் போது அதை தடுககும் நடவடிக்கையில் இறங்காமல், 20,000 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றம், பிரதமருக்கு மாட மாளிகை கட்டும் திட்டத்தில் பேரார்வம் காட்டி வருகிறார்.நம் நாட்டிற்கு தற்போது ஆடம்பர மாளிகை தேவையில்லை. மக்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை தேவை. இதனை மத்திய மோடிஅரசு உணர்ந்து உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நமது பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கான நிதி ஒதுக்க வேண்டும், மக்களின்வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச உணவு தானியங்கள், மாதந்தோறும் ரூ.7,500 நிவாரணத் தொகை காலதாமதமின்றி வழங்க வேண்டும். முன் களப்பணியாளர் களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி மேற்கொள்ளப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டிவரியிலிருந்து விலக்களிக்க வேண்டும், இதில் தாமதம் கூடாது, மத்தியஅரசு இப்பணிகளை மேற்கொள்ள இந்தியஉழைப்பாளி மக்கள் நிர்பந்தம் செலுத்துவோம், கொரோனாவை வெல்வோம்! தேசம் காப்போம்!
*******************
கடந்து வந்த பாதை
* குறைந்தபட்ச போனசை 4 சதவீதத்திலிருந்து 8.33 சதவீதமாக உயர்த்துவதற்கான இயக்கம், போனஸ் கணக்கிடுவதற்கான உச்ச வரம்பை உயர்த்த நடத்திய போராட்டம்,
* 1974 ரயில்வே தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம்,
* கட்டாய சேமிப்பு என்ற பெயரில் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் கொணரப்பட்ட ஊதிய முடக்க திட்டத்தை எதிர்த்த இயக்கம்
* 1975 - 76 அவசர கால கொடுங்கோன்மையின் குவிமுனைத் தாக்குதலை சந்தித்த எதிர் நடவடிக்கைகள்
* பூதலிங்கம் குழுவின் மோசமான பரிந்துரைகளை தாங்கி வந்த புதிய ஊதியக் கொள்கை என்ற பேராபத்தை முறியடித்த இயக்கம்
* புதிய தொழிலுறவு மசோதா என்ற பெயரில் ஜனதா ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட தொழிலாளர் விரோத உரிமை பறிப்புத் திட்டத்தை ஊதித் தள்ளிய போராட்டம்
* மாற்று நிலை கொண்டுவிட்ட பொதுத்துறைத் தொழிலாளருக்கான பஞ்சப்படி உயர்த்துவதிலிருந்து தொடங்கி இன்று வரை பொதுத்துறையையும், தொழிலாளர் நலன்களையும் பாதுகாக்கும் கூட்டு இயக்கம்
* புதிய பொருளாதாரக் கொள்கையையும், காட் ஒப்பந்தத்தையும் எதிர்த்த தொடர்ச்சியான போராட்டங்கள்
* குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமை போன்றவற்றிற்காக நடத்திய எண்ணற்ற இயக்கங்கள்
* 40 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்திய, இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய எண்ணற்ற போராட்டங்கள்
* உழைக்கும் பெண்கள் நலனுக்காக நடத்திய தொடர் இயக்கங்கள்
* விவசாயிகள் மற்றும் இதர பகுதி மக்களின் கோரிக்கைக்காக நடத்திய ஆதரவு இயக்கங்கள்
* அனைத்திந்திய அளவிலான பேரணிகள், சிறப்பு மாநாடுகள், பொது வேலை நிறுத்தங்கள், பந்த் என்ற எண்ணற்ற கூட்டு இயக்கங்கள்
என ஐம்பது ஆண்டுகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் ஈடுபட்ட அனைத்துப் போராட்ட இயக்கங்களிலும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுபடுத்தி பங்கேற்க வைத்ததில் சிஐடியுவின் பணி மகத்தானது.
கட்டுரையாளர் : வி.குமார், மாநில துணை பொதுச் செயலாளர், சிஐடியு