articles

வேலைக் கூலியைக் குறைத்து விட்டு நாட்களை அதிகரித்ததாய் நாடகம்! - ப.முருகன்

வேலைக் கூலியைக் குறைத்து விட்டு நாட்களை அதிகரித்ததாய் நாடகம்! 

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றியபோது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி - ஜி ராம் ஜி’ திட்டத்தைக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஆளும் தரப்போ இது ஊழலை ஒழிக்கும் திட்டம் என முழங்குகிறது. கடந்த 11 ஆண்டுகளாக நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்த மோடி அரசு, இப்போது 125 நாள் வேலை என்று புதிய திட்டத்தை விளம்பரப்படுத்துகிறது. இது கிராமப்புற ஏழைகள் மீதான பாசமா அல்லது தேர்தல் காலக் குயுக்தியா? பெயர் மாற்றமும் பின்னணியும் இந்திய கிராமப்புறங்களில் விவசாய வேலைகள் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் கூட கிடைப்பதில்லை.

இதைக் கருத்தில் கொண்டு, இடதுசாரிக் கட்சிகளின் அழுத்தத்தால் 2005-இல் கொண்டு வரப்பட்டதே நூறு நாள் வேலைத் திட்டம். காந்தியின் பெயரில் இருந்த இத்திட்டத்தை எப்படியாவது ஒழிக்க நினைத்த ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணி, இப்போது ‘ராம்’ என்ற பெயர் வருமாறு ‘ஜி ராம் ஜி’ எனப் பெயர் சூட்டியுள்ளது. 100 நாளை 125 நாளாக உயர்த்திவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இவர்கள், கடந்த 11 ஆண்டுகளில் சராசரியாக 55 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கூலி உயர்வு இல்லை; வேலை நேரம் அதிகரிப்பு உண்மையிலேயே கிராமப்புற ஏழைகள் மீது அக்கறை இருந்தால், பல ஆண்டுகளாக மக்கள் கோரி வரும் “200 நாள் வேலை; 700 ரூபாய் ஊதியம்” என்ற கோரிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், புதிய திட்டத்தில் கூலியை உயர்த்துவதற்குப் பதிலாக, மறைமுகமாகக் குறைப்பதற்கான வழிகளே உள்ளன.  அதைவிடக் கொடுமை, வேலை நேர அதிகரிப்பு. பழைய சட்டத்தில் 7 மணி நேரமாக இருந்த வேலை, தற்போது 8 மணி நேரமாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 19(ஆ)-ன் படி இதனை 12 மணி நேரம் வரை நீட்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூலியை உயர்த்தாமல் வேலை நேரத்தை அதிகரிப்பது என்பது கூலியைக் குறைப்பதற்குச் சமம் இல்லையா? மாநிலங்கள் மீது சுமத்தப்படும் சுமை முந்தைய திட்டத்தில் 100 நாள் வேலைக்கான முழு நிதியையும் ஒன்றிய அரசே வழங்கியது. ஆனால், புதிய ‘ஜி ராம் ஜி’ திட்டத்தில் 40 சதவீதத் தொகையை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் எனச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. வரிகள் அனைத்தையும் வசூலித்துக்கொண்டு, மாநிலங்களைச் சிற்றரசுகளைப் போலக் கையேந்த வைக்கும் கூட்டாட்சிப் படுகொலையின் ஒரு பகுதியே இது. நிதிப் பற்றாக்குறையைக் காட்டி வேலை நாட்களைக் குறைப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாக இருக்கிறது.  

இத்திட்டத்தில் 60 நாட்களுக்கு வேலை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆறு மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும் சூழலில், இந்த 60 நாள் விடுப்பு என்பது கிராமப்புறப் பண்ணையார்களிடமும் ஆதிக்க சக்திகளிடமும் ஏழை மக்கள் குறைந்த கூலிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசு முழு நிதியையும் வழங்கி, மாநிலங்கள் கூடுதல் கூலியை நிர்ணயம் செய்யும் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமே தங்களுக்கு வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். சீதாவை ஏமாற்ற வந்த மாரீசமானைப் போல, ‘ஜி ராம் ஜி’ திட்டத்தைக் காட்டி இந்திய மக்களை ஏமாற்ற முடியாது. ஓராண்டு காலம் போராடி வெற்றி பெற்ற விவசாயிகளைப் போலவே, விவசாயத் தொழிலாளர்களும் இந்த மக்கள் விரோதத் திட்டத்தைப் பின்வாங்க வைப்பார்கள் என்பது உறுதி.