யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது ஒரு பழமொழி. இது போன்றே பொருளாதார ஆய்வு அறிக்கை வரும் முன்னே நிதிநிலை அறிக்கை வரும் பின்னே என்ற நிலை ஒரு காலக்கட்டத்தில் இருந்தது. பலஐரோப்பிய நாடுகளில் இதே போன்று பொருளாதார ஆய்வு அறிக்கைகள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. ஒன்றிய அரசின் 2020- 21 ஆம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கை 300பக்கங்களில் ஒரு கதையைப் போன்ற வடிவத்தைப் பெற்றுவிட்டது.இக்கதையில் நிதித்துறையின் புள்ளிவிவர கோயபல்ஸ்கள் சொல்லும் தகவல்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இந்தியாவில் பிரதமர் நேரு காலத்தில் மொரார்ஜி தேசாய், பிரதமர் இந்திரா காலத்தில் சி.சுப்பரமணியம் போன்றோர் தங்களின் தனித்த ஆளுமையால் அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துஇருந்தனர். பிரதமர் மன்மோகன்சிங்கே உலக வங்கியின் உயர் அலுவலராகப் பணியாற்றியவர்தானே. இவர்கள் போன்றவர்கள் நேரு கடைப்பிடித்த சுயச் சார்பு பொருளாதாரக் கருவைச் சீர் குலைத்தனர். அதன் நீண்ட கால எதிர்மறை நிகழ்வுகளை மோடி ஆட்சியில் முழுமையாகக் கண்டு வருகிறோம்.
கேள்விக்குறியான நம்பகத்தன்மை
நாட்டின் தற்போதைய உண்மையான பொருளாதாரக் கூறுகளைக் கணக்கிட்டால், இந்த ஆண்டு பொருளாதார நிதி நிலை அறிக்கைகளின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. இன்று இயங்கி வரும் அதிகார வர்க்கத்தின் உயர்அலு வலர்கள் உள்நாட்டு- பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாகவே மாறிவிட்டனர். மக்களின் தேவைகளை அறிந்து புதிய அணுகுமுறைகளை, மாற்றங்களை அறிமுகம் செய்ய விரும்பாதவர்கள். இதன் விளைவு, நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பொருளாதார ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசால் வெளியிட முடியவில்லை. ஒன்றிய அரசின் ‘திட்டம்’ இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ஆய்வு அறிக்கையைப் புதிய அணுகுமுறையில் உருவாக்கப்பட வேண்டும் எனப் பல விரிவான கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
எப்படிப்பட்ட மாற்றங்கள்?
பொருளாதாரத் துறையில் சிறியது அழகானது(Small is Beautiful) எனக் குறிப்பிட்ட அறிஞர்களில் ஷு மேக்கரின் படைப்பு சிறந்ததாகும். அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும்,இயற்கையைப் போற்றும் காந்திய சிந்தனைகளைக் கொண்டு செல்லும் சிறந்த நூலாகும். அவ்வகையில் தான் பொருளாதார ஆய்வு அறிக்கையும் அமைய வேண்டும். சான்றாக, 2017 -18, 2018-19, 2019-20 ஆகிய மூன்று ஆண்டுகளில் துறை வாரியாக அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவு, விதிக்கப்பட்ட வரிகள், அரசிற்குக் கிடைத்த வருவாய், மாநிலங்களுக்கு நிதிக்குழு அளித்த பரிந்துரைகளின் படி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, பெற்ற கடன் அளவு, செலுத்திய வட்டி, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், சந்தித்த இடர்பாடுகள் வரும் ஆண்டுகளில் எட்டப்படவேண்டிய நிதிப் பொருளாதார இலக்குகள் ஆகியவை பற்றிய தகவல்களை மறைக்காமல் புள்ளிவிவரங்கள் வழியாக அளித்தால் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பயன் உள்ளதாக அமையும்.
பொதுத் தளங்களில் கருத்து விவாதங்கள் புதிய ஒளியைப் பெறும். இத்தகைய கூறுகளை ஒன்றிணைத்துப் பல மேலை நாடுகளில் சுருக்கமாக வெளியிடப்படுகிற, பொருளாதார ஆய்வு அறிக்கைகளை ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள் பார்த்தார்களா? சிறிய அளவில் சிறந்த முறையில் பொருளாதார ஆய்வு அறிக்கையை இனியாவது ஒன்றிய அரசின் நிதித்துறையினர் வெளியிடுவார்களா?
சிந்தனையாளர் மார்க் ட்வைன், புள்ளிவிவரங்கள் பற்றிய ஒரு கூற்றை 1907 ஆம் ஆண்டில் புகழ் பெறச் செய்தார். யாரால் அந்தக் கருத்து முதன் முதலில் சொல்லப்பட்டது என இன்று வரை அறிய முடியவில்லை. ஆனால், பலரால் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. என்ன அந்தக் கருத்து? “பொய்கள், மோசமான பொய்கள் புள்ளிவிவரங்கள்.” (Lies, damned lies, Statistics) இத்தகைய புள்ளிவிவரங்கள் தான் இந்த நிதியாண்டில் இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட அறிக்கைகளில் இழையோடி இருக்கின்றன என்ற ஐயம் எழுகிறது.
ஒரு சான்று வழியாக, கற்பனை வடிவத்தில் இக்கருத்திற்கு விளக்கம் பெறலாம். முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப், மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பெற்று, நாடு திரும்பினார் என ஒரு செய்தி வெளியிடப்பட்டால், அச்செய்தி மோசமான பொய்யிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால் நிதி மட்டும் இன்றுவரை சேரவில்லை.
மேற்குறிப்பிட்ட இரண்டு புள்ளிவிவரங்களும் சரியானவை தானே! ஆனால் டிரம்ப் சிகிச்சை பெற்றார் என்பது ஒரு கற்பனை. இத்தகைய கற்பனைத் தோற்றத்தைப் புள்ளிவிவரங்களை வைத்துச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைப்பதைத்தான் மோசமான பொய் என அடையாளப்படுத்தினார்கள். விவரங்களை வளைத்து அரசியல் காரணங்களுக்காகக் கூட்டி, குறைத்து, சிலவற்றைச் சில நேரங்களில் மறைத்துக் காட்டும் போக்கு நீடித்ததால்தான் புள்ளிவிவரங்கள் என்ற உயர்ந்த அளவீட்டுக் கருவி இந்தப் பழியைச் சுமக்கநேரிட்டது.
ஓய்வூதியர்கள் கதி?
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு வருமான வரி விவரங்களை அளிக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மூத்த வயதினருக்கான தேசிய அளவிலான ஒரு கொள்கையை ஒன்றிய அரசு 1999 சனவரி மாதத்தில் அறிவித்தது. 60 வயது நிரம்பியவர்கள் மூத்த குடிமகன்கள் என வரையறை செய்யப்பட்டது. தனியார், தன்னாட்சி நிறுவனங்களில் மருத்துவம் உட்படப் பல தரப்புப் பணியாளர்களுக்கு 62, 65 என்ற வயது வரம்புகள் கொண்டு வரப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் சமூகப் பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றுபவர்களுக்கு 67 வயது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் 75 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? மக்கள் தொகையில் 2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட 75 வயதினரின் எண்ணிக்கை 2.3 விழுக்காடு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் 0.7 விழுக்காடு கூட வரமாட்டார்கள்.
வருமான வரி செலுத்தும் 75 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வூதியம் பெறுபவர்கள் சில லட்சம் பேருக்கு மட்டுமே இந்தச் சலுகை தரப்படும். அப்படி என்றால் மூத்த குடிமகன்களுக்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு வழங்கப்படும் தொடர்வண்டி துறை, மற்ற அமைப்புகள் அளிக்கும் சலுகைகளுக்கும், வருமான வரி சட்ட அணுகுமுறையும், 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வருமான வரி அணுகுமுறையும் வெவ்வேறு ஆகிவிடுகிறதல்லவா! இதுவும் ஒரு பொய் தானே. இதுவும் ஒரு வகையான பாகுபாடு தானே. 60 வயதைக் கடந்த அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களும் வருமான வரி விபரங்களை வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதுதானே சரியான நிலைப்பாடு. பொதுநிதியியலில் சுட்டப்படும்( Tax equity) நெறி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதே! முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான் நிதி நிலை அறிக்கையா?
கொழுத்த முதலாளிகள்
நிதி அமைச்சர் நிர்மலா ஓய்வூதியம் பெறுபவர்களில் 75 வயது மேற்பட்ட பிரிவினருக்கு மட்டும் வரி விலக்குச் சலுகையை அளிப்பதற்கு இவ்வளவு கறார் காட்டுகிறார். ஆனால் கொரோனா தொற்றுநோய் காலத்தில் முதலாளிகளின் வருமானமும் சொத்தும் 35 விழுக்காடு வளர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளனவே. அம்பானி ஒரு மணிநேரத்தில் பல கோடி லாபம் பெறுகிறார் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லையா? ஒன்றிய அரசு இந்த கொழுத்த முதலாளிகளின் மீது வருமான வரியை, கார்ப்பரேட் வருமான வரியை ஏன் ஏற்றவில்லை? வருமானம் ஏற ஏற வருமான வரியும் ஏற்றப்படவேண்டும் என்பதுதானே நேர்முக வரிவிதிப்பின் அடிப்படை கூறு. (Proportional tax) மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை பொதுநிதியியலின் நெறிகளை முழுமையாகச் சிறிதும் கவலைப்படாமல் சிதைத்திருக்கிறது.
சந்தைக்குச் சென்று பாருங்கள்
நிதிநிலை அறிக்கையின் முதன்மையான நோக்கம் வேலைவாய்ப்பைப் பெருக்குவதும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பது தானே? (Price Stability with full employment) விலைவாசி உயர்வைப்பற்றி உண்மையாகக் கணக்கீடு செய்வதாக இருந்தால் சந்தைக்குச் சென்று பாருங்கள். திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த காலக்கட்டத்திலும் கூட நான் காய் கனி இறைச்சி உட்பட நுகரும் பொருட்களை வாங்குவேன் இன்றும்நான் தான் செல்கிறேன். இயங்கும் நடைமுறை பொருளாதாரத்தைக் களத்தில் நின்று அறியக் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். (Point to point inflation ) பெட்ரோல் எரிவாயு உணவுப் பொருட்கள் விலையை ஒவ்வொன்றாகக் கணக்கீடு செய்தால் இன்றைய விலைவாசி உயர்வு 18 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறது. ஒன்றிய அரசின் கடன் அளவு நாட்டின் ஒட்டுமொத்த பொருள் உற்பத்தியில் 90 விழுக்காட்டைக் கடந்து செல்கிறது. அதற்கான வட்டி பல லட்சம் கோடியைத் தாண்டிச் செல்கிறது. சிறு குறு தொழில்களுக்கு வழங்கிய கடன் உட்பட நிதி உதவிகள் பல கோடிகளில் சில லட்சம் தொழில்முயல்வோருக்குத்தான் சென்றுள்ளன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல கோடி பேர் ஊர்ப்புறங்களில் வறுமையின் கொடுமையில் வாழ்கிறார்கள்.
கொடுமையான வரிகளின் தாக்கம்
உண்மையில் பொருளாதார வளர்ச்சி 6 மாநிலங்களில் தான் ஏற்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசின் ஒட்டு மொத்த வரி வருவாயில் 60 விழுக்காட்டிற்கு மேல் இந்த மாநிலங்கள் தான் தருகின்றன. மக்களின் மீது மறைமுக வரியின் தாக்கம்மிக மிகக் கொடுமையானது. வருமான ஏற்றத்தாழ்வு எனும் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு அன்றாட வாழ்விற்குத் திண்டாடும் மக்களின் மீது ஏவப்படும் துல்லியத் தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது. இந்த 6 மாநிலங்களும் சரக்கு சேவை வரிவிதிப்பால்பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. எத்தனை மாதங்கள் எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிப்பார்கள். இதற்கு எல்லாம் முதன்மையான காரணம் ஒன்றிய அரசில் அளவிற்கு மீறிய அதிகாரங்கள் குவிந்து வருகின்றன. குவிக்கப்படுகின்றன. பொதுத்துறை அமைப்புகளை உருவாக்குவதற்குப் பல பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் நினைத்தால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அசையாச் சொத்துக்களை விற்பது நாட்டையே விற்கும் செயலைப் போன்றது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் இந்த நாட்டின் எதிர்கால சொத்துகள். எதிர்காலத்திற்குத் தேவையான சேமிப்புகள். பொருளாதார- நிதி பாதுகாப்புகள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது, மாநிலங்களின் உரிமைகளைக் காப்பது, உண்மையானகூட்டாட்சி இயலை வலிமைப்படுத்துவது போன்ற முதன்மையான செயல் திட்டங்களை நிறைவேற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 263ன் படி மாநிலங்களுக்கான (Inter-State Council) மன்றத்தைக் கூட்ட வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை அளித்துள்ள சலுகைகள் யானைப் பசிக்கு வழங்கிய ஒரு குவளை சோளப்பொறியாகும். சாயப்போகும் சந்தைப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தாது. பொருளாதாரப் பின்னிறக்கத்தால் பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வேலைவாய்ப்புகள் இன்றி வறுமை எனும் கொடுமை சிறையில் இருக்கிறார்கள் என பாஜக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உணராவிட்டால், உணர்த்தப்படும் காலமும் முறையும் கசப்பானதாக ஆகிவிடுமே.
கட்டுரையாளர் : பேரா.மு.நாகநாதன்