articles

img

ஆர்எஸ்எஸ் - ரவி அவர்களே, எது ஐரோப்பியச் சரக்கு? -சா.பீட்டர் அல்போன்ஸ்

எப்போது பேசினாலும், எங்கே பேசினா லும், என்ன பேசினாலும், எப்படி பேசி னாலும் “விவகாரமாகவே” பேசிவரும் ஆளுநர் ரவி சமீபத்தில் குமரி மாவட்டத்தில் வித்யா ஜோதி வித்யா பூஷன் பட்டமளிப்பு விழாவில்  “மதச்சார்பின்மை’’ குறித்து பேசிய கருத்துக்கள் அநேகருடைய கவனத்தினை ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. 

“மதச்சார்பின்மை எனும் கோட்பாடு ஐரோப்பிய சரக்கு; நமது பாரத தர்மத்திற்கு ஒவ்வாதது, இந்தியா வுக்கு தேவையற்றது” என்று ஒரு பெரிய அரசியல் சிந்தனையாளர் போல அவர் பேசியிருந்தாலும் அந்த வார்த்தைகள் அவரது “சொந்த சரக்கல்ல”. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிதாமகரும் அந்த  இயக்கத்திற்கான கொள்கைகளையும், தத்துவங் களையும் வடிவமைத்தவருமான எம்.எஸ். கோல்வால்கருடைய கருத்துக்கள் தாம் அவை என்பதை அவராலேயே மறுக்கமுடியாது. கோல் வால்கர் எழுதிய “சிந்தனைக் கொத்து” என்ற நூலைப்படித்தவர்களுக்கு ஆர்.என்.ரவி சொல்லி வரு கின்ற எந்த செய்தியும் புதிதல்ல என்பது தெரியும். 

இந்தியாவே உலகுக்கு அறிமுகப்படுத்தியது

உண்மையில் மதச்சார்பின்மை என்பது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டது மட்டுமே. அரசு  நிர்வாகத்தில் மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை என்பதும்,  அரசியல் சாசன சட்டப்படி மட்டும்தான் அரசு செயல்படும் என்பதும், மதத்தின் அடிப்படை யில் தன் குடிமக்களை வேறுபடுத்திப் பார்க்காது என்பதும்தான் நமது அரசியல் சட்டம் சொல்லும் மதச்சார்பின்மையின் தாத்பரியம். இந்த கருத்தியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே நமது நாடுதான். மதத்தையும் அரசையும் ஒன்றாகச் செயல்பட அனு மதிக்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஆட்சி நடத்தி யவர்கள் இந்திய மன்னர்கள் மட்டுமே! இதற்கு நேர் மாறாக ஐரோப்பிய  நாடுகளில் மதகுருமார்கள்தாம் மன்னர்களை ஆட்டிப்படைத்து வந்தார்கள்.

ஒரு காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு முடிசூடும் அதிகாரம் போப்பாண்டவரிடம் மட்டும்தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து முடிசூடாவிட்டால் மக்கள் அந்த மன்னர்களை மன்னராக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யார் மிக அதிகமாக பொன்னும் பொருளும் கொடுத்தார்களோ அவர்களுக்கு போப்பாண்டவர் முடிசூட்டிய சம்பவங்களும் நடந்த துண்டு. இஸ்லாமிய மன்னர்களுக்கும், போப்பாண்ட வரின் படைகளுக்கும் இடையில் நடந்த “சிலுவைப் போர்கள்” பற்றி ஆளுநர் ரவி அறிவாரா?

அசோகர் - பாபர் - ஹர்ஷர் - குருநானக்

ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தவர் பேரரசர் அசோகர். புதிய மதங்களை, மார்க்கங்களை போதித்த  சாக்ரட்டீஸ் போன்றவர்களை அந்நாட்டு அரசியல் அதி கார மையங்களில் இருந்தவர்கள் விஷம் கொடுத்து கொன்றனர். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். முகமது நபியை கல்லால் எறிந்து ஊரைவிட்டே விரட்டினர். ஆனால் இந்திய நாட்டு  மன்னர்கள் புதிய மார்க்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்திய புத்தரையும், மகா வீரரையும் ஆதிசங்கரரையும் தடை செய்யவில்லை. அவர்கள் நாடு முழுவதும் வலம் வந்து தங்களது புதிய  மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கிய தோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கினர்.

பேரரசர் பாபர் தனது மகனுக்கு எழுதிய உயில் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. “என் அருமை மகனே! இந்துஸ்தான் என்ற இந்த தேசத்தில் பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாட்சியை நம் கரங்களில் தந்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். நம் இதயத்தில் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் அகற்றிவிடவேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது கலாச்சார, பண்பாட்டு மரபுகளின்படி நீதி வழங்கவேண்டும். பசு வதையினை அனுமதிக்காதே. அரசு நிர்வாகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சேர்த்துக்கொள். நம்மு டைய  ராஜ்ஜியத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வித சேத மும் வராமல் பார்த்துக்கொள்” என்று அவர் அந்த உயில் மூலம் தனது மகனுக்கான அறிவுரைகளை வழங்கு கிறார்.

ஆறாவது நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசர் ஹர்ஷவர்த்தனர், பிரயாகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மதங்களையும் சார்ந்தவர்களை அழைத்து சர்வமத பிரார்த்தனைகள் நடத்திய வரலாற்றையும் ஆளுநர் ரவி தெரிந்து கொள்ள வேண்டும். சீக்கிய குருவான குருநானக் இந்துக்களையும் இஸ்லாமியர் களையும் ஒருங்கிணைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சீக்கிய மத நூலான “ஆதி கிரந்தத்தில்” சீக்கிய குருக்களின் படைப்புகளோடு இந்து மற்றும் இஸ்லாமிய புனிதர்கள் இயற்றிய படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அசோக சக்கரவர்த்தியின் 12ஆவது கல்வெட்டில் தனது குடிமக்கள் தங்களுக்குள் மத வேறுபாடுகளை பார்க்கக்கூடாது என்றும் அனைத்து மதங்களையும் மதிக்கும் நல்ல பண்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளார். 18 மற்றும் 19ஆவது நூற்றாண்டுகளில் வாழ்ந்த மராட்டிய மற்றும் சீக்கிய மன்னர்களும் தங்களது ஆட்சியையும், ராணுவத்தையும் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களை வைத்தே நிர்வாகம் செய்துள்ளனர் என்பது வரலாறு.

அடைக்கலம் கொடுத்து ஆதரவளித்த நாடு 

நமது தேசத்தின் கலாச்சார மரபணுக்களில் மண்டிக்கிடக்கும் மனிதநேயத்தையும், மாற்றாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அண்டி வந்தவரை அரவணைக்கும் தோழமையையும், அனைத்து மதங்களையும் போற்றி மதிக்கும் பண்பையும் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த அனைத்து மதங்களின் மாமன்றத்தில் உரையாற்றிய அருளாளர் விவேகானந்தர் எடுத்துரைத்தார்.

“அகில உலகிற்கும், சகிப்புத் தன்மையையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை யும் கற்றுக் கொடுத்த ஒரு மதத்தைச்சார்ந்தவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். உலகில், மதத்தின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளான அனைத்து நாட்டு மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதர வளித்த நாட்டைச் சார்ந்தவன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. ரோமானிய பேரரசின் அடக்கு முறை யால் யூதர்கள் மிரட்டப்பட்டு அவர்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்ட அதே ஆண்டு உயிருக்கு பயந்து எங்களது தென் இந்தியாவுக்கு அவர்கள் அடைக்கலம் தேடிவந்த வேளையில் பாசத்துடன் அவர்களை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நாடு  எங்கள் நாடு. உலகெங்கும் அழிந்து போன சௌராஷ்டிர மதத்தை முழுமையாக அழிந்து விடாமல் இன்றும் பாதுகாக்கும் நாடு எங்கள் நாடு. என்னுடைய சிறு வயதிலிருந்து நானும், என்னைப் போன்ற கோடிக் கணக்கான இந்தியர்களும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் சொல்லும் வேத மந்திரத்தை இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.

“பரந்த நிலப்பரப்பில் பல இடங்களில் தோன்றும் நீரோடைகள் பலப்பலவாக இருந்தாலும் அவைகளில் வடியும் நீரெல்லாம் எப்படி ஒன்றாகி ஒரே மகா சமுத்திரத்தில் கலக்கிறதோ, அதைப்போல எங்கள் இறைவனே! மனிதர்களாகிய நாங்கள் பெரிதும் சிறிது மான பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும் இறுதியில் உன்னிடமே சங்கமிக்கிறோம்” என்று  விவேகானந்தர் பேசி முடித்தவுடன் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் விழி நீர் ததும்ப கைகளைத்தட்டி ஆர வாரித்த காட்சியை வரலாறு ஒரு நாளும் மறக்காது.

மிகப்பெரிய சவால் எது?

நமது முதல் பிரதமர், மதச்சார்பின்மையின் மாண்பிற்கு இலக்கணமாக ஆட்சி செய்த பண்டித  நேரு அவர்களை வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார். இந்திய நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றுள்ள உங்களை எதிர் நோக்கியுள்ள சவால்களில் எதனை மிக முக்கியமானதாக பார்க்கின்றீர்கள்? வறுமையா? அறியாமையா? அடிப்படை வசதிகள் இல்லாமையா? என்று கேட்ட போது நேரு அவர்கள் சொன்ன பதிலை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

“மிகுந்த மதநம்பிக்கை கொண்ட மக்கள் மிக அதிகமாக வாழும் இந்த தேசத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை உருவாக்கி நடத்துவதுதான் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால்” என்று நேரு சொன்னார்.

மிக அதிகமான மதநம்பிக்கை கொண்டவர்கள் எந்த நாட்டு மக்கள் என்றறிய சிகாகோ பல்கலைக் கழகம் ஒரு ஆய்வினை நடத்தியது. அதில் முதல் இடத்தை பெற்றவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். அடுத்த இடம் இந்தியாவுக்கு. தங்களது மதங்களின் பேரில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த போதிலும் மற்ற மதங்களையும் மார்க்கங்களையும் மதித்துப் போற்றுகின்ற பண்பு இந்தியர்களின் மரபணுக் களில் இயற்கையாகவே இருப்பதுதான் நமக்கு இருக்கும் மிகப்பெரிய வலிமை.

ஆனால் இன்று பெரும்பான்மைவாதத்தை முன்னெடுத்து வாக்கு வங்கி அரசியலை நடத்தும் வலதுசாரி பாசிச மதவாத சக்திகள் “மதச்சார்பின்மை” என்பது மதச்சிறுபான்மையினரிடம் வாக்குகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு என்று நாள்தோறும் இடைவிடாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

140 கோடி மக்கள், 600 மொழிகள், 6000க்கும் அதிக மான இனக்குழுக்கள் மற்றும் சாதிகள்- 1947இல்  குண்டூசி கூட தயாரிக்க முடியாத நாடு- அமெரிக்கா வின் பிஎல் 480 நிதியம் மூலம் பெறுகின்ற கோதுமை யை வைத்துத்தான் மக்கள் பசியாற வேண்டியநிலை.

இன்று 75 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையினை தொடு வதற்காகக் காத்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். உலகின் மிகப் பெரிய செயல்படும் ஜனநாயகம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

இந்திய இளைஞர்களை வரவேற்க உலக நாடுகள்  கரம் விரித்து காத்திருக்கின்றன. உலக நாடுகளில் மிக அதிகமாக வாழ்கின்ற புலம்பெயர்ந்த மக்களில் இந்தி யர்கள்தாம் முதலிடத்தில் இருக்கின்றனர். வெளிநாடு களில் வாழும் அவர்கள் உழைத்து அனுப்பும் டாலர்கள்தாம் நமது அந்நிய செலாவணி கரு வூலத்தை ஒவ்வொரு நாளும் நிரப்புகின்றன. இவை அனைத்திற்கும் காரணம் சுதந்திர இந்தியாவை தங்களது கனவுகளில் தேக்கி நிஜங்களாக உருவாக்கிய நமது முன்னோர்கள் தொலைநோக்கு பார்வையுடன் “மதச்சார்பற்ற நாடாக” இந்தியாவை உருவாக்கியதுதான். நம்மோடு சுதந்திரம் பெற்று,  ஒரு மதம் சார்ந்த நாடாக தன்னை அவதானித்துக் கொண்ட பாகிஸ்தானின் நிலைமை என்ன என்பதை  ஆளுநர் ரவி போன்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ரவியின் கருத்துதான்  ஐரோப்பிய இறக்குமதி

சமீபத்தில் சவூதி அரேபியா பாகிஸ்தான் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மெக்காவில் பிச்சையெடுப்ப வர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர் களாம். பாகிஸ்தான் அரசு ஐஎம்எப் இடம் பிச்சை எடுக்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் மதத்தோடு அரசு நிர்வாகத்தை இணைத்து ஆட்சி நடத்தும் எந்த நாட்டிலும் முன்னேற்றம் இல்லை. வளர்ச்சி இல்லை. சமூக அமைதி இல்லை.  ஜனநாயகமும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை. மதச்சார்பின்மை என்பது சிறுபான்மை மக்களுக்கான “சமூகச் சலுகை” என்ற தவறான பிரச்சாரத்தை இந்திய இளைஞர்கள் விலக்கி ஒதுக்க வேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும், இளம் தலைமுறையினரின் எதிர்கால பாது காப்புக்கும் நாம் உருவாக்கி வைத்திருக்கும் “காப்பீடு”  என்பதில் தெளிவு வேண்டும். அது மட்டுமல்ல. மத நல்லிணக்கமும், மனித நேயமும், மாற்று தத்து வங்களின் சிறப்புக்களை ஏற்கும் பெருந்தன்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மண்ணில் விளைந்து நிற்கின்ற “கலாச்சார கருத்தியல்கள்” என்பதை அறியவேண்டும். உண்மை என்ன வென்றால் ஆளுநர் ரவி போன்றவர்களின் கருத்துக்கள் தாம் “ஐரோப்பிய இறக்குமதிகள்”. இவர்களின் முன் னோர்கள் இத்தாலியில் இருந்தும், ஜெர்மனியில் இருந்தும் இறக்குமதி செய்தார்கள்.

“மதச்சார்பின்மை” நமது மண்ணின் மாறாத பெருமை! அதுதான் நமது தேசத்தின் வலிமை!!

கட்டுரையாளர் : மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்.

சா.பீட்டர் அல்போன்ஸ்