articles

img

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை - பிரகாஷ் ராஜ்

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை - பிரகாஷ் ராஜ்

ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தில்லிக்கு சென்றி ருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள்... இப்போது சட்டமாகிவிட்டுள்ள, வக்பு திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்த ளித்துக் கொண்டிருந்தது. உமர் காலித்தை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகி றது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படி சமாளித்துக் கொண்டி ருப்பார்  என நினைத்தேன். அவருடைய பெற்றோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டேன். தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை நீங்கள்  அறிவீர்களா? அவரைப் பற்றிக் காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதை தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படி கண்டுகொள்ள முடியும்?

மகாத்மாவே  ‘தேச விரோதி’ ஆன கதை

இதற்காக நாம் கடந்த காலத்திற்கு மிக அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. அண்மைக்கால வரலாற்று உதாரணத்தை கவ னிப்பதே போதுமானதுதான். அகிம்சையை நோக்கி, நாட்டை ஒற்றுமைப் படுத்திய மனிதரான மகாத்மா காந்தி, மத நல்லி ணக்கத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலி யுறுத்தி வந்தார். தேசம் என்பது எல்லைக் கோடுகளால் ஆன ஒரு படம் அல்ல என்றும், (தேசம் என்பது) அதில் வாழும் மக்களே என்றும் அவர் நம்பினார்.  நாட்டின் எல்லா மக்களும் தம் விருப்பத்திற்குரிய மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதி யான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சார்ந்தி ருந்தாலும், எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், தேசம் அவர்களை சகோதர உறவில் பிணைக்கிறது என்றே அவர் நம்பினார். பிரிட்டிஷ் இந்தியாவில் உயிர் தரித்தி ருந்த அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் தனது மேற்கண்ட கருத்துக்களுக்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார் என்பதுதான் நகைமுரண். நமது நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே, காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேச பக்தராகவும் மாறிவிட்டார்கள். சமூகத்தைப் பிள வுக்குள்ளாக்குவதும், மத அடிப்படையில் வெறுப்பை விதைப்பதையுமே தம் வரலாற்றுத் திட்டமாகக் கொண்ட நபர்கள் தம்மை தேச பக்தர்களாக முன்னி றுத்துகிறார்கள். தேச பக்தர்களாக சுய பிரகடனம் செய்துகொள்ளும் இந்த நபர்கள் தம்முடைய வகுப்புவாதத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் எவரை யும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இப்படித்தாம் நம் காலத்தின் பிரகாசமான உள்ளம் கொண்டதோர் இளைஞர் உமர் காலித், தேச விரோதியாக மாற்றப்பட்டார்.

உயிர்ப்பு மிக்க எதிர் நீச்சல்

உமர் காலித் செய்த குற்றங்கள்தான் என்ன? பன்முகத்தன்மையை தமது இதயத் துடிப்பாகவும், ஆன்மாவாகவும் கொண்டுள்ளதாக நம்பப்படும் நமது அரசியலமைப்பினை அழிக்க முயற்சிப்போ ருக்கு எதிராகக் குரல் கொடுத்துச் சிறுபான்மை சமூ கங்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழங்குவது; இனவாத வெறுப்பைப் பரப்பி, அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவிகளை பலி கொள்வோ ருக்கு  எதிராகத் தெருவில் இறங்குவது. இறந்த மீன்  ஆற்றின் போக்கில் பயணிக்கும். நீரோட்டத்தை எதிர்த்து முன்னேற மீன்களுக்கு உயிர்  இருக்க வேண்டும், உமர் காலித் போல! பொய்க ளும், வெறுப்பும் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருக்க, அவற்றுக்கு எதிராக அவர் அச்சமின்றி  நீச்சல் அடிக்கிறார். காந்தியத்தின் உண்மையான வாரிசுகளிடம் இதைத் தவிர குறைவாக எதிர்பார்க்க முடியுமா? “சர்வாதிகாரத்தை எதிர்த்த  போராட்டம் எங்க ளால் தொடங்கப்பட்டதில்லை, எங்களைக் கொல்வ தால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது” என்று  மாவீரன் பகத் சிங் கூறினார். அந்த மரபைத்தான் உமர் காலித் தாங்கி உள்ளார். மாணவர் தலைவர் என்ற முறையில், உமர் காலித் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். சி.ஏ.ஏ சட்டம் நமது நாட்டை பிளவுபடுத்துவதையும், சகோதரத்துவத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பதை நோக்க மாகக் கொண்ட இந்த சட்டத்திற்கு எதிராக, பிப்ரவரி 2020 தலைநகர் தில்லி போராட்டங்களில் ஈடுபட்டது.  சட்டத்திற்கு ஆதரவான சக்திகள் இந்தக் களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, நிகழ்வுப் போக்கு கள் வன்முறையாக்கப்பட்டன. அமைதியாக நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. கும்பல் வன்முறை நடந்தது. இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். கும்பல் வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் கும்பல் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில், சட்டவிரோத நடவடிக்கை கள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் உமர் காலித்.

வெறும் 20 நிமிடங்கள் தான்...

அவருடைய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதி மன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் நிராகரித் துள்ளன. 2023 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவை யில் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வில்லை, விசாரணை கூட நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஐந்து ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருப்பது, அந்த அளவிலேயே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. “உமர் காலித் நிரபராதியே என்று நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தில் இருபது நிமிட விசாரணை மட்டுமே  எங்களுக்கு தேவை” என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், 2023 முதல் இப்போது வரை,  அவரின்  ஜாமீன் மனுவை விசாரிக்க அந்த 20 நிமிடங்க ளை ஒதுக்க உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை.

அற்புதமான நண்பர்கள்

உமர் காலித்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும், சிறையில் உமரை  அவர்கள் தவறாமல் சந்திப்பதாக என்னிடம் கூறி னார்கள். “வேலை நெருக்கடியான சூழலில் அதற்கு  எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.  உமரின் நண்பர், சிறையில் இருந்த அமீர் என்பவ ரின் கதையை என்னிடம் கூறினார். அமீர் சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் அடிக்கடி சென்று பார்த்து வந்தனர். அவர்களுடைய வறுமை, வாழ்க்கைப் போராட்டங்களின் காரணமாக அந்த அளவுக்குத் தொடர்ந்து செல்ல இயலாமல் போக, அமீரின் வலிமையை அது சிதைத்தது, மெல்ல மெல்ல உடையத் தொடங்கினார். எளிதாக ஜாமீன் பெற்றிருக்க முடியும் என்றாலும், அவர் 10 ஆண்டு கள் சிறையில் வாடினார். அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவின் வலி ஒருபுறம் இருக்க, சிறை ஒரு நபரின் தன்னம்பிக்கை யை சிதைத்து, மனித ஆன்மாவை உடைக்கிறது. அமீரின் துயர அனுபவமே உமரின் நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தியது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் “நாங்கள் உங்களுடன் இருக்கி றோம்” என்று சொல்ல அவர்கள் மாறி மாறி உமரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் தோழனுடைய உள வலிமையை, இரக்கமற்ற சூழ்நிலையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.

மிச்சமிருக்கும் நம்பிக்கை

உமரின் தாயார் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை வக்பு (திருத்த) மசோதா மீதான விவாதத்திற்கு சென்றிருந்தார். விரைவில் திரும்புவார்  என்றனர். பக்ரீத் பண்டிகை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. காலித்தின் தாயார் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார், மகன் உடன் இராத வலி அவரது கண்களில் ஆழமாக சேகரம் ஆகி இருந்தது. “என் மகன் விரைவில் விடுதலையாவான். நீதித் துறை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது”  என்றபடி எங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.  இதற்கிடையில், திரும்பி வந்துவிட்ட உமரின் தந்தை, தேநீர் தயாரித்து, எங்களுக்குப் பரிமாறி யபடி எங்களோடு அமர்ந்து பேசினார். நான் அவரிடம், “உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்” என்று சொன் னேன். “அவர் எந்தக் காரணத்திற்காகப் போராடி சிறை க்குச் சென்றார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவனுடன் இருக்கிறோம்” என்று  எங்க ளிடம் சொன்னார். நான் நெகிழ்ந்து போனேன். உமரின் நண்பர் ஒருவர் அவரது தந்தையிடம், “பாபா, உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்பு வோம். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்” என்றார். உமரின் தந்தை இறுக்கமான பார்வையுடன், “அவர் முன்னெடுத்த போராட்டத்திற்கான காரணிகள் இங்கே தில்லியில் உள்ளது. வேறு எங்காவது போய் ஏன் அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்?” என்று கேட்டார்.  அவ்வளவுதான். நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்குப் போராட்டமே சான்று. மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் போராட வேண்டும். நடைப் பிணமாக வாழ்வதில் என்ன பயன்?

உண்மையான தேசபக்தர்கள்

உமர் காலித்தும், அவரது பெற்றோர்களும்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டும் ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடவில்லை;  ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும் வாடுகிறது; நம் மதிப்புமிக்க வாழ்க்கைக் கான உரிமையும், அதை உறுதி செய்திடும் அரசிய லமைப்பும் சிறையில் வாடுகிறது. தமிழில் : இரா.சிந்தன்