வரதட்சணை படுகொலையும் சாதி ஆணவத் தற்கொலையும்
‘குடும்பம் ஒரு கோவில்’ என்று கொண்டாடுவதில் தவறில்லை. குடும்ப அமைப்பும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையை தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நடந்துள்ள இருவேறு துயர நிகழ்வுகள் காட்டுகின்றன. நிலவும் சமூகச் சூழலே குடும்பச் சூழலையும் தீர்மானிக்கிறது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைச் சார்ந்தே குடும்பங்களும் இயங்குகின்றன. அதிலும் குடும்ப அமைப்பில் நிலவுடமையின் வேர்கள் ஆழ வேரோடி உள்ளன.
திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சணைக் கொடுமையால் திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து மாண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய குரல்செய்தி கேட்பவரை கலங்கடிப்பதாக உள்ளது. ரிதன்யா தன்னுடைய தந்தையிடம் தனக்கு நேர்ந்த துயரங்களை சொல்லவே செய்துள்ளார். ஆனால், ‘கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போ’ என்பதே அவரின் அறிவுரையாக இருந்துள்ளது.
ஒருநிலையில் சித்ரவதை தாளாமல் ரிதன்யா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கணவர் வீட்டினர் வந்து சமாதானம் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவருடைய தந்தை அண்ணாதுரை கூறும்போது, தன்னுடைய மகளிடம் கூடுதல் நகை கேட்டு சித்ரவதை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். கணவர் உடல்ரீதியாக செய்த கொடுமைகளை தந்தையிடம் கூறி ரிதன்யா கதறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மகளின் மரணம் குறித்து தந்தை அண்ணாதுரை கூறிய ஒரு சில வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “மாற்று வாழ்க்கை அமைத்துக் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம். என் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று நினைத்து இறந்துவிட்டாள். அதனால் என் பெண்ணை இழந்தால் கூட எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இத்தகைய சொந்தக் குடும்பத்திலிருந்தே வரும் அழுத்தம் தான் ரிதன்யா போன்ற பெண்களின் அவல முடிவுக்கு காரணமாக அமைகிறது. ரிதன்யாவுக்காக எல்லோரும் வருந்துகிறார்கள். வரதட்சணை கொடுமைக்கு எதிராக கண்டனங்கள் எழுகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லி இறந்து போன தன்னுடைய மகளுக்காக பெருமைப்படுவதாக ஒரு தந்தை கூறுவதற்கு அவர் மட்டுமே காரணமல்ல. இத்தகைய பத்தாம்பசலித்தனத்தை இன்னமும் கூட பாதுகாத்து வைத்திருக்கும் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் காரணம். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிய போதும் பலரது மனங்கள் ‘நளாயினி’ புராண காலத்தை தாண்டவில்லை என்பதையே அண்ணாதுரையின் கருத்து உணர்த்துகிறது.
பெண் விடுதலை என்ற பெரும் பாதையில் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. வரதட்சணைக் கொடுமையால் தன்னுடைய மகளின் உயிர் பறிபோனது நிச்சயமாக ஒரு தந்தைக்கு மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ‘பொருந்தா மணவுறவு அமைந்தாலும் மறுமணம் கூடாது’ என்ற நிலவுடமைச் சிந்தனைதான் அவரிடமிருந்து இத்தகைய போலிப் பெருமையை பேச வைக்கிறது.
திருப்பூரில் இந்த துயரநிகழ்வு நடந்த ஒரு வார காலத்திற்குள்ளேயே நாமக்கல்லில் ஒரு பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு காரணமாக கடன் தொல்லை என்று முதலில் கூறப்பட்டாலும், இவர்களுடைய மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியதுதான், இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்று தெரிகிறது. குறிப்பிட்ட சாதி சங்கத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இதை உறுதிப்படுத்துகிறது.
இறந்த பெற்றோர்கள் இருவருமே அரசுப் பணியில் இருப்பவர்கள். சுப்பிரமணியன் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி பிரமிளா அரசுப் பள்ளி ஆசிரியர்.
இவர்களது மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்ததாகவும் இதற்கு பெற்றோர்கள் இணங்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில்தான் மிக உயர்ந்த அரசுப் பணியில் இருக்கும் இவர்கள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று போராடி வரும் நிலையில் இந்த தற்கொலையை சாதி ஆணவ தற்கொலையாகவே கருத வேண்டியுள்ளது. சாதி என்கிற கொடுமையான அமைப்பு இன்னமும் சாகாமல் இருப்பதற்கு உளவியல் காரணிகளும் உண்டு என்று பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவார்.
காலம் காலமாக சாதி மனித உயிர்களை பலிவாங்கியே வந்திருக்கிறது. இப்போது சாதி சங்கங்கள் அதிகரித்துள்ள நிலையில், போலியான பெருமிதத்தை உருவாக்கி பரப்புவதும், சாதிக்காக கொல்வதும், கொல்லப்படுவதும் மிகப்பெரிய தியாகம் என்று சித்தரிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. சாதி ஆணவப் படுகொலையில் பெரும் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு சிறை சென்றவர் பிணையில் வெளியே வந்த போது அவரை மிகப்பெரிய தியாகி போல சித்தரித்து கொண்டாடினர்.
இவ்விரு நிகழ்வுகளும் தனித்தனியானவை என்றாலும் சமூகம், குடும்ப உறவுகளை சுற்றி நடந்ததாகவே உள்ளன. சமூகத்தைப் போலவே குடும்பங்களும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்து தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே இவை உணர்த்துகின்றன.