‘வாக்கிங் ஸ்டிக்’ கைத்தடியைப் பிடித்துள்ள அவரதுகை நடுங்குகிறது. ஆனால், அந்த 110 வயது முதியவர் கந்தர்வசிங் மட்டும் வயதைப் பொருட்படுத்தாமல் காஜிப்பூரில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் சென்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்!
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள கறுப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்காக உத்தரப்பிரதேசத்தில் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 110 வயது முதியவர் கந்தர்வசிங் விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு வந்தார். விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைவாபஸ்பெற வலியுறுத்தி தில்லியில் காஜிப்பூர், திக்ரி, சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு அவர் தமது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார். போராட்டக் களத்தில் அவரும்அமர்ந்து பங்கேற்றார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நான் போராடுகிறபோது என் வயது முப்பது. இப்போது காஜிப்பூரில் நடத்துகிற போராட்டம் எனக்கு அந்தக் காலத்தை நினைவூட்டுகிறது என்றார் ‘தி வயர்’ ஊடகத்திற்கு.
பிரிட்டிஷ் பாதையில் பாஜககந்தர்வசிங் சூரிய உதயத்தின்போது விழித்தெழுந்து ‘பிஜேபி முக்த பாரத்’திற்காக (பாஜகவிடமிருந்து விடுபட்ட இந்தியாவுக்காக) பிரார்த்தனை செய்கிறார். விவசாயிகள் போராட்டத் தலைவர்களில் ஒருவராகிய ராகேஷ் திகாயத் தமது நண்பர் என்று கூறுகிறார். மாலையில் கூடாரங்களில் விவசாயிகள் புரட்சிகரப் பாடல்களைப் பாடிக்கொண்டு உத்வேகத்துடன் இருப்பது தம் மனதில் ஒரு சக்தி பிறப்பதாகக் கூறுகிறார். தாம் ஒரு காலத்தில் எதிர்த்துப் போராடிய பிரிட்டிஷ் அரசுக்கும், இன்று மோடி அரசுக்குமிடையே ஒற்றுமை இருப்பதாக கந்தர்வசிங் விவரித்தார். 110 வயதான அந்த விவசாயியின் கண்களில் பிரிட்டிஷ்அரசை எதிர்த்துப் போராடிய அந்த மின்னல் பளிச்சிடுகிறது. ஒரு விழி முதுமையுடன் மின்னினால் மற்றொரு விழி அன்றுகாந்திஜியின் அழைப்பை ஏற்று தேசத்திற்காக ஈடுபட்ட போராட்டத்தின் நினைவுமின்னலாக உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகநாடாகப் புகழ்பெற்ற நம் நாட்டில் இன்று நாம் வாழ்கிற காலம் வேதனை மிக்கதாக உள்ளது என்றார். சிறுபான்மையினர் மீது ஆட்சியாளர்களின் தற்போதைய அணுகுமுறை அவர்களைப் போராடவைக்கிறது. நாட்டில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்த்தால்பாஜக அரசு இனி எத்தனை மக்கள்விரோத சட்டங்களை நிறைவேற்றவிருக்கிறதோ என்று கவலை தெரிவித்தார். மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்தது பிரிட்டிஷ் அரசு. இப்போது பாஜகஅரசு அதிலிருந்து மாறுபட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார் கந்தர்வசிங். மக்களில் ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினரை மோதவிடும் காவிக் கட்சிஅதே அணுகுமுறையையே பின்பற்றுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவைப் பிரிவினை செய்தார்கள். மோடி மக்களின் இதயங்களைப் பிரிவினை செய்கிறார் என்றார் கந்தர்வசிங்.
இந்த விவசாயிகள் போராட்டம் 1940-ல் நடைபெற்ற ஆங்கிலேய ஆட்சியாளர்க்கு எதிரான போராட்டத்தை எனக்கு நினைவூட்டுகிறது. அன்று காந்திஜியின் அழைப்புக்கு ஏற்ப நான் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றேன். அதேபோல் இன்று மீண்டும் மோடியின் அரசை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறேன் என்றால்...ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரப் போராட்டத்தில் சாதித்து என்ன பயன் என்று கேள்வி எழுகிறது என்றார் கவலையுடன் 110 வயது போராளிப் பெரியவர் கந்தர்வசிங்.
நன்றி: நவதெலுங்கானா தெலுங்கு நாளிதழ் (14.8.2021),
தமிழில்: தி.வரதராசன்