articles

பொங்கலைப் போற்றுதும்! பொங்கலைப் போற்றுதும்! - மதுக்கூர் இராமலிங்கம்

பொங்கலைப் போற்றுதும்! பொங்கலைப் போற்றுதும்! - மதுக்கூர் இராமலிங்கம்

பொங்கல் பண்டிகையை திமுக அரசு மதமாற்றம் செய்து விட்டது என்றும், பொங்கல் இந்துக்களின் பண்டிகை என்றும், பொங்கல் கொண்டாடும் இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு பொங்கல் பரிசோ, பரிசுத் தொகையோ வழங்கக் கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடியாளாகச் செயல்படுகிற அர்ஜூன் சம்பத் வார்த்தைகளில் தடித்தனம் காட்டியுள்ளார். மாநில அரசு சார்பில் பல்வேறு இடங்களில் சமத்து வப் பொங்கல் என்ற பெயரில், அனைத்து மத மக்க ளும் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடுவ தையும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் எதிர்க்கத் துணிந்து விட்டது. உண்மையில், இவர்கள்தான் உழவோடும், உழைப்போடும்,

இயற்கையோடும் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் பொதுவான பொங்கல் திருவிழாவை வைதீகக் குடுவைக்குள் கொண்டு போய் அடைக்கத் துடிக்கிறார்கள்.  உழவு பாவத் தொழில் எனும் மநு அநீதி பிராமணியம் எனும் கருத்தியல் உழவுத் தொழிலையே ஒரு பாவத் தொழில் என்று சித்தரிக்கி றது. மநுஅநீதியின் 10 ஆவது அத்தியாயம் ஸ்லோ கம் 84 - விவசாயத்தை பாவத் தொழில் என்கிறது. ஏர் முனையில் உள்ள இரும்பு நிலத்தை பிளக்கும் போது, மண்ணுக்கு அடியில் உள்ள சிறிய புழுக்கள் மற்றும் உயிரினங்கள் கொல்லப்படுவதால், பிராம ணர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்கிறது மநு அநீதி.  மண்ணுக்கு அடியில் உள்ள புழுக்களுக்கும் கூட இரங்குகிற மிகப்பெரிய ஜீவகாருண்ய தத்துவம் பேசுவது போல நடிக்கும் மநுஅதர்மம், கல்வி எனும் அறிவைப் பெற முயலும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கி றது. வேதத்தை சொன்னால், நாக்கை அறு என்றும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி

ஊற்று என்றும், மனதுக்குள்ளேயே நினைத்தால் உடலை இருகூறா கப் பிளந்துவிடு என்றும், மனிதர்களை வதைப்ப தற்கு விதவிதமான உத்திகளைச் சொல்லித் தரும் மநுஅநீதி, புழுக்களுக்காக இரக்கப்படுவது உண் மையன்று. மாறாக, உழவுத் தொழில் உழைப்புச் சார்ந்தது. உழைப்பவர்களை இழிவுபடுத்துவ தற்காகவே இவ்வாறு சொல்கிறது. இன்னொரு இடத்தில், நிலம் என்பது மன்னர்களுக்கு மட்டுமே உரியது என்றும், யார் ஒருவருடைய நிலத்தையும் மன்னர் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு என்றும் வித்தாரம் பேசுகிறது மநு அநீதி. ஆனால், உலகப் பொதுமறை என்று கொண்டா டப்படும் திருக்குறள், உழவுத் தொழிலை தலைமேல் வைத்து கொண்டாடி கூத்தாடுகிறது. சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று வள்ளுவர், ஏர்முனையின் வழியிலேயே உலகம் நடக்கிறது என்றும், உழவே தலையாயத் தொழில் என்றும் மொழிகிறார். மழைநீரே அமுதம் தேவர்களும் அசுரர்களும் வாசுகிப் பாம்பை கயி றாக்கி, மேரு மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்ததாகவும், அமுதம் வந்தவுடன் அசுர குலத்தை ஏமாற்றி, தேவர்கள் அமுதத்தை கவர்ந்து சென்றதையும் கவர்ச்சியாகப் பேசுகிறது புராணம். ஆனால் வள்ளுவர், இல்லாத அமுதத்தை  வியந்தோத வில்லை. மாறாக, மழை நீரையே மண்ணுலகின் அமுதம் என்று கொண்டாடுகிறார். அமுதம் குடித்த வானவர்களுக்கு இறப்பில்லை என்றும், அவர்கள் கண்களைக் கூட இமைக்க மாட்டார்கள் (உண்மை யில் இமைக்காமல் இருப்பது ஒரு வரம் அன்று; மிகப்பெரிய இம்சை என்பது வேறு விசயம்) என்றெல் லாம் கதை விடுகிறார்கள். ஆனால் வள்ளுவர் “சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறப்பு மேல் வானோர்க்கும் ஈண்டு” என்கிறார். அதாவது, மழையெனும் அமுதம் இல்லாவிட்டால், பூமியில் தெய்வங்களுக்கு நடைபெறும் பூசைகளும், திரு விழாக்களும்கூட இருக்காது என்கிறார். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதே வள்ளுவர் வாக்கு.  ஆனால் நாட்டுப்புற மக்கள் வறட்சிக் காலங்க ளில் தெய்வங்களுக்கும்கூட வித்தியாசமான வழி பாடுகளை செய்வதுண்டு. தெய்வச் சிலையின் கண்க ளில் மிளகாயை அரைத்து பூசுவது உண்டு. எரிச்சல் தாங்காமல், தெய்வம் மழை பெய்ய வைத்துவிடும் என்கிற நம்பிக்கையின்பாற்பட்டது இது. மறு புறத்தில், வறட்சிக் காலங்களில் மழைக்கஞ்சி வைத்து வழிபாடு செய்வார்கள். மழை பெய்ய வேண்டும் என்ற காரணம் ஒருபுறம் இருக்க, பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பசி தீர்க்கும் ஏற்பாடு இது. ஆனால் தமிழ்நாட்டில் தண்ணீர் அண்டாவுக்குள் உட்கார்ந்து கொண்டு, இந்த ராகத்தை இசைத்தால், மழை வரும் என்று சொல்லி பாடியவர்கள் அண்டாவோடு உருண்ட கதையும் நடந்தது உண்டு.  சிலம்பிசைத்த இளங்கோவடிகள் சிலப்பதிகா ரத்தின் பாயிரப் பாடலாக “ஞாயிறு போற்றுதும், திங்க ளைப் போற்றுதும், மாமழை போற்றுதும்” என்று இயற்கையையே துவக்கப் பாடலாக்கி உள்ளார்.  கிழங்குகளை ஒதுக்கும் வைதீக மரபு மண்ணுக்குள் விளையும் எந்தவொரு பொரு ளையும் வைதீகப்

பெருந்தெய்வங்களுக்கு படையல் கொடுப்பதில்லை என்பதையும் மண்ணுக்குள் விளை யும் கிழங்கு வகைகளே பொங்கல் திருவிழாவில் முக்கிய இடம்பெறுகின்றன என்பதையும் நினை த்துப் பார்த்தால் பொங்கல் திருவிழாவை வெகு மக்க ளிடமிருந்தும் உழவர்களிடமிருந்தும் உழைப்பவர்க ளிடமிருந்தும் பறித்துக் கொண்டு போய் வைதீக மடங்களில் அடைக்க சங்கிகள் முயல்வதை புரிந்து கொள்ள முடியும்.  வைதீகர்கள் பொங்கல் திருநாளை மகா சங்ராந்தி என்கிறார்கள். அன்று சூரிய பகவான் தன்னு டைய மகனான சனியின் வீட்டுக்குச் செல்கிறார் என்கிறார்கள். தந்தையான சூரியனுக்கும், சனிக்கும் குடும்பப் பிரச்சனை என்றும், கோபித்துக் கொண்டி ருந்த சூரியன் அன்றைக்கு சனியின் வீட்டிற்குச் செல்வ தாகவும் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் எளிய உழவர்கள் இத்தகைய கதை எதையும் அறி யாதவர்கள்.  மருத்துவக் குணம் கொண்டவை கிழங்குகளை ஒதுக்கி வைப்பது வைதீக மரபு. ஆனால் கிழங்கு வகைகள் இல்லாமல் தமிழ் மக்க ளுக்கு பொங்கல் இல்லை. சிறுகிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்று வகை வகையாக கிழங்குகளை பொங்கலின் போது சமைப்பதே தமிழர்களின் வழக்கம். குறிப்பாக, சிறு கிழங்கு இல்லாமல் பொங்கல் இல்லை. பனங் கிழங்கும் பொங்கல் நேரத்தில்தான் அதிகமாக விளைகிறது. பொங்கல் விழாவின் போது, மஞ்சள் செடிகளை கிழங்கோடு வைத்துதான் மக்கள் வழிபடு கிறார்கள் என்பதும் கருதத்தக்கது.

குறிப்பாக, கரு ணைக்கிழங்கு என்று முதன் முதலில்  பெயர் வைத்த வருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம். மூலம், பௌத்திரம் போன்ற பின் விளைவு உள்ளவர்க ளுக்கு மிகச்சிறந்த மருந்து இது. சங்க இலக்கியத்தி லேயே கருணைக்கிழங்கு குறித்த குறிப்பு உள்ளது. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.   பொங்கலின் போது தமிழ்நாட்டில் வீடுகளில் கட்டப்படும் கூரைப்பூ விசேஷமானது. கூரைப் பூவில் ஆவா ரம்பூ, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை, கண்ணுப்பிள்ளைபூ போன்றவைதான்  சேர்த்துக் கட்டப்படும். இவையனைத்துமே இயற்கையின் விளைச்சல் என்பது மட்டுமல்ல, அபூர்வமான மருத்துவக் குணங்கள் கொண்டவை.  ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றி ணையும், ‘நறுவி ஐம்பால் ஆடும் தைஇத் திங்கள் தண்கயம் போல பலர்படிந்து’ என்று ஐங்குறுநூறும் தை பிறப்பை பேசுகிறது.   மக்கள் கூடிக் களிக்கும் நாள் தை இரண்டாம் நாள் உடன் உழைத்த கால்நடைக ளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் என கொண்டாடப்படுகிறது. சங்க இலக்கி யம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் செல்வம் என்பதையே மாடு என்றுதான் அழைத்தார்கள். அதிக மாக ஆடு, மாடு உள்ளவர்கள்தான் அன்றைய நாளில் செல்வந்தர்கள்.

மாடு அல்ல, மற்றயவை என்று வள்ளுவமும் செல்வம் என்ற பொருளிலேயே மாட்டைக் குறிக்கிறது. கால்நடைகளிடமும் மானுடம் தோழமை பாராட்டும் உயரிய பாங்கு இது. ஆனால் மாட்டுச் சிறுநீருக்கு மருத்துவக் குணம் உண்டு  என்று சாதிக்கிற சண்டித்தனம் சங்க இலக்கியத்தில் இல்லை.  தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று ஒரு சமூக விழாவாகவே கொண்டாடப்பட்டுள்ளது. உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காணும் நாள் இது. சூரியன், சனியைப் பார்க்கப் போவ தாக கதை எதுவும் தமிழில் இல்லை. மக்கள் கூடிக் களித்த நாள்தான் பொங்கல். அதற்கும் வைதீகச் சாயம் பூச முயல்வது ஒரு மகத்தான விழாவை மக்களி டமிருந்து பிரிக்க நடக்கும் சதியாகும். நிலத்தையும் பொழுதையும் திணை வாழ்க்கையாக வகுத்து, அதற்குரிய மண்ணையும் பருவத்தையும் மட்டு மின்றி, ஒழுக்கத்தையும் முன்வைத்தது தமிழ் இலக்கி யம். புரட்டுகளால் பொங்கல் பண்டிகையை ஒரு போதும் புரட்டிக் கொண்டு போய்விட முடியாது.