மகாத்மா காந்தியின் தியாகமும் மதவெறியர்களின் சவாலும்
78 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்... 1948 ஜனவரி 30 அன்று தில்லியில் மாலைநேர பிரார்த்தனைக்காக வந்து கொண்டிருந்த போது அண்ணல் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டார். சரியாக 5.17 மணி அளவில் ஒரு தொண்டனைப் போல் வந்த மதவெறியன் நாதுராம் விநாயக் கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அண்ணல் காந்திஜியை மூன்று முறை சுட்டான். காந்திஜி சரிந்து விழுந்தார். செய்தி அறிந்து தேசமே அதிர்ச்சி அடைந்தது. உலக நாடுகள் கண்டித்தன. தகவல் அறிந்து நேரு, பட்டேல், கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் அங்கு விரைந்து வந்தனர்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்”. அதிர்ந்து திரும்பிய மவுண்ட் பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்தியை கொன்றவன் ஓர் இந்து”. ஆர்எஸ்எஸ் அமைப்பை அன்றைய மத்திய அரசு தடை செய்தது. ஆர்எஸ்எஸ்-க்கு ஏன் காந்தி மீது ஆத்திரம்? 1925 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் உருவானது. துவக்கத்தில் இருந்தே இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றிட வேண்டுமென்பதே ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம், நோக்கம். “மனு, உலகின் மாபெரும் சட்ட வல்லுனர் ஆவார்; மனுநீதி அடிப்படையில்தான் அரசி யல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தினார். மனுநீதி என்பது நால்வர்ண சாதிய அடிப்படையி லான சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பொருளாதாரச் சுரண்டல் உள்ளிட்ட அனைத்து வித மான சனாதன சிந்தனைகளின் தொகுப்பே ஆகும். சிறு பான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மதங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களில் நஞ்சைக் கலக்கிற அதே வேளையில், பெரும்பான்மை மதத்திற்கு உள்ளேயே தலித் சமூகங்கள், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர் நலன்களை மறுக்கக் கூடியதாகும். மதநல்லிணக்கத்திற்காக ஒரு பயணம் பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் இந்தியா,
பாகிஸ்தான் என இரண்டு நாடுகளானது. 1947, ஆகஸ்ட் 15-இல் நாடே சுதந்திர தினத்தைக் கொண்டாடு கிறபோது அண்ணல் காந்தி, தில்லியில் இல்லை. நாட்டில் எங்கெல்லாம் மதக் கலவரம் வெடித்ததோ அப்பகுதிகளுக்கெல்லாம் சென்று மதநல்லிணக் கத்தை, மக்கள் ஒற்றுமையை உருவாக்கிட அவர் பாடு பட்டார். மத மோதல் தொடர்ந்து நீடித்த கல்கத்தாவிற்குச் சென்று 1947 செப்டம்பர் 1 அன்று மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேற்கு வங்க கவர்னராக இருந்த ராஜாஜி உண்ணாநிலையில் இருந்த காந்திஜியை சந்தித்து “ஒரு வேளை நீங்கள் இறந்து விட்டால் காட்டுத்தீ மிக மோசமாகப் பரவி விபரீதம் ஏற்படுமே” என்று கேள்வி எழுப்பினார். “நல்ல வேளை யாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்கமாட்டேன். என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்” என காந்தி பதிலளித்தார். இதைப் போலவே, (இன்றைய வங்க தேசத்தில் உள்ள) நவகாளி பகுதிக்குச் சென்று மத மோதலால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசுகிறபோது,
“நீங்கள் விவசாயிகளாக இருங்கள், நெசவாளர்களாக இருங்கள், மீனவர்களாக இருங்கள், மதத்தை மறந்துவிடுங்கள்” என்றார். மத நல்லிணக்கத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக, மதச்சார்பின்மைக்காக உயி ரையே பணயம் வைத்துப் பாடுபட்ட காந்தி யைத்தான் மத மோதலை உருவாக்கி, மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை உருவாக்கிட முயலும் ‘கோட்சே கும்பல்’ படுகொலை செய்தது. இந்துத்துவ நிகழ்ச்சி நிரலும் காந்தியின் நிலைப்பாடும் இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு; அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என காந்தி உறுதியாக இருந்ததை, தங்களுடைய இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு அவர் தடையாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் கருதியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் விநாயக் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு மதவெறி அமைப்பின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதி. மேற்கண்ட இத்திட்டத்தின் அடிப்படையில் தான் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலை, கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்படுவது மற்றும் அன்றாடம் பரப்பப்படும் வெறுப்பு அரசியல். அரசியல் சாசனமும் இந்துத்துவா ராஜ்ஜியமும் 1946-இல் அரசியல் நிர்ணய சபை அமைக்கப் பட்டது. வரைவுக்குழு தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர், மதச்சார்பின்மை குறித்து உறுதியான
நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். 1946-லேயே ஆர்எஸ்எஸ் குறித்தும், ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துத்துவா குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தி ருக்கிறார். மனுநீதி அடிப்படையில் அரசியல் சட்டம் அமைய வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியபோது அம்பேத்கர் தனது கருத்தைக் கீழ்க்கண்டவாறு வெளிப் படுத்தி இருக்கிறார்: “இந்து ராஜ்ஜியம் உண்மையாகி விட்டால் இந்த நாடு பேரழிவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை”. இத்தகைய பின்னணியில்தான் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், கூட்டாட்சி ஆகிய விழுமி யங்களை உள்ளடக்கியதாக அரசியல் சட்டம் உருவாக் கப்பட்டது. 1949 நவம்பர் 26 அன்று அரசியல் சட்ட வரைவை முழுமையாக முடித்த பிறகு, நிறைவாக அம்பேத்கர் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: “ஒரு அரசியல் அமைப்பு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் பொ றுப்பை ஏற்பவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அது நிச்சயமாக மோசமானதாக மாறிவிடும்”. இது தான் இன்று நடைபெற்று வருகிறது. கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் ஒடுக்குமுறை 2014 ஆம் ஆண்டு பாசிசத் தன்மைகொண்ட ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்திற்கு வந்தது. மோடி தலைமையிலான இவ்வரசு ஆர்எஸ் எஸ் நிகழ்ச்சி நிரலை வேகவேகமாக அமலாக்கிட முயற்சித்து வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாஜி மற்றும் பாசிச அமைப்புகளிடம் இருந்து ஊக்கம் பெற்றது. ஜெர்மனியில் முதலாளிகள் ஹிட்லர் தலை மையிலான பாசிச ஆட்சியை ஆதரித்தவர்கள்.
இந்தியா வில் பெருமுதலாளிகள் ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஆட்சியை ஆதரித்தால், மோசமான விளைவுகள் ஏற்படும் என 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலு க்குச் சில வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கையாகத் தனது கட்டுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குறிப்பிட்டிருந்தார். கடந்த பதினோரு ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள கார்ப்பரேட் – இந்துத்துவா பின்னிப்பிணைந்த பாஜக அரசு, ஆர்எஸ்எஸ்-இன் திட்டங்களை அமல் படுத்துவதை எதிர்ப்பவர்களையும், கார்ப்பரேட் ஆதரவு நவதாராளமய பொருளாதாரக் கொள்கை களை எதிர்ப்பவர்களையும் ஒடுக்கும் நோக்கத்தோடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான அனைத்து நிறுவனங்களையும் மதவெறிமயமாக்கி வருகிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் (NIA), அமலாக்கத்துறைச் சட்டம் (ED) உள்ளிட்ட சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வெளிவர முடியாது. ஒருபுறம், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்டோரைப் படுகொலை செய்த இந்துத்துவ கும்பல்கள் மீது பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மறுபுறம்,
சங் பரிவார் அமைப்புகளின் மதவெறி நடவடிக்கை களை எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் மீது மிகக் கடுமையான உபா, என்ஐஏ உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஜாமீன் மறுக்கப்பட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள், தலித் மக்கள், குண்டர்களால் படுகொலை செய்யப் படுகிறார்கள். சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரு கிறார்கள். மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. தற்போது, அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டுமென்று கூறி, மத ரீதியில் மக்க ளைப் பிளவுபடுத்துவதற்கு பாஜக-வும் சங் பரிவார் அமைப்புகளும் சீர்குலைவு வேலைகளைச் செய்து வருகின்றன. பெரியாரின் கருத்தும் அண்ணாவின் எச்சரிக்கையும் காந்திஜியுடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த தந்தை பெரியார் விடுத்த இரங்கல் அறிக்கையில், “இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதால்தான் காந்தியார் புத்தர், கிறிஸ்து, மகம்மது முதலிய பெரியார்களுக்கு ஒப்பானவராகவும் இன்றைய தேவைக்குத் தோன்றிய ஒரு சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும்” என்று கூறியதோடு இந்தியாவிற்கு
‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டும் என்றார். அறிஞர் அண்ணா அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையில், சாதி மத பேதமற்ற அன்பு மார்க் கத்தை ஏற்போம், அதுதான் காந்திக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி எனக் குறிப்பிட்டார். “அந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். உத்த மர் உயிரைக் குடித்த மத ஆதிக்க வெறி உலவுமா னால் எத்தனை கோட்சேக்கள் கிளம்புவாரோ என்பதை எண்ணும்போதே நெஞ்சு திடுக்கிடுகிறது. அந்த கொடும் பாம்பை ஒழித்தாக வேண்டும்” என எச்ச ரித்தார். இ.எம்.எஸ் கண்ட மகாத்மா காந்தி பற்றி மார்க்சிய இயக்கத்தின்
மகத்தான தலை வர் தோழர் இ.எம்.எஸ் கூறும்போது, காந்தி தன் ஆன்மா கூறியபடி தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை, கடைசிச் சொட்டு ரத்தம் இருந்த வரை வகுப்புவாத தீய சக்திகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடினார் என் பதை அவரது சிறப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும் என்றார். காந்திஜி கொல்லப்பட்ட பிறகு ‘தி இந்து’ ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கம் இன்றும் பொருத்த மானது: “இந்த தேசத்தின் தலைவர்கள் நம்பிக்கை யோடும், துணிச்சலோடும் செயல்பட்டால் மட்டுமே, இந்த புவியில் அறத்தை நிலைநிறுத்தும் மகாத்மா வின் மாபெரும் கனவு மெய்ப்படும்.”
மக்கள் ஒற்றுமை தினமாக உறுதியேற்போம்! அண்ணல் காந்தியின் நினைவு நாளான இன்று (30.01.2026) தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மாநிலம் முழுவதும் மக்கள் ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.அவர் எந்த லட்சியத்திற்காக, நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தாரோ அதன் அடிப்படையில் மதச்சார்பின்மை, சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்!
