articles

img

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு சோசலிச கட்டுமானத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் பிரகடனம் - ஹனோய் நகரில் இருந்து அனுஷா பால்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு சோசலிச கட்டுமானத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் பிரகடனம்

இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக அரசியல் வரைபடத்தில் சோசலிசத்தின் வெற்றிகரமான பரிசோதனைக் களமாகத் திகழும் வியட்நாம், தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியத் தருணத்தில் நிற்கிறது. தலைநகர் ஹனோயில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் 2026 ஜனவரி 20 முதல் 24 வரை  நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு, வெறும் ஐந்தாண்டுக்கான திட்டமிடல் மட்டுமல்ல; அது அந்த தேசம் அடுத்த இருபது ஆண்டுகளில் அடைய வேண்டிய இலக்குகளுக்கான ஒரு மகா சாசனத்தையும் (Magna Carta) வகுத்தது.

1930-இல் தோழர் ஹோ சி மின் அவர்களால் விதைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் விதை, இன்று ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியை நெருங்கும் வேளையில், 2030-இல் அதன் நூற்றாண்டு விழாவையும், 2045-இல் வியட்நாம் சோசலிசக் குடியரசு உருவானதன் நூற்றாண்டையும் முன்னிறுத்தி இந்த மாநாடு  மிக விரிவான விவாதங்களை முன்னெடுத்தது.  ஏகாதிபத்திய அழுத்தங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் தீவிர மடைந்து வரும் புவிசார் அரசியல் போட்டி களுக்கு மத்தியிலும், வியட்நாம் தனது சித்தாந்தப் பாதையில் இருந்து விலகாமல் நவீ னத்துவத்தை எப்படிக் கையாள்கிறது என்ப தை இம்மாநாடு உலகிற்குப் பறைசாற்றியது.  இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என்பது ‘வளர்ந்த நவீன சோசலிச தேசம்’ எனும் நிலையை எட்டுவதாகும்.

இது வெறு மனே பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை; மாறாக வர்க்கப் போராட்டத் தின் நவீன வடிவமாகவும், ஏகாதிபத்திய பொரு ளாதாரத் தடைகளை முறியடிக்கும் ஒரு தற் காப்புப் போராகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இதனை முன்வைத்துள்ளது. சர்வதேச அளவில் சோசலிச அமைப்புகள் எதிர்கொள் ளும் சவால்களை முறியடித்து, ஒரு கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு எப்படி உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்பதற்கான ஒரு ‘வியட்நாம் மாடலை’ இம்மாநாடு உருவாக்கியுள்ளது.  மக்கள் பங்கேற்பும்  சித்தாந்த உரையாடலும் கம்யூனிச இயக்கங்களில் ‘மக்களுக்கான பாதை’ (Mass Line) என்பது மிக முக்கிய மான கோட்பாடு. இதனை வியட்நாம், இந்த  மாநாட்டில் மிக உன்னதமாகச் செயல் படுத்திக் காட்டியது. மாநாட்டின் வரைவு அர சியல் அறிக்கையானது முன்கூட்டியே பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, 2025 அக்டோபர் 15 முதல் நவம்பர் 6 வரை நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் 50 லட்சத்திற்கும் அதிகமான கட்சி உறுப்பினர்களும், கோடிக்கணக்கான சாமானிய மக்களும் பங்கேற்று சுமார் 1.4 கோடி கருத்துக்களை வழங்கினர். ஒரு கட்சியின் அறிக்கை என்பது மேலிருந்து திணிக்கப்படுவதல்ல, அது கீழிருந்து மக்க ளின் விருப்பங்களால் செதுக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. இந்த மக்கள் கருத்தாடல்களின் வழியாக, சோசலிசத்தை நோக்கிய சந்தைப் பொருளாதாரத்தில் (Socialist-oriented market economy) உள்ள எதார்த்தமான சிக்கல் களைக் கட்சி நேரடியாகக் கேட்டறிந்தது.

 கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாம் தனது உரையில் குறிப்பிட்டது போல, “மக்களின் இதயங்களில் இருந்து எழும் கருத்துக்கள் தான் கட்சியின் கொள்கைகளாக மாற வேண்டும்.” இந்த ஜனநாயக வழிமுறை, கட்சிக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைத்தது மட்டுமல்லாமல், 2045-ஆம் ஆண்டிற்கான இலக்குகளில் ஒவ்வொரு குடிமக்களையும் பங்கேற்பவராக உணரச் செய்துள்ளது.  நிர்வாகச் சீர்திருத்தத்தின்  புதிய பரிமாணம் மாநாட்டின் மிக முக்கியமான ஒரு அம்சம் வியட்நாமின் நிர்வாகக் கட்டமைப்பில் மேற் கொள்ளப்பட்டுள்ள ‘புரட்சிகரமான மாற்றம்’ ஆகும். இதற்கான அறிக்கையை முன் வைத்த அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் லே தி து ஹாங் விளக்கியுள்ளபடி, இது வரை வியட்நாம் பின்பற்றி வந்த மாகாணம், மாவட்டம், கம்யூன் என்ற மூன்று அடுக்கு நிர்வாக முறை, இப்போது ‘இரண்டு அடுக்கு’ (Two-tier) முறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நிர்வாகத் திறனை அதி கரிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட தல்ல; மாறாக இது ஒரு அரசியல் தத்துவம். இதில் ‘மாவட்டம்’ என்ற இடைநிலை அடுக்கு அகற்றப்பட்டு, மாகாண அரசாங்கம் நேரடி யாக அடிமட்டக் கிராமிய அமைப்பான ‘கம்யூன்’ களுடன் (Commune) தொடர்பு கொள்ளும்.  இதன் மூலம் கிராமப்புற மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்து வதில் தேவையற்ற அதிகாரத்துவத் தடைகள் நீக்கப்படுகின்றன.

கம்யூன் அமைப்புகளுக்கு அதிகப்படியான நிதி அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட்டுள்ளதால், சோச லிச ஜனநாயகம் என்பது அடிமட்டத்திலிருந்து வலுப்பெறுவதை இம்மாநாடு உறுதி செய்துள்ளது. குறிப்பாக, கம்யூன் மட்டத்தி லான தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உள்ளூர் தேவைகளை உடனடித் தீர்வு காண வகை செய்கிறது. இது ஊழலைக்  குறைக்கவும், அதிகாரிகளுக்கும் மக்களுக்கு மான நேரடித் தொடர்பை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட மிகத் துணிச்சலான நடவடிக்கை யாகும்.  விவசாயச் சீர்திருத்தமும் உணவுத் தன்னாட்சியும் வியட்நாமின் சோசலிசக் கட்டுமானத்தில் விவசாயம் என்பது வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல, அது நாட்டின் முதுகெலும் பாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் அரிசிக்காக வெளிநாடுகளை நம்பியிருந்த வியட்நாம், இன்று உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக மாறியிருப்பது கம்யூ னிஸ்ட் கட்சியின் ‘புதுப்பித்தல்’ கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இம்மாநாட்டில், விவசாயத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்த விரிவான விவா தங்கள் நடைபெற்றன. குறிப்பாக, ‘அதி நவீனச் சூழலியல் விவசாயம்’ (High-tech  ecological agriculture) மற்றும் ‘சமூக அடிப்படையிலான சுற்றுலா’ ஆகியவற்றை இணைக்கும் புதிய மாடல் முன்மொழியப் பட்டது.  நிலப்பயன்பாடு மற்றும் காடு வளர்ப்புத் திட்டங்களின் மூலம் சிறுபான்மையின மக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது டன், விவசாயத் தொழிலாளர்களை நவீனத் தொழில்நுட்பப் பணியாளர்களாக மாற்றும் பயிற்சியும் மாநாட்டின் முக்கிய விவாதப் பொருட்களாக இருந்தன. விவசாயத் துறை யில் வியட்நாம் எட்டியுள்ள இந்த ‘தன்னிறைவு’ மாடல் தான், இப்போது மற்ற அனைத்துத் துறை களுக்கும் முன்மாதிரியாகக்கொள்ளப்படுகிறது.

 தொழில்நுட்பப் புரட்சியும் அறிவியல் தன்னாட்சியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  நுயென் மான் ஹங் முன்  மொழிந்த அறிக்கை, வியட்நாம் தொழில் நுட்பத் துறையில் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தப் போகிறது என்பதை விளக்கியது. தொழில்நுட்பத்தை வெறும் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யாமல், அதை உற்பத்தி செய்யும் ஆற்றலை (Mastering technology) வியட்நாம் பெற வேண்டும். 2031-க்குள் நாட்டின் உற்பத்தி இயக்க முறைகளில் 70% மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதும், ஒவ்வொரு டாலர் அரசு முதலீடும் நான்கு டாலர் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு சோசலிச நாடு தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான புதிய பார்வையை வழங்கியது.  விவசாயத்தில் பற்றாக்குறையிலிருந்து உபரி என்ற நிலைக்குச் சென்றது போல, அறிவியல் துறையிலும் சொந்தமாக சிப் (Semiconductor) உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை ஆகியவற்றில் வியட்நாம் தன்னாட்சி பெற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், அது மக்களின் உற்பத்தித் திறனை மாற்றும் ஒரு கருவியாக மாற வேண் டும்” என்பதே இம்மாநாட்டின் செய்தியாகும்.  சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு வியட்நாம் பன்முகத்தன்மை கொண்ட நாடு. அங்குள்ள சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது சோசலிசக் கட்டுமானத்தின் மிக முக்கிய அங்கமாகும். புதிதாக உருவாக்கப்பட்ட லாம் டாங் (Lam Dong) மாகாணத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட்ட அறிக்கையில், சிறுபான்மையினப் பகுதி களை பொருளாதார மையங்களுடன் இணைப்பதற்கான உள்கட்டமைப்புத் திட்டங்கள் வலியுறுத்தப்பட்டன. லாம் டாங் மாகாணம் இன்று வியட்நாமின் மிகப்பெரிய மாகாணமாக உருவெடுத்துள்ளதுடன், கம்போடியாவுடனான எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.  சிறுபான்மையினப் பகுதிகளில் நிலவும் வறுமையை ஒழிக்கவும், அங்குள்ள பழமை வாதக் கலாச்சாரச் சிக்கல்களை (குழந்தைத் திருமணம் போன்றவை) அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளவும் கட்சி திட்டமிட்டுள்ளது. அதே  சமயம், ‘மதம்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ என்ற பெயரில் அந்நிய சக்திகள் சிறுபான்மை யின மக்களைத் தூண்டிவிட்டு தேசிய ஒற்று மையைக் குலைக்க முயற்சிப்பதை எதிர்கொள் ளும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. “மக் களின் நம்பிக்கை என்பது வார்த்தைகளால் வருவதல்ல, அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்தால் வருவது” என்ற உறுதியை இம்மாநாடு முன்னிறுத்தியது.  பொருளாதார வலிமையும் காலநிலை சவால்களும் 2025-ஆம் ஆண்டு வியட்நாம் சந்தித்த இயற்கை பேரிடர்கள் வரலாறு காணாதவை. 21 வெப்பமண்டல புயல்கள் மற்றும் கடும் வெள்ளச்சேதங்களுக்கு மத்தியிலும், வியட்நாம் 8.2% ஜிடிபி வளர்ச்சியை எட்டியது என்பது உலகப் பொருளாதார நிபுணர்களை வியக்க வைத்தது. இது வியட்நாமின் ‘மூங்கில் ராஜதந்திரம்’ (Bamboo Diplomacy) மற்றும் உறுதியான பொருளாதாரத் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

2045-இல் ஒரு வளர்ந்த சோசலிச நாடாக மாறுவதற்கான இலக்கில், பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்பன்  சமநிலை (Net Zero) மற்றும் சுழற்சிப் பொருளாதாரம்  ஆகியவை சோசலிச வளர்ச்சி யின் அங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  பொதுச் செயலாளராக  டோ லாம் மீண்டும் தேர்வு மாநாட்டின் நிறைவுப் பகுதியில், 200 உறுப்பினர்களைக் கொண்ட (180 முழு  உறுப்பினர்கள் மற்றும் 20 மாற்று உறுப்பி னர்கள்) 14-ஆவது மத்தியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. டோ லாம் அவர்கள் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த அவரது அனுபவம், கட்சியை வலுவாக கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த தலைவர் நுயென் பு ட்ராங் முன்னெடுத்த ‘எரியும் உலை’ (Blazing Furnace) என்ற ஊழல் எதிர்ப்பு  நடவடிக்கைகளை டோ லாம் தலைமை யிலான மத்தியக்குழு  இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும் என்பது கட்சியின் தீர்மா னங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.  ‘தனிநபர் துதி’ மற்றும் ‘அதிகாரத்துவப் போக்குகளை’ ஒழித்து, கட்சியை ஒரு தூய்மையான மக்கள் இயக்கமாக நிலைநிறுத்த இம்மாநாடு உறுதி பூண்டுள்ளது. “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட மாட்டாது” என்ற அவரது எச்சரிக்கை கட்சி உறுப்பினர்களிடையே ஓர் உறுதியை ஏற்படுத்தியுள்ளது.

 மக்களே அடித்தளம் வியட்நாம் கம்யூனிஸ்ட்

கட்சியின் 14-ஆவது தேசிய மாநாடு என்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் அடங்கிய அறிக்கை அல்ல; அது வியட்நாமிய மக்களின் இரத்த மும் வியர்வையும் கலந்த ஒரு கூட்டு முயற்சி. “மக்களே அடித்தளம்” என்ற கொள்கையை நிர்வாக மாற்றங்கள் வழியாகவும், தொழில்நுட்ப மேம்பாடு வழியாகவும் நனவாக்க வியட்நாம் முனைந்து நிற்கிறது. சோசலிசம் என்பது ஒரு கடந்த கால நினைவு அல்ல, அது எதிர்காலத்திற்கான நவீனத் தீர்வு என்பதை வியட்நாம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 2045-இல் வியட்நாம் ஒரு வளர்ந்த சோசலிச நாடாக உலக அரங்கில் நிமிரும் போது, அந்த வெற்றியின் வேர்கள் இந்த 14-ஆவது மாநாட்டில் தான் ஊன்றப்பட்டிருக்கும்.

மாநாட்டில் எதிரொலித்த ஹோ சி மின் சிந்தனைகள்  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு, நவீன காலச் சவால்களை  எதிர்கொள்ள வியட்நாம் புரட்சித் தலைவர் தோழர் ஹோ சி மின் அவர்களின் தத்துவங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதைத்  தலைவர்கள் விளக்கினர்:  

1. “மக்களே வேர்” (People as the Roots) பொதுச் செயலாளர் டோ லாம் தனது உரையில், “மக்க ளின் நம்பிக்கையைப் பெறுவது என்பது வெறும் வார்த்தைகளால் நிகழ்வதல்ல; அது செயலால் மட்டுமே  சாத்தியம்” என்ற ஹோ சி மின்னின் சிந்தனையை மையப்படுத்தினார். 1.4 கோடி மக்களின் கருத்து களைப் பெற்று அரசியல் அறிக்கை தயாரித்தது, “மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள், மக்களுக்காகச் செயல்படுங்கள்” என்ற கோட்பாட்டின் நேரடிச் செயல்பாடாகும்.

 2.நிர்வாகத் தூய்மையும்  ‘புரட்சிகர ஒழுக்கமும்’ மாநாட்டின் மிக முக்கிய விவாதமான ஊழல் எதிர்ப்புப் போர் (Blazing Furnace), ஹோ சி மின் வலி யுறுத்திய “நேர்மை, சிக்கனம் ஒருங்கிணைப்பு மற்றும் பொதுநலம்” ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையில் அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்துவப் போக்கில் (Bureaucracy) இருந்து விடுபட்டு, மக்களின் உண்மை யான சேவகர்களாகத் திகழ வேண்டும் என்ற தத்து வார்த்தப் புள்ளி மீண்டும் உறுதி செய்யப்பட்டது

.  3. “சுயசார்பும் தன்னாட்சியும்”  (Self-reliance and Independence) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நுயென் மான் ஹங், விவசாயத் துறையின் வெற்றி யைத் தொழில்நுட்பத்திற்குப் பொருத்தியபோது, “தனது பலத்தில் நம்பிக்கை கொண்டு எழும் தேசமே வெல்லும்” என்ற ஹோ சி மின்னின் சுயசார்புக் கொள்கையை முன்வைத்தார். ஏகாதிபத்தியச் சக்தி களின் தொழில்நுட்பச் சார்பிலிருந்து விடுபட்டு, சொந்த மாகத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே (Mastering Technology) உண்மையான சோசலிச சுதந்திரம் என அவர் விளக்கினார்.

 4. “மூங்கில் ராஜதந்திரம்”  (Bamboo Diplomacy) வெளியுறவுத் துறை விவாதங்களின் போது, “அனைத்து நாடுகளுடனும் நட்பு; எவரிடமும் பகைமை இல்லை” என்ற ஹோ சி மின்னின் உத்தி  கையாளப்பட்டது. மூங்கில் மரம் வேர் உறுதியாகவும் (சித்தாந்த உறுதி), கிளைகள் வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் (நெகிழ்வான உறவுகள்) இருப்பதைப் போல, வியட்நாம் தனது சோசலிசப் பாதையை இழக்காமல் உலக நாடுகளுடன் உறவாடும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.

5. “சிறுபான்மையினர் நலனே தேசத்தின் பலம்” லாம் டாங் மாகாண அறிக்கை, “வியட்நாம் ஒன்று;  வியட்நாமிய மக்கள் ஒன்று; ஆறுகள் வற்றலாம், மலைகள் தேயலாம், ஆனால் இந்த உண்மை மாறாது” என்ற ஹோ சி மின்னின் தத்துவத்தின் அடிப்படையில், இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தையும் சமூக நீதியையும் 2045-க்கான வளர்ச்சியின் அடித்தளமாக முன்வைத்தது.