ஜவுளி தொழிலாளர்களை அடிமையாக்கும் மோடி அரசின் துரோகத்தை முறியடிப்போம்!
கடந்த 2025 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் துரோகமாகும். இந்திய தேச விடுதலைக்கு முன்பாகவே தொழிற்சங்க இயக்கம் மகத்தான போராட்டங்களை நடத்தி, பல்வேறு தியாகங்களைச் செய்து தொழிலாளர்களுக்கான சட்ட உரிமைகளைப் பெற்றது. இதன் விளைவாகவே எட்டு மணி நேர வேலை, மிகைநேர உழைப்பிற்கு இரு மடங்கு ஊதியம், பண்டிகை விடுமுறை, பஞ்சப்படி, வீட்டு வாடகைப் படி, இ.எஸ்.ஐ மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சமூகப் பாதுகாப்பு உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. சாதிய அடுக்கு முறையில் இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள இந்தியச் சமுதாயத்தில், இந்தச் சட்டங்கள் உழைக்கும் மக்களின் கௌரவமான வாழ்விற்கு அடிப்படையாக அமைந்தன. இங்கு ஜனநாயகம் உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தகைய போராட்ட வரலாறுகளே அடிப்படை காரணமாகும். முறியடிக்கப்பட்ட ஜனநாயக நடைமுறைகள் நவீன தாராளமயக் கொள்கைகள் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தொழிலாளர்களின் நிரந்தரத் தன்மை பறிக்கப்பட்டு, ஒப்பந்த முறை திணிக்கப்படத் தொடங்கியது. இந்தச் சூழலில், அரசு, முதலாளிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து விவாதிக்கும் ‘இந்திய தொழிலாளர் மாநாடு’ ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. ஆனால், 2014-இல் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, 2015-இல் ஒருமுறை மட்டுமே இந்த மாநாடு நடத்தப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒருமுறை கூட தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்தா லோசிக்காமல், 29 சட்டங்களைப் பறித்து நான்கு தொகுப்புகளாக மாற்றியது இந்த அரசு. நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலன் குறித்து ஆளும் வர்க்கம் மௌனம் காத்தபோது, இடதுசாரித் தலைவர்கள் மட்டுமே இதற்காகத் தொடர்ந்து உரிமை முழக்கம் எழுப்பினர். ஜவுளித் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்களின் முதுகில் குத்தும் செயலாகும். குறிப்பாக ஜவுளித் துறையில் உள்ள பனியன், பஞ்சாலை, விசைத்தறி தொழிலாளர்கள் மிகக்கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் பெரு முதலாளி களின் நலனுக்காகவே இந்தச் சட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 300 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள ஆலைகளை மூடுவதற்கு இனி அரசின் அனுமதி தேவையில்லை என்ற விதி, இந்தியாவில் உள்ள 80 சதவீத நிறுவனங்களைச் சட்ட வரம்பிற்கு வெளியே தள்ளுகிறது. இதன் மூலம் சுமார் 50 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் எண்ணிக்கை வரம்பை உயர்த்தி, இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் போன்ற அடிப்படைப் பாதுகாப்புகளையும் இந்த அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது. பறிக்கப்படும் போராட்ட உரிமைகள் வேலைநிறுத்தம் செய்வதற்கான ஜனநாயக உரிமையும் தந்திரமாகப் பறிக்கப் பட்டுள்ளது. முன்பு 14 நாட்களாக இருந்த நோட்டீஸ் காலம் இப்போது 60 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் போராட்ட வேகத்தைத் தணிக்கும் செயலாகும். அதேபோல், தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் 51 சதவீத தொழிலாளர்களின் ஆதரவு வேண்டும் என்பது அடிப்படை உரிமை மீறலாகும். நாட்டின் பிரதமரே 51 சதவீத வாக்குகள் பெறாமல் ஆட்சி நடத்தும் போது, தொழிலாளர்களுக்கு மட்டும் இத்தகைய நெருக்கடிகளை விதிப்பது மோடி அரசின் வஞ்சகத்தையே காட்டுகிறது. தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்க மறுக்கும் முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கும் ஏற்பாடு நீக்கப்பட்டிருப்பது, அவர்கள் மேலும் சுரண்டலில் ஈடுபடவே வழிவகுக்கும். பேரெழுச்சிக்குத் தயாராவோம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஜவுளித் துறை முதலாளிகள் கேட்ட 12 மணி நேர வேலை மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தைத் தொழில்துறையில் பயன்படுத்துவது போன்ற கோரிக்கைகளை இப்போது மோடி அரசு சட்டமாக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள துறைவாரியான குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை இந்தத் தொகுப்புகள் ஒழித்துக்கட்டும். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு மூலதனத்திற்காகவும், கார்ப்பரேட்களின் லாபத்திற்காகவும் உழைக்கும் வர்க்கத்தின் ரத்தத்தைப் பரிசளிக்க மோடி அரசு துடிக்கிறது. தியாகங்களால் பெறப்பட்ட உரிமைகளை விட்டுத் தர தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்த அநீதிக்கு எதிராகத் தொழிலாளர்கள் திரண்டு வருகிறார்கள். பிப்ரவரி 12-இல் நடைபெறவுள்ள பேரெழுச்சியில் பங்கேற்று, மோடி அரசின் இந்த மக்கள் விரோதச் சட்டங்களை மோதித் தகர்ப்போம்! புதிய வரலாறு படைப்போம்!
