tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பெரம்பலூரில்  10 ஆவது புத்தகத் திருவிழா

பெரம்பலூர், பிப்.6-  பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள 10 ஆவது புத்தகத் திருவிழா, பிப்.27 முதல் மார்ச் 8 வரை புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற உள்ளது. இப்புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளிலான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.  புத்தக வாசிப்பு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாகும். நம் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். அனைவரின் வீட்டிலும் நூலகம் இருப்பது நம் வாழ்வை நாமே செம்மைப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். கடந்த 9 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா, இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. 10 ஆவது புத்தகத் திருவிழாவில் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளனர். பொதுமக்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

மீனவர் குடும்ப இளைஞர்களுக்கு  இலவசப் பயிற்சி

தஞ்சாவூர், பிப்.6-  தஞ்சாவூர் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தமிழக மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு கடற்படை, கடலோர பாதுகாப்புப் படை, தமிழக காவல்துறை, ஊர்க்காவல் படையில் பணியில் சேர்வதற்கு 90 நாட்கள் பயிற்சி அளித்து, சிறப்பு வகுப்புகளை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்தி வருகிறது.  பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 27 கடலோர கிராமங்களில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு படித்த கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தமிழக அரசால் இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.  விண்ணப்பத்தை பிப்.15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

வகுப்பறை கட்டடம் திறப்பு

பாபநாசம், பிப்.6-  தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே ராராமுத்திரைக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 6 வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.  பள்ளியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் குமார், ராராமுத்திரைக் கோட்டை முன்னாள் ஊராட்சித் தலைவர் சோழன், பள்ளி தலைமை ஆசிரியர் கேத்ரின் நிர்மலா உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பிப்.9- தொழிற் பழகுநர்  சேர்க்கை முகாம்

திருச்சிராப்பள்ளி, பிப்.6-  திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் பிப்.9 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இந்த சேர்க்கை முகாமில், இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2020-21, 2021-22, 2023-24, 2024-25 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.9,600 முதல் ரூ.13,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.  தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒன்றிய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9865866972, 9443644967 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

பிப்.8- திருவாரூரில்  புத்தகத் திருவிழா துவக்கம்

திருவாரூர், பிப்.6-  திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 4 ஆவது புத்தகக் காட்சித் திருவிழா, பிப்.8 ஆம் தேதி துவங்கி பிப்.17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழா நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள மங்கள் வரதர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி, நாகை மற்றும் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்கள், திருவாரூர், நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள், தாட்கோ தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இதுதவிர, தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பேச்சாளர்கள் கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பவா செல்லதுரை, புலவர் மா.ராமலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவலர் அறிவுமதி, கவிதா ஜவஹர் மற்றும் புலவர் சண்முகவடிவேல் உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றுகின்றனர். மேலும், தினசரி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளும், 10-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

பிப்.12 அகில இந்திய வேலை நிறுத்தம்: அனைத்து சாலைப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்பு

பெரம்பலூர், பிப்.6-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.    மாவட்டத் தலைவர் பெ. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அ. பெருமாள்சாமி வரவேற்புரையாற்றினார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ப. ரவி நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் க. மார்கண்டன் நன்றி தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில், பிப்.8 அன்று சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணியாளர்களும் பங்கேற்பது. பிப்.12-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணியாளர்களும் முழுமையாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்காக கீழடியில் செல்பி பாயிண்ட்

சிவகங்கை, பிப்.6-  சிவகங்கை மாவட்டம் கீழடியில்  ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க வசதியாக “கீழடி – நம் தாய்மடி” என்ற வாசகத்துடன் தென்னங்கன்றை இணைத்து செல்பி பாயிண்ட் மையத்தை தொல்லியல் துறையினர் உருவாக்கியுள்ளனர். தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காட்சிப் பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக காளை புடைப்பு சிற்பம் மற்றும் சுடுமண் பானைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது. அதேபோல், திறந்த வெளி அருங்காட்சியகத்திலும் பார்வையாளர்கள் நினைவாக புகைப்படங்கள் எடுக்க வசதி செய்யும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

வரத்து அதிகரிப்பால்  தக்காளி விலை வீழ்ச்சி

சின்னாளப்பட்டி பிப்.6- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.    கடந்த வாரங்களில்  தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தக்காளியின் தேவை அதிகமாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.   தற்போது உள்ளூர் தக்காளிகளின் விளைச்சல் குறைவாக இருப்பதாலும் வெளிமாநில தக்காளிகள் விலை குறைவாக இருப்பதாலும் பெங்களூர், ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு தேவையான தக்காளிகளை அங்கே கொள்முதல் செய்து கொள்வதால் ஒட்டன்சத்திரம் வியாபாரிகளும் வெளி மாநிலங்களில் இருந்து  தக்காளியை கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக  தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளன. தற்போது பெட்டியின் விலை 150 ரூபாய் க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடுமையான விலை வீழ்ச்சியால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள்  மிகுந்த கவலை அடைந்துள்ளனர் .