‘திடீர்’ அரசியல்வாதியின் தில்லாலங்கடி எடுபடாது!
அதிமுக ஆட்சி அமைந்து பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றால் ஒன்றிய அரசின் அனைத்து உதவிகளும் தமிழகத்துக்குக் கிடைக்கும் என்று மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி வியாழனன்று பேசியிருக்கிறார். அப்படியானால் இப்போது உதவிகள் கிடைக்கவில்லை என்பதைத் தானே அவரது பேச்சு உணர்த்துகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களுக்கு இயல்பாக வழங்க வேண்டிய நிதியைக்கூட வழங்காமல் இருப்பது தானே பாஜக ஆட்சி. இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி முதல் கல்விக்கு வழங்க வேண்டிய நிதிவரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் பழி வாங்குவதையே பணியாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். அதனால் அவர்களுக்கும் அவர்களோடு சேர்ந்து வாக்குக்கேட்டு வருபவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வேற்றுமொழிக்காரர்களை விரோதி களாகப் பார்க்கக் கூடிய மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் உருவாக்கப் பட்டுள்ளது என்று சுந்தர்.சி , மதுரை ராஜஸ்தானி சேவா சமாஜ் பவனில் பேசும் போது கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் பல மொழிபேசு பவர்களும் முதலாளிகளாகவும் தொழி லாளிகளாகவும் நீண்டகாலமாக இருந்து வருகிறார்கள். அவர்களை விரோதிகளாகப் பார்க்கும் பண்பு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்ததில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது தமிழரின் சிறப்பு. ஆனால் இவர் போட்டியிடும் கட்சி - புதிய நீதிக்கட்சி - கூட்டணி வைத்திருக்கும் பாஜகவின் தலைவர் நாட்டின் பிரதமர் என்பதையும் மறந்து பீகாரிலும், ஒடிசாவிலும் தமிழர்களை எப்படி வசை பாடினார் என்பதும் துவேஷம் கொண்டு பேசினார் என்பதும் நாடறியும். தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அப்போது சுந்தர்.சி, என்ன செய்து கொண்டிருந்தாரோ? கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்ப ரனார் சிலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்து மதுரைக்கு அறிமுகமாகி விட்டு அடுத்த மாதமே வேட்பாளராக வந்து வாக்குக் கேட்கும் சுந்தர்.சியைப் போன்ற திடீர் அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தின் மாண்பும் - மதுரையின் சிறப்பும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது திரைப்படத்தில் ‘தென்காசி முத்துப்பாண்டி’ அரசியலில் பல தில்லாலங்கடி வேலை செய்து வெற்றி பெறலாம். ஆனால் மதுரை மத்திய தொகு தியில் அவரது மாய்மாலமும் வாய்ஜாலமும் காப்புத் தொகை பெறக்கூட உதவாது. - ப.முருகன்
