மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல வகைகளில் மாநிலங்களின் நிதி ஆதாரம் திரட்டும் வழி அடைக்கப்பட்டுள்ளது.
1. நிதி கமிஷனானது ஒன்றிய அரசால் அமைக்கப்படும் ஒன்று. அதனுடைய சட்ட திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்குகிறது. ஆகையால் அதனுடைய முடிவுகளில் ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.
2. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் திட்ட கமிஷனும், தேசிய வளர்ச்சி கவுன்சிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.
3. மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் நிதி ஆதாரங்களின் பெரும் பகுதி, நிதிக் கமிஷனின் வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சத்திற்கும், ஒன்றிய அரசின் ஏகபோக அதிகாரத்திற்கும் வழிவகை செய்கிறது.
4.செஸ் (Cess) மற்றும் சர் சார்ஜ் போன்றவற்றைஒன்றிய அரசு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இவற்றில் இருந்து பெறும் வருமானத்தை ஒன்றிய அரசு மாநிலங்களிடையே பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
5. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு, மாநிலங்கள் சுயேச்சையாக நிதி திரட்ட வழி இல்லாமல் போய்விட்டது. மதுவின் மீதான விற்பனை வரி, பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் வரி- இவை இரண்டுதவிர மாநிலங்களுக்கு நிதி ஆதாரத்திற்கு எந்த ஒரு வழியும் இல்லை. ஒன்றிய அரசை நம்பியே இருக்க வேண்டி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலங்களு க்கு வரி மற்றும் வரியற்ற வருவாய் மூலம் பெறப்படும் நிதியை ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்வது குறித்து விரிவாக பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 268 முதல் 293 வரை நிதி பகிர்வு குறித்து தான் குறிப்பிடுகின்றன.
அதிகரிக்கும் ‘செஸ்’/’சர்சார்ஜ்’ குறையும் மாநிலங்களின் வருமானம்
நிதிக் கமிஷனானது அரசியலமைப்புச் சட்டத் தின் 280ஆவது பிரிவின் அடிப்படையில், ஒன்றிய அரசிற்கும், மாநிலங்களுக்கும் இடையே நிதிப் பகிர்வு குறித்து பரிந்துரைக்க வேண்டும். 14ஆவது நிதிக் கமிஷன் 42 சதவீதமும், 15வது நிதிக் கமிஷன் 41 சதவீதமும், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால் 2015-16இல் 35 சதவீதமும், 2023இல் 30 சதவீதமுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் மானிய உதவியானது 2015-16இல் 1.95 லட்சம் கோடியாக இருந்தது, 2023-24இல் 1.65 லட்சம் கோடிகளாகக் குறைந்துள்ளது.
ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயிலி ருந்து சட்ட ரீதியாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட வேண்டிய தொகையானது 48.2 சதவீதத்திலி ருந்து 35.32 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு மாநிலங்களின் பங்கு வெகுவாகக் குறைந்து போவ தற்கு முக்கியமான காரணம், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயானது கணக்கிடப்படும்போது, ‘செஸ்’ (Cess) மூலமாகவும், சர்சார்ஜ் மூலமாகவும் அது பெறக்கூடிய வருமானத்தை கழித்த பிறகே கணக்கி டப்படுவதுதான். இவை இரண்டையும் கழித்த பிறகு கணக்கிடப்படும் மொத்த வரி வருவாய் வெகு வாகக் குறைந்து போகிறது.
‘செஸ்’ மற்றும் ‘சர்சார்ஜ்’ மூலம் பெறப்படும் வருமானம் உயர்ந்து கொண்டே வந்துள்ளது. டிசம்பர் 2022இல் , நாடாளுமன்ற மாநிலங்களவை யில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், ‘செஸ்’ மற்றும் ‘சர்சார்ஜ்’ மூலம் ஒன்றிய அரசுக்கு வரி வருவாயில் கிடைப்பது, 2019-20இல் 18.2 சதவீதமா கவும், 2020-21இல் 25.1சதவீதமாகவும், 2021-22இல் 28.1சதவீதமாகவும் இருந்ததாக மோடி அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமாக 2009-10இல் ரூ.70,559 கோடிகளும், 2023-24இல் ரூ.6.6 லட்சம் கோடிகளும், ஒன்றிய அரசு வருவாயாகப் பெற்றதாக அரசின் புள்ளி விவ ரங்களே தெரிவிக்கின்றன. இதில் எதுவும் மாநிலங்க ளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஒன்றிய அரசு மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளது.
திட்டங்களின் மூலம் நெருக்கடி; கடன் வாங்குவதிலும் நெருக்கடி
வேறு இரண்டு வழிகளிலும், ஒன்றிய அரசு, மாநிலங்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய இயலும். மத்திய நிதி உதவியுடன் அமலாக்கப் படும் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசு நேரடியாக அமல்படுத்தும் திட்டங்கள் ஆகியவையே அவை. இவற்றில் மத்திய நிதி உதவியுடன் அமலாக்கப் படும் திட்டங்களில் ஒன்றிய அரசு அதீதத் தலை யீடு செய்கிறது. திட்டங்களை அதுவே முன்மொழி கிறது. இத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எவ்வளவு நிதி அளிக்கிறதோ அதற்கு இணையாக மாநில அரசும் நிதிப் பங்களிப்பு செய்ய வேண்டும். 2015-16க்கும், 2023-24க்கும் இடைப்பட்ட காலத்தில் இத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் ஒதுக்கீடானது 2.04 லட்சம் கோடியிலிருந்து, 4.76 லட்சம் கோடிக ளாக (59 திட்டங்களுக்கு) உயர்ந்துள்ளது. இதற்கு ஈடான தொகையை மாநில அரசுகளும் தங்களது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிர்ப் பந்தம் உருவாகிறது. ஏற்கெனவே பல வழிகளில் வருவாய் குறைந்து போயுள்ள நிலையில் மாநிலங்க ளின் சுமையை இது இன்னும் அதிகரிக்கிறது.
மாநிலங்களின் கடன் வாங்கும் உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது மோடி அரசு. அரசியலமைப்புச் சட்டத்தின் 293ஆவது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கு தாங்கள் வாங்கும் கடனின் அளவை நிர்ணயிப்பதற்கான உரிமை உண்டு. மாநிலப் பட்டியலின் (State List) 43ஆவது பிரிவு மாநிலங்களுக்கு இந்த உரிமையை உறுதி செய்கிறது. இருந்தபோதும், மாநிலங்களின் நிகர கடன் பெறும் வரம்பை (Net Borrowing Limit) மோடி அரசு வரையறை செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் நிதி திரட்டுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டது மோடி அரசு.
ரூ.57ஆயிரம்கோடி நிதியிழப்பு
இதில் பெரிதும் பாதிக்கப்படுவது எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களே. கேரளம் ஒரு உதார ணம். ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து கேரள மாநிலத்திற்கான பங்கு 3.89 சதவீதத்திலிருந்து 1.92 சதவீதமாகக் குறைந்து போயுள்ளது. இதனோடு ஜிஎஸ்டி ஈடுகட்டும் நிதி, மாநிலம் கடன் வாங்கும் உரிமை பறிப்பு - இவையும் சேர்ந்து கொள்வதால், இந்த மூன்று வழிகளிலும் நிதி திரட்டல் தாக்குத லுக்கு உள்ளானதால் கடந்த நிதி ஆண்டில் மட்டும் கேரள மாநிலத்திற்கு ரூ.57,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி ஆதாரத்தோடு அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, கேரள மாநிலத்திற்கு 2015-16இல் 85 சதவீதமாக இருந்தது, 2021-22இல் 40 சதவீதமாகக் குறைந்து போனது.
மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற விஷயங்க ளில் சரியாக செயல்படாத மாநிலங்களெல்லாம் ஒன்றிய அரசின் நிதி உதவியை தாராளமாகப் பெற்றுள்ளன என திருவனந்தபுரம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், 14ஆவது நிதிக் கமிஷன் வரை, மாநிலங்களுக்கான பங்கினை தீர்மானிக்கின்ற போது, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே, மாநிலங்களின் பங்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 15ஆவது நிதிக் கமிஷன், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மாநி லங்களின் பங்கினை தீர்மானித்தது. “16ஆவது நிதிக் கமிஷன் மாநிலங்களின் பங்கினை தீர்மா னிக்கிற போது, மிகவும் நடுநிலையாக தீர்மானிக்க வேண்டும். குறைவான தனிநபர் வருமானம், ஆனால் அதே நேரத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கும், “தேசிய மக்கள் தொகை திட்டம் 1976”ஐ திறமையாகக் கடைப்பிடித்து மக்கள் தொகையைக் கட்டுப் படுத்திய மாநிலங்களுக்கும் இடையே, ஒரு நடு நிலையான நிலைபாட்டினை எடுத்து மாநிலங்க ளின் பங்கு தீர்மானிக்கப்பட வேண்டும் ”என கேரள முதல்வர் பினராயி விஜயன் அம் மாநாட்டில் பேசியுள்ளார். 2011மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டதால்தான் கேரள மாநிலத்தின் பங்கு 2.5 சதவீதத்திலிருந்து 1.92சத வீதமாகக் குறைந்து போனது. கர்நாடக மாநிலத் தின் பங்கு 4.71 சதவீதத்திலிருந்து 3.65சதவீதமாகக் குறைந்து போனது என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்
கடந்த பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கான, குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக் கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள் ளது. இந்தியாவில் “கூட்டுறவு கூட்டாட்சி” (Cooper ative Federalism) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நிதி கூட்டாட்சியும் (Fiscal Federalism) வெகுவாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நிதி கூட்டாட்சியை தகர்ப்பதன் மூலம் தங்களுடைய பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநிலங்களு க்கு இருக்கக்கூடிய கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் குழி தோண்டி புதைக்கிறது மோடி அரசு.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோ பால், வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். “தேசத் தின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்பட்டு, பகிர்ந்து கொள்ளக் கூடிய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 50 சத வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் செஸ் மற்றும் சர்சார்ஜிற்கு அதிகபட்சம் 5 சதவீதம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்” என பேசி யுள்ளார்.
தேசத்தின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்க ளிப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி பற்றிய வாதங்கள் எல்லாம் வெற்று வாதங்களாகவே இருக்கும். நிதிக் கூட்டாட்சியை தகர்ப்பது இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.