அமைச்சர் சவாலால் ஆஃப் ஆன ராஜீவ் சந்திரசேகர்!
கேரளத்தின் நேமம் தொகுதியின் வளர்ச்சி குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் வி. சிவன்குட்டி விடுத்த சவாலை ஏற்க முடியாமல், பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் ‘உதார்’ விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். விவாதத்திற்குத் தயாரா? நேமத்தில் எல்.டி.எப் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று ராஜீவ் சந்திரசேகர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, “நேமம் தொகுதியின் சாதனைகள் குறித்து திறந்த விவாதத்திற்குத் தயாரா?” என்று அமைச்சர் வி. சிவன்குட்டி முகநூல் வாயிலாகச் சவால் விடுத்தார். மார்ச் 29-ஆம் தேதி காலை முதல் மதியம் வரை பூஜப்புராவில் தான் இருப்பேன் என்றும், ராஜீவ் சந்திரசேகர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். ராஜீவின் நழுவல் உத்திகள்! 2016-இல் பாஜக எம்.எல்.ஏ ஓ. ராஜகோபால் காலத்து ‘வளர்ச்சி’யையும், 2021-க்குப் பிறகு கல்வி உள்ளிட்ட துறைகளில் எல்.டி.எப் அரசு செய்த சாதனைகளையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கட்டும் என்பதே அமைச்சரின் நோக்கம். ஆனால், பிரதமர் மோடி கேரளா வந்த நாளில் தன்னை விவாதத்திற்கு அழைத்ததாகச் சாக்குச் சொன்ன ராஜீவ், இப்போது “முதலமைச்சர் வரட்டும், அவரோடுதான் விவாதிப்பேன்” என்று நிபந்தனை விதித்துப் பேச்சைத் திசைதிருப்பு கிறார். தொகுதிப் பிரச்சனைகளுக்குப் பதில் சொல்லத் துப்பில்லாத பாஜக வேட்பாளரின் இந்த நழுவல் நாடகத்தை நேமம் தொகுதி மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
